தமிழ் அரங்கியலில் திரைப்பயன்பாடு: மரபும் மாற்றுமரபும்
- ம. கருணாநிதி
முன்னுரை:
தமிழ் அரங்கக் கூறுகளில் திரைப்பயன்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. திரை எனும் அரங்கக்கூறு மரபு சார்ந்த கூறாகும். தமிழ் அரங்கியல் மரபில் திரைப்பயன்பாடு குறித்த செய்தி சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் திரை எனும் சொல்லிற்கு எழினி எனும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார் இளங்கோவடிகள். இவை மூன்று வகைப்படும் என இளங்கோவடிகள் அரங்கேற்றுக்காதை எனும் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.
‘ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்
கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்தாங்கு’
சிலப்பதிகாரம், அரங்கேற்றுக்காதை, பாடல் எண். 109
எனும் அடிகளின் வழி, திரை என்பதை, ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி என மூன்றாகப் பகுத்துள்ளதை அறியமுடிகிறது. மேலே குறிப்பிட்டுள்ள சிலம்பின் வரிகளுக்கு அரும்பத உரையாசிரியர் மூன்று வகையான திரைகளின் பயன்பாட்டினை விளக்கும் வகையில் உரை கூறியுள்ளார். ‘இடத்தூணிலையிடத்தே உருவுதிரையாக ஒருமுக வெழினியும், இரண்டு வலத்தூணிடத்தும் உருவுதிரையாகப் பொருமுகவெழினியும், மேற்கட்டுத்திரையாகக் கரந்துவரலெழினியும் செயற்பாட்டுடனே வகுத்தென்க.’ எனச் சிலப்பதிகார அரும்பதவுரை குறிப்பிடுகிறது.
மரபுசார் அரங்கில் திரை:
மரபுசார் அரங்கில் இடம்பெறும் திரை எனும் பழமரபுக்கூறு, நவீன நாடகங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தெருக்கூத்தில் திரையைப் பயன்படுத்தும் தன்மையைப் பார்க்கும்போது அவை, தொங்குதிரை, இடுதிரை எனும் திரையினைப் பார்க்க முடிகிறது. இத்திரையினை மேடையின் வலது - இடப்புறத்தில் இரு கம்பிகளை ஊன்றி அதில் திரைச்சீலையைக் கட்டி வைப்பர். இதனைத் தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்துவர். கூத்து தொடங்கும் முன்பு சபை வணக்கப் பாடல் பாடும்போது தொங்குதிரையால் மூடியவாறே பாடல் பாடுவர். பின்னர் திரையை விலக்கி, ஒருபுறத்தில் முடிந்து தொங்கவிட்டுவிடுவர். கூத்தின் தொடக்கக் காட்சியில் மட்டுமே இந்தத் தொங்குதிரையைப் பயன்படுத்துவர். மற்றைய காட்சியின்போது அதாவது பாத்திர அறிமுகக் காட்சியின்போது இரு நபர் திரையின் முனையினைப் பிடித்தவாறு இருந்து கொண்டிருப்பர். இவ்விரு நபர்களும் திரையைப் பிடித்தவாறு இருக்க, ஒவ்வொரு அறிமுகப் பாத்திரக்காட்சியின்போது பாத்திரம் ஏற்கும் நடிகர் இத்திரைக்குப்பின் இருந்தவாறு பாத்திர அறிமுக சபைவணக்கப் பாடலைப் பாடுவர். பாடி முடித்த பின்னர் பார்வையாளர்கள் முன் தோன்றிக் கூத்தாடுவர்.
தமிழ்நாட்டுக் கூத்துகளில் கட்டியங்காரன் பாத்திர வருகைக்குத் திரைபிடித்தல் கிடையாது. பிற பாத்திர வருகைக்குத் திரை பிடிக்கப்படும் மரபினைத் தெருக்கூத்துக்களில் பார்க்க முடியும். கூத்து மரபில் பாத்திர அறிமுகத்திற்கான நோக்கிலேயே திரையைப் பயன்படுத்துவதை அறிய முடிகிறது. மேலும் கூத்துக் கலைஞர்கள் கூத்தரங்கில் நுழைவதற்கு முன் தங்களை ஆயத்தப்படுத்தும் வகையிலும் திரை பிடிக்கப்படுகிறது.
