பாரதியின் தேசியக்கல்வி பற்றிய சிந்தனைகள்
பாரதியின் தேசியக்கல்வி பற்றிய சிந்தனைகள்
- இராஜேந்திரம்பிள்ளை சிவலிங்கம்
ஆங்கில ஏகாதிபத்தியம் எனும் இருண்ட வானைக் கீறிக்கிழித்துக்கொண்டு புறப்பட்ட உதயசூரியன் பாரதி, அவன் பரப்பிய ஒளிக்கதிர்கள் பட்டுத் தெறிக்காத இடமேயில்லை எனும் அளவுக்கு அரசியல், பொருளாதாரம், கலை, கலாசாரம், அறிவியல் என்று இன்னோரன்ன துறைகளிலும் ஊடுருவி நின்றன. அதனாற்தான் இன்று பாரதி பிறந்த பாரதநாட்டிலே மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும், பல்வேறு துறைகளிலும் ஆராயப்படுகின்றான், விமர்சிக்கப்படுகின்றான். சமகால சமுதாயத்தை மட்டுமன்றி எதிர்கால சமுதாயத்தையும், தீர்க்கதரிசனத்தோடும் வரலாற்றுக் கண்ணோட்டத்தோடும் கண்டு தெளிந்து துல்லியமான கருத்துகளையும் படைத்த புரட்சிக் கவிஞன்தான் பாரதி. அந்நிய ஏகாதிபத்திய இருளில் மூழ்கிப் பாழ்பட்டுப் பரிதவித்து நின்ற பாரதநாட்டின் எழுச்சிக்காகப் புரட்சிக்கீதம் இசைத்த பாரதி அறிவும், ஆற்றலும், ஆளுமையும், கவித்துவமும் கொண்டவனாக விளங்க பல்வேறு காரணிகள் இருந்தன. எனினும், அவனது இப்புலமைப் பரப்புக்கும் இலக்கிய ஆளுமைக்கும் அவன் கற்ற கல்வியும் கல்வி பற்றி அவன் கொண்டிருந்த நோக்குமே காரணமாயிருந்தன.
பாரதி இந்திய சமுதாயத்திலே நீண்ட காலமாக நிலைத்து நின்ற பரம்பரை பரம்பரையாக வந்த பாரம்பரியக் கல்வி (திண்ணைப்பள்ளி) மரபு, இருபதாம் நூற்றாண்டின் இடைக்கூற்றில் தமிழ்நாட்டில் தோற்றம் பெற்ற ஐரோப்பிய நிறுவனக் கல்வி மரபு என்று இரண்டுக்குமிடையே தனது கல்விப் பயணத்தை மேற்கொண்டவன். சூழ்நிலைகளுக்கு அடிமையாகாது சூழலைத் தனக்கு அடிமையாக்குபவனே உண்மையான இலட்சியவாதி. பாரதியும் இரண்டு வகையான கல்வி மரபுகளைச் சந்தித்த போதும் எந்தக் கல்வி மரபும் முழுமையாக அவனைப் பாதிக்கவில்லையெனினும் இம்மரபுகளிலிருந்து அவனால் ஒதுங்கிச் சென்றுவிடவும் முடியவில்லை. அவனது கவித்துவவீச்சுக்கு களமமைத்துக் கொடுத்த பாரம்பரியக் கல்வியையும், ஆங்கிலக் கல்வியின் ஆதிக்கத்தின் காரணமாக அவன் எதிர்காலத்திலே வேண்டி நின்ற தேசியக்கல்வியையும், மேலெழுந்தவாரியாகத் தொட்டுக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பாரம்பரியக் கல்விமுறையிலே தகப்பனிடமோ தாய் மாமனிடமோ ஆரம்பக் கல்வியைத் தொடங்க வேண்டுமென்ற மரபு நிலவிவந்தது. பாரதியும் தனது தகப்பனிடம் கல்வியை ஆரம்பித்தான். மரபுக்கல்வியிலேயே பாரதம், கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள், ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நிகண்டு, தேவார திருவாசகம் போன்றவை பாடங்களாகக் கற்பிக்கப்பட்டன. பாரதியும் கம்பனையும், காளிதாசனையும், இளங்கோவையும் கற்றுத்தேர்ந்திருந்தான். மனனஞ் செய்தல் என்பது அக்கால மரபு. பாரதியும் பட்டினத்தடிகள், தாயுமானவர் பாடல்களை மனனஞ்செய்துள்ளான். இதனை பாரதியாரைப் பற்றி எழுதியவர்கள் எல்லோரும் குறிப்பிட்டுள்ளார்கள். பாரதி மரபுவழிக் கல்வியிலே, தான் கற்ற கம்பனையும் வள்ளுவனையும் நிறுவனக்கல்வி மரபில் கற்க முடியவில்லையென்பதை தனது பாடலிலே தெளிவுபடுத்துகின்றான்.
‘கம்பனென் றொரு மானிடன் வாழ்ந்ததும்
காளிதாசன் கவிதை புனைந்ததுவும்
நம்பருