2026 - தமிழகத் தேர்தல் களம்
- நெல்லை ஜெயசிங்

146 கோடிக்கு மேல் மக்கள் தொகையையும், 97 கோடிக்கு மேல் வாக்காளர்களையும் கொண்ட இந்திய தேசத்தில், ஆறு கோடிக்கு மேல் வாக்காளர்களைக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில், மார்ச்-ஏப்ரல் அளவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழக சட்டமன்றத்திற்கான இத்தேர்தல், சனநாயகத்தின் உயிர்த்துடிப்பை வெளிப்படுத்தும் முக்கியமான தேர்தலாகும். சமூகநீதி, மொழி உரிமை, கலாசாரம், போன்ற பல்வேறு அம்சங்களைப் பிரதிபலிப்பதுடன், அரசியல் விழிப்புணர்வும், மக்களின் செயற்பாடும், நிறைந்து காணப்படுகின்ற களமாக இருக்கும் என்பதால், தேசிய அளவில் உற்று நோக்கப்படுகின்ற தேர்தலாக, தமிழகத் தேர்தல் களம் காணப்படுகிறது.
1967-க்குப் பின்னர் தமிழகத் தேர்தல் களத்தில், திராவிட இயக்கங்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக சுயமரியாதை, சமூக சமத்துவம், கல்வி வளர்ச்சி, போன்ற கோட்பாடுகள் தேர்தல் களத்தில் மையமாக இருந்துள்ளன. இதனால் கடந்தகால தேர்தல்களில், மொழி, சமூக நலத்திட்டங்கள், கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம், இட ஒதுக்கீடு போன்றவை முக்கிய விவாதப்பொருட்களாக இருந்துள்ளன. ஆனால் தற்போதைய தமிழக தேர்தலில் அதிக கவனத்தைச் செலுத்தி வரும், ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட மத்தியில் ஆளும் பாஜக எனும் தேசியக்கட்சி, பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி, தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தைக் கொண்டிருப்பதால், இந்துத்துவா மற்றும் மதவாதக் கருத்துகளை தமிழகத் தேர்தல் களத்தில் முன்னிறுத்த முயன்று வருகிறது. தமிழகத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மக்களைப் பிளவுபடுத்தும், குறுகிய நோக்கம் கொண்ட மதவாதம், தேர்தல் களத்தில் மையப்புள்ளியாக இடம்பெற்றுவிடுமோ என்ற அச்சம், மக்கள் மத்தியில் எழத்தொடங்கியிருக்கிறது. இது சுதந்திரமான சனநாயக தேர்தல் முறையைப் பலவீனப்படுத்திவிடும்.
‘நம்மை யார் ஆளவேண்டும் என்பதை நாமே தேர்வு செய்யலாம்’ என்ற உயர்ந்த சனநாயக் கோட்பாடு, தேர்தல் முறையின் அடிப்படை அம்சமாக இருப்பதன் காரணமாக, வாக்காளர்களின் வாக்குகளைப் பெறும் முனைப்பில், அரசியல் கட்சிகள், தமிழகத் தேர்தல் களத்தில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியல் கட்சிகள் உட்பட, அங்கீகரிக்கப்படாத நூற்றுக்கணக்கான கட்சிகள், தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தலில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில், 234 சட்டமன்றப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களில் 118 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெறும் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் தகுதியைப் பெறும்.
அரசியல் கட்சிகள்:
தமிழக சட்டமன்ற ஆட்சி வரலாற்றில், காமராஜர் அவர்களின் காங்கிரஸ் ஆட்சியின் முடிவிற்குப் பின்னர், திராவிடக் கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆட்சி புரிந்து வந்துள்ளன. இவ்விரு கட்சிகள் அனைத்துத் தேர்தல்களின் போது, ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தேர்தலில் போட்டியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தன. ஆயினும் தேர்தலின் பின்னர் அவை தனித்தே ஆட்சி புரிந்தன. கூட்டு மந்திரி சபை என்பது இதுவரை தமிழ் நாட்டில் ஏற்பட்டதில்லை. எனினும் தற்போதைய தேர்தல் களத்தில், ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கை, இடதுசாரிக் கட்சிகளைத் தவிர பரவலாய் கூட்டணிக் கட்சிகளிடத்தே ஒலிக்கத் தொடங்கி இருப்பது தமிழகத் தேர்தல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை, அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சிலர், திமுகவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவது வெளிப்படையாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நூற்றுக்கணக்கான அரசியல் கட்சிகள் இருந்தபோதும் விரல்விட்டு எண்ணக் கூடிய வகையில் சில கட்சிகள் மட்டுமே தேர்தல் களத்தில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. தேசிய கட்சிகளான, அகில இந்திய தேசிய காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, இந்திய பொதுவுடமைக் கட்சி, இந்திய பொதுவுடமைக் கட்சி மார்க்சிஸ்ட், ஆகியவற்றுடன் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்குத் திராவிட கழகம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழ் மாநில காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, புரட்சி பாரதம், மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, புதிய தமிழகம் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, என்பவற்றுடன் மூன்று வருடங்களுக்கு முன் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம், ஆகிய மாநிலக் கட்சிகள் வரும் சட்டமன்றத் தேர்தலில் முக்கிய கட்சிகளாகப் பார்க்கப்படுகின்றன.