மாற்று அரங்கில் திரை:
நவீன நாடகங்களிலும் திரைப்பிடித்தல் என்பது மரபாகக் கொண்டுள்ளதையும் அறிய முடியும். திரைப்பிடித்தல் எனும் பழ மரபுக் கூறு, நவீன நாடகங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. திரை, மரபின் கூறாக இருந்தாலும் மரபில் கொடுக்கக்கூடிய அர்த்தத்தைத் தாண்டியும் நவீன அரங்கில் பல அர்த்தத்தளத்தில் இயங்குகின்றது. பாத்திர அறிமுகத்திற்காகவும், காட்சியை அறிமுகப்படுத்துவதற்காகவும், திரையின் வழி பல படிமங்களை உண்டாக்குவதற்காகவும், திரையின் வழி காட்சியை ஒலிப்பிம்பமாகவும், படிமமாகவும் காட்டுவதற்கும் நவீன நாடகங்களில் திரை பல பரிமாணங்களில் செயற்படுகின்றது. கூத்துக்கான ‘திரைப்பிடித்தல்’ நிகழ்வு நவீன நாடகங்களில் மரபாகக் கையாளப்பட்டாலும் நடிகர்களே திரையாக உருவாகும் தன்மையும் உண்டு.
மு. இராமசுவாமியின் ‘சாபம் விமோசனம்’ நாடகத்தில் நடிகர்களே திரையாகவும் தூண்களாகவும் மாறுகின்ற தன்மையினைப் பார்க்கலாம். சே. இராமானுஜத்தின் ‘செம்பவளக்காளி’ நாடகத்தில் நடிகர்கள் திரை போன்று நின்றுகொண்டிருக்கும் தன்மையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நாடகத்தில் நடிகர்களே திரை போன்று நின்றுகொண்டு காட்சிப்படுத்தினாலும், திரையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நாடகத்தில் நடிகர் குழாமில் உள்ள இரு பாத்திரங்களே திரையை இயக்கக் கூடியவர்களாகவும் பாத்திரம் ஏற்று நடிக்கக்கூடியவர்களாகவும் நிகழ்த்துகிறார்கள். இது கூத்திலிருந்து மாறுபட்டதாகக் கொள்ளமுடிகிறது. மு. இராமசுவாமியின் ‘கட்டுண்ட பிராமதியஸ்’ நாடகம் சமதளத்தில் நிகழ்த்தப்பட்டாலும் சமதள அரங்கின் மேல் பகுதியில் திரை அமைக்கப்பட்டுள்ளது. இத்திரை நாலாபக்கமும் இழுத்துக்கட்டப்பட்டு, அத்திரைக்குப் பின்னிருந்து பாத்திரத்தின் காட்சிப் படிமத்தை உருவாக்கியுள்ளார்கள். இதைத் தோற்பாவைக் கூத்தின் நீட்சியாகக் கொள்ளலாம். இந்நாடகத்தில் திரைக்குப் பின்னிருந்தவாறு இரு குழுக்கள் மோதிக்கொண்டு அதிகாரமற்ற - பலவீனமானவர்களைப் பலியாக்கும் தன்மையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மு. இராமசுவாமியின் ‘கலகக்காரர் தோழர் பெரியார்’ நாடகம் படச் சட்டக மேடையில் நிகழ்த்தப்பட்டாலும் மேடையின் மேல்பகுதியில் திரை கட்டப்பட்டு அத்திரையில் காட்சிகள் திரையிடப்பட்டன. இக்காட்சிகள் நாடகத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் நாடக அறிமுகம், புகைப்படங்கள், நிஜநாடக இயக்க முயற்சிகள், பெரியார் பேசிய சொற்பொழிவுகள் முதலியவைகள் திரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இத்திரையின் பயன்பாடு கூடுதல் பரிமாணங்களில் செயற்படுகின்றதை அறியலாம். இவ்வாறு திரையில் ஒலி, ஒளிக்காட்சியை நாடகத்தோடு திரையிடுவது தெருக்கூத்து நிகழ்த்து மரபிலிருந்து புதுமையை நோக்கியதாக அமைந்திருக்கிறது.
