Thaiveedu
Latest Articles
ஆளுமை

பேரறிஞர் எம்.ஏ. நுஃமானின் கல்வி, வாழ்வியல் வகிபாகமும் தமிழியல் ஊற்றின் பேண்தகுநிலையும்

இக்பால் அலி
இக்பால் அலி
March - March 10, 2026

பேரறிஞர் எம்.ஏ. நுஃமானின் கல்வி, வாழ்வியல் வகிபாகமும் தமிழியல் ஊற்றின் பேண்தகுநிலையும்

- இக்பால் அலி

ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் தோன்றிய தமிழறிஞர்களில், தமிழியல் அடிப்படையில் சமூகச் சிந்தனையை விரிவுபடுத்தியவர்களில் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் குறிப்பிடத்தக்கவர். கவிதை, சிறுகதை, திறனாய்வு, மொழியியல், மொழிபெயர்ப்பு மற்றும் கல்விப்பணி என அவரது செயற்பாடுகள் பரந்த பரிமாணம் கொண்டவை. மார்க்சியச் சிந்தனை, நவீன இலக்கியக் கோட்பாடுகள் மற்றும் சமூகப் பகுப்பாய்வு ஆகிய தளங்களில் தொடர்ச்சியான உரையாடல்களை உருவாக்கியவர் அவர். பன்மொழிப் புலமையும், மொழியியல் விற்பன்னமும் அவரை மற்றவர்களிடமிருந்து தனித்துவப்படுத்துகின்றன. குறிப்பாக, ‘க்ரியா’ தற்காலத் தமிழ் அகராதி போன்ற முயற்சிகளில் இலங்கைத் தமிழ்ச் சொற்களை ஆவணப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பு மிக முக்கிய மைல்கல்லாகும். இன்றைய இலக்கியச் சூழலில், படைப்பொன்றை வெளியிட்ட உடனேயே சாஹித்திய மண்டலப் பரிசு அல்லது Nobel Prize போன்ற உயரிய விருதுகளுக்கான அங்கீகாரத்தை எதிர்பார்க்கும் எழுத்தாளர்கள் உலகளாவிய அளவில் காணப்படுகின்றனர். ஆனால் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் ‘விருதுகள் தம்மை உயர்த்துவதில்லை காலம்தான் படைப்பை மதிப்பிடும்’ என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்துரைத்தவர். ‘அரசு மற்றும் தனியார் அமைப்புகள் தேசிய ரீதியிலும் உலகளாவிய ரீதியிலும் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்களுக்கு விருதுகளையும் பாராட்டுகளையும் வழங்கி கௌரவிக்க முயன்றபோதும், அவர் தனது கொள்கைகளில் ஓர் ‘இரும்பு மனிதராகவே’ உறுதியுடன் இருந்து வந்துள்ளார். நுஃமான் தனது இலக்கியப் பயணத்தில் எந்தளவு தூய்மையையும் நேர்மையையும் கடைப்பிடித்தாரோ, அதே உறுதிப்பாட்டைத் தனது தனிப்பட்ட வாழ்க்கை முறையிலும் பேணி வந்தார் என்பதற்கு இதுவே சான்றாகும். விருதுகளையும் பதவிகளையும் தேடிச் செல்பவர்களுக்கு மத்தியில், அவை தம்மைத் தேடி வந்தபோதும் அவற்றைத் தவிர்த்த பெருந்தகை பேராசிரியர் நுஃமான். எனினும், சில தவிர்க்க முடியாத சூழல்களால் ஓரிரு விருதுகளை அவர் ஏற்க வேண்டியிருந்தது. குறிப்பாக, இலங்கையின் அரசு சாகித்திய விருது மற்றும் 2011-இல் இந்தியாவில் அவருக்குத் தெரிவிக்கப்படாமலேயே அறிவிக்கப்பட்ட விளக்கு விருது ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவை கௌரவத்திற்காக அவர் தேடிச் சென்றவை அல்ல, மாறாகச் சூழலின் நிர்ப்பந்தத்தால் அமைதியாக ஏற்றுக்கொண்டவை. விருதுகளின் பின்னால் செல்லாமல் இருப்பதே எழுத்தின் மரியாதையை நிலைநாட்டும் என்ற கருத்தை முன்வைத்தவர்களில் கலாநிதி சி. சிவசேகரம் அவர்களும் ஒருவர். இவ்விருவரும் கொள்கைத் தெளிவுடன் செயற்பட்டவர்களாகத் திகழ்கின்றனர். தமிழ் மொழியியல் மற்றும் நவீன இலக்கியச் சிந்தனைகளில் முக்கியமான திருப்புமுனைகளை உருவாக்கியவர்களாக இவர்களைச் சுட்டிக்காட்டலாம். இருப்பினும், எழுத்தாளரின் நிலையான உயர்வை நிர்ணயிப்பதில் விருதுகள் தீர்மானகரமான பங்கு வகிப்பதில்லை என்பதே இந்நிலையிலிருந்து பெறப்படும் மையக் கருத்தாகும்.

பலஸ்தீன மக்களின் அவலக்குரல்களையும் போராட்ட உணர்வையும் தமிழ் இலக்கியச் சூழலில் முதன்முதலில் ஓங்கி ஒலிக்கச் செய்த பெருமை பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்களையே சாரும். 1960-களின் பிற்பகுதியில் இருந்தே பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் மீதிருந்த ஆழ்ந்த ஈடுபாடு காரணமாக அக்கவிதைகளை அவர் மொழிபெயர்க்கத் தொடங்கினார். அவர்களது வாழ்வியல் துயரங்கள், அடக்குமுறைக்கு எதிரான வீரம் மற்றும் போராட்டத்தின் நியாயப்பாடுகளைத் தமிழ்ப் பொதுவெளிக்குக் கொண்டு வந்ததில் அவரது மொழிபெயர்ப்புகள் பெரும் பங்காற்றின. குறிப்பாக, அவரது புகழ்பெற்ற மொழிபெயர்ப்புத் தொகுப்பான ‘பாலஸ்தீனக் கவிதைகள்’ ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய அரசியல் விழிப்புணர்வையும், சர்வதேசப் போராட்டங்களுடனான ஒருமைப்பாட்டையும் உருவாக்கியது. மஹ்மூத் தர்வீஷ் போன்ற உலகப்புகழ் பெற்ற கவிஞர்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய அடையாளமாகவும் அவர் போற்றப்படுகிறார். அவர் சிறந்த ஆங்கிலப் புலமைமிக்கவரான எம்.ஏ. நுஃமான் இந்தோனேசியாக் கவிஞர் சைறில் அன்வர் மற்றும் மலாய் மொழியில் எழுதும் மலேசியக் கவிஞர் லத்தீஃப் மொஹிதீன் ஆகியோர்களுடைய கவிதைகளைத் தமிழில் மொழிபெயத்துள்ளார். தென்கிழக்காசிய இலக்கியப் போக்குகளைத் தமிழ் வாசகர்களுக்கு அணுக்கமாக்கிய பெருமை அவரையே சாரும்.

‘ஈழத்துத் தமிழ்க் கவிதை மரபில் மஹாகவி (து. உருத்திரமூர்த்தி) என்ற மகா கலைஞனை வெறும் ஒரு வட்டத்துக்குள் முடங்கிவிடாமல், ஒட்டுமொத்தத் தமிழ்ப் பேசும் நல்லுலகிற்கும் அடையாளம் காட்டிய பெருமை பேராசிரியர் எம்.ஏ. நுஃமானைச் சாரும். மஹாகவியின் படைப்புகளைத் தொகுத்து, நுட்பமான திறனாய்வுகளுடன் அவர் வெளியுலகுக்குக் கொண்டு வந்தமையாலேயே, அவை இன்று பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் பாடப்பரப்பில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளன. ஒரு கவிஞனைப் பாடநூல் ஆய்வுகளுக்கு அப்பால், சமூக உணர்வுமிக்க மக்கள் கவிஞனாக நிலைநிறுத்திய நுஃமானின் இப்பணிக்குத் தமிழ் உலகம் என்றும் கடமைப்பட்டுள்ளது.’

1970-களின் பிற்பகுதியில் தமிழர் மத்தியில் உருவான விடுதலைப் போராட்ட உணர்வும், அரச அடக்குமுறைகளும் ஈழத்து இலக்கியத்தில் ‘எதிர்ப்புக் கவிதைகள்’ எனும் புதிய அலையைத் தோற்றுவித்தன. 1977-ஆம் ஆண்டு இன வன்முறையைத் தொடர்ந்து நுஃமான் எழுதிய ‘துப்பாக்கி அரக்கரும் மனிதரின் விதியும்’, ‘நேற்றைய மாலையும் இன்றையக் காலையும்’ ஆகிய கவிதைகள், தமிழ் எதிர்ப்பிலக்கியத்தின் போக்கை முற்றிலும் மாற்றியமைத்தன. வெறும் உணர்ச்சிவசப்பட்ட முழக்கங்களாக இல்லாமல், அதிகாரத்தின் வன்முறையையும் மனித அவலத்தையும் ஆழமான படிமங்கள் ஊடாகப் பதிவு செய்ததில் இக்கவிதைகள் முன்னோடியாகத் திகழ்கின்றன. விமர்சனக் கலையில் உச்சமாக மதிக்கப்படும் ஒரு தனித்துவமிக்கவர். துணிந்து சரி பிழையெனப் பேசிட வல்லவர். கூர்மையான கத்தியைப் போன்றது அவரது எழுத்துகள் துன்பப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை தரும் கவிதைகளையே எழுதுபவர். அவரது கவிதைகள் மத இனவெறிகளுக்குத் தீனி போடாது. மதச்சார்ப்பின்மை இழையோடும் மனிதநேயம் ஊடுபாயும் சமூக சமவுடமைப் போக்காளராகவும் விடுதலை வேட்கை மிகுந்தவராகவும் திகழ்கிறார்.

தமிழ் மொழி, அதன் வளர்ச்சி, சமூக சமத்துவம் மற்றும் மானுட நேயம் ஆகியவற்றில் பேராசிரியர் நுஃமான் மிகுந்த பற்றுறுதி கொண்டவர். பழைமையின் செழுமையையும் புதுமையின் தேவையையும் ஒருசேரப் பகுப்பாய்வு செய்து, எத்தகைய தத்துவச் சிக்கல்களுக்குள்ளும் சிறைபடாமல் தனக்கென ஒரு தனித்துவமான ஆய்வுப் பாதையை அவர் அமைத்துக்கொண்டார். குறிப்பாக, அவர் வெளியிட்ட ‘கவிஞன்’ என்ற கவிதை இதழ் ஈழத்து இலக்கிய உலகில் ஒரு பெரும் திருப்பமுனையாக அமைந்தது. அதில் அவர் எழுதிய கட்டுரைகள், நவீன கவிதை குறித்த புதிய புரிதல்களையும் விவாதங்களையும் உருவாக்கி, ஒரு புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தன.

1990-இல் புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களை பலவந்தமாக வெளியேற்றிய காலகட்டத்தில் அவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றியாவர். அச்சமயம் தவணை விடுமுறைக்காக அவர் ஊர் வந்திருந்தார். அச்சமயம் அவர் யாழ்ப்பாணத்திற்கு மீளவும் திரும்பிப் போக முடியாது இருக்கும் என்று அவர் கனவிலும் நினைத்திருக்கவில்லை. எனினும், இந்த முஸ்லிம்களுடைய வெளியேற்றத்தால் பேராசிரியர் எம்.ஏ. நுஃமானை யாழ் பல்கலைக்கழக சமூகம் இழந்ததை பெரும் பேரிழப்பாகக் கருதினார்கள். இது தொடர்பில் லேக் ஹவுஸ் வெளியீடான அமுது சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் மனோரஞ்சன் கண்டியில் இடம்பெற்ற இலக்கியச் சந்திப்பு ஒன்றில் குறிப்பிடும் போது ‘1990-இல் புலிகளால் வடக்கில் இருந்து ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகம் வெளியேற்றப்பட்ட சமயம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர் பீடம் அவசரமாகக் கூடியது. அக்கூட்டத்தில் குறிப்பாக அப்பல்கலைக்கழகத்தில் மிக உயர்வாக மதிக்கப்படுகின்ற பேராசிரியர் எம்.ஏ. நுஃமானை மாத்திரம் வைத்துக் கொள்வோமா’ என்ற கருத்து நிலவியதாகக் குறிப்பிட்டார். ஆகவே மனோரஞ்சனின் கூற்றுப்படி பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள் அங்கு இருந்து ஏற்கனவே வந்துவிட்டாலும்கூட அவருடைய அறிவுத் தேவை எந்தளவு என்பதனை பல்கலைக்கழக சமூகம் உணர்ந்து நின்றது என்பதை இதில் இருந்து விளங்கிக் கொள்ளமுடிகிறது.

பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள், இன முரண்பாடுகள் உச்சம் பெற்றிருந்த போர்ச் சூழலிலும் சமூக நல்லிணக்கத்திற்காக உறுதியுடன் நின்றவர். குறிப்பாக, தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை வன்முறைக்கு பலிகொடுத்த மிகத் துயரமான தனிப்பட்ட இழப்புகளைச் சந்தித்தபோதிலும், அவர் ஒருபோதும் தமிழ் மக்கள் மீதோ அல்லது தமிழ் மாணவர்கள் மீதோ கசப்புணர்வு கொள்ளவில்லை. சமூகங்களுக்கு இடையிலான விரிசல்களைக் களைந்து, அறிவுத்தளத்தில் ஒரு பாலமாகச் செயற்படுவதையே அவர் தனது வாழ்நாள் நோக்கமாகக் கொண்டிருந்தார். இனத்துவ எல்லைகளைக் கடந்து, தமிழ் மாணவர்களுடனும் கல்விச் சமூகத்துடனும் அவர் பேணிய பரஸ்பர மரியாதையும் நேர்மையும் ஈடு இணையற்றவை. இத்தகைய உயர்ந்த மானுடப் பண்பும், நடுநிலையான ஆளுமையுமே அவரை அனைத்துச் சமூகங்களினதும் இதயங்களில் ஒரு மதிக்கத்தக்க அறிஞராக இன்றும் நிலைநிறுத்தியுள்ளது

