பன்முகக் கலை ஆளுமை கமலினி செல்வராசன்
- வே. விவேகானந்தன்
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணக் குடாநாட்டில், வடமராட்சிப் பிரதேசத்தில், தென்புலோலியூர் என்னும் பதியில், தமிழ் வித்துவப் பரம்பரையில் வாழ்ந்துவந்த, இலக்கியவாதியும் எழுத்தாளருமான பண்டிதர் மு. கணபதிப்பிள்ளை தனபாக்கியம் இணையருக்கு மூத்த மகளாக, கமலினி 1954-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ஆம் திகதி பிறந்தார். இவரது தந்தையார், இலங்கை அரசகரும மொழித் திணைக்களத்தில் பணியாற்றிக்கொண்டு, கொழும்பில் வாழ்ந்து வந்தமையால், கமலினி தனது ஆரம்பக் கல்வியை கொள்ளுப்பிட்டி சென். அந்தனிஸ் பாடசாலையில் கற்றார். பம்பலப்பிட்டி சென். கிளயர்ஸ் மகளிர் பாடசாலையில் உயர்தரக் கல்வியைக் கற்ற அவர், களனிப் பல்கலைக்கழகத்திலே, தொடர்பூடகவியலில் ‘நாட்டுக் கூத்துக் கலைகள்’ பற்றிய ஆய்வினை மேற்கொண்டு, பட்டப்படிப்பினை நிறைவு செய்தார். பாடசாலை மாணவியாகப் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே பேச்சுப் போட்டி, மற்றும் இசை, நாடக நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்குபற்றி சக மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.
கமலினி அவர்கள் வாழ்ந்த அகச்சூழல், மிக இளமையிலேயே அவர் இயல், இசை, நாடகம் என முத்தமிழிலும் ஆர்வம் கொள்ளும் வகையில் அமைந்தது. அவரது தந்தையார் தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெற்றவராகவும், இலக்கணச் சுவையோடு இலக்கியம் படைக்கும் ஆற்றல் மிக்கவராகவும் விளங்கினார். இலங்கை வானொலியிலும், இலக்கிய மேடைகளிலும், இலக்கிய நூலுருவாக்கத்திலும் ஆர்வத்துடன் செயற்பட்டார். அத்துடன் தமிழ் இலக்கண ஆய்வுகளை மேற்கொள்வதும், அவற்றைப் பத்திரிகைகளில் வெளியிடுவதும், நூல்களைத் தொகுப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டார். தாயார் தனபாக்கியம் இசையில் ஆர்வம் கொண்டு, வயலின் வாசிப்பத்தில் புகழ்மிக்கவராக விளங்கினார். தந்தையின் தமிழ் ஆர்வமும், தாயின் இசை ஞானமும் சேர்ந்த கமலினியின் அகவாழ்க்கை கலைத்துறை சார்ந்த வாழ்க்கையாக மலர்ந்தது. இலங்கை வானொலியில் இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்களிப்புச் செய்துகொண்டிருந்த பண்டிதர் மு. கணபதிப்பிள்ளை அவர்களுக்கு பல்கலை வேந்தன் சில்லையூர் செல்வராசன் நெருங்கிய நண்பரானார். 1970-ஆம் ஆண்டளவில், அவர் எழுதிய ‘ஈழத்து தமிழ் நாவல் இலக்கிய வளர்ச்சி’ என்னும் நூலுக்கு பண்டிதர் முன்னுரை எழுதி சிறப்பித்தார். களனிப் பல்கலைகழகத்திலே நாட்டுக் கூத்துக் கலைகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்ட தனது மகள் கமலினிக்கும் அறிமுகம் செய்து வைத்தார். ஆய்வு முயற்சியில் பேருதவி புரிந்த செல்வராசன்மேல் கமலினி பெருமதிப்புக் கொண்டிருந்தார். காலப்போக்கில் அது படிப்படியாய் பாசமாய், நேசமாய், காதலாய் மாறியது. இறுதியில் ஏற்கனவே திருமணம் செய்து நான்கு பிள்ளகளின் தந்தையான செல்வராசனை பெற்றோர் உறவினர்களின் எதிர்ப்பின் மத்தியில் திருமணம் செய்து கொண்டார்.
பட்டப்படிப்பை நிறைவு செய்த கமலினி அவர்கள், ஆசிரியையாகத் தனது பணியை ஆரம்பித்த போதிலும் அப்பணியில் நீண்ட காலம் நிலைக்கவில்லை. அவரது ஊடகக்கலை ஆர்வம் தேசிய ரூபவாகினி தொலைக்காட்சி, இலங்கை வானொலி என்பவற்றை நோக்கி வழிப்படுத்தியது. அதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில், நாடறிந்த அறிவிப்பாளராகவும், இலக்கியவாதியாகவும், நடிகையாகவும் கலையுலகில் வலம் வந்தார்.
வானொலியில், அராலியூர் சுந்தரம்பிள்ளை எழுதி, ஜோர்ஜ் சந்திரசேகரன் தயாரித்த ‘தலைமுறை இடைவெளி’, ‘வெள்ளோட்டம்’ ஆகிய நாடகங்களில் அவர் கதாநாயகியாக நடித்தார். சில்லையூர் செல்வராசன் எழுதிய ‘தணியாத தாகம்’ என்ற வானொலித் தொடர் நாடகத்தில், குடும்பத்தின் இளைய மகளாக நடித்துப் புகழ் பெற்றார். அத்தொடர் நாடகத்தில் செல்வராசன் இயற்றி, செல்வராசனுடன் கமலினியும் இணைந்து பாடிய ‘அத்தானே அத்தானே, எந்தன் ஆசை அத்தானே, கேள்வி ஓன்று கேட்கலாமா உன்னைத்தானே?’ என்ற பாடல், பட்டிதொட்டி எங்கும் பரவி, இலங்கையில் மட்டுமன்றி தமிழகத்து மக்கள் மனதையும் கவர்ந்தது. கணவனும் மனைவியுமாக இணைந்து காதலர்களாக நடித்த, ‘கோமாளிகள்’ என்ற நகைச்சுவைத் தொடர் நாடகம், சினிமாவாக எடுக்கப்பட்டபோது, அதில் கமலினி பிரதான பாத்திரமேற்று நடித்தார். அத்திரைப்படம் இலங்கை இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. சந்திரன் ரத்தினம் அவர்கள் இயக்கி, செல்வராசனின் மகன்மாரும் கமலினியும் இணைந்து நடித்த ‘ஆதர கதாவ’ என்னும் சிங்களத் திரைப்படத்தில் தமிழ்ப் பெண்ணாகக் கமலினி பாத்திரமேற்று நடித்தார். இன முரண்பாடு உச்சத்தில் இருந்த காலப்பகுதியில் தமிழ் சிங்கள உறவை சித்தரிக்கும் படமாக இது விளங்கியது.
ரூபவாகினியில் ஒளிபரப்பான அருணா செல்லத்துரையின் நெறியாள்கையில், கே.எஸ். பாலச்சந்திரன் எழுதிய ‘திருப்பங்கள்’, எஸ். ராம்தாஸ் அவர்களின் ‘எதிர்பாராதது’, வரணியூரான் என்னும் புனை பெயரைக் கொண்ட எஸ்.எஸ். கணேசபிள்ளை அவர்கள் எழுதிய ‘சமூக சேவகி’, போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களில் கமலினி நடித்துத் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நிலையான இடத்தைப் பெற்றிருந்தார்.
இலங்கை வானொலியில் பணியாற்றிய காலப்பகுதியில், மக்கள் வங்கியின் பிரசார நிகழ்ச்சிகள், மங்கையர் உலகம், உரைச் சித்திரம் போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். ரூபவாகினி தொலைக்காட்சியில் பணியாற்றியபோது, காலையில் சிங்கள மொழியில் நடத்தப் பெற்ற ‘ஆயுபோவன்’ என்ற நிகழ்ச்சியைத் தமிழில் ‘காலை வணக்கம்’ என்னும் பெயரில் நடத்தினார். ஐ.ரி.என் தொலைக்காட்சியில் தேசிய லொத்தர் சபையின், அதிஸ்டலாபச் சீட்டினது வாராந்த முடிவுகளை அறிவிக்கும் நிகழ்ச்சியிலும், அவ்வப்போது செய்தி வாசிப்பதிலும் ஈடுபட்டார். பெரும்பாலான மேடை நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.
