ஃபிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு – 2காஸ்ட்ரோவின் அரசியல் சிந்தனைகள்
ஃபிடல் காஸ்ட்ரோ நூற்றாண்டு – 2
காஸ்ட்ரோவின் அரசியல் சிந்தனைகள்
- தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
தொடக்கக் குறிப்புகள்:
இருபதாம் நூற்றாண்டின் பின்னரைப்பகுதியில் உலகைத் திருப்பிக் கவனம் பெற்றோர் மிகச்சிலரே. அதில் ஃபிடல் காஸ்ட்ரோவின் இடம் முதன்மையானது. கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களாக, காஸ்ட்ரோ கியூபாவின் தலைவிதியை வடிவமைத்து, கரீபியன் தீவுகளுக்கும் இலத்தீன் அமெரிக்காவுக்கும் அப்பால் உள்ள அரசியல் நீரோட்டங்களில் அவர் செல்வாக்குச் செலுத்தினார். அவரது உருவம் புரட்சி, எதிர்ப்பு, சித்தாந்த உறுதி ஆகியவற்றின் பிரதிவிம்பமாக இருந்தது. மாற்றத்தை, தியாகத்தை, ஏகாதிபத்திய எதிர்ப்பை வலியுறுத்தும் நீண்ட உரைகளுடன் அவரது குரல் நன்கறியப்பட்டது. பலரால் நேசிக்கப்பட்ட, சிலரால் வெறுக்கப்பட்ட காஸ்ட்ரோ, நவீன சகாப்தத்தின் மிகவும் முக்கியமான அரசியல் சிந்தனையாளர்களில், அரங்காடிகளில் ஒருவராக இருந்தார் என்பதை மறுக்க முடியாது.
அவரது அரசியல், முக்கியத்துவமுடையதாக இருந்தபோதிலும், காஸ்ட்ரோவின் அறிவுசார் பங்களிப்புகள் பெரும்பாலும் கியூபப் புரட்சியின் வியத்தகு நிகழ்வுகளாலும் கெடுபிடிப்போரின் புவிசார் அரசியல் பதட்டங்களாலும் மறைக்கப்பட்டுவிட்டன. பல விவாதங்கள் அவரை வெறுமனே ஓர் அடையாளச் சின்னமாகக் குறைக்கின்றன. அவரது ஆதரவாளர்களுக்கு அவர் ஏகாதிபத்திய எதிர்ப்பின் சின்னம், எதிர்ப்பாளர்களுக்கு அவர் சர்வாதிகார அடக்குமுறையின் சின்னம். இங்கே அடிப்படையான சில கேள்வியை நாம் கேட்டாக வேண்டும். அவர், தனது உலகக் கண்ணோட்டத்தை உயிர்ப்பித்த அடிப்படைக் கருத்துகளுடன் போராடாமல், அவை பற்றிய புரிதல் இன்றி எவ்வாறு ஒரு புரட்சியை நடத்தவோ, பின்னர் நாட்டைத் தலைமையேற்று வழிநடத்தவோ முடியும்? ஒரு மனிதர் ஒரு வெகுஜன இயக்கத்தை எவ்வாறு ஊக்குவிக்க முடியும்? ஒரு நாட்டின் அடையாளத்தை எவ்வாறு மறுவடிவமைக்க முடியும்? பல தசாப்தங்களாக பூமியின் மிகவும் சக்திவாய்ந்த நாட்டை எவ்வாறு எதிர்க்க முடியும்?
இந்தக் கேள்விகளைப் புரிந்து கொள்ள, தாடி வைத்த கெரில்லாப் போராளி என்ற உருவத்திற்கு அப்பால் காஸ்ரோவை நாம் பார்க்க வேண்டும். அவரது செயல்களுக்குப் பின்னால் உள்ள சித்தாந்த கட்டமைப்பை ஆராய வேண்டும்.
ஃபிடல் காஸ்ட்ரோவின் அரசியல் சிந்தனை வரலாற்றுச் சூழ்நிலைகள், தத்துவார்த்தத் தாக்கங்கள், தனிப்பட்ட நம்பிக்கைகள், நடைமுறைத் தழுவல்கள் ஆகியவற்றின் சிக்கலான கூட்டாக வெளிப்பட்டன. அவர் பிடிவாதமாக மார்க்சியராகவோ அல்லது வெறும் தேசியவாதியாகவோ இருக்கவில்லை. ஒரு நடைமுறை மூலோபாயவாதியாகவோ அல்லது வெறுமனே ஓர் இலட்சியவாத கனவு காண்பவராகவோ நடந்துகொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, அவர் ஒரு கலப்பின சித்தாந்தக் கட்டமைப்பை உருவாக்கினார். இது ஃபிடெலிஸ்மோ என்று குறிப்பிடப்படுகிறது. இது மார்க்சிய லெனினிசம், கியூப தேசபக்தி, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சமூக மாற்றத்தின் ஆழமான தார்மீகக் கண்ணோட்டம் ஆகியவற்றை இணைத்தது. இந்த சித்தாந்தத் தொகுப்பு நிலையானது அல்ல. புரட்சியைப் போலவே, காஸ்ட்ரோவின் சிந்தனையும் காலப்போக்கில் முதிர்ச்சியடைந்தது. புதிய உலகளாவிய யதார்த்தங்களை எதிர்கொள்வது, உள் சமூக அழுத்தங்களுக்குப் பதிலளிப்பது, அவரது வெற்றி தோல்விகளிலிருந்து படிப்பினைகளை இணைப்பது ஆகிய அம்சங்களைக் கொண்டிருந்தது.
காஸ்ட்ரோவின் அரசியல் சிந்தனையை ஆராயும்போது, கியூபாவின் வரலாற்றுச் சூழலால் அது எவ்வளவு ஆழமாக வடிவமைக்கப்பட்டது என்பதை அடையாளம் காண்பது மிகவும் முக்கியம். பல நூற்றாண்டுகள் நிலைத்த காலனித்துவம், பல தசாப்த கால அமெரிக்கப் பொருளாதார ஆதிக்கம், புரட்சிக்கு முந்தைய சமூகத்தை வரையறுத்த வேரூன்றிய சமத்துவமின்மை ஆகியன அடிப்படையானவையாகும். 1959-க்கு முன்பு (புரட்சிக்கு முன்பு) இருந்த கியூபா, காஸ்ட்ரோவின் பார்வையில், அதன் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் ஆற்றலையும் இழந்த ஒரு தேசம். பாடிஸ்டா சர்வாதிகாரத்தின் கீழ் வேரூன்றியிருந்த ஊழல், அமெரிக்கப் பொருளாதார சார்பு, சமூக ஏற்றத்தாழ்வு ஆகியவற்றைப் படிப்படியாக சீர்திருத்தங்கள் மூலம் நிவர்த்தி செய்யவியலாது என்ற அவரது நம்பிக்கையை கியூபாவின் நிலைமைகள் வலுப்படுத்தின. ஒரு பரந்த புரட்சிகர மாற்றம் மட்டுமே கியூப சமூகத்தில் பொதிந்துள்ள அநீதிகளை வேரோடு பிடுங்க முடியும். இந்தப் புரட்சியின் யோசனை - அதன் தேவை, அதன் முறைகள், அதன் தார்மீக தன்மை - அவரது அரசியல் சிந்தனையின் மையமாக மாறியது.
இலத்தீன் அமெரிக்க அடையாளத்தை வடிவமைத்த பரந்த அறிவுசார், அரசியல் நீரோட்டங்களின் விளைவாகவும் காஸ்ட்ரோ இருந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கவிஞரும் புரட்சியாளருமான ஜோஸ் மார்டி மீதான அவரது மரியாதை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, தேசிய இறையாண்மை ஆகியவற்றை மையங்கொண்ட தனித்துவமான கியூப மரபில் அவரது சித்தாந்தத்தை அடித்தளமாகக் கொண்டது. கண்ணியம், சுதந்திரம், சமூக நீதி என்பவற்றுக்கான மார்டியின் அழைப்புகள் காஸ்ட்ரோவுக்கு அவர் தனது வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திய ஒரு தார்மீக சொற்களஞ்சியத்தை வழங்கின. இதேபோல், மார்க்சியக் கோட்பாடு முதலாளித்துவ சுரண்டலுக்கான கட்டமைப்பு விளக்கத்தையும் அடக்குமுறை அமைப்புகளைத் தூக்கியெறிவதற்கான ஒரு வரைபடத்தையும் வழங்கியது. இருப்பினும், காஸ்ட்ரோ இந்தக் கருத்துகளை வெறுமனே மரபுரிமையாகப் பெறுவதில் ஒருபோதும் திருப்தி அடையவில்லை. அவர் அவற்றைத் தழுவி மறுபரிசீலனை செய்தார். கியூபாவின் தனித்துவமான யதார்த்தங்களுக்குப் பதிலளிக்கக்கூடிய சோசலிசத்தின் மாதிரியை உருவாக்க முயன்றார்.
காஸ்ட்ரோவின் அரசியல் சிந்தனையின் மற்றொரு அத்தியாவசிய பரிமாணம், புரட்சி என்பது ஓர் உயிருள்ள, பரிணாம வளர்ச்சியடைந்து வரும் செயல்முறை என்ற அவரது கருத்தாகும். புரட்சியை ஒரு தனித்துவமான வரலாற்று நிகழ்வாகக் கருதிய சில மார்க்சியக் கோட்பாட்டாளர்களைப் போலல்லாமல், உண்மையான புரட்சிக்குத் தொடர்ச்சியான விழிப்புணர்வு, சித்தாந்தத் தெளிவு, தார்மீக ஒழுக்கம் என்பன தேவை என்று காஸ்ட்ரோ வலியுறுத்தினார். இது அதிகாரத்தைக் கைப்பற்றுவது மட்டுமல்ல, சமூகம், நிறுவனங்கள் மற்றும் கூட்டு நனவின் தொடர்ச்சியான மாற்றம் ஆகும். புரட்சி என்ற கருத்தை கோடிட்டுக் காட்டும் அவரது பிரபலமான 2000-ஆம் ஆண்டு உரையில், காஸ்ட்ரோ நேர்மை, தியாகம், ஒற்றுமை போன்ற மதிப்புகளை வலியுறுத்தினார் - அரசியல் மாற்றம் நெறிமுறை மாற்றத்திலிருந்து பிரிக்க முடியாதது என்று அவர் எவ்வளவு ஆழமாக நம்பினார் என்பதை அவ்வுரையில் வெளிப்படுத்தினார்.
