Thaiveedu
Latest Articles
பொது

ஹெலன் கெல்லர்

குமார் புனிதவேல்
குமார் புனிதவேல்
March - March 10, 2026

ஹெலன் கெல்லர்

- குமார் புனிதவேல்

இன்று இங்கு வள்ளுவருடைய 618-வது குறளுக்கு உதாரணமாக அமைந்த, ஒரு சரித்திரம் படைத்த பெண் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைந்துள்ளேன். அந்தக் குறள்,

‘பொறிஇன்மை யார்க்கும் பழி அன்று அறிவு அறிந்து

ஆள்வினை இன்மை பழி’

அதவாது, ஒன்று அல்ல இரண்டு பொறிகளை இழந்த ஹெலன் கெல்லர் (Helen Keller) எனும் பெண்ணுடைய வரலாற்றை உங்களுடன் பகிர்வதன் நோக்கம் நீங்களும் முயன்றால் எதனையும் சாதிக்கலாம் என்பதனை உணர்த்துவதற்கே.

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில், 1880-ஆம் ஆண்டு ஜூன் 27-ஆம் நாள் ஒரு சாதாரணக் குடும்பத்தில் ஹெலன் அடம்ஸ் கெல்லர் பிறந்தார். பிறக்கும் போது ஆரோக்கியமான குழந்தையாகவே அவர் இருந்தார். ஆனால், அவரது 19-வது மாதத்தில் தாக்கிய ஒரு கொடிய நோயின் விளைவாக, கண் பார்வையையும் செவிப்புலனையும் அவர் முற்றாக இழந்தார். தனது பெற்றோரின் முகத்தைக் காண முடியாமலும், அவர்களின் அன்பு மொழிகளைக் கேட்க முடியாமலும் அந்தப் பச்சிளம் குழந்தை சொல்லொணாத் துயரத்திற்கு ஆளானது. வள்ளுவர் உலகத்தில் பெரும் செல்வம் செவிச் செல்வம் என்கிறார் தனது 411-வது குறளில்.

‘செல்வத்தூள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்தூள் எல்லாம் தலை’

அத்தகைய மேன்மையான செவிச் செல்வத்தையும், கண் பார்வையையும் இழந்த ஹெலனின் உலகம், ஒளியற்ற இருட்டிலும் மரண நிசப்தத்திலும் மூழ்கியது. சற்றே சிந்தித்துப் பாருங்கள்! பூரண இருளையும், எவ்விதச் சத்தமும் அற்ற பேரமைதியையும் நம்மால் கற்பனை கூடச் செய்ய முடியாது. ஆனால், அத்தகையதொரு சவாலான சூழலையே ஹெலன் கெல்லர் தனது வாழ்நாள் முழுவதும் எதிர்கொண்டார்.

வளரும் பருவத்தில், தனது அடிப்படைத் தேவைகளைக் கூட மற்றவர்களுக்குத் தெரிவிக்க இயலாத சூழல் ஹெலனுக்கு மிகுந்த விரக்தியை அளித்தது. ஒருபுறம் குழந்தையின் நிலையை உணர்ந்து உதவ முடியாமல் பெற்றோர் வேதனைப்பட, மறுபுறம் தொடர்பாடல் முடக்கப்பட்டதால் அந்தச் சிறுமி சொல்லொணாத் துயரத்திற்கு ஆளானார்.தன்னால் எதனையும் பார்க்கவோ கேட்கவோ முடியாத அந்த இருண்ட உலகில், தனது உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரியாமல் கையில் அகப்பட்டப் பொருட்களை வீசி எறிந்தும், சத்தமிட்டும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார். குழப்பமும், கோபமும், வேதனையும் ஒருசேரத் தாக்கியதில் ஹெலனின் ஆரம்பகால வாழ்க்கை ஒரு போராட்டக் களமாகவே மாறியது. ஒரு குழந்தையாகத் தனது எண்ணங்களைப் பகிர முடியாமல் போனதே அந்த ஆக்ரோஷமான மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்தது.