திரையைப் பல்வேறு குறியீட்டுத் தளத்தில் பயன்படுத்துவது என்பது சே. இராமானுஜத்தின் கைசிக நாடகத்தில் பார்க்க முடிகிறது. இந்நாடகத்தில் திரை பாத்திரப் பிரவேசத்திற்குப் பயன்படுத்தப்பட்டதிலிருந்து நாடகம் முழுக்கத் திரையின் பயன்பாடு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. திரை மறைவில் இருந்து பாத்திர அறிமுகமாகும் கூத்தினைப்போல் கைசிக நாடகத்திலும் திரை மறைவிலிருந்து பாத்திரம் அறிமுகமாகிறது. தெருக்கூத்தில் திரைப் பிடிப்பதற்கென பின்னரங்கிலிருந்து இருவர் வருவர். இவர்கள் கூத்தின் பாத்திரமாக இல்லாமல் திரையைப் பிடிப்பவர்களாக மட்டுமே கூத்தில் பயன்படுவர். இதுபோன்றே கைசிக நாடகத்தில் திரைமறைவில் பாத்திர அறிமுகத்திற்கு, இருவர் திரை பிடிக்கும் வழக்கத்தை இந்நாடகத்தில் காணமுடிகிறது. இந்நாடகத்தில் திரையைப் பிடிப்பவர்களே திரையை பல்வேறு படிநிலைகளில் இயக்குகிறார்கள். இவை பல்வேறு நிலைகளில் அர்த்தப்படுகிறது. இந்நாடகத்தில் திரையைப் பல்வேறு காட்சிப் படிமமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம். திரை மறைவில் பாத்திர பிரவேசம், திரையை இயக்கிய பாத்திர பிரவேசம், திரை அறையாதல், திரை தூணாதல், திரை சேலையாதல், திரை இரணியனின் உடல் ஆதல், திரை இரணியனின் குடல் ஆதல், திரை மாலையாதல் எனும் தன்மைகளில் திரையின் பயன்பாடு பல்வேறு தளத்தில் அர்த்தப்பட்டுள்ளது. சே. இராமானுஜத்தின் கைசிக நாடக மீட்டுருவாக்கத்தில் திரை முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மாற்று மரபினை முன்வைக்கின்ற தன்மையில் கைசிக நாடகத்தை சே. இராமானுஜம் மீட்டெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இளைய பத்மநாதனின் ஏகலைவன் நாடக நிகழ்த்துதலில் மூன்று வகைத் திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. சிலப்பதிகாரம் குறிப்பிடும் மூன்று வகைத் திரைகளான ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி எனும் மூன்று திரைகளின் தொடர்ச்சியாகவே இந்நாடகத்தில் திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நாடகத்தில் பாத்திரப் பிரவேசத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ள திரை, உரைஞர்களான கட்டியங்காரனின் கழுத்தில் துண்டாகப் பரிணாமம் கொண்டுள்ளது. ஏகலைவன் முதலிய பாத்திரங்கள் நிகழ்த்துதலில் பங்குபெற்றுவதற்கும் அடுத்த காட்சி ஆரம்பிப்பதற்கும், மறைவதற்குமான பெரிய திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நடிகர்கள் பின்னால் இருந்தவாறு உரையாடுவதற்காக இருபுறமும் திரை அமைக்கப்பட்டிருந்தது. இதன் வழி, இறந்தகால நிகழ்வினை நிகழ்த்துதலுக்குள் கொண்டுவரவும், திரை பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. ஏகலைவன் நாடகத்தில் மூன்று வகைத் திரைகளின் பயன்பாடு சிலப்பதிகாரத்தின் நாடகக் கூறுகளின் தொடர்ச்சியாக இருந்தாலும், இதை பாரம்பரியக் கூத்து மரபின் தொடர்ச்சியாகவும் கொள்ளலாம். ச. முருகபூபதியின் யாக்கைக்களரி நாடகத்தில் திரைப்பயன்பாடு சிலப்பதிகாரம் உரைக்கும் முத்திரை பயன்படுத்தபட்டிருப்பினும் அதன் அர்த்தத்தளம் தள விரிவுகொண்டதாக அமையப்பெற்றுள்ளது. நாடக நிகழ்த்துநர்கள் நடுப்பகுதியிலிருந்தும், இருமருங்கிலிருந்தும் வருவதற்கான வாசலாகவும் அமையப்பெற்றுள்ளது. மேலும் இந்நாடகத்தில் தொங்குதிரைகளும் அமைந்துள்ளன. நடிகர்கள் நீண்ட திரைச்சீலையைத் தம்தோளில் போட்டுக்கொண்டு நாடகம் நிகழ்த்தும் தன்மையை ‘யாக்கைக்களரி’ நாடகம் கொண்டுள்ளது. இவரது ‘நீர் நாடோடிகள்’ நாடகத்தில் நீண்ட திரையைப் பயன்படுத்தி கடலலை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நாடகத்தில் நடிகவுடலே திரையாகப் பரிணாமம் கொள்கின்றது. துணிச்சாக்குகள் மழைக்கால கோணிப்பையாகவும், அதுவே திரையாகவும் உருமாற்றம் பெறுகின்றன. மேலும் ச. முருகபூபதியின் நாடகங்களில் பெருந்திரைக்குள் நடிகர்கள் நுழைந்து கொண்டு தலையை மட்டும் வெளியில் காட்டியவாறு உடலின் அசைவுகளைக் கோலப்படுத்துவதாகத் திரை பயன்படுத்தப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
‘போகாதே நந்தா போகாதே’ நாடகத்தில் இரண்டு வகையான திரைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று வெண்திரை, மற்றொன்று கறுப்புத்திரை ஆகும். மேல்தட்டு மக்களின் பாத்திரப் பிரவேசத்திற்கு வெண்ணிறத்திரையும் அடித்தட்டு மக்களின் பாத்திரப் பிரவேசத்திற்கு கறுப்புத் நிறத்திரையும் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. அத்திரைகளை நடிகர் குழுவில் உள்ள பாத்திரங்களே இயக்கக்கூடியதாக அமைந்துள்ளன. மேலும் ‘போகாதே நந்தா போகாதே’ நாடகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இரண்டு திரைகளிலும் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. மேல்தட்டு மக்கள் பாத்திரம் பிடித்துள்ள திரையில் நிறுவன சமயக் கோவிலின் கட்டடங்கள் ஓவியமாக வரையப்பட்டிருந்தது. இதன் வழி நிறுவன சமயக்கோவில் என்பதையும் இத்திரையைப் பிடித்தவர்கள் நிறுவன சமய வழிபாட்டினை மேற்கொள்பவர்கள் என்பதையும் இத்திரையின் ஓவியம் அடையாளப்படுத்துகிறது. கறுப்பு நிறத் திரையில் கூரை வீடு, கட்டை வண்டி முதலிய பொருட்கள் ஓவியமாகத் தீட்டப்பட்டிருப்பது நாட்டுப்புறச் சமய வாழ்வியலைக் காட்டுவதாய் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
முடிவுரை:
கைசிக நாடகத்தில் திரை பல்வேறு குறியீடுகளாகப் பயன்பட்டுள்ளதை அறியமுடிகிறது. இரண்டு நபர்கள் தொடக்கத்தில் திரையை இயக்கியும் பின்னர் இத்திரையை நடிகர் காட்சிப் படிமமமாக உருவாக்குவதும் புதுமையானதாகும். கைசிக நாடகம் ஒரு திரையை மாற்று உருவாக்கப் பின்னணியில் பயன்படுத்தியுள்ளது. இளைய பத்மநாதனின் ‘ஏகலைவன்’ நாடகத்தில் பாத்திர பிரவேசத்திற்குப் பயன்பட்ட திரை கட்டியங்காரன் கழுத்தில் துண்டாக மாற்றம் கொள்கிறது. ஒத்திகை நாடகக் குழுவால் உருவாக்கப்பட்ட ‘போகாதே நந்தா போகாதே’ நாடகத்தில் இரண்டு திரைகளைப் பயன்படுத்தியுள்ளதைப் பார்க்கமுடிகிறது.
நவீன நாடகங்களில் திரைப்பயன்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. மரபில் திரை, தொங்குதிரை, இடுதிரை எனும் திரை பயன்படுத்தப்பட்டுள்ளது. பாத்திர அறிமுகத்தின்போது இரண்டு நபர்கள் திரையின் நுனியைப் பிடித்தவாறு இருக்க திரைக்குப் பின்னிருந்த நடிகர் வெளிப்படுவர். மரபுசார் கூத்து மரபில் திரைப் பயன்பாடு, பாத்திர அறிமுகத்திற்கான நோக்கிலேயே பயன்படுகிறது. திரை மறைவில் நடிகர் தன்னை ஆயத்தப்படுத்துவதற்காகவும் திரையைப் பயன்படுத்துவதுண்டு. நவீன நாடகங்களில் திரையைப் பயன்படுத்தினாலும் நடிகர்களே திரையாக நிற்கும் தன்மையைப் பார்க்க முடியும். அந்த வகையில் செம்பவளக்காளி, கட்டுண்ட பிராமிதியஸ், சாபம் விமோசனம், குகை மரவாசிகள், மாயக்கோமாளிகளின் ஜாலக்கண்ணாடி, நீர் நாடோடிகள் முதலிய நாடகங்களில் நடிகர்களே திரையாகக் காட்சியளிக்கிறார்கள். மேற்குறிப்பிட்டுள்ள நாடகங்களில் நடிகர்களே திரையாக உருமாறுதல் பெறுவது என்பது தமிழ் அரங்கியலில் திரைப் பயன்பாட்டின் மாற்று மரபு சார்ந்ததாகும்.
நன்றி