காஸ்ட்ரோவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு வெறும் அரசியல் உத்தி அல்ல. அது அவரது உலகக் கண்ணோட்டத்தின் ஒரு மூலக்கல்லாகும். அமெரிக்க மேலாதிக்கத்துடனான அவரது வாழ்நாள் மோதல் புவிசார் அரசியல் யதார்த்தங்களால் மட்டுமல்ல, தேசிய இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான கொள்கை ரீதியான அர்ப்பணிப்பாலும் இயக்கப்பட்டது. இந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாடு அவரது சர்வதேசியத்திற்கு நீடிக்கப்பட்டது: ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்கக் கண்டங்களில் விடுதலை இயக்கங்களை ஆதரித்தல், மூன்றாம் உலக ஒற்றுமைக்காக வாதிடுதல், அணிசேரா இயக்கத்தில் பங்கேற்பது ஆகியன இதில் சில. புரட்சிகரப் போராட்டம் உலகளாவியதும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டதும் என்ற அவரது நம்பிக்கையை இந்த நடவடிக்கைகள் பிரதிபலித்தன.
இந்தக் கட்டுரை பிடல் காஸ்ட்ரோவின் அரசியல் சிந்தனையை நான்கு முக்கிய பரிமாணங்கள் வழியாக ஆராய்கிறது:
n காஸ்ட்ரோவின் சித்தாந்தத்தின் அறிவுசார் அடித்தளங்கள் - மார்டி, மார்க்சியம், தேசியவாதம், பிராந்திய வரலாறு ஆகியவற்றை மையப்படுத்திய அவரது உலகக் கண்ணோட்டம்.
n செயல்முறையும் கொள்கையாக புரட்சியும் - புரட்சியை ஒரு தொடர்ச்சியான, தார்மீக, அரசியல் திட்டமாகக் கருதிய காஸ்ட்ரோவின் தனித்துவமான கருத்தாக்கம்.
n ஏகாதிபத்திய எதிர்ப்பும் சர்வதேசியமும் - உலகளாவிய அதிகார இயக்கவியல், அவற்றில் கியூபாவின் இடம், அவரது எதிர்ப்பு உத்திகள் பற்றிய அவரது கட்டமைப்பு.
n சமூக மாற்றமும் தார்மீக ஒழுக்கமும் - கல்வி, சுகாதாரம், சமத்துவம், சமூக நெறிமுறைகள் உள்ளிட்ட சோசலிச சமூகம் பற்றிய அவரது பார்வை.
இந்தக் கருப்பொருள்களை ஆராய்வதன் மூலம், காஸ்ட்ரோவின் செயல்களை உயிர்ப்பித்த கருத்துகளையும், கியூபாவிற்கும் பரந்த உலகிற்கும் அவர் விட்டுச் சென்ற மரபையும் நாம் நன்கு புரிந்து கொள்ள முடியும். பொதுமைப்படுத்தப்பட்ட சித்திரங்கள், அரசியல் துருவமுனைப்புகளுக்கு அப்பால், ஃபிடல் காஸ்ட்ரோ ஓர் ஆழமான சிந்தனையுள்ள புரட்சியாளராக வெளிப்படுகிறார். அவரது அரசியல் சிந்தனை தொடர்ந்து விவாதத்தையும் பிரதிபலிப்பையும் தூண்டுகிறது.
காஸ்ட்ரோவின் சித்தாந்தத்தின் அறிவுசார் அடித்தளங்கள்:
ஃபிடல் காஸ்ட்ரோவின் அரசியல் சிந்தனையைப் புரிந்து கொள்ள, ஜோஷே மார்ட்டியுடன் தொடங்க வேண்டும். காஸ்ட்ரோவைப் பொறுத்தவரை, மார்ட்டி வெறுமனே ஒரு தேசிய வீரர் மட்டுமல்ல, அவர் புரட்சியின் ‘அறிவுசார் ஆசிரியர்’. கியூபாவின் பத்தொன்பதாம் நூற்றாண்டின் காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தை இருபதாம் நூற்றாண்டின் சமூக நீதி மற்றும் தேசிய கண்ணியத்திற்கான திட்டத்துடன் இணைக்கும் ஒரு தார்மீக திசைகாட்டி. 1953-ஆம் ஆண்டு காஸ்ட்ரோவின் நீதிமன்ற உரையில் - வரலாறு என்னை விடுதலை செய்யும் - பாடிஸ்டாவின் சர்வாதிகாரத்திற்கு எதிரான கிளர்ச்சியை நியாயப்படுத்த மார்ட்டியின் கருத்துகளை எடுத்துக்காட்டினார். குடியரசின் முறியடிக்கப்பட்ட அரசியலமைப்பு ஒழுங்கையும் கியூபாவின் இறையாண்மையையும் பாதுகாப்பதற்காகக் கிளர்ச்சியை வடிவமைத்தார். மார்ட்டியின் சிந்தனைகளில் மையப்படுத்திய இந்த நங்கூரமிடல் நெறிமுறை அவருக்குக் கண்ணியம், சுதந்திரம், தியாகம் போன்ற சொற்களஞ்சியங்களை வழங்கியது.
மார்ட்டியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு காஸ்ட்ரோவின் சர்வதேசக் கண்ணியத்தையும் வடிவமைத்தது. ஏழைகளைப் பாதுகாத்தல், சமத்துவம், சுதந்திரம் ஆகிய புரட்சியின் தார்மீக உலகளாவிய தன்மைக்கான கூற்றுகள் ஓர் இலத்தீன் அமெரிக்க, மூன்றாம் உலகப் பணியாக காஸ்ட்ரோவால் முன்னெடுக்கப்பட்டன. கியூபாவின் சுய புரிதலில், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது வெறும் வெளியுறவுக் கொள்கைக்கோடாக இருக்கவில்லை. அது ஒரு காலனித்துவ தேசத்தின் கண்ணியத்தை மீட்டெடுக்கத் தேவையான இறையாண்மையின் நெறிமுறை முன்மாதிரியாகும். இதனால்தான் காஸ்ட்ரோவின் பிற்கால உலகளாவிய சொல்லாட்சியும் நடைமுறையும் காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்தையும், உள்நாட்டில் சோசலிச மாற்றத்துடன் அணிசேராமையையும் வலியுறுத்தின.