அவரது ஆழ்மனதில் இலட்சியத்தை நோக்கிய பெரும் வைராக்கியம் உறைந்து கிடந்தது; எனினும், அதனைப் புறவுலகிற்கு வெளிப்படுத்த இயலாத சூழல் அவருக்குப் பெருவேதனையை அளித்தது. சாதாரண மனிதர்களாகிய நமக்கு, எமது தேவைகளை மற்றவர்களிடம் கூறி, உரிய அறிவுரைகளைப் பெற்று வளரக்கூடிய வாய்ப்பு இயல்பாகவே அமைகின்றது. ஆனால், ஹெலனைப் பொறுத்தவரை பார்வைப்புலன் அற்ற நிலையில் தன் முன்னால் நிற்பவர் யார் என்பதை அறிய முடிவதில்லை. அதேவேளை, செவிப்புலன் சவாலினால் மற்றவர்கள் பேசுவதைப் புரிந்து கொள்ளவோ, தனது தேவைகளைத் தெளிவுபடுத்திக் கோரவோ முடியாத நிலை காணப்பட்டது. இத்தகைய இரட்டைச் சவால்களுக்கு மத்தியிலும், பிறரைச் சார்ந்து நிற்காமல் தனது பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தானே கண்டடைய வேண்டிய கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டார். அந்தத் தனித்துவமான போராட்டமே அவரை ஒரு தன்னம்பிக்கை மிக்க ஆளுமையாக மாற்றியது.

ஹெலனின் வாழ்க்கை எனும் படகு திசைதெரியாமல் தத்தளித்த வேளையில், அதனை வெற்றிப் பாதையை நோக்கி நகர்த்தும் வலிமையான துடுப்பாக ஆன் சுளிவன் அவரது வாழ்வில் நுழைந்தார். அப்போது ஹெலனுக்கு வயது ஏழு. ஆசிரியை ஆனும் ஒரு காலத்தில் பார்வைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர் என்பதால், ஹெலனின் மௌனமான வேதனையை அவரால் ஆழமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. தனது மாணவியின் துயரத்தை உணர்வுப்பூர்வமாக உள்வாங்கிய ஆன், ஹெலன் இந்த உலகைத் தொட்டுணர்ந்து புரிந்து கொள்வதற்குத் தேவையான மாற்றுத் தொடர்பாடல் முறைகளை (Alternative Communication Methods) அறிமுகப்படுத்தினார். இது ஆரம்பத்தில் இருவருக்குமே மிகுந்த சவாலாகவும் கடினமாகவும் இருந்தது. இருப்பினும், சற்றும் மனம் தளராத ஆன், எல்லையற்ற பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் ஹெலனுக்குப் பயிற்சியளிக்கத் தொடங்கினார். அந்த அர்ப்பணிப்பே ஒரு புதிய சரித்திரத்திற்கு அடிக்கல்லாக அமைந்தது.

சந்தித்த முதல் நாளே ஆன், ஹெலனுக்கு சொற்களைக் கையில் எழுதிக்காட்டுவதன் மூலம் தொடர்பாடல்களை ஏற்படுத்த முயற்சித்தார். அத்தகைய முதல் முயற்சி சரித்திரத்தில் பொறிக்கப்பட வேண்டியது. ஆன், ஹெலனின் கையை ஓடும் நீரில் பிடித்துவிட்டு உள்ளங்கையில் Water என்று விரலால் எழுதினார். ஓர் அதிசயம் நடந்தது. ஹெலன் Water எனும் சொல் தன் கையில்பட்ட நீரைக் குறிக்கும் என்பதைப் புரிந்து கொண்டார். அது அவரை புது உலகத்துக்கு எடுத்துச் சென்றது. புதுப்புதுச் சொற்களையும் கருத்துகளையும் ஹெலன் கற்றுக்கொண்டார். இது அவர் வாழ்வில் மிக முக்கிய திருப்பு முனையதக அமைந்தது. அன்று முதல் அனைத்தையும் கற்றுக்கொள்ள முனைந்தார் ஹெலன். இருண்ட சிறையில் இருந்து உலகுடன் இணைவதற்கு முற்பட்டார்.