பேராசிரியர் நுஃமான் அவர்களின் கற்பித்தல் முறை மிகவும் தனித்துவமானது; அது அவரது இயல்பிலேயே ஊறிய ஒரு பண்பு என்றுதான் கூற வேண்டும். குறிப்பாக, கல்முனை மண்ணுக்கே உரிய சொல்லாடல் இனிமையுடன் அவர் பாடம் நடத்தும் பாங்கு அலாதியானது. இலங்கையில் மொழியியலை அவரைப் போல் நுட்பமாகக் கற்பிக்க வல்லவர் யாரும் இல்லை என்றே கூறவேண்டும். அவர் கற்பிக்க வரும்போது பாடக்குறிப்புகளோடே சமூகமளிப்பார். புறநானூறு போன்ற சங்க இலக்கியப் பாடல்களையும், நாட்டார் இலக்கியங்களையும் ஏடுகளைப் பார்க்காமலே மனனமாக ஒப்புவிக்கும் அவரது நினைவாற்றல் வியக்கத்தக்கது. அவர் நாவினால் ஒரு பாடத்தைக் கற்பிக்கும்போது அது வெறும் கல்வியாக மட்டும் அமையாமல், ஒரு சுவையான இலக்கிய அனுபவமாகவே மாறிவிடும். அவரது இந்த அபாரமான கற்பித்தல் திறனைக், கண்டி திரித்துவக் கல்லூரியின் ஓய்வுநிலை ஆசிரியர் இரா. சிவலிங்கம் போன்ற மூத்த தலைமுறையினர் இன்றும் மிகுந்த வியப்புடன் பாராட்டி வருகிறார்கள். காலம் கடந்தும் மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்களின் மனதில் அவர் ஒரு ‘ஆசிரியப் பேராசானாக’ நிலைத்து நிற்கின்றார்.

பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் இதுவரை நவீன தமிழியல் ஆய்வுக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் வலுசேர்க்கும் வகையில் முப்பத்தைந்து பெறுமதிமிக்க நூல்களை வழங்கியுள்ளார். தமிழ் இலக்கியத்தின் பன்முகப் பார்வையை உலகளாவிய இயங்குநிலையோடு விளக்கும் இவரது நூல்கள், காலத்தால் அழியாத அறிவுச் சொத்துக்களாகும்.தற்போது அவரிடம் அச்சுக்குத் தயாராக இன்னும் 15 நூல்களுக்கான கட்டுரைகள் கையிருப்பில் உள்ளன. 21-ஆம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியப் போக்கை ஆவணப்படுத்த இவை வெளிவருவது மிக அவசியமாகும். எனவே, இப்பாரிய பணியைத் தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழியியல்துறை அல்லது பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை முன்னெடுத்து, அவற்றை நூலுருவில் வெளியிடுவது எதிர்கால மாணவர் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்குச் செய்யும் பெருந் தொண்டாக அமையும்.

குடும்பப் பின்னணி:

நுஃமான் அவர்களுடைய தந்தையான மக்பூல் ஆலிம் அவர்கள் கல்முனைப் பிரதேசத்தில் சமூக, சமய, கல்வி மற்றும் அரசியல், பொருளாதார முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞரும் ஆசிரியரும் ஆவார். அவர் இயற்றிய ‘முஸ்லீங்களுக்கோர் விஞ்ஞாபனம்’ என்னும் நூல் கல்முனை மண்ணின் வரலாறையும் முன்னோர்களின் சமூகப் பணிகளையும் ஆவணப்படுத்தும் பொக்கிஷமாக திகழ்கிறது. இந்நூல் அவரது சமூகப் பங்களிப்பின் பரிமாணத்தைக் காட்டுவதோடு, பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்களின் ஆளுமை உருவாக்கத்திற்கும் அத்திவாரமாக அமைந்ததாகக் கூறலாம். 13.11.1907 பிறந்த சுலைஹா உம்மாவை 22.09.1922-இல் மக்பூல் ஆலீம் திருமணம் செய்து கொண்டார். சுலைஹா உம்மாவின் தகப்பானர் பெயர் அகமது லெவ்வை சின்ன மீராலெவ்வை. அவரது உயரம் காரணமாக ஊரில் அவரை வணராசாப் போடியார் என அழைப்பர். சுலைஹா உம்மாவின் தாயார் அலியார்ப் போடி கதிசா உம்மா. இவர்கள் ஊரில் வசதியுள்ள விவசாயக் குடும்பத்தினர். பேராசிரியர் எம்.ஏ. நுஃமானின் தாய் தந்தையருக்கு ஏழு பிள்ளைகள். நபீஸத்துல் நாச்சியா (1924 - 1978), றும்மான் (1937 - 2014), நூர்ஜஹான் (1940) என மூத்தவர் மூவரும் பெண்கள். அதன் பிறகு பிறந்த முஹம்மது சுபியான் (1941 - 1989), முஹம்மது நஃமான் (1944), முஹம்மது சல்மான் (1947), முஹம்மது ஹாறூன் (1950) என அனைவரும் ஆண்கள். மக்பூல் ஆலிம் தம்பதிக்கு மொத்தம் 23 பேரப்பிள்ளைகளும் 29 பூட்டப் பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்களுள் பலர் இன்று அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மலேசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். இவர் தந்தை எம்.எஸ். காரியப்பர் அவர்களுடன் இணைந்து அக்காலகட்டத்தில் கல்முனைப் பிரதேசத்தில் நுஃமானின் தந்தையான மக்பூல் ஆலிம் ஆற்றிய சமூக, கல்விப் பணிகள் அப்பிரதேச மண்ணோடு அழியா வரமாகப் பின்னிப்பிணைந்து இருக்கின்றன. இதுவே அவர்களின் குடும்பத்தினரைச் சிறப்புடன் வாழவைத்தது எனலாம்.

கல்முனை மண்ணின் பேராளுமை எம்.ஏ. நுஃமானின் படைப்புலகம் மானுட நேயத்தையும், உலகளாவிய போர் அவலங்களுக்கு எதிரான குரலையும் அடித்தளமாகக் கொண்டது. இந்தப் பண்பு அவருக்குத் தனது தந்தை மக்பூல் ஆலீம் வழியாகக் கிட்டியது. ‘ஒருவருடைய இனப்பற்று மற்றைய இனங்களுக்கு எதிராக அமைய வேண்டியதில்லை’ என்ற தந்தையின் இஸ்லாமிய விழுமியமே நுஃமானின் வாழ்வியலாகவும் மாறியது. போர்ச் சூழலில் தனது உடன்பிறந்த சகோதரனை வன்முறைக்குப் பலிகொடுத்த பெரும் துயரத்தைச் சந்தித்தபோதும், தந்தையின் வழிகாட்டலும் கல்வியறிவும் அவரை நிதானமாகச் சிந்திக்கத் தூண்டின. தன் சொந்த ஊருக்கு அருகில் பிறந்த சுவாமி விபுலானந்தரைப் போலவே, நுஃமானும் குறுகிய எல்லைகளைக் கடந்து, அனைத்து இன மக்களினது சகவாழ்வுக்காகவும், தமிழியலின் எழுச்சிக்காகவும் சிந்தனை மாற்றத்திற்காகவும் உழைத்த ஒரு பரந்த நோக்குடைய பேரறிஞராவார்.