இலங்கையில் மட்டுமன்றி ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும், எமது மரபுக் கலைகளில் ஒன்றான நாட்டுக் கூத்தைப் பரப்பும் பணியிலும் ஈடுபட்டார். குறிப்பாக, 2010-ஆம் ஆண்டு நோர்வே நாட்டின் தமிழ் ஒபரே கலை மன்றத்தின் வேண்டுகோளுக்கிணங்க, அங்கு சென்று ஏறக்குறைய ஓர் ஆண்டு காலம் இளையோருக்கு நாட்டுக் கூத்தைப் பயிற்றுவித்து, அரங்கேற்றி ஊக்குவித்தார். அதற்காக அம்மன்றம் கௌரவ விருது வழங்கி சிறப்பித்தது. கமலினியின் ஏறக்குறைய நாற்பது வருட கலைப் பணியைப் பாராட்டி, இலங்கை அரசும் பல்வேறு கலை இலக்கிய அமைப்புகளும், விருதுகளையும் பாராட்டுகளையும் வழங்கி மதிப்பளித்துள்ளன. 1995-ஆம் ஆண்டு நாட்டுக் கூத்துக் கலைக்கு அவர் ஆற்றிய பணிக்காக, இலங்கை கலாசார அமைச்சு விருது வழங்கிப் பாராட்டியது. 2008-ஆம் ஆண்டு கொழும்பு றோயல் கல்லூரி கமலினியின் நாடகத்துறைப் பணியைப் பாராட்டி மதிப்பளித்தது. இலங்கை இளைஞர் நற்பணி மன்றம் அவரது 35 வருட கால கலைச் சேவையைப் பாராட்டி, கொழும்பு விவேகானந்தா சபை மண்டபத்தில் விருது வழங்கிப் பெருமை கொண்டது.
1995-ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 14-ஆம் திகதி, கணவர் செல்வராசன் மறைந்த பின்னர், பல்வேறு சவால்களையும் சமாளித்து, கொழும்பில் தொடர்ந்து வாழ்ந்து வந்தார். அப்போது கணவரின் ஆக்கங்கள், படைப்புகள் என்பவற்றைத் தேடிச் சேகரித்து, ‘தேர்ந்தெடுத்த கவிதைகள் வரிசையில் சில்லையூர் செல்வராசன் கவிதைகள்’ தொகுதி -1 என்ற தொகுப்பு நூலை 1997-ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்த நூலில் சில்லையூரின் கவியரங்கப் பாடல்கள், தேசபக்திப் பாடல்கள், புலவன் மனங்கவர்ந்த பொன்னாடுகள், அகம்-புறம், அங்கதம், கவிஞனின் தத்துவம், பெண்மை, இசைப்பாடல்கள், பரிவும்-பிரிவும், நெடும்பா, மொழிபெயர்ப்பு பாடல்கள், என அத்தியாயங்களாக வகுத்து, அழகுற வெளியிட்டார். அத்துடன் செல்வராசனின் உள்நாட்டு, வெளிநாட்டு இலக்கிய சந்திப்புகள் தொடர்பான புகைப்படங்கள், மற்றும் அவரது பெற்றோர், பிள்ளைகள் மனைவி ஆகியோரின் படங்களையும் இணைத்துள்ளார்.
செல்வராசன் - கமலினி குடும்பத்தினர் கொழும்பில் வாழ்ந்த வீடு, ஒரு காலத்தில் எழுத்தாளர்கள், இசைக் கலைஞர்கள், தமிழ் இலக்கியவாதிகள், திரைப்படத் துறையினர், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் ஓன்று கூடும் கலகலப்பான கலைக்கூடமாக காட்சியளித்தது. செல்வராசனின் மறைவுக்குப் பின்னர், கமலினி அந்த இல்லத்தைத் தேசிய நினைவில்லமாக்குவதற்கு முயற்சி செய்த போதிலும், அம்முயற்சி கைகூடாமல் போய்விட்டது. அடுத்ததாக பொரளை கனத்தை மயானத்தில் செல்வராசனுக்கு ஒரு நினைவுச் சின்னத்தை அமைப்பதற்கு எடுத்த முயற்சி நிறைவேறியது. அப்போது கொழும்பு மேயராக இருந்த கே. கணேசலிங்கம், மற்றும் கனத்தை மயான பரிபாலகர் சானக பெரேரா ஆகியோரின் ஒத்துழைப்புடன், புல்லுமலை நல்லரத்தினம் செதுக்கிய நினைவுச் சிற்பம் நிறுவப்பட்டு, அவர்களின் பிரசன்னத்துடன் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. இம்முயற்சி கமலினிக்கு மட்டுமன்றி கலை இலக்கிய ஆர்வலர்களுக்கு ஆன்ம திருப்தியைக் கொடுத்தது.
தமிழுக்காகவும் கலைக்காகவும் தன் கணவனுக்காகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, கலை, இலக்கியம், வானொலி, தொலைகாட்சி, திரைப்படம் என அனைத்து துறைகளிலும், புகழுடன் வலம் வந்த கமலினி, ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் அறிவிப்பாளராகப் பணியாற்றிய ரூபவாகினி தொலைகாட்சி நிறுவனத்தினால் 2009-ஆம் ஆண்டு திடீர் வேலை நீக்கம் செய்யப்பட்டார். அதனால் மன அழுத்தத்துக்கு உள்ளான அவர், பின்னாளில் மறதி நோயால் பாதிக்கப்பட்டு துயரமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இச்செய்தியை ‘ரவிரச’ என்ற சிங்களப் பத்திரிகை, அவரது ஒரே மகன் அதிசயனுடன் செய்த நேர்காணல் மூலம் வெளிக்கொணர்ந்தது. மறதி நோயுடன் மகனின் அரவணைப்பில் சிலகாலம் வாழ்ந்த கமலினி, 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 07-ஆம் திகதி இவ்வுலக வாழ்வை நீத்தார். அவரது தன்னலமற்ற கலைப் பணியை கலையுலகம் என்றும் நினைவு கூரும்.
நன்றி
இளமைத்துடிப்பில்செய்யும்தவறுகளால்எதிர்காலத்தைசிக்கலாகும்பிள்ளைகள்எனயதார்த்தவாழ்வைகண்முன்னேகாட்டும்கதாபாத்திரங்களாகஅமைகின்றன.
விடியலின்வடிவம்கதை, தீரணியக்குழந்தை/ சிறப்புத்தேவைஉள்ளகுழந்தைமதுவும், அவளின்மரணத்தினால்துவண்டுபோனதாயின்வலியுமாகநீள்கின்றது. விடியலைத்தேடிகதைநவீனதலைமுறையின்திருமணவாழ்க்கைசிக்கலும், உளவியலும்கலந்தகதையாகஉள்ளது. உண்மையில்இத்தொகுப்புதேர்ந்தசிறுகதைகளைஉள்ளடக்கியநூல், ஆனால்ஒரேதடவையில்வாசிக்கும்போதுநிச்சயம்வாசகர்களுக்குமனஅழுத்தத்தையும், அயர்ச்சியையும்ஏற்படுத்தும். இக்கதைகள்பெரும்பாலும்வாழ்வியல்யதார்த்தத்தையும், எதிர்மறைசூழ்நிலைகளையும்கருப்பொருளாககொண்டுஎழுதப்படிருக்கின்றமையால்தொடர்ச்சியாகவாசிக்காமல், சிறிதுஇடைவேளைஎடுத்துவாசிப்பதுபொருத்தமாகஇருக்கும். சியாமளாயோகேஸ்வரன்மற்றும்எங்கடபுத்தகங்கள்குழுவினருக்குவாழ்த்துக்கள். தொடர்ந்தும்இவ்வாறானபடைப்புக்கள்வெளிவரட்டும்.