அவர் பயணம் எளிதானல்ல. அவர் வாழ்ந்த காலத்தில் பார்வை மற்றும் செவிப்புலன் சவாலுடையோர் உலகத்துடன் தொடர்பு கொள்வது என்பது கடினமான காரியமாகும். ஆனால் ஆன் சுளிவன் மேற்கொண்ட இத்தகைய கடுமையான முயற்சி ஹெலன் இந்த உலகத்தில் இணைந்து கொள்வதற்கும் உலகத்தைக் கற்றுக் கொள்வதற்கும் புதிய சக்தியை வழங்கியது. ஹெலன் மனதில் எப்படியாவது உலகுடன் இணைந்து வாழவேண்டும் என்ற ஆதங்கமும் ஆர்வமும் இருந்தது. ஒவ்வொரு நாளும் ஹெலனுடைய உள்ளங்கையில் ஆன் சொற்களை எழுதி அதற்குரிய பொருளைக் கையில் கொடுத்து அறிந்துகொள்ளச் செய்தார். உதாரணத்திற்கு மலர் எனும் சொல்லை விரலால் ஹெலன் உள்ளங்கையில் எழுதிவிட்டு மலரை தொட்டு உணர்ந்து கொள்வதற்குச் செய்வார்.

புற உலகைத் தனது கண்களால் காண இயலாத நிலையிலும், அறிவெனும் ஒளியைப் பெற ஹெலன் கெல்லர் சற்றும் தயங்கவில்லை. அதற்காக அவர் கைகொண்ட மிகச்சிறந்த ஆயுதம் ‘பிரெய்லி’ (Braille) முறையாகும். விரல் நுனிகளால் தடவி உணரும் வகையில் அமைக்கப்பட்ட இம்முறையைப் பயின்றதன் மூலம், புத்தகங்கள் பேசும் கருத்துக் கருவூலங்களை அவர் வாசிக்கத் தொடங்கினார்.பார்வைச் சவாலுடையோருக்கான இந்தத் தனித்துவமான எழுத்து முறையைக் கற்றுக் கொண்டது, அவரது அகக்கண்களைத் திறக்கச் செய்தது. வெறும் வார்த்தைகளை மட்டும் அவர் கற்கவில்லை; அந்தத் தடவல்களின் வழியே உலக வரலாற்றையும், இலக்கியத்தையும், அறிவியலையும் தன் வசப்படுத்தினார். ஒரு சாதனையாளராக உருவெடுக்க, உடல் உறுப்புகளை விட அதற்கான முறையான வழிகாட்டுதலும் , விடாமுயற்சியுமே அவசியம் என்பதை இத்தருணம் நிரூபித்தது.

ஆன், ஹெலனுக்கு வாசிப்பது மட்டுமல்ல, கதைப்பதற்கும் கற்பித்தார். ஒருவரது சொந்தக் குரல் அவருக்கே கேட்காத நிலையில், கதைப்பது என்பது கற்பனைக்கும் எட்டாத சவாலாகும். ஆனால், ஆன் ஒரு விசித்திரமான, அதேசமயம் அறிவியல் ரீதியான முறையைக் கையாண்டார். ஆன் கதைக்கும்போது தனது தொண்டையில் விரலை வைத்து தனது தொண்டை மற்றும் உதடுகளில் ஏற்படும் அதிர்வுகளையும் அசைவுகளையும் ஹெலனின் விரல்கள் தொட்டுணரச் செய்தார். அந்த மெல்லிய அசைவுகளைக் கொண்டே சொற்களின் ஓசையை ஹெலன் கிரகித்துக் கொண்டார். காலப்போக்கில் ஹெலன் கதைப்பதற்குப் பயின்று தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். தொடக்கத்தில் அவரது பேச்சு மற்றவர்களுக்குப் புரியாத ஒரு ஒலியாகவே இருந்தது. இருப்பினும், சற்றும் மனம் தளராத பயிற்சியின் விளைவாக, காலப்போக்கில் அவரது சொற்கள் தெளிவடைந்தன; காலப்போக்கில் அவரின் பேச்சு மற்றவர்களுக்குப் புரிந்தது. ஹெலன் கெல்லர் தனது பத்தாவது வயதை எட்டியபோது, கூர்மையான அறிவும் ஆழமான சிந்தனையும் கொண்ட ஒரு முன்மாதிரி மாணவியாகத் திகழ்ந்தார். அவரது உடல்சார்ந்த சவால்கள், அவரது மனதிடத்திற்கு முன்னால் வலிமையிழந்து போயின. மற்ற மாணவர்களைப் போலவே முறையான பள்ளிக்குச் சென்று பயில வேண்டும் என்ற உயரிய இலக்கை அவர் கொண்டிருந்தார். அதன்படி, 1894-ஆம் ஆண்டு தனது 14-வது வயதில், நியூயார்க் நகரிலுள்ள Wright-Humason எனும் செவித்திறன் சவாலுடையோருக்கான சிறப்புப் பள்ளியில் இணைந்தார். அங்கு பாடங்களைக் கற்பதில் ஆரம்பத்தில் சில சிரமங்கள் இருந்தபோதிலும், தனது விடாமுயற்சியால் பல சிறப்புச் சித்திகளைப் (Distinctions) பெற்றார். அதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் புகழ்பெற்ற மகளிர் கல்லூரியான Radcliffe College கல்லூரியில் உயர்கல்வியைத் தொடர்ந்தார். பார்வை மற்றும் செவிப்புலன் சவால்களைக் கொண்ட மாணவர்களில், உலகிலேயே முதன்முதலாக இளங்கலைப் பட்டம் (Bachelor of Arts) பெற்றவர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்தார். இந்தப் பெருமை ஹெலனுக்கு மட்டுமல்ல, மனிதகுலத்தின் மன உறுதிக்கும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கும் கிடைத்த ஒரு பெரும் வெற்றியாகும். இந்நிகழ்வு வள்ளுவரின் 620-வது குறளை நினைவூட்டுகிறது.