கல்வி:

எம்.ஏ. நுஃமான் ஆரம்பக் கல்வியினை ஊர்ப் பாடசாலையில் கற்றார். அதன் பின்பு பத்து வயதில் கல்முனை நகரிலுள்ள உவெஸ்லி உயர்தர பாடசாலையில் கற்றார். கல்முனையில் மாமாவின் கடையில் இருந்துகொண்டுதான் பாடசாலைக்குச் சென்று வந்தார். அவர் க.பொ.த சாதாரண தரம் சித்தியடைந்தபின் அப்பாடசாலையில் க.பொ.த உயர் தரம் ஒரு வருடம் கல்வி கற்றார். அவருக்கு தொடர்ந்து படிக்க விருப்பம் இருந்தது. அவருக்கு வீட்டுச் சூழல் சாதமாக இருக்கவில்லை. க.பொ.த சாதாரணம் பரீட்சையில் சித்தி அடைந்தவர்களுக்கு அக்காலகட்டத்தில் ஆசிரியர் நியமனம் வழங்கினார்கள். அவருடைய தந்தையின் விருப்பத்துக்கு ஏற்ப 18 வயது தொடங்கியதும் 1961 நவம்பரில் ஆசிரியர் நியமனம் பெற்று திருகோணமலை சென்றார். அங்கு சின்னக் கிண்ணியாவில் ஒரு வருடம் ஆசிரியராகக் கடமையாற்றினார். அப்போது அங்கு கவிஞர் அண்ணல்தான் தலைமை ஆசிரியர். அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. கிண்ணியா வாழ்க்கை குறுகிய காலம்தான். எனினும் அவர் அனுபவம் சற்று விசாலமடைந்த காலம் எனலாம்.

1963, 1964-ஆம் ஆண்டுகளில் மீண்டும் ஊருக்கு வந்து அட்டாளைச்சேனை ஆசிரியக் கலாசாலையில் பயிற்சி மாணவராக இருந்தார். அந்த இரண்டு ஆண்டுகளும் கற்பித்தல் துறையில் அவர் அறிவும் அனுபவமும் விருத்தியடைந்தது. ஆசிரியர் பயிற்சி முடிந்ததும் பொலன்னறுவை விஜித மகா வித்தியாலயத்தில் அவருக்கு நியமனம் கிடைத்தது. அது சிங்களப் பாடசாலை. அதில் ஒரு சிறிய முஸ்லிம் பிரிவு இருந்தது. அது அவரது வாழ்வில் முக்கியமான காலம் எனலாம். அச்சூழுல் சிங்கள மக்களுடன் பழகவும் சிங்கள மொழி அறிவை வளர்த்துக் கொள்ளவும் அவருக்கு வாய்ப்பாக அமைந்தது. அவர் அங்கு மூன்று வருடம் பணியாற்றினார். 1968-இல் மீண்டும் ஊருக்கு மாற்றம் பெற்று வந்தார். ஊர்ப் பாடசாலையில் மூன்று வருடம் பணியாற்றினார். கல்முனை எழுத்தாளர் சங்கத்துடன் மீண்டும் இணைந்து செயற்பட்டார். இந்தக் காலத்தில்தான் நண்பர் சண்முகம் சிவலிங்கத்துடன் இணைந்து ‘கவிஞன்’ இதழை வெளிக்கொணர்ந்தார். அப்போது மஹாகவி மட்டக்களப்புக் கச்சேரியில் சேவையாற்றிக் கொண்டிருந்தார். அவரை அடிக்கடி சந்திக்கவும் அவரது ‘கோடை’ நாடகத்தை வெளியிடவும் வாய்ப்புக் கிடைத்தது.

1970-இல் சுயமாகப் படித்து க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதி பல்கலைக்கழகம் தெரிவானார். இது அவருடைய வாழ்க்கையில் இன்னுமொரு திருப்பம். 1971-இல் கொழும்புக்கு மாற்றம் பெற்றுச் சென்று ஆசிரியர் பணியாற்றிக் கொண்டே பல்கலைக்கழகத்திலும் பட்டப் படிப்பை மேற்கொண்டார். காலையில் பல்கலைக்கழக மாணவன், பிற்பகலில் பாடசாலையில் ஆசிரியராக இருந்து ஐந்து ஆண்டுகள் கொழும்பில் கற்பித்தார்.

பல்கலைக்கழகத்தில் மொழியியலைச் சிறப்புத் துறையாகப் பயின்றவர். அப்போது பல்கலைக்கழகத்தில் அது ஒரு புதிய துறை. பிரதானமாகப் பேராசிரியர் சு. சுசீந்திரராஜாவிடம்தான் அவர் மொழியியலைக் கற்றார். அப்போது அவர் மட்டும்தான் தமிழ் மொழி மூலம் அங்கு மொழியியலைக் கற்பித்தார். அவரது இறுதி ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்துக்கு வருகை தரு விரிவுரையாளர்களாக வந்த பேராசிரியர் தனஞ்சயராசசிங்கம், பேராசிரியர் சண்முகதாஸ் ஆகியோர்களிடமும் மொழியியல் கல்வியினைக் கற்றவர்.

அவரது இலக்கியச் செயற்பாடுகளிலும் முக்கிய காலம் இது எனலாம். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடனும் இளங்கீரனுடன் ஜனவேகம் பத்திரிகையிலும் சாகித்திய மண்டலத் தமிழ் இலக்கிய குழுவிலும், இணைந்து செயற்பட்டவர். 1970 முதல் 1990 வரை அவர் யாழ்ப்பாணத்தில் வசித்த காலமாகும். 1976 ஜுன் மாதம் அவர் யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை விரிவுரையாளராக இணைந்தார். 1990 ஜுன் வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். பல்கலைக்கழக விடுமுறை காரணமாக ஜுன் 6-ஆம் திகதி கல்முனைக்கு வந்தார். ஜுன் 11 புலிகள் அரச படைகளுடன் யுத்தத்தில் களமிறங்கினார்கள். அப்போது கிழக்கில் முஸ்லிம் கிராமங்களில் அசாதாரண சூழ்நிலை நிலவியது. ஒக்ரோபரில் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். ஆதலால் அவருடைய யாழ் பல்கலைக்கழகத் தொடர்பு முடிவுபெறலாயிற்று. ஒரு வருடம் யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து இடம்பெயர்ந்த விரிவுரையாளராகப் பேராதனையில் கடமையாற்றினார்.

அவருடைய வாழ்வில் யாழ்ப்பாணக் காலம் மிக முக்கியமானது. கொந்தளிப்பான சூழல்களில் அவர் அங்கு வாழ்ந்தவர். அவருடைய எதிர்ப்புக் கவிதைகளில் கணிசமானவை அப்போதுதான் எழுதப்பட்டவை. அக்காலப்பகுதியில் திறனாய்வு, ஆராய்ச்சி, மொழிபெயர்ப்பு என்று அவர் பல்துறைகளில் ஈடுபட்டார். அவரது பட்ட மேற்கல்வியையும் (எம்.ஏ., பி.எச்.டி.) அக்காலத்தில்தான் நிறைவு செய்தார். விடுதலைப் போராட்டத்தின் அரசியலை அருகில் இருந்து அவதானிக்கும் வாய்ப்பும் அக்காலத்தில்தான் அவருக்கு கிடைத்தது. பல்கலைக்கழகத்தின் உள்ளும் வெளியிலும் கலை இலக்கிய நண்பர்களுடனான அவரது நட்பு வட்டம் விலாசமடைந்தது. பேராசிரியர் க. கைலாசபதி, பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, ஏ.ஜே. கனகரத்னா போன்றோருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பும் அப்போது கிடைத்தது.

