தடையற்ற தடம்: போக்குவரத்துத்துறையில் பெண்களின் எழுச்சி
- மேரி றெசொதா
நாட்டின் அபிவிருத்தியில் பெண்களின் பங்களிப்பு சமீப காலங்களில் கணிசமானளவு அதிகரித்து வருகின்றது. அபிவிருத்தி என்பது வெறுமனவே பொருளாதார வளர்ச்சியினைக் கொண்டதல்ல. மாறாக, சமூக, அரசியல் மற்றும் கலாசாரக் கட்டமைப்புகளில் ஏற்படுகின்ற முன்னேற்றகரமான வளர்ச்சி நிலையைக் கொண்டு கணிக்கப்படுகின்றது.
அந்த வகையில், போக்குவரத்துத்துறை ஒரு நாட்டின் சமூக - பொருளாதார அபிவிருத்தி, சமூக ஒருங்கிணைப்பு மற்றும் பிராந்திய சமநிலை அபிவிருத்திக்கான அடிப்படை உட்கட்டமைப்புத் துறையாகும். பொதுவாக, இத்துறை பாரம்பரியமாக ‘ஆண்கள் ஆதிக்கம்’ கொண்ட துறையாகக் கருதப்படுவதால் பெண்களின் பங்களிப்பு மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கின்றது.
20-ஆம் நூற்றாண்டில் பெண்களின் பங்களிப்பு உலக அரங்கில் பல்துறைகளிலும் முன்னேற்றம் காணத் தொடங்கியது. இதனால், பெண்கள் விவசாயம் முதற்கொண்டு விண்வெளி வரையான சகல துறைகளிலும் சாதிப்பதற்கான எல்லைகள் விரிவாக்கப்பட்டன. குறிப்பாக, இன்றைய நவீன காலத்துப் பெண்கள் கல்வி, சுகாதாரம், மருத்துவம், விளையாட்டு, அரசியல், விஞ்ஞானம், தொழினுட்பம், அறிவாராய்ச்சியியல் என்று அனைத்துத் துறைகளிலும் முன்னேறி உலகத்தை மாற்றும் வல்லமை கொண்ட சக்தியாக மாறி வருகின்றனர். இத்தகைய சூழலில் போக்குவரத்துத் துறையிலும் பெண்களின் பங்களிப்பு வெளிச்சம் காணத் தொடங்கியுள்ளது.
இதனடிப்படையில், குறைந்தளவிலான பெண்கள் போக்குவரத்துத் துறைகளிலும் ஈடுபடத் தொடங்கினர். ரயில் சேவை, பேருந்து சேவை மற்றும் இதர போக்குவரத்துப் பணிகளில் பெண்கள் உலகளவில் இடம்பிடித்துள்ளமை சாதனை மைல்கல்லாகவே பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, ஒட்டுநர், பணியாளர், திட்டமிடல் மற்றும் நிர்வாகத்தில் வெவ்வேறு பங்களிப்புகளை வழங்கி வருகின்றனர். போக்குவரத்துத் துறையில் பெண்களின் பங்கானது, குடும்பத்தின் வருமானத்தினைப் பெற்றுக் கொடுப்பதுடன் மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதாரம், சமூக சமத்துவம் மற்றும் சேவைத் தரத்தின் மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றத்தினை உருவாக்குகின்றது.
உலக வரலாற்றில் முதன் முறையாக, 1915-களில் இலண்டன் பொதுப் பேருந்தில் நடத்துநராக Mrs. G. Duncan என்பவர் இணைந்துகொண்டார். இது பெண்கள் அதிகாரபூர்வமாகப் போக்குவரத்துத்துறையில் இணைந்து கொண்ட முதலாவது உலக வரலாற்று நிகழ்வாகப் பதிவாகியுள்ளது. அவரைத் தொடர்ந்து, ஒரு தசாப்தத்திற்குப் பிறகு 1927-ல், சுவீடன் நாட்டைச் சேர்ந்த Berta Albertina Persson அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட முதல் பெண் பேருந்து ஓட்டுநராகப் பொறுப்பேற்று, கனரக வாகனங்களை இயக்குவதில் பெண்களால் முடியும் என்பதை உலகிற்கு நிரூபித்தார். இத்தகைய வரலாற்றுச் சாதனைகள் வளர்ந்த நாடுகளில் பெண்களின் பங்களிப்பைத் துரிதப்படுத்தின. பின்னைய காலங்களில் போக்குவரத்துத்துறையில் பெண்களின் பங்களிப்பினை அதிகரிப்பதில் உலகின் பல நாடுகள் முனைப்புக் காட்டியுள்ளன. பேருந்து சேவைகளில் மட்டுமன்றி ரயில்வே, விமானம் மற்றும் கடல்வழி போக்குவரத்துத் துறைகளிலும் பெண்கள் தங்கள் திறமைகளை உலகறியச் செய்கின்றனர்.
தற்காலச் சூழலில், வளர்ந்த நாடுகளின் போக்குவரத்துத்துறையில் பெண்களின் பங்களிப்பு வியக்கத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இத்துறையின் பல்வேறு நிலைகளில் பெண்களின் பங்களிப்பு சுமார் 45% வரை உயர்ந்துள்ளது. அதேபோல், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் போன்ற கிழக்கு ஆசிய நாடுகள் போக்குவரத்துத்துறையின் தொழினுட்பப் பணிகள் மற்றும் மேலாண்மைப் பிரிவுகளில் 30 முதல் 40 சதவீதப் பெண்களை ஈடுபடுத்தி வருகின்றன. இருப்பினும், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில், வளரும் நாடுகளில் இத்துறையில் பெண்களின் பங்களிப்பு இன்றும் சவால்கள் நிறைந்ததாகவே உள்ளது. போதிய பாதுகாப்பு உள்கட்டமைப்புகள் மற்றும் சமூகக் கண்ணோட்டம் போன்ற காரணிகளால் அங்குப் பெண்களின் ஈடுபாடு குறைவாகவே காணப்படுகிறது. எனினும், நவீனத் தொழினுட்ப வளர்ச்சியும், பாலினச் சமத்துவம் குறித்த விழிப்புணர்வும் இத்துறையில் பெண்களுக்கான புதிய கதவுகளைத் திறந்து வருகின்றன. மேலைநாடுகளில் இத்தகைய மாற்றம் நிகழ்ந்த பல தசாப்தங்களுக்குப் பின்னரே இந்தியாவில் அது எதிரொலித்தது. அந்த மாற்றத்தின் முன்னோடியாக, ஆசியாவிலேயே அரசுப் பேருந்தை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர் என்ற வரலாற்றுப் பெருமையைத் தமிழகத்தைச் சேர்ந்த ஜெ. வசந்தகுமாரி பெற்றார். 1993-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அப்போதைய தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் (பல்லவன் போக்குவரத்து) ஓட்டுநராகப் பணியில் இணைந்த இவர், சமூக மற்றும் நிர்வாக ரீதியிலான பல்வேறு தடைகளைத் தகர்த்து, இத்துறையில் இந்தியப் பெண்களுக்கான புதிய நுழைவுவாயிலைத் திறந்து வைத்தார்.
இலங்கையின் பொதுப்போக்குவரத்து வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, 2026 பெப்பிரவரி 06-ஆம் திகதி இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) முதன்முறையாக 20 பெண் நடத்துநர்களை அதிகாரபூர்வமாகப் பணியில் இணைத்துக் கொண்டது. பல தசாப்தங்களாக ஆண்களின் ஏகபோக உரிமையாகக் கருதப்பட்ட இப்பணியில், பெண்களின் இந்த வரவு சமூக மாற்றத்திற்கான ஒரு முக்கிய சமிக்ஞையாகக் கருதப்படுகிறது. இந்த வரலாற்று நிகழ்வு, இலங்கையின் போக்குவரத்துச் சேவையை இன்னும் பாதுகாப்பானதாகவும், நுகர்வோர் நட்பு ரீதியாகவும் மாற்றுவதற்கான ஒரு முயற்சியாகும். இலங்கையின் விமானத்துறையைப் பொறுத்தவரை, ஏற்கனவே சர்வதேசத் தரத்திலான சாதனைகள் பதிவாகியுள்ளன. 2008-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் திகதி, Sri Lankan Airlines முதல் பெண் கப்டனாக (Captain) Anusha Siriratne நியமிக்கப்பட்டமை வான்வழிப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். இத்தகைய முன்னெடுப்புகள் வெறும் வேலைவாய்ப்புக்கானவை மட்டுமல்லாமல், பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தும் நீதிக் கோரிக்கைகளாகவும், நல்லாட்சி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான அடிப்படைத் தூண்களாகவும் அமைகின்றன. இருப்பினும், தற்போதைய தரவுகளின்படி இலங்கைப் போக்குவரத்துத் துறையில் பெண்களின் ஒட்டுமொத்தப் பங்களிப்பு வெறும் 3.4% என்ற மிகக்குறைந்த அளவிலேயே நீடிக்கிறது. இது உலகளாவிய சராசரியுடன் ஒப்பிடுகையில் பின்னடைவான நிலையையே காட்டுகின்றது. எனவே, இத்துறையில் நிலவும் சவால்களைக் களைந்து, உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலமே இத்தகைய வரலாற்றுச் சாதனைகளை ஒரு நிலையான சமூக மாற்றமாக மாற்ற முடியும்.
குறிப்பாக, சில துறைகளில் பெண்கள் உள்ளீர்க்கப்படுவது மிக அரிதாகவே இடம்பெறுகின்றன. சகல துறைகளிலும் பெண்களின் பங்களிப்பினை அதிகரிப்பதுடன், பெண்கள் தாமாகவே விரும்பிப் போக்குவரத்துத்துறைகளிலும் பணியாற்ற முன்வர வேண்டும். இதற்கான முறையான சாரதி பயிற்சிகளை வழங்குவதிலும், பெண்களின் உள்ளீர்த்தலை அதிகரிப்பதிலும் புதிய மாற்றங்களினைக் கொண்டுவர வேண்டியது அவசியமாகும்.
பொதுப் போக்குவரத்துத்துறைகளில் பெண்களின் முக்கியத்துவம்:
போக்குவரத்துத்துறை மனித வாழ்வியலோடு நெருக்கமான தொடர்பினைக் கொண்டுள்ளது. மக்கள் தங்களது நாளாந்த தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பொதுப் போக்குவரத்தினையே நம்பி வாழ்கின்றனர். குறிப்பாக, இச்சேவைகளைப் பயன்படுத்துபவர்களில், ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களும் பெண் குழந்தைகளும் அதிகளவில் உள்ளனர்.
இதனால், பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும் பெண்கள் பாலியல் ரீதியிலான அச்சுறுத்தல், சீண்டல்கள் என்பவற்றுக்கு முகம்கொடுப்பவர்களாகவும் உள்ளனர். நீண்ட நேரப் பயணம் மற்றும் இரவு நேரப் பயணங்களில் பெண் பயணிகள் பயம் கலந்த அச்சத்துடன் பயணிக்க வேண்டி உள்ளது.
இத்தகைய சூழலில் பெண் ஊழியர்கள் அதிகளவில் இத்துறைகளில் இணைத்துக் கொள்ளப்படுகின்றபோது பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்குகின்றது. இவற்றினை சமூக மாற்றத்தின் ஒரு முக்கிய புள்ளியாகக் கருத முடியும்.
இத்துறைகளில் அதிகமாக பெண்கள் உள்ளீர்த்துக் கொள்ளப்படுகின்ற பட்சத்தில் பெண்கள் உரிமைகள், பாலின சமத்துவம், நீதி மற்றும் செயல் என்பவற்றின் பிரதிபலிப்பாக விளங்கும். குறிப்பாக, பெண்கள் ஓட்டுநர், நடத்துநர், அலுவலக நிர்வாகி, டிக்கெட் பரிசோதகர் போன்ற பல பொறுப்புகளில் பணியாற்றுவது பெண்களின் திறன், தன்னம்பிக்கை, மற்றும் சமூகத்தில் அவர்களின் சம உரிமையை வெளிப்படுத்துகிறது.
அத்துடன், பெண்கள் தாங்கள் விரும்புகின்ற தொழிலைச் செய்வதற்கான சுதந்திரத்தை வழங்குகின்றது. குறிப்பாக, பெண்கள் இப்பேற்பட்ட துறைகளில் ஈடுபாட்டினை வளர்ப்பதனால் பால்நிலை ரீதியிலான சமூக மூடநம்பிக்கைகள் உடைத்தெறியப்படுகின்றது.
சமூகத்தில் உள்ள மற்றைய பெண்களும் இத்துறைகளில் வேலை வாய்ப்புக்களைப் பெறுவதற்கான விருப்பத்தினை அதிகரிக்கும். இன்றைய நவீன சமூகங்களில் கூட பல குடும்பங்களில் பெண்கள் ஆண்களைப் போன்று கடினமான வேலைகளைச் செய்வதற்கு அனுமதிப்பதில்லை. அவை ஆண்களுக்கு உரித்தான வேலை என்று காலம் காலமாக நம்பப்படுவதால் தங்களது பிள்ளைகளும் இத்தகைய வேலைகளுக்குச் செல்வதினை குடும்பத்தினர் விரும்புவது இல்லை.
உண்மையில், ஒருவர் விரும்புகின்ற தொழிலைச் செய்கின்றபோதுதான் திருப்தியுணர்வையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கிறார். இதனால், ஆண்களுக்கு உரித்தான தொழில் என்ற பிற்போக்கான எண்ணங்கள் களையப்பட்டு, பெண்களும் திறமை அடிப்படையில் இத்துறைகளில் பயணிக்க முடியும் என்ற கருத்தினை சமூகத்திற்கு வழங்குகின்றது.
இத்தகைய மாற்றங்கள் எதிர்காலப் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகள் விரிவடைவதற்கான சாத்தியக்கூறுகளை உருவாக்குகின்றது. எனினும், இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விடயம் இத்துறைகளில் இணைந்து கொள்பவர்களுக்கு ஆண் - பெண் வேறுபாடுகளின்றி சம ஊதியம் வழங்கப்படுதல் வேண்டும்.
பெண்களின் பங்கை ஊக்குவிப்பது சமத்துவமான, பாதுகாப்பான, முன்னேற்றமான சமூகத்தை உருவாக்கும் முக்கியமான படியாகும். இத்தகைய துறைகளில் பணிபுரியும் பெண்களிற்குப் பணியிடங்களில் நிலவும் பாதுகாப்புக் குறித்த ஏற்பாடுகள் மற்றும் பொருத்தமான வேலை நேரங்களை அரசாங்கமும் போக்குவரத்து நிறுவனங்களும் வழங்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பாகவும் மரியாதையுடனும் பணிபுரியக்கூடிய சூழல் உருவாகினால்தான் இத்தகைய முன்னேற்றங்கள் நீடித்து நிலைத்த வளர்ச்சிக்கு வித்திடுவதாக அமையும்.
பெண்கள் குடும்பத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்குதாரர்களாக விளங்குவது மட்டுமன்றி நாட்டின் அபிவிருத்தியிலும் கணிசமான பங்கினைக் கொண்டுள்ளனர். ஒரு தனிநபரின் ஒட்டுமொத்த வளர்ச்சியானது தேசிய உற்பத்தி வருமானத்தினை அதிகரிக்கின்றது. இந்நிலையில், பெண்கள் தடைகளைத் தாண்டி வாழ்க்கையில் முன்னேறுவதற்கான பாதைகளினை செம்மைப்படுத்த வேண்டியது அரசினதும் சமூகத்தினதும் கடமையும் பொறுப்பும் கூட.
போக்குவரத்துத்துறையில் பெண்களின் பங்களிப்பு என்பது வெறும் வேலைவாய்ப்பு சார்ந்தது மட்டுமல்ல, அது ஒரு நாட்டின் சமூக நீதி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தின் அடையாளமாகும். வரலாற்று ரீதியாக பெண்கள் இத்துறையில் தடம்பதித்து வந்தாலும், பாதுகாப்பு மற்றும் சமூகக் காரணிகளால் அவர்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாகவே உள்ளது. எனவே, பெண்களுக்குப் பாதுகாப்பான பணிச்சூழல், சம ஊதியம் மற்றும் உரிய பயிற்சிகளை அரசும் சமூகமும் இணைந்து வழங்க வேண்டும். இத்தகைய மாற்றங்கள் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதோடு, ஒரு வலுவான மற்றும் சமத்துவமான தேசிய அபிவிருத்திக்கு உறுதியான அடித்தளமாகவும் அமையும்.
நன்றி