‘ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவுஇன்றித்

தாழாது உஏற்றுபவர்’

அதாவது மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்பவர் விதியையும் புறமுதுகு காட்டச் செய்வர் என்பர்.

ஹெலனின் கல்வித் தேடல் இத்துடன் நிற்கவில்லை. அவர் சொற்பொழிவுகள் செய்யத்தொடங்கினார். தன்னுடைய போராட்ட அனுபவங்களை மற்றவர்களுடன் பகிரத்தொடங்கினார். அத்துடன் அவர்களுக்கு உற்சாகம் ஊட்டத் தவறவில்லை. காலப்போக்கில் தனது எழுத்துகளாலும் பேச்சுகளாலும் உலகத்தை தன்பக்கம் திரும்பச் செய்தார். தன்னைப் போன்ற பலரையும் அவர் உற்சாகப்படுத்தினார்.

ஹெலன் கெல்லர் தனது சாதனைகளின் மூலம் ஈட்டிய புகழையும், சவால்களை வென்ற தனது தனிப்பட்ட அனுபவங்களையும்விஷேட தேவையுடையோருக்கான உரிமைகளை வென்றெடுக்கும் உன்னதப் பணிக்காக அர்ப்பணித்தார். அவர் வெறும் ஒரு பட்டதாரியாக மட்டும் நின்றுவிடாமல், உலகெங்கிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு வலிமையான குரலாக மாறினார். அவர்களது கல்வி உரிமைக்காக முன்னின்றும் உழைத்தார். சமூகத்தில் ஓரங்கட்டப்பட்ட மக்களின் வாழ்வாதாரம், கல்வி மற்றும் சம வாய்ப்பு ஆகியவற்றுக்காக அவர் முன்னெடுத்தச் செயல்பாடுகள் ஒரு புதிய சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தின. தனது வாழ்நாள் முழுவதும் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, மாற்றுத்திறனாளிகள் மீதான சமூகத்தின் பார்வையை மாற்றியமைப்பதிலும், அவர்களுக்கான சட்டபூர்வமான உரிமைகளைப் பெற்றுத் தருவதிலும் ஒரு செயற்பாட்டாளராக (Social Activist) மிக முக்கிய பங்காற்றினார்.

வாழ்க்கை ஒரு போராட்டமாக இருக்கும் வேளையில் ஹெலன் வாழ்க்கையில் ஒரு விடிவெள்ளியாக அவரது ஆசிரியை ஆன் சுளிவன் இருந்தார். எப்போதும் ஆன் உடனிருந்தார். இருவருடைய குடும்பங்களும் நெருக்கமாக இருந்தன. ஹெலனின் ஒவ்வொரு வெற்றியின் பின்னாலும் ஆன் உடனிருந்தார்.