1990-இல் இருந்து 2009 வரையிலும் அவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றினார். ஓய்வு பெற்ற பின்னரும் இன்று வரையிலும் அங்கு கடமையாற்றி வருகின்றார். பேராதனையின் பல்லினச் சூழலில் அவருக்கு வாழக் கிடைத்தது ஒரு புதுமையான அனுபவம். பேராதனைக்கு வந்த பிறகுதான் அவருடைய வாழ்க்கைப் புலம் விரிவடைந்தது. இக்காலப்பகுதியில்தான் ஆங்கிலத்திலும் எழுதத் தொடங்கினார். சிங்களப் புலமையாளர்களுடன் தொடர்பு கொள்ளவும் உரையாடவும் அது அவசியமாகவும் இருந்தது. பேராதனைப் பல்கலைக்கழக காலத்தில்தான் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடனும் ஆய்வாளர்களுடனும் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது. இந்தத் தொடர்புகளால் அவருடைய அறிவும் அனுபவமும் விசாலமடைந்தது.

அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்தான் மொழியியலில் கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வை மேற்கொண்டார். அப்போது இந்தியாவில் மொழியியல் கல்விக்கான இரண்டு உயராய்வு மையங்கள் இருந்தன. ஒன்று பூனாவில் மற்றையது அண்ணாமலையில். தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் முயற்சியால் அது அண்ணாமலையில் நிறுவப்பட்டது. அவர் அங்கு சென்ற போது தமிழில் சிறந்த மொழியிலாளர்களான பேராசிரியர்கள். கு. அகத்தியலிங்கம், ந. குமாரசாமிராஜா, செ.வை. சண்முகம், கி. கருணகாரன் முதலியோர் அங்கு கடமையாற்றினார்கள். இன்று மொழியியல் துறையில் பிரபல்யம் பெற்றிருக்கும் வாசு. ரங்கநாதன், எல். ராமமூர்த்தி ரவி சங்கர் என ஆய்வு மாணவர்கள் பலர் அங்கு இருந்தனர். இவர்களின் தொடர்பினால் மொழியியலில் பரந்துபட்ட அறிவைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. பிற்காலத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அதன் துணைவேந்தர் கருணாகரன் அழைப்பின் பேரில் அங்கு சென்று சிலகாலம் மொழியியல் துறையில் வருகைப் பேராசிரியராகக் கடமையாற்றினார். அக்காலப்பகுதியில்தான் அடிப்படைத் தமிழ் இலக்கண நூலை எழுதி முடித்தார். இக்காலத்தில் பேராசிரியர்கள் கி. அரங்கன், இராம சுந்தரம் ஆகியோருடன் நெருங்கிய நட்பினைப் பேணிவந்தார்.

2007 - 2008 காலப்பகுதியில் மலாயாப் பல்கலைக்கழக வருகை தரு விரிவுரையாளராகப் பணியாற்ற அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. தனிநாயகம் அடிகளார், வரலாற்று அறிஞர் அரசரத்தினம் ஆகிய இலங்கை அறிஞர்கள் பணியாற்றிய துறை அது. அவர் நண்பர்களான பேராசிரியர் குமரன், கிருஸ்ணன் மணியன் ஆகியோர் அவருக்கு அங்கு உறுதுணையாக இருந்தார்கள். அந்த ஓராண்டு அனுபவம் அவருக்கு முக்கியமானது. மலேசியா எழுத்தாளர்களுடன் நெருங்கிப் பழகவும் மலேசியா தமிழ் இலக்கியம் பற்றி அறிந்து கொள்ளவும் அவருக்கு கிடைத்த வாய்ப்பு முக்கியமானது. டாக்டர் சண்முக சிவா, சை. பீர்முகம்மது மற்றும் நவீன் உட்பட வல்லின குழுவினரது நட்பினையும் பேணிவந்தார்.

இவர் சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்திலும் (சிங்கப்பூர் சமூக விஞ்ஞானப் பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது) குறுகிய காலம் வருகைப் பேராசிரியராகக் கடமைபுரிந்துள்ளார். அங்கு தமிழ் மாணவர்களுக்கு மொழியியல் பாடத்தையும் கற்பித்திருக்கிறார். பல்கலைக்கழகத்தின் வேண்டுதலுக்கு இணங்க தொலைக் கல்விமுறையில் மொடியுல்களையும் எழுதிக் கொடுத்துள்ளார். சிங்கப்பூரின் பல்கலைக்கழகக் கல்வி முறையை அறிந்துகொள்வதற்கும், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் முனைவர் திண்ணப்பன் போன்ற தமிழறிஞர்களுடன் நெருங்கிப் பழகுவதற்கும் இப்பயணம் அவருக்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது.

சமூக விஞ்ஞான சங்கம் மற்றும் ICES ஆகிய நிறுவனங்களுடைய செயற்பாடுகளில் நுஃமான் அவர்களுடைய பங்களிப்பும் முக்கியத்துவம் பெறுகின்றது. அரசியல் விஞ்ஞானத்துறைப் பேராசிரியர் குமாரி ஜயவர்தன, ஜயதேவ உயங்ககொட, லெஸ்லி குணவர்த்தன ஆகியோருடன் நெருங்கிச் செயற்பட்டவர். சமூக விஞ்ஞான சங்கத்தின் வெளியீடுகளை மொழிபெயர்த்தார். அவ்வகையில் அவர் மொழிபெயர்த்த லெஸ்லியின் இனமுரண்பாடும் வரலாற்றியலும் (Historiography in a time Ethnic Conflict) குறிப்பிடத்தக்கது. குமாரி ஜயவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்கள் வெளிக்கொணர்ந்த தமிழ் சஞ்சிகையான பிரவாதத்தின் இதழாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

இன ஆய்வுகளுக்கான சர்வதேச மையம் (ICES) இன நல்லுறவை குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்ட அரச சார்பற்ற நிறுவனம். நீலன் திருச்செல்வம், ராதிகா குமாரசாமி ஆகியோர்கள் அதை இயக்கினார்கள். அது அவர்கள் இருக்கும் வரை சிறப்பாகச் செயற்பட்டது. இன நல்லுறவை மேம்படுத்துவதில் அவருக்கு கருத்து ஒற்றுமை இருந்ததால் அவரும் அவர்களுடன் சேர்ந்து செயற்பட்டார். றெஜி சிறிவர்தனவும் அந்நிறுவனத்தில் முக்கியமான பணியில் இருந்தார். முதலில் றெஜியின் ‘சோவியத் யூனியனின் உடைவு’ நூலை நுஃமானும் சேரனும் பதிப்பித்தார்கள். ICES ஏற்பாடு செய்த கருத்தரங்குகள் சிலவற்றில் நுஃமான் அவர்களும் பங்கேற்றிருக்கிறார். இலங்கையில் இன உறவுத் தொடர்பான விரிவுரைத் தொடர் ஒன்றை ICES ஏற்பாடு செய்தது. அத்தொடரில் ‘Understanding Sri Lankan Muslim Identity’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். அது ஒரு கை நூலாகவும் வெளிக்கொணரப்பட்டது.

2005-ஆம் ஆண்டளவில் Sri Lankan Studies என்ற பெரிய ஆய்வுத் திட்டத்தைத் தொடங்கினார்கள். அது தொடர்பான ஆய்வு நூல்கள் வெளிவந்தன. அதிலும் Sri Lankan Muslim: Ethnic Identity Within Diversity’ என்ற ஆய்வு நூலும் 2007-இல் வெளிவந்தது. 2000 ஆண்டளவில் பிற்பகுதியில் மூன்று ஆண்டுகள் இதன் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் நுஃமான் செயற்பட்டுள்ளார்.

கலை இலக்கிய ஆர்வம்:

எம்.ஏ. நுஃமான் எனும் ஆளுமை விருட்சம் உருவாவதற்கான அடிப்படைக் காரணிகளாக அவரது பெற்றோரே திகழ்ந்துள்ளனர். நுஃமானின் சிறுவயது ஓவியத் திறமையையும், 1962-இல் தினகரனில் வெளியான அவரது முதல் சிறுகதையையும் ஊரார் முன்னிலையில் காட்டிப் பெருமிதம் கொண்ட தந்தையின் செயல், அவருக்குத் தொடர்ச்சியான ஊக்கத்தையும் அங்கீகாரத்தையும் வழங்கியது. அதேவேளை, ஒரு சிறந்த கதை சொல்லியாகத் திகழ்ந்த அவரது தாய், ஜானகிராமனின் நடைக்கு இணையான உரையாடல் பாணியிலும், இயல்பான நாட்டார் பாடல் மரபிலும் கதைகளைக் கூறி நுஃமானின் இலக்கிய ஆர்வத்திற்கு வித்திட்டார். இவ்வாறு தந்தையின் புறவயமான பாராட்டும், தாயின் அகவயமான கலைத் திறனும் இணைந்து நுஃமானின் கலை மற்றும் பண்பாட்டு ஆளுமையைச் செதுக்கியுள்ளன.

1950-களின் பிற்பகுதியில் அவர் எட்டு ஒன்பதாம் வகுப்பு படிக்கின்ற காலப்பகுதியில் கவிதை எழுதத் தொடங்கினார். அப்போது தினகரன் பத்திரிகையில் ஒவ்வொரு புதன்கிழமையும் ‘புதன் மலர்’ என்று இளைஞர்களுக்கான ஒரு பகுதி வெளிவரும். அதில் வெளி வரும் ஆக்கங்கள் போல தானும் எழுதினார். அவர் முதலாவது எழுதிய கவிதை வெண்பா. அது 1962-இல் அவரது பதினெட்டாவது வயதில் வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது. அக்காலத்தில் மஹாகவி ஈற்றடி கொடுத்து வெண்பாப் போட்டி நடத்திக் கொண்டிருந்தார். ‘நெஞ்சமே நஞ்சுக்கு நேர்’ என்ற ஈற்றடிக்கு எழுதிய வெண்பா அது. அன்று முதல் 1962 - 1963 ஆண்டுகளில் அவரது கவிதைகள் ஈழத்துப் பத்திரிகைகள் சஞ்சிகைளில் அடிக்கடி வெளிவரத் தொடங்கின. அவர் பல கவியரங்குகளில் பங்குபற்றினார். அவருடைய கவிதைகளுக்கு நீலவாணன், மஹாகவி ஆகியோருடைய அங்கீகாரமும் கிடைத்தது.

1963 ஓகஸ்டில் எஸ் பொன்னுத்துரை மட்டக்களப்பில் பெரியளவில் ஒரு தமிழ் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில் இளம் கவிஞர்களுக்கான கவியரங்கு மஹாகவி தலைமையில் இடம்பெற்றது. அதில் நுஃமானும் கலந்து கொண்டார். ‘வாக்கினிலே ஒளியுண்டாகும்’ தலைப்பில் நுஃமான் கவிதை வாசித்தார். அவரது கவிதை பலரதும் பாராட்டையும் பெற்றது. எழுத்தாளர் நாடக ஆசிரியர் ஏ.ரி. பொன்னுத்துரை, மு. தளையாசிங்கம் ஆகியோர்கள் அவரது கவிதையுலகை முழுமையாக தரிசித்து அவருக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்தார்கள். அது அவருக்கு தொடக்க காலத்தில் கிடைத்த வெற்றி எனலாம்.

பாடசாலைக் காலத்தில் அவருக்கு மூன்று ஆசிரியர்களான குணரத்தினம், செபரெத்தினம், ஞானரெத்தினம் ஆகியோர் ஆதர்சமாக இருந்தார்கள். நுஃமான் அவர்கள் இவர்கள் மூவரையும் இரத்தினங்களாக மதித்து வந்தார். குணரெத்தினம். ஞானரெத்திரனம் ஆகிய இருவரும் அவருக்கு தமிழ் படிப்பித்தவர்கள். ‘கம்பராமாயாணம், கும்பகர்ணன் வதைப்படலம்’ முழுப்பாடல்களும் தேசிக விநாயகம் பிள்ளையின் ‘மலரும் மாலையும்’ தொகுப்பிலுள்ள பல பாடல்களும் மனப்பாடமாக இருந்ததற்கு இவர்களுடைய கற்பித்தலே காரணம் எனலாம். எட்டு ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் போது அவர் எழுதிய சில கவிதைகளை ஆசிரியர் ஞானரெத்தினம் அவர்கள் அவருக்குத் திருத்திக் கொடுத்துள்ளார். அவர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் காலத்தில் அதிகம் மனங்கவர்ந்த ஒருவராக பேராசிரியர் சுசீந்திரராஜா மதிக்கப்படுகின்றார். அவர் அடக்கமான, ஆர்ப்பாட்டமில்லாத மொழியியல் அறிஞர் அவர். தீவிரமான ஆய்வாளர். ஆராய்ச்சியின் நுட்பங்களையும், ஆய்வு மொழியின் செம்மைகளையும் அவரிடமிருந்துதான் கற்றார்.

அவர் சமூக இயக்க நடவடிக்கைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கண்டி ஃபோறம் என்ற அமைப்பின் ஊடாக கண்டியில் நிலவிய சமகால பிரச்சினைகளின்போது பல்கலைக்கழக சமூகமும், கண்டி நகரிலுள்ள சிவில் சமூக அமைப்புகளும் ஒன்றிணைந்து இயங்கினார்கள். இதன்போது வில்பத்து தொடர்பில் அவரது நண்பர் பேராசிரியர் ஹஸ்புல்லா எழுதிய நூலை வெளிக்கொணர்தல், புதிய அரசியல் யாப்புத் திருத்தம், முஸ்லிம் விவாக, விவாகரத்து திருத்தச் சட்டம், இனப்பிரச்சினை தொடர்பான கண்டி ஃபோறம் வெளியிட்ட அறிக்கைகளில் நுஃமான் அவர்களுடைய பங்களிப்பு அளப்பரியது. அது தற்போதும் அரச மட்டங்களில் பேசுபொருளாகக் காணப்படுகின்றன.