கியூபப் புரட்சியின் வெற்றிக்குப் பின்னர் காஸ்ட்ரோ யார் என்ற கேள்வி எல்லோரிடத்திலும் இருந்தது. அவரது அரசியல் சித்தாந்தம் குறித்துத் தெளிவின்மை நிலவியது. 1961-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ஆம் திகதியன்று, ‘நான் ஒரு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்’ என்று அவர் பகிரங்கமாக உறுதிப்படுத்தினார். இங்கு கவனிக்க வேண்டியது, காஸ்ட்ரோவின் மார்க்சியம் ஒருபோதும் வெறும் இறக்குமதி அல்ல. அது இறையாண்மை, நீதி ஆகியவற்றில் அடித்தளமான கியூபக் கதையோடு இணைந்ததாக இருந்தது.
1961, மே தின உரையில் ‘கியூபா ஒரு சோசலிச நாடு’ என்று அறிவித்தது முதல், காஸ்ட்ரோ புரட்சியின் பாதையை எவ்வாறு கோட்பாட்டு ரீதியாக வடிவமைத்தார் என்பதை நோக்கும் போது அவர் இரண்டு சவால்களை எதிர்நோக்கினார். ‘சோவியத் கையேடுகள்’ கரீபியன் யதார்த்தங்களுக்குப் பொருந்தவில்லை என்பதை வலியுறுத்தி கியூபப் புரட்சி ‘தனக்காகச் சிந்திக்க’ வேண்டியிருந்தது கியூப நிலைமைகளுக்கு சோசலிசத்தை வடிவமைக்க வேண்டியிருந்தது. 1961-ஆம் ஆண்டு பிரகடனம் வெறும் ஒரு சித்தாந்த ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமல்ல, அது கியூபாவை உலக அமைப்பில் மறுநிலைப்படுத்தியது. ஏகாதிபத்திய எதிர்ப்பை ஒரு வல்லரசுக்கு எதிரான மூன்றாம் உலக சர்வதேசியத்தின் ஒரு திட்டமாக மாற்றியது.
1953-இல் தனது திட்டத்தின் முதல் வெளிப்பாட்டிலிருந்து, ஃபிடல் காஸ்ட்ரோ புரட்சியை ஓர் ஆட்சிக்கவிழ்ப்பு அல்லது தேர்தல் மாற்றம் என்ற குறுகிய நிலைப்பாடுகளுக்கு வெளியே, அதைவிட அதிகமானதாக வடிவமைத்தார். இது சட்டபூர்வமான தன்மை, பொருளாதாரம், குடிமை வாழ்க்கை ஆகியவற்றின் விரிவான மாற்றமாகும். புரட்சிகள் உண்மையானதாக இருக்க வேண்டும், கையேடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படக்கூடாது என்று காஸ்ட்ரோவின் சூத்திரம் வலியுறுத்துகிறது.
புரட்சியை ஒரு நெறிமுறை செயல்முறையாகக் காட்டுவது ஒழுக்கத்தை ஒரு குடிமை நற்பண்பாக மாற்றியது. கியூபாவின் சுகாதாரம், கல்வி ஆகியவற்றின் மேம்பாடுகளைப் பற்றிக் கருத்துரைக்கும் ஆய்வாளர்கள் புரட்சியை நெறிமுறைச் செயல்முறையாகக் கண்டதன் சிறப்பான விளைவுகளாகவே இதனைக் காண்கிறார்கள். நடைமுறையில், புரட்சியின் செயல்முறை தர்க்கம், குவிமையக் கிளர்ச்சியிலிருந்து நீடித்த ஒழுங்கை உருவாக்குவது வரை பயணித்தது. ஒரு சிறிய கெரில்லா குவிமையக் கிளர்ச்சிகளைத் தூண்டும் கோட்பாடு புரட்சியின் தோற்றத்தைப் பாதித்த அதே வேளையில், காஸ்ட்ரோவின் ஆட்சியியலானது, புரட்சியின் பின்னர் அவசியமான கோட்பாடு, நிறுவனக் கட்டுமானம், அரசியற்கல்வி, சர்வதேச நிலைப்படுத்தல் ஆகியவற்றின் நீண்ட பணியை வலியுறுத்தியது. கியூபாவின் சூழலில் வெற்றி பெற்ற புரட்சியும் அதைத் தொடர்ந்த ஆட்சியும் பெரும்பாலும் வேறு இடங்களில் தோல்வியடைந்தது. ஏனெனில் ஒரு புரட்சியைத் தக்கவைக்கப் போரால் மட்டுமே வழங்க முடியாத சமூக மற்றும் நிறுவன அங்கீகாரமும் மக்களை அரசியல்மயப்படுத்தலும் தேவைப்படுகிறது.
இந்த வெளிச்சத்தில் பார்த்தால், கியூபப் புரட்சி செயல்முறையாக மூன்று இயக்கங்களைக் கொண்டுள்ளது:
n கிளர்ச்சி (மாற்றத்திற்கான சாத்தியத்தை உருவாக்குதல்).
n ஒருங்கிணைப்பு (மாற்றத்தைப் பாதுகாக்க கட்டமைப்புகளை உருவாக்குதல்).
n பெருக்கம் (மாற்றத்தைக் கடத்த கலாசாரத்தையும் கற்பித்தலையும் உருவாக்குதல்).