நான்கு முனைப் போட்டி:
இதுவரை தமிழகத் தேர்தல் களமானது, அதிமுக, திமுக, கட்சிகளிடையே இருமுனைப் போட்டியாக இருந்த நிலையில், தற்போது நான்கு முனைப் போட்டிக்கான தேர்தலாக மாற்றம் பெற்று வருவதனை அவதானிக்க முடிகிறது.
n திமுக தலைமையிலான கூட்டணி:
இதில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிடக் கழகம், இரண்டு பொதுவுடமைக் கட்சிகள், அகில இந்திய தேசிய காங்கிரஸ், வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி, மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி என்பன இடம்பெற்றுள்ளன.
இக்கூட்டணியில் முக்கிய கட்சியாக இருந்து வரும் அகில இந்திய தேசிய காங்கிரஸ், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, திமுகவுடன் முரண்பட்டு, கூட்டணியில் இருந்து விலகும் நிலை ஏற்படின், அது திமுக கூட்டணிக்குச் சற்றுப் பின்னடைவை உருவாக்கும் என்றும் கணிக்கப்படுகிறது. மறுபுறம் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து விலகி, தவெக கூட்டணியில் இணையும் பட்சத்தில் அக்கட்சி பெரும் தோல்வியைச் சந்திக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது.
n அதிமுக தலைமையிலான தேசிய சனநாயக கூட்டணி:
இதில் அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநிலக் காங்கிரஸ், அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் என்பன இடம்பெற்றுள்ளன. இக்கூட்டணி அதிமுக தலைமை என்றும், பாஜக தலைமை என்றும், இருவேறு முரண்பட்ட கருத்துகளுடன் பயணிப்பதைக் காணலாம்.
இக்கூட்டணியை அமைப்பதில் அதிமுகவை விட, பாஜக அதிக அக்கறையுடன் முன்னின்று செயற்பட்டு வருகிறது. ஆயினும் இக்கூட்டணி ஒத்த கருத்துடன் முழு வடிவம் பெறவில்லை என்ற விமர்சனமும் உண்டு. அதிமுகவுடன் நேரடிக் கூட்டணியில் சேர பாட்டாளி மக்கள் கட்சி தவிர்த்து, வேறு கட்சிகள் வரத் தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. இக்கூட்டணிக் கட்சிகளின் செயற்பாட்டைப் பார்க்கும் போது, இரு கூட்டணிகள் இணைந்து, ஒரு கூட்டணியை அமைத்து, திமுகவை எதிர்த்து நிற்பதாகவே தோற்றம் தருகிறது.
n சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி:
இக்கட்சி வழக்கம் போல் இம்முறையும் தனித்தே களம் காண்பதாக அறிவித்துள்ளது. இதுவரை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத இக்கட்சி, அனைத்துத் தேர்தல்களிலும் தனித்தே களம் கண்டு வருகின்றது. தேர்தல் நடைபெறும் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடத் தயாராகி வருகிறது. புதிய மாற்றத்தைக் கொண்டு வருவோம் என இடைவிடாது மக்கள் மேடைகளில் பிரச்சாரம் செய்து வரும் நாம் தமிழர் கட்சி, இந்திய அரசியலில் தனித்துவமான அடையாளத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
n தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணி:
தவெக எனும் அரசியல் கட்சி, பிரபல நடிகர் விஜய் என்பவரால் தொடங்கப்பட்டதாகும். விஜய் அவர்கள் தனதாட்சியில் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படும் எனக் கூறியும், பெரிய கட்சிகள் அவரது கூட்டணியில் இடம்பெறவில்லை. ஆனால் விஜய் அவர்களுக்குக் கூடும் கூட்டத்தைக் கண்டு மிரண்டுபோன கூட்டணிக்குத் தலைமை தாங்கும் பிற கட்சிகள், விஜய் பின்னால் கட்சிகள் செல்வதைத் தடுக்கும் வகையில், அவற்றைத் தங்கள் கூட்டணியில் இணைத்துக்கொள்ளும் அரசியல் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பாமக, அமமுக, ஆகிய கட்சிகள், இவ்வாறான நிலை ஏற்பட்டதன் காரணமாகவே, பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததாகக் கூறப்படுகிறது. இச்சூழ்நிலையில், இருபெரும் கூட்டணியில் இடம்பெறாத வேறு சிறிய கட்சிகள், கடைசி நேரத்தில் தவெகவில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் அவர்கள் தனித்தோ அல்லது கூட்டணியாகவோ, தேர்தலில் விஜயகாந்த் போன்று, ஏனைய கட்சிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவார் என அரசியல் விமர்சகர்கள் உறுதிபட கூறி வருவதும் கவனிக்கத்தக்க விடயமாகும்.