கல்வி மற்றும் பாடத்திட்ட மேம்பாட்டுப் பணிகளில் எம்.ஏ. நுஃமானின் பங்களிப்பு:

எம்.ஏ. நுஃமான் அவர்கள் இலங்கையின் உயர்கல்வித் துறையில், குறிப்பாகத் தமிழ் மொழிப் பாடத்திட்ட மேம்பாட்டில் மிக முக்கியமான ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். 1995 - 1996 காலப்பகுதியில் தேசிய கல்வி நிறுவனம் மற்றும் உயர்கல்வி அமைச்சின் பாடத்திட்ட மேம்பாட்டுத் திட்டங்களில் தனது பங்களிப்பை வழங்கிய அவர், 1997 முதல் 2001 வரை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழிகள் துறைக்கான கல்வி ஆலோசகராகவும் கடமையாற்றினார். மேலும், 2007-ஆம் ஆண்டில் அதே பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழிப் பாடத்திட்டத்தைத் திருத்தியமைப்பதற்கான ‘IRQUE’ திட்டத்தின் கீழ் ஆலோசகராகச் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறாகத் தேசிய மட்டத்திலும் பல்கலைக்கழக மட்டத்திலும் தமிழ் மொழிப் பயிற்றுவிப்பு முறையியலை நவீனப்படுத்துவதில் அவரது ஆலோசனைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களில் எம்.ஏ. நுஃமானின் கல்விசார் பங்களிப்புகள்:

கல்வித் துறையில் உன்னத நிலையை எட்டிய எம்.ஏ. நுஃமான், தனது ஆளுமையின் மூலம் பல்வேறு அரச மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்துச் சேவையாற்றியுள்ளார். குறிப்பாக, 1995 முதல் 2007 வரை தேசிய கல்வி நிறுவனம், உயர்கல்வி அமைச்சு மற்றும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பாடத்திட்ட மேம்பாட்டுத் திட்டங்களில் (IRQUE உட்பட) ஆலோசகராகப் பணியாற்றினார். 2010-இல் மும்மொழி இலங்கைத் திட்டத்திற்கான ஜனாதிபதி ஆலோசனைக் குழு உறுப்பினர், இலங்கை அலுவலக மொழிகள் ஆணைய உறுப்பினர் (2010-2011) மற்றும் தேசிய மொழி ஆணையத்தின் தமிழ் தொழினு ட்பக் கலைச்சொல் திருத்தல் குழு உறுப்பினர் (1999-2002) என மொழிக் கொள்கை சார்ந்து குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளை வழங்கியுள்ளார். மேலும், கொழும்பு மற்றும் கண்டியில் உள்ள சர்வதேச இனத்துவ ஆய்வு மையங்களின் (ICES) இயக்குநர்கள் சபை மற்றும் ஆலோசனைக் குழுக்களிலும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமகால இந்திய ஆய்வு மையத்திலும் (2012) உறுப்பினராக இருந்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இதழின் ஆசிரியர் குழுவிலும், ‘நேத்ரா’ மதிப்பாய்வுக் குழுவிலும் பணியாற்றிய இவரது கல்விசார் பணிகள், ஒரு தனிமனிதனின் உழைப்பிற்கும் மேலாக ஒரு நிறுவனத்தின் வீச்சுக்கு இணையானவை எனலாம்.

சமூக, அரசியல் மற்றும் ஊடகத் தளங்களில் எம்.ஏ. நுஃமானின் வகிபாகம்:

எம்.ஏ. நுஃமான் அவர்கள் கல்விப்புலத்திற்கு அப்பால், நாட்டின் அரசியல் மற்றும் கலாசாரக் கட்டமைப்புச் சார்ந்த உயர்மட்டக் குழுக்களிலும் ஆளுமை மிக்கப் பங்களிப்புகளை வழங்கியுள்ளார். குறிப்பாக, 2000-ஆம் ஆண்டில் அரசியலமைப்பு விவகார அமைச்சின் சீர்திருத்தத்திற்கான ஆலோசனைக் குழு உறுப்பினராகவும், 1998 முதல் இன ஒருங்கிணைப்பு அமைச்சின் உத்தி மற்றும் ஆராய்ச்சிக் குழு உறுப்பினராகவும் பணியாற்றித் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில் தடம் பதித்தார். கலை மற்றும் ஊடகத்துறையைப் பொறுத்தவரை, 1994-1997 காலப்பகுதியில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் இயக்குநர்கள் சபையிலும், பல்வேறு காலகட்டங்களில் இலங்கை கலைமன்றத்தின் தமிழ் இலக்கியக் குழுவிலும் உறுப்பினராக இருந்து கலைத்துறையை நெறிப்படுத்தினார். சர்வதேச அளவில், இந்தியாவின் பாண்டிச்சேரி மொழியியல் மற்றும் கலாசார நிறுவனத்தின் (PILC) திராவிட ஆய்வுகள் இதழின் ஆசிரியர் குழுவில் (1999) பணியாற்றியமை அவரது புலமைத்துவ வீச்சை உறுதிப்படுத்துகிறது. இத்தகைய பன்முகப்பட்ட சேவைகளின் ஊடாக, இலங்கையின் கல்வி மறுமலர்ச்சிக்கும் நவீன சிந்தனை மாற்றங்களுக்கும் வித்திட்ட ஒரு முன்னோடியாக அவரை அடையாளப்படுத்த முடியும்.

சர்வதேச மற்றும் தேசிய மட்டத்திலான மாநாடுகள் மற்றும் கருத்தரங்கப் பங்களிப்புகள்:

n சர்வதேச மாநாடுகள் மற்றும் உலகளாவிய பங்களிப்பு:

இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா மற்றும் லண்டன் எனப் பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.

மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் கலாசாரத்தின் 10-வது சர்வதேச மாநாடு (2007) மற்றும் வல்லினம் பதிப்பகம் நடத்திய இளம் எழுத்தாளர்களுக்கான மொழியியல் பட்டறை (2012) முதலானவை மலேசியாவில் இவருக்குப் பெயரையும் புகழையும் ஈட்டித்தந்தன.

இவர் இந்தியாவில் நடைபெற்ற பல முக்கியமான மாநாடுகளில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். குறிப்பாக சாஹித்திய அகாடமியின் காமன்வெல்த் சர்வதேச கருத்தரங்கில் (2010) பங்கேற்றுள்ளார். மேலும் தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்) ஏற்பாடு செய்த மொழியியல் மாநாடுகளில் (1986, 1988) கலந்து கொண்டதுடன், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் நடத்திய இலக்கிய விமர்சனக் கருத்தரங்குகளில் (1987, 1998) பங்கேற்றுள்ளார். அதோடு, சென்னையில் நடைபெற்ற ‘தமிழ் இனி 2000’ மாநாட்டிலும் கலந்து கொண்டு தன் அறிவுப் பங்களிப்பைச் செய்துள்ளார்.

மேற்கத்தேய நாடுகளில் நடைபெற்ற ஆய்வு மாநாடுகளிலும் கலந்து கொண்டு மொழியை வளர்த்த பேரறிஞராகவும் எம்.ஏ. நுஃமான் காணப்படுகின்றார். கனடாவின் டொரொண்மோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ் ஆய்வுகள் மாநாடு (2009) மற்றும் லண்டனில் நடைபெற்ற 19வது ஐரோப்பிய தமிழ் இலக்கிய மாநாடு (1994) போன்றன இதற்குச் சான்று பகர்கின்றன.

n சார்க் (SAARC) மற்றும் பிராந்திய மட்டத்திலான பங்களிப்பு:

தெற்காசிய நாடுகளுக்கிடையிலான கலாசாரப் பரிமாற்றங்களில் முக்கிய பங்காற்றியுள்ளார். புது தில்லி மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற சார்க் எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மாநாடுகளில் (2000, 2005) கலந்துகொண்டு ஈழத்து இலக்கியத்தின் தனித்துவத்தைப் பறைசாற்றினார்.

n மொழியியல் மற்றும் மொழிபெயர்ப்பு ஆய்வுகள்:

மொழியியல் நுட்பங்கள் மற்றும் மொழிபெயர்ப்பு நடைமுறைகள் குறித்த ஆய்வுகளில் இவர் முன்னோடியாகத் திகழ்கிறார். பேராதனைப் பல்கலைக்கழகம் (2002, 2006) மற்றும் கொழும்பு காமன்வெல்த் சங்கம் (1995) நடத்திய சர்வதேச மொழிபெயர்ப்பு மாநாடுகளில் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழில் கலைச்சொல்லாக்கம் மற்றும் அகராதியியல் குறித்த பயிற்சிப் பட்டறைகளிலும் (தஞ்சாவூர் 1986, கர்நாடகா 1985) பங்கேற்றுத் தமிழ் மொழியின் நவீனமயமாக்கலுக்கு வித்திட்டார்.

n உள்நாட்டுப் பல்கலைக்கழக மற்றும் ஆய்வு நிறுவனப் பணிகள்:

இலங்கையின் பேராதனை, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகங்கள் நடத்திய வருடாந்த ஆராய்ச்சி மாநாடுகளில் முதன்மை ஆய்வாளராகப் பங்கேற்றுள்ளார். இன ஒருங்கிணைப்பு, பன்மைத்துவ சமூகத்தில் சகவாழ்வு (ICES, 2008) மற்றும் தமிழ் ஒரு அதிகாரபூர்வ மொழி (திருகோணமலை, 1998) போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த கருத்தரங்குகளில் இவரது ஆலோசனைகள் முக்கியத்துவம் பெற்றன.