புரட்சி என்பது ஒரு செயல்முறை என்றால், குடிமக்களுக்கு அன்றாட கஷ்டங்களை வரலாற்று நோக்கத்துடன் தெளிவுபடுத்துவது அவசியம். காஸ்ட்ரோ அதை மிகத் திறமையாகச் செய்தார். ‘ஒற்றுமையும் சுதந்திரமும்’ பற்றிய அவரது தொடர்ச்சியான வலியுறுத்தல்கள் ஒன்றைக் கோடு காட்டின. சிக்கனம், அணிதிரட்டல், பொறுமை ஆகியவை இலக்கற்ற துன்பம் அல்ல, மாறாக ஒரு தார்மீக இலக்கை நோக்கிய விட்டுக் கொடுப்புகள் என்பதை நினைவூட்டுகின்றன. அப்படியானால், புரட்சி பற்றிய காஸ்ட்ரோவின் கருத்தை ஒரு செயல்முறையாகவும் கொள்கையாகவும் எவ்வாறு மதிப்பிடுவது? கியூப அனுபவம், ‘செயல்முறையாக புரட்சி’ என்பது பற்றிய மூன்று பரிமாற்றக்கூடிய செய்திகளை வழங்குகிறது:
n நெறிமுறைகளை மையப்படுத்தாத முடிவுகள் தோல்வியடையும், அதேவேளை நெறிமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்கள் சரிவடைந்து சீரழியும். இது கியூபப் புரட்சியின் நீண்ட ஆயுளையும் அதன் தொடர்ச்சியான சட்டபூர்வமான கூற்றுகளையும் விளக்குகிறது.
n நெருக்கடி என்பது கற்பதற்கான திறவுகோல். தோல்விகளைப் பாடங்களாகவும் மறுசீரமைப்புகளாகவும் மாற்றுவதன் மூலம் அதிர்ச்சிகளில் இருந்து தப்பிப்பது எப்படி என்பதைப் புரட்சி தனக்கும் அதன் குடிமக்களுக்கும் கற்றுக் கொடுக்கும். கியூபப் புரட்சியினதும் அதன் நிலைப்பினதும் முக்கிய பாடமிது.
n சுயத்தோடு இருப்பது என்பது விருப்பத்திற்குரியது அல்ல. இறக்குமதி செய்யப்பட்ட மாதிரிகள் உள்ளுர் வரலாற்றைப் புறக்கணித்தால் தடுமாறும்; எந்தவொரு தீவிரமான செயல்முறைப் பார்வையும் ஒரு மாதிரியைச் சார்ந்ததாக இருக்கக்கூடாது. அதனது சூழலையும் சூழ்நிலையையும் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
ஏகாதிபத்திய எதிர்ப்பும் சர்வதேசியமும்:
ஃபிடல் காஸ்ட்ரோவின் உலகக் கண்ணோட்டத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது ஓர் இராஜதந்திர நிலைப்பாடாக இல்லாமல், ஒரு தார்மீகக் கோட்பாடாக இருந்தது. அது வளர்ச்சியின்மையையும் சார்புநிலையையும் விளக்கியது. அது தீர்வுகளையும் பரிந்துரைத்தது. நடைமுறையாக சர்வதேசியம் என்பது காலனித்துவ, நவகாலனித்துவ அல்லது நிறவெறி ஆட்சியை எதிர்க்கும் மக்களுடன் ஒற்றுமை கொள்வதைக் குறித்தது. ஏகாதிபத்தியம் உலகளாவியதாகவும் தகவமைப்புத் தன்மை கொண்டதாகவும் இருந்தால், கியூபப் புரட்சியாளர்கள் உலகளாவியதாகவும் தகவமைப்புத் தன்மை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும், இராணுவ உதவி, அரசியல் ஒருங்கிணைப்பு, மனிதாபிமான ஒத்துழைப்பை ஒரே தொகுப்பில் இணைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று காஸ்ட்ரோ வலியுறுத்தினார். இந்தத் தொகுப்பு காஸ்ட்ரோவின் கிளர்ச்சிக்கான ஆரம்பகால நியாயப்படுத்தல்களிலிருந்து (அமெரிக்க ஆதரவு பெற்ற சர்வாதிகாரத்திற்கு எதிரான தேசிய கண்ணியத்தைப் பாதுகாப்பதற்காக) தேசபக்தி, சோசலிசம், சர்வதேசியத்தை ஒரு ‘புரட்சியின் கருத்தாக்கமாக’ பிணைத்த அவரது முதிர்ந்த சொற்களஞ்சியத்தைத் தரிசிக்கலாம்.
அமெரிக்காவுடனான நேரடி மோதலின் மூலம் காஸ்ட்ரோவின் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கடினமடைந்தது. ஏப்ரல் 1961-இல் கியூபாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் வாழ்ந்துவந்தவர்களைப் பயன்படுத்தி சி.ஐ.ஏ பன்றி விரிகுடா முற்றுகை ஒன்றை நடத்தி காஸ்ட்ரோவை அகற்ற முயன்றது. அம்முயற்சி தோல்வியடைந்தது. கியூபாவிற்கு எதிரான அமெரிக்க நாசவேலைகள் - உள்நாட்டு அநீதி மட்டுமல்ல - இறையாண்மையை அச்சுறுத்தியது. இது உண்மையில் காஸ்ட்ரோவையும் கியூப மக்களையும் தைரியப்படுத்தியது. காஸ்ட்ரோ ஏகாதிபத்தியத்தை நிலையான எதிரியாகப் புரிந்துகொண்டதால், நெருக்கடிகளைக் கருத்தியல் ரீதியாகவும் எதிர்கொண்டார்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை செயற்படுத்துவது என்பது வலைப்பின்னல்களைப் பின்னுவதாகும். ஜனவரி 1966-இல், ஹவானா முக்கண்ட மாநாட்டை நடத்தியது. ஆசியா, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்காவிலிருந்து இயக்கங்களை ஒன்றிணைத்து, ஆசியா, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்க மக்களுடனான ஒற்றுமை அமைப்பைத் (OSPAAAL - Organization of Solidarity with the People of Asia, Africa and Latin America) தொடங்கியது. விடுதலை இயக்கங்களுக்கு உதவுவதற்காக இந்த அமைப்பை உருவாக்கியதை காஸ்ட்ரோவின் நிறைவு உரை தெளிவுபடுத்தியது. இது தெற்கு-தெற்கு ஒருங்கிணைப்பின் மையமாக கியூபாவிற்கான ஆரம்பகால வார்ப்புருவாகும். இந்த அமைப்பு Tricontinental என்ற காலாண்டு இதழை வெளியிட்டது. இவ்விதழே 1969-இல் ‘மூன்றாவது சினிமா’ என்ற கருத்துருவாக்கத்தை முன்மொழிந்து, அதனைத் தத்துவார்த்த ரீதியாக வளர்த்தெடுத்தது.
இந்த முக்கண்ட தருணம் ஒரு பரந்த அணிசேரா நிகழ்ச்சி நிரலில் ஊட்டப்பட்டது. 1979 கியூபத் தலைநகர் ஹவானாவில் இடம்பெற்ற அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில், கியூபா தலைமை தாங்கியபோது, காஸ்ட்ரோ ஒரு கடுமையான ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை முன்வைத்தார், சில உறுப்பினர்கள் (குறிப்பாக யூகோஸ்லாவியா, இந்தியா, இலங்கை) சோவியத் முகாமுக்கு மிக அருகில் இருப்பதாகக் கருதினர். கியூபாவின் ஒற்றுமை சொல்லாட்சி என்பது, பேசும் கலையை விட செயல்களால் (தொழினுட்ப வல்லுநர்கள், மருத்துவர்கள், வெளிநாட்டில் பயிற்றுனர்கள்) அளவிடப்படுகிறது என்று இம்மாநாட்டில் காஸ்ட்ரோ வலியுறுத்தியது முக்கியமானது. இது ஏகாதிபத்திய எதிர்ப்பை காஸ்ட்ரோ எவ்வாறு சிந்தித்தார் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகின்றது.
மாநாடுகள் அரசியலை ஒருங்கிணைத்தால், ஆபிரிக்கா நடைமுறைக்கான சோதனைக்களமாக மாறியது. போர்த்துக்கல் பேரரசுக்கு எதிரான காலனியாதிக்கப் போர்களில் அங்கோலா முக்கியமானது. 1975-இல் அங்கோலா சுதந்திரமடைந்தது. கம்யூனிசச் சித்தாந்தத்தைப் பின்பற்றுகின்ற அங்கோல விடுதலைக்கான மக்கள் இயக்கம் (MPLA) ஆட்சியைப் பிடித்தது. சில காலத்திலேயே உள்நாட்டுப் போர் மூண்டது. ஆபிரிக்க விடுதலைக்கான தேசிய முன்ணணியும் (FNLA) அதிலிருந்து பிரிந்த அங்கோலாவின் முழுமையான விடுதலைக்கான தேசிய ஒன்றியமும் (UNITA) இணைந்து MPLA-க்கு எதிராகப் போரிட்டன. MPLA-க்கு எதிராகப் போரிடும் அமைப்புகளுக்கு அமெரிக்காவும் தென்னாபிரிக்காவும் உதவின. MPLA தலைமையிலான அங்கோல அரசாங்கம் கியூபாவிடம் உதவி கோரியது.
தென்னாபிரிக்கா உள்ளிட்ட அந்நிய நாட்டுப் படைகளின் முன்னேற்றங்களை மழுங்கடிக்க அங்கோலாவால் கோரப்பட்ட வான்வழி, கடல்வழிப் போக்குவரத்து ஊடாக இராணுவத்தை அனுப்பும் ‘ஓபரேஷன் கார்லோட்டா’வை கியூபா தொடங்கியது. கியூபத் தலையீடு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. இது 15 ஆண்டுகள் நீடித்து MPLA-யின் வெற்றியில் முடிந்தது. இது வெளிநாட்டுப் படைகள் அங்கோலாவை விட்டு வெளியேறுவதை உறுதிப்படுத்தியதோடு நமீபியாவின் விடுதலையை உறுதி செய்தது. மேலதிகமாக தென்னாபிரிக்காவின் நிறவெறி ஆட்சியைப் பலவீனப்படுத்தியது. கியூபத் தலையீடு சாத்தியமாக்கிய தென்னாபிரிக்காவின் தோல்வி, நிறவெறி ஆட்சிக்கெதிரான மூலோபாய விளைவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
கியூபா அங்கோலாவை புவிசார் அரசியலாக மட்டுமல்லாமல் நினைவகமாகவும் அடையாளமாகவும் வடிவமைத்தன. ஆபிரிக்காவிற்கு ஒற்றுமையைத் திருப்பி அனுப்பும் ஓர் இலத்தீன் ஆபிரிக்க நாடாக கியூபா முன்னிலைக்கு வந்தது. 1843 கியூபக் கிளர்ச்சியை வழிநடத்திய அடிமைப்படுத்தப்பட்ட ஆபிரிக்கப் பெண்ணின் நினைவாக 1975-ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கையை ‘கார்லோட்டா’ என்று பெயரிடுவதன் அடையாள முக்கியத்துவத்தை கியூப எழுத்துகள் வலியுறுத்தின. அங்கோலாவைக் கருப்பு அட்லாண்டிக் முழுவதும் ஒரு நெறிமுறை உதாரணமாக அவை சித்தரித்தன.
சர்வதேசியம் கவசமாக மட்டுமல்ல, அது வெள்ளை அங்கிகளையும் அணிந்திருந்தது. அல்ஜீரியாவிற்கு அவசரகாலப் பணியுடன் (1963) தொடங்கி, கியூபா மருத்துவ சர்வதேசியத்தின் ஒரு விரிவான திட்டத்தை உருவாக்கியது. உலகளவில் கிராமப்புற, பின்தங்கிய பகுதிகளுக்கு மருத்துவர்களை அனுப்புதல், ஹவானாவில் வெளிநாட்டு மருத்துவர்களுக்குப் பயிற்சி அளித்தல், பேரழிவுகள், தொற்றுநோய்களுக்கு விரைவான பதிலளிப்பு குழுக்களை உருவாக்குதல் என்பன இன்றளவும் தொடரும் செயல்கள். கியூப மருத்துவ உதவி பல மூன்றாமுலக நாடுகளுக்கு அடிப்படையானதாக இருக்கின்றது.
இந்த ஒத்துழைப்பை அளவிடுவது இயல்பாகவே அரசியல் சார்ந்தது, ஆனால் முக்கியமான, அனுதாபமான ஆதாரங்கள் கூட அதன் அகலத்தில் ஒன்றிணைகின்றன. வெளிநாடுகளில் பணியமர்த்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான கியூப சுகாதார நிபுணர்களையும் ஆறு தசாப்தங்களாக நூறாயிரக்கணக்கானவர்களையும் கண்ணோட்டங்கள் மேற்கோள் காட்டுகின்றன. வெள்ளம், சூறாவளி, பூகம்பங்கள், எபோலா, கோவிட்-19 போன்ற நெருக்கடிகளின் போது இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கியூபா மருத்துவக் குழுக்களை அனுப்பியுள்ளது. இந்த மருத்துவ உதவிக் குழுக்கள் ஒரு தனித்துவமான தத்துவத்தையும் வலியுறுத்துகின்றன. அவை முதன்மைப் பராமரிப்பு, தடுப்பு, பணியாளர்கள் கடினமான இடங்களில் நீண்ட காலம் தங்குதல் ஆகியவற்றை மையப்படுத்தியுள்ளன. இதன் சிறப்பு யாதெனில் உலகின் வறுமையான நாடுகளில் உள்ள மிகவும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மக்களுக்கும் மருத்துவ உதவிகளைக் கியூப மருத்துவர்கள் வழங்கியமையாகும்.
காஸ்ட்ரோவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒருபோதும் ஆபிரிக்காவை மட்டும் எதிர்கொண்டதில்லை. போர்த்துகீசிய ஆபிரிக்காவிற்கும், சர்வதிகாரத்தை அல்லது வெளிநாட்டு செல்வாக்கை எதிர்கொள்ளும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள புரட்சிகர இயக்கங்களுக்கும் கியூபாவின் ஆதரவை வழங்கியுள்ளன. தென்னாபிரிக்காவில் ஆபிரிக்கத் தேசிய காங்கிரசுக்கு கியூப உதவி தீர்க்கமானதாக இருந்தது என்றும், அமெரிக்காவின் இரகசியத் திட்டங்களுக்கு இந்த உதவிகள் அடிக்கடி இடையூறு விளைவிப்பதாக இருந்ததாகவும் உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. கியூபா பெரும் தியாகங்களைச் செய்யவேண்டி இருந்தபோதும், அது நீதியாகக் கருதிய இயக்கங்களுடன் துணைக்கு நின்றது.
கியூபாவின் அணிசேரா நாடுகளின் தலைமை ஒரு பொருளாதார விமர்சனத்தையும் முன்வைத்தது. ஒரு புதிய சர்வதேச பொருளாதார ஒழுங்குக்கான கோரிக்கைகள், கடன் நிவாரணம், தொழினுட்பப் பரிமாற்றம் ஆகியவற்றைக் கோரியது. 1979 ஹவானா உச்சிமாநாட்டு ஆவணங்களும் காஸ்ட்ரோவின் உரையும் ஆயுதக் குறைப்பு, நிறவெறி எதிர்ப்புக்கான அழைப்பு, அபிவிருத்திக்கு முன்னுரிமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு நெறிமுறைகள் ஆகியவற்றைக் கோரி நின்றன. அமெரிக்காவுக்கும் சோவியத்துக்கும் வெளியே அணிசேராதா அதேவேளை ஒத்துழைக்கின்ற மூன்றாவது அமைப்பை வினைத்திறனுடன் செயற்படுத்துவது பற்றியும் அதன் அவசியம் பற்றியும் காஸ்ட்ரோ தொடர்ந்து பேசினார். அதன் முக்கியத்துவம் இன்றும் உணரப்படுகிறது.