கல்வியில் வியக்கத்தக்க வெற்றிகளை ஈட்டிய ஹெலன் கெல்லர், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு நம்பிக்கையூட்டும் ஒரு விடிவெள்ளியாகத் திகழ முனைந்தார். தான் கடந்து வந்த கரடுமுரடான பாதைகள், அனுபவித்த வேதனைகள், எதிர்கொண்ட சவால்கள் மற்றும் எட்டிய வெற்றிகள் அனைத்தையும் ஒரு வரலாற்று ஆவணமாகப் பதிவு செய்யத் தொடங்கினார்.அவரது முதல் நூலான ‘எனது வாழ்க்கை வரலாறு’ (The Story of My Life) என்பது 1903-ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் புத்தகம் வெறும் சொற்களின் தொகுப்பல்ல; அது இருளில் தத்தளிக்கும் பலருக்கு ஒளியூட்டும் ஓர் ஊக்க மருந்தாக அமைந்தது. தன் வாழ்வியலைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியதன் மூலம், உடல் சவால்களைக் காட்டிலும் மன உறுதியே ஒருவரை வெற்றியாளராக மாற்றும் என்பதை அவர் உலகிற்கு நிரூபித்தார். இன்றுவரை இப்புத்தகம் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, பலருக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் வழிகாட்டியாக இருந்து வருகின்றது. அவரது வாழ்க்கை வரலாற்று நூல், வெறும் கல்வி அனுபவங்களை மட்டும் பகிரவில்லை; மாறாக, ஆசிரியை ஆன் சுளிவன் அவருடன் ஒரு தோழியாகவும், காப்பாளராகவும் இணைந்து பயணித்த உன்னதப் பிணைப்பைப் போற்றியது. ஹெலன் தனது நூலில் தான் சந்தித்த தடைகளையும், மனப் போராட்டங்களையும் மறைக்காமல் வெளிப்படையாகப் பதிவு செய்திருந்தார். இந்தப் பகிரங்கமான பதிவுகள், வாழ்க்கைப் போராட்டத்தில் சோர்ந்து போயிருப்பவர்களுக்கு ஒரு பெரும் உந்து சக்தியாக அமைந்தன.தன்னிடம் இல்லாத பார்வை மற்றும் செவிப்புலனைப் பற்றி அவர் ஒருபோதும் முடங்கிப் போகவில்லை. மாறாக, தன்னிடம் எஞ்சியிருந்த தொட்டுணரும் ஆற்றல் (Sense of Touch), நுகரும் திறன் (Sense of Smell) மற்றும் சுவை அறியும் புலன் (Sense of Taste) ஆகியவற்றைக் கொண்டு, இந்த உலகத்தை எங்ஙனம் ஆழமாகப் புரிந்து கொண்டார் என்பதை மிக அழகாக விவரித்திருந்தார். தனது பலவீனங்களைக் கண்டு அஞ்சாமல், தன்னிடமிருந்த மற்றத் திறன்களைக் கொண்டு அவர் நிகழ்த்திய வளர்ச்சியானது, பல்லாயிரக்கணக்கானோருக்கு 'இயலாமை என்பது உடலால் அல்ல, மனதால் ஏற்படுவது' என்ற மாபெரும் நம்பிக்கையை ஊட்டியது.

ஹெலன் கெல்லர் ஒரு சிறந்த எழுத்தாளராக மட்டுமல்லாது, ஆற்றல்மிக்க ஒரு பேச்சாளராகவும் பரிணமித்தார். தனது சவால்களைக் கடந்து, உலகின் பல நாடுகளுக்கும் பயணம் செய்து ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் ஊக்க உரைகளை ஆற்றினார். திருவள்ளுவர் தனது 619-வது குறளில் கூறியுள்ளபடி விதி அல்லது ஊழ் என்பது ஒருவருக்குப் புலன்களை வழங்கத் தவறினாலும், ஒருவரது தளராத முயற்சியும் உழைப்பும் அந்த விதியையே புறமுதுகு காட்டி ஓடச் செய்யும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை அவர் உலகிற்கு வழங்கினார். உடல்சார்ந்த சவால்களைக் கொண்டிருப்பவர்கள் முடங்கிப் போகாமல், தங்களின் விடாமுயற்சியால் எத்தகைய ஊழையும் வெல்ல முடியும் என்பதற்கு ஹெலன் கெல்லரின் வாழ்க்கை ஒரு நேரடிச் சான்றாக அமைந்தது. அவரது சொற்பொழிவுகள், நலிந்த நிலையில் இருந்த பலருக்குப் புதிய வாழ்வாதாரத்தையும், தற்காப்புணர்வையும் பெற்றுத் தந்தன.