நாட்டுப்புறவியல், தொல்காப்பிய ஆய்வு, நவீன இலக்கிய விமர்சனம் மற்றும் மொழியியல் எனப் பன்முகத் தளங்களில் இவர் ஆற்றிய இந்தப் பயணங்கள், நுஃமான் அவர்களை ஒரு சர்வதேசத் தரம் வாய்ந்த அறிவுஜீவியாக நிலைநிறுத்தியுள்ளன. இத்தகைய விரிவான அனுபவப் பின்னணியே அவரை ஒரு நவீன சிந்தனை மாற்றத்திற்கான வழிகாட்டியாக மாற்றியுள்ளது.

மொழிபெயர்ப்பு பணியும் சமூக நல்லிணக்கத்திற்கான முனைப்பும்:

இலங்கையில் மூன்று தசாப்த காலங்களாக நீடித்த போர்ச் சூழலில், தமிழ் மொழியியலைச் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளோடு இணைத்துப் பார்க்கும் ஒரு பரஸ்பரப் புரிதலை ஏற்படுத்தியதில் நுஃமான் அவர்களின் தலைமைத்துவம் மிக முக்கியமானது. அவரது மொழிபெயர்ப்புப் பணிகள் உலகளாவிய கலை, கலாசார மற்றும் அரசியல் விழுமியங்களைத் தமிழ் வாசகப் பரப்புக்குக் கொண்டு வந்தன. குறிப்பாக, 1981-இல் பலஸ்தீனக் கவிதைகள், 2008-ஆம் ஆண்டு முஹமட் தர்விஸ் கவிதைகள் முதலான மொழிபெயர்ப்பு நூல்களை வெளிக்கொணர்ந்த நுஃமான் 2012-இல் மலேசியக் கவிஞர்களான லத்தீஃப் மொஹிதீனின் ‘காற்றில் மிதக்கும் சொற்கள்’, சைறில் அன்வரின் ‘இரவின் குரல்’ ஆகிய மொழிபெயர்ப்பு கவிதை நூல்களையும் வெளியிட்டார். இவை மட்டுமன்றி, ஃபரீதா ஷாஹித்தின் ‘கட்டுப்பாடு அல்லது சுயாதீனம்’ (2004), ‘இன முரண்பாடும் வரலாற்றியலும்’ (2000), மற்றும் ‘முஸ்லிம் பெண்களும் அரசியல் தலைமைத்துவமும்’ (1999) போன்ற ஆய்வு ரீதியான மொழிபெயர்ப்புகள் மூலம் அரசியல், சமூகம் மற்றும் பெண்ணியம் சார்ந்த நவீனச் சிந்தனைகளை வெளிக் கொணர்ந்தார். இத்தகைய பன்முக மொழி ஆற்றல் மிக்கப் பணிகள், வெறும் மொழிமாற்றமாக அமையாமல் பல்லின சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வையும் கூட்டுறவையும் ஏற்படுத்தும் ஒரு பண்பாட்டுப் பாலமாகத் திகழ்கின்றன.

எம்.ஏ. நுஃமானின் கல்வி அனுபவமும் கல்விமுறை குறித்த விமர்சனப் பார்வையும்:

பதினைந்து ஆண்டுகள் பாடசாலை ஆசிரியராகவும், முப்பத்து மூன்று ஆண்டுகள் பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களைச் செதுக்கிய நீண்ட அனுபவம் கொண்ட எம்.ஏ. நுஃமான், கல்விப்புலத் தோல்விகளுக்காக மாணவர்களைக் குறை கூறாமல் நாட்டின் கல்வி முறையையே விமர்சனத்திற்குள்ளாக்குகிறார். தனது ‘முற்றுப்பெறாத விவாதங்கள்’ (2023) எனும் நூலில், இலங்கையின் கல்விமுறை மாணவர் மையமானதோ அல்லது அறிவுசார்ந்ததோ அல்ல, மாறாக அது வெறும் ‘பரீட்சை மையக் கல்விமுறை’ மட்டுமே என்பதை அவர் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார். இத்தகைய முறையினால் சுயசிந்தனையும் விமர்சனப் பார்வையும் கொண்ட ஆளுமைமிக்க மாணவர்களை உருவாக்க முடியாது என அவர் அன்று முன்வைத்த கருத்துக்கள், இன்று பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களால் முன்னெடுக்கப்படும் நவீன கல்விச் சீர்திருத்தங்களுக்கான அவசியத்தையும் அதன் தர்க்கரீதியான தேவையையும் உறுதிப்படுத்துவனவாக அமைந்துள்ளன.

முடிவுரை:

பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் அவர்கள், தமிழ் இலக்கிய உலகில் வெறும் ஆய்வாளராக மட்டுமன்றி, ஒடுக்குமுறைக்கு எதிரான 'எதிர்ப்பு இலக்கியத்தின்' வீரியமிக்கக் குரலாகவும், 'க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி' வழி செம்மையான மொழி வடிவத்திற்கும் நவீனச் சொல்லாக்கங்களுக்கும் வித்திட்ட பேரறிஞராகவும் திகழ்கின்றார். எத்தகைய இடர்கள் வரினும் தனது கொள்கையிலும் கல்விச் சேவையிலும் நேர்மையையும் பணிவையும் ஒருங்கே கடைபிடித்த இவர், வெறும் மதிப்பெண்களுக்காக அன்றி அறிவின் தேடலுக்காகக் கல்வியைப் பயில வேண்டும் என்பதற்கும், உண்மையை உரத்துச் சொல்லத் தயங்கக் கூடாது என்பதற்கும் இன்றைய இளம் கல்வியாளர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறார். கவிதைகள், ஆய்வுகள், மொழிபெயர்ப்புகள் மற்றும் உலகளாவிய கல்விப் பணிகள் எனப் பரந்து விரிந்த இவரது பங்களிப்பு, தமிழ் இலக்கிய வரலாற்றில் அதிஉச்ச நிலையில் வைத்துப் போற்றத்தக்கது. மனித அவலங்களுக்குத் தீர்வுகாணும் சிந்தனை வெளிச்சங்களைத் தனது பேனா முனையால் விதைத்து, அதன் அறுவடையை மண்ணில் நிலைநிறுத்திய ஒரு பேராளுமையாக எம்.ஏ. நுஃமான் அவர்கள் என்றும் நிலைத்திருப்பார்.

நன்றி