உள்நாட்டு அரசியலைப் போலவே, சர்வதேசியத்திற்கான உட்கட்டமைப்பாக அவரது சொற்பொழிவுகள் இருந்தன. காஸ்ட்ரோவின் உரைகளை ஆராயும் போது, அவர் ஒற்றுமையை எவ்வாறு விவரித்தார் என்பதை நிரூபிக்கின்றன: மருத்துவர், சிப்பாய், ஆசிரியர், தொழினுட்ப வல்லுநர் என அனைத்தையும் நல்க கியூபா தயாராக இருப்பதாக அறிவித்தார். உலகில் கியூபாவின் தார்மீகக் கடமையின் அனைத்து உருவகங்களையும் பகிர்ந்து கொள்ள அவர் திடமாக இருந்தார். கியூபா ‘நல்ல வார்த்தைகளால் அல்ல, செயல்களால்’ ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.
நிறைவுக் குறிப்புகள்:
ஃபிடல் காஸ்ட்ரோவின் அரசியல் சிந்தனை எளிமையான அடையாளப்படுத்தல்களை எதிர்க்கிறது. ஏனெனில் அது கோட்பாடுகளின் அலுமாரியாக அல்ல, ஒரு வாழ்க்கை அமைப்பாகக் கட்டமைக்கப்பட்டது. அறிவுபூர்வமாக, இது கியூபாவில் ஜோஸ் மார்ட்டியின் தார்மீக தேசபக்தியுடனும் ஏகாதிபத்திய எதிர்ப்புடனும் தொடங்குகிறது. பின்னர் மார்க்சிய லெனினிசத்தில் நிலைகொள்கிறது. வரலாறு என்னை விடுதலை செய்யும் என்ற உரையில், காஸ்ட்ரோ அரசியலமைப்புக் கண்ணியத்தைப் பாதுகாப்பதாக கிளர்ச்சியை வடிவமைத்தார். டிசம்பர் 1961-இல், அவர் அந்தத் திட்டத்தை மார்க்சிய லெனினிசத்தில் பகிரங்கமாக நங்கூரமிட்டார். கியூபாவின் இறையாண்மையை ஒரு சோசலிச அடிவானத்துடன் இணைத்தார். நீதிமன்ற உரையிலிருந்து சித்தாந்த அறிவிப்பு வரையிலான வளர்ச்சி அவரது அரசியல் தத்துவ முறையினை விளக்கும் முதலாவது கோடுகாட்டல்.
மூலோபாய ரீதியாக, காஸ்ட்ரோ ‘புரட்சியை’ ஒரு நிகழ்வாகக் கருதாமல், நெறிமுறைக் கோட்பாடுகளால் வழிநடத்தப்படும் செயல்முறையாக மறுபரிசீலனை செய்தார். அவரது சுருக்கமான, 2000-ஆம் ஆண்டு உரை ஒரு கொள்கையை வடிகட்டியது. ‘மாற்றப்பட வேண்டியதை மாற்றுங்கள்; ஒருபோதும் பொய் சொல்லாதீர்கள்; சமத்துவம், சுதந்திரம் மற்றும் சர்வதேசியத்தை பிணைக்கவும் பணியாற்றுங்கள்’. இது புரட்சியின் உள் இலக்கணத்தைப் பின்னோக்கி தெளிவுபடுத்துகிறது. அதே நெறிமுறைசார் அரசியல் கல்வியின் மீதான அவரது ஆர்வத்தை விளக்குகிறது. ஆயிரக்கணக்கான உரைகளும் வெகுஜன பேரணிகளும் ஒரு தேசிய வகுப்பறையாக இருந்தன. அங்கு கொள்கை, நினைவகம், அணிதிரட்டல் ஆகியவை நோக்கத்தின் பகிரப்பட்ட கதையாகப் பின்னிப் பிணைந்தன. இந்த அர்த்தத்தில், காஸ்ட்ரோ ஓர் அரசியல்வாதியைப் போலவே ஒரு கல்வியாளராகவும் இருந்தார். அவர் பொது வாழ்க்கையை குடியுரிமைக்கான பள்ளியாகக் கருதினார்.
சர்வதேச அளவில், ஏகாதிபத்திய எதிர்ப்பும் சர்வதேசியமும் ஒரே தார்மீக நாணயத்தின் இரண்டு முகங்களாக இருந்தன. ஒடுக்கப்பட்ட மக்களின் ஒற்றுமையை ஒரு முழக்கமாக அல்ல, ஒரு கடமையாக மாற்றினார். முக்கோண, அணிசேரா மன்றங்கள் முதல் அங்கோலாவில் உள்ள போர்க்களம், பல நாடுகளுக்கு மருத்துவர்களை அனுப்பிய நீண்ட மருத்துவ சர்வதேசவாதம் வரை, கியூபா அதன் அளவிற்கு ஏற்றவாறு உலகளாவிய புரட்சிகரப் பணியைச் செய்தது. கியூப ஆயுதங்களும் கியூப மருத்துவமும் தென்னாபிரிக்காவிலும் உலகளாவிய தெற்கு முழுவதும் யதார்த்தங்களை மாற்றியமைத்தன. காஸ்ட்ரோவுக்கு முக்கியமானது நெறிமுறையும் செயற்பாட்டின் ஒற்றுமையுமாகும். இதனாலேயே உள்நாட்டில் மருத்துவமனைகள், பாடசாலைகளை ஒழுங்கமைத்த அதே மதிப்புகள் இராணுவத்தினரையும் ஆசிரியர்களையும் வெளிநாடுகளில் உள்ள மருத்துவர்களையும் ஆட்கொண்டது. இதனாலேயே மிகவும் மதிப்புமிக்கதாக கியூபப் பணி இன்றும் கருதப்படுகிறது. இதனை வடிவமைத்து செயற்படுத்தியது காஸ்ரோவின் அரசியல் சிந்தனையே என்றால் மிகையாகாது.
நன்றி.