உலகளாவிய புகழ் வந்து குவிந்தபோதும் ஹெலன் அமைதியாகத் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார். தன்னை ஒரு வியக்கத்தக்க சாதனையாளராக அவர் ஒருபோதும் கருதவில்லை; மாறாக, 'தளராத முயற்சியும் சரியான வழிகாட்டுதலும் இருந்தால், எவரும் தாம் எண்ணிய இலக்கை அடைய முடியும்' என்ற எதார்த்தமான உண்மையையே அவர் உலகிற்குப் பறைசாற்றினார். அவர் விஷேட தேவையுடையவர்களுக்காகக் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், நலிந்த நிலையில் இருந்த பலருக்கும் நேரடியாக உதவிகளைச் செய்து வந்தார். உலகின் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்ட அவர், அந்தந்த நாட்டு அரசாங்கங்களுடனும் தொண்டு நிறுவனங்களுடனும் இணைந்து செயலாற்றினார். மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமத்துவமான சூழலை உருவாக்குவது ஒரு கருணைச் செயல் அல்ல, அது அரசாங்கத்தின் கடமை என்பதையும், சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு என்பதையும் தனது சொற்பொழிவுகள் வாயிலாக அவர் வலியுறுத்தினார்.

மகிழ்ச்சி என்பது நாம் விரும்பிய அனைத்தையும் பெறுவதில் இல்லை; மாறாக, நம்மிடம் இருப்பவற்றைக் கொண்டு வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றி, அந்த நிறைவை அனுபவிப்பதிலேயே உள்ளது என்பதை ஹெலன் கெல்லர் தனது வாழ்வின் மூலம் உலகுக்கு உணர்த்தினார்.

கல்விச் சாதனைகளுக்குப் பிறகு, ஹெலன் கெல்லர் ‘American Foundation for the Blind’ எனும் அமைப்பில் இணைந்து, பார்வைத்திறன் சவால்களைக் கொண்ட மக்களின் உரிமைகளுக்காகவும் அவர்களின் கண்ணியமான வாழ்விற்காகவும் அரும்பணியாற்றினார். உடல்சார்ந்த தடைகளை ஒரு பொருட்டாகக் கருதாமல், சமூக நீதிக்கான களத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் வெறும் உதவி பெறுபவர்கள் மட்டுமல்ல, அவர்கள் சமூகத்தின் சரிநிகர் உரிமையாளர்கள் என்பதைத் தனது செயல்பாடுகள் மூலம் நிலைநாட்டினார்.அரசியலில் தீவிரமாகப் பங்கெடுத்து, பெண்களின் வாக்குரிமை மற்றும் எளியோரின் வாழ்வாதார உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தார். முதுமையிலும் உடல்நலச் சவால்களுக்கு மத்தியிலும், தனது எழுத்துப்பணி மற்றும் போராட்டங்களின் வாயிலாக உள்ளடக்கிய ஒரு சமூகத்தை (Inclusive Society) உருவாக்குவதையே தனது வாழ்நாள் இலக்காகக் கொண்டிருந்தார். 1936-ஆம் ஆண்டு, அவரது வாழ்வின் வழிகாட்டியாகவும் ஆருயிர் தோழியாகவும் விளங்கிய ஆன் சுளிவன் மறைந்தார். ஆனின் இழப்பு ஹெலனைப் பெரிதும் நிலைகுலையச் செய்தபோதிலும், தனது ஆசிரியை கற்பித்த மன உறுதியுடன் அவர் மீண்டும் எழுந்து தனது பணிகளைத் தொடர்ந்தார். முதுமையிலும், உடல்நலக் குறைபாடுகளிலும் அவரது போராட்டக் குணம் மங்கவில்லை. 1961-இல் அவருக்கு Heart Stroke வந்தது. அது அவரது ஆரோக்கியத்தைப் பாதித்த நிலையிலும் அவர் தனது எழுத்துப் பணியையும் சமூகப் பங்களிப்பையும் கைவிடவில்லை. இறுதியில், 1968-ஆம் ஆண்டு தனது 87-வது வயதில் இந்த உலக வாழ்விலிருந்து விடைபெற்றார். அவர் மறைந்தாலும் அவரது போராட்டங்கள் ஆவணப்படுத்தப்பட்டு, இன்றுவரை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு ஒளியேற்றி வருகின்றன. ‘பார்வை இருந்தும் இலக்குத் தெரியாமல் வாழ்வதில் அர்த்தமில்லை’ என்று அவர் கூறிய அறிவுரை, இன்றும் நம் அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாகும்.

நன்றி