மேலும் பதிவு பெற்று, அங்கீகாரம் பெறாத குறுகிய வட்டத்தில் இயங்கும் கட்சிகள், சாதிய அமைப்புகள், மற்றும் சுயேட்சையானவர்கள், தேர்தல் திகதி அறிவித்த பின்னர், தேர்தல் களத்திற்கு வருவர் எனவும் எதிர்பார்க்கலாம். எவ்வாறாயினும் எதிர்வரும் தேர்தல் என்பது நான்கு முனைப் போட்டியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் போட்டியில் நான்கு அணிகள் களத்தில் இருந்த போதும், கடுமையான போட்டி என்பது ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திமுக அணிக்கும், எடப்பாடி அவர்களின் தலைமையிலான அதிமுக அணிக்கும் இடையே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம், பிரபலமான நடிகரான விஜய் அவர்களை முன்னிலைப்படுத்தி, முதற்தடவையாக தேர்தலைச் சந்திப்பதால் அக்கட்சி வெற்றி பெறும் வாய்ப்பை விட, ஏனைய பெரிய கட்சிகள் எதிர்பார்த்து இருக்கும் தேர்தல் வாக்குகளைக் குறிப்பாக, திமுக, அதிமுக, வாக்குகளைப் பிரித்துச் சிதறடிப்பதில் வெற்றி பெறும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
நடக்க இருக்கும் தேர்தல் எல்லாக் கட்சிகளுக்கும் கடுமையானதாக இருக்கும். நான்கு முனைப் போட்டியில் வாக்குகள் பிரிந்து, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு எனக் கூறப்படுகிறது. எனினும் ஸ்டாலின் அவர்கள் இரண்டாம் முறையும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள பல்வேறு நலத்திட்டங்களைச் செயற்படுத்தி வரும் நிலையில், எடப்பாடி அவர்களும், மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றும் முனைப்பில், இலவசங்களை அறிவித்து வர, இரு கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளன.
தமிழக தேர்தல் வரலாற்றில் எந்தவொரு கட்சியும் 50 வீத வாக்குகளைப் பெற்றதில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெற்ற வாக்குகளை விட, திமுக தனியொரு கட்சியாக, 4.41 சதவீத வாக்குகளை மட்டுமே அதிகமாக பெற முடிந்தது. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த திமுக, 37.70 சதவீதத்தையும், அடுத்து வந்த அதிமுக, 33.29 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தன. ஆனால் இம்முறை போட்டி கடுமையாக இருக்கும் பட்சத்தில், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைப்பதில் இரு கட்சிகளுக்குமே சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் தமிழ்நாட்டில் முதற்தடவையாக, கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை தவிர்க்க முடியாததாகிவிடும்.
திமுக, மற்றும் அதிமுக கட்சிகளைத் தவிர மற்றைய அனைத்துக் கட்சிகளும் 10 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளையே கொண்டிருக்கின்றன. இதனால் தேசிய கட்சிகள் உட்பட பெரும்பாலான கட்சிகள், குறிப்பிட்ட இரு திராவிடக் கட்சிகளைச் சார்ந்தே தேர்தலில் போட்டி இடவேண்டிய நிலை காணப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சிகளின் நிலைப்பாடு:
2010-ஆம் ஆண்டு, தமிழ் தேசியத்தை முன்வைத்து சீமான் அவர்களால் தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியும், பிரபல நடிகரான விஜய் அவர்களால் மூன்று வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட தமிழர் வெற்றிக் கழகமும், தற்போதைய தமிழக தேர்தல் களத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. கடந்த தேர்தலில் 8 வீதத்திற்கு மேல் வாக்குகளை வாங்கி, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி, இம்முறை சில தொகுதிகளிலாவது வெற்றி பெறவேண்டும் என முயற்சித்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம், நடிகரான விஜய் அவர்களின் சினிமாக் கவர்ச்சியை முன்னிறுத்தி, கூட்டணி கட்சிகளுடன் பெரும் வெற்றியை பெற்று ஆட்சி அமைப்போம் எனக் கூறி வருகிறது. ஆனால் நடைமுறையில் அது சாத்தியமற்ற ஒன்று என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். திமுகவிற்கு ஆதரவாக உள்ள சிறுபான்மையினரின் வாக்குகளை, விஜய் பிரித்தெடுப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் கள யதார்த்தம் அவ்வாறு இல்லை. இரு கட்சிகளுக்கும் இளைஞர்கள் மத்தியில் ஓரளவு செல்வாக்கு இருந்த போதும், அது பெரிய வெற்றிக்கு வழி வகுக்காது என்றே கூறப்படுகிறது.
திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதை எல்லா வகையிலும் தடுக்க வேண்டும் என்ற பாஜகவின் மறைமுக ஏற்பாட்டிற்கு, விஜய் ஆளாகிவிட்டார் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. பாஜகவை பொறுத்தவரையில் அதன் நோக்கம், தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரம் மிக்க நிர்வாக அமைப்புகளைக் கொண்டு, மற்ற கட்சிகளை நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாக்கி, அதன் ஊடாக தங்களின் அரசியல் செல்வாக்கை தமிழ்நாட்டில் நிலை நிறுத்துவதாகும். தங்களின் கொள்கை எதிரி பாஜக என விஜய் பகிரங்கமாக அறிவித்த பின்னரும், அவர் தங்களின் கூட்டணிக்கு வரவேண்டும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் தமிழிசை அவர்கள் இன்றுவரையும் அழைத்துக்கொண்டிருப்பது, பாஜகவின் பலவீனத்தையே காட்டுகிறது.
தனியொரு கட்சியாகத் தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் 8-க்கும் குறைவாகும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆதரவுடன், 4 இடங்களில் மட்டுமே அவர்களால் வெற்றி பெற முடிந்தது. பாஜகவின் தாய் அமைப்பாக உள்ள, ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்கு எதிரான கருத்துடைய பெருவாரியான தமிழக வாக்காளர்கள், ஒருபோதும் பாஜகவை ஆதரிக்க மாட்டார்கள் என்றே கூறப்படுகிறது.
இக்கட்சிகளைத் தவிர, சிறிய அளவில் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய இன்னும் சில கட்சிகளும், தனிப்பட்ட அரசியல் தலைவர்களும், இக்கட்டுரை எழுதும் இந்நேரம் வரை, எந்தக் கூட்டணியிலும் இணையாத நிலை காணப்படுகிறது. குறிப்பாக, 2 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை உடைய தேமுதிக, புதிய தமிழகம், என்பவற்றுடன் அதிமுக சார்பில் மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் அவர்களும் ‘மதில் மேல் பூனையாக’ அதிக பயனை எதிர்பார்த்துக் கூட்டணிக்காகக் காத்திருப்பதைக் காண முடிகிறது. இம்முறை தேர்தல் வெற்றியை சில நூறு வாக்குகளும் தீர்மானிக்கும் நிலை இருப்பதால், சிறு கட்சிகளின் வரவையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலை, கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளமை தற்போதைய தமிழக சட்டமன்றத் தேர்தலில் முக்கிய நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது.
சமூக நீதி, சமத்துவம் போன்ற உயர்வான கொள்கைகளை முன்னிறுத்தி உருவான அரசியல் சூழல், இன்று, அதிகாரப்போட்டி, குடும்ப நலன், குறுகிய கால இலாப நோக்கங்கள் என்பவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. கொள்கை அடிப்படையிலான விரிவாக்கங்களாக இல்லாமல், இலவச அறிவிப்புத் திட்டங்களாகச் சுருங்கிவிட்டன. சனநாயகத்தைப் பிரதிபலிக்கும் உயிர்ப்புள்ள முன்னோடி மாநிலமாக இருந்த, தமிழகத்தின் தற்போதைய தேர்தல் களம் ஆரோக்கியமானதாக இல்லை என்று கூறப்படுகிறது. சேவை நோக்கம் என்பதைத் தொலைத்துவிட்ட அரசியல் கட்சிகள், எப்படியாவது வெற்றி பெற வேண்டும், அதிகாரத்தைப் பெற வேண்டும், என்ற எண்ணத்துடன், கூட்டணி அமைத்தும், தனித்தும் போட்டியிடுகின்ற போக்குத் தமிழ்நாட்டில் காண முடிகிறது. இந்நிலையில், வருகின்ற தமிழக சட்டமன்றத் தேர்தல், சற்று வித்தியாசமான முடிவுகளை அளிக்கும் என எதிர்பார்க்கலாம்.
நன்றி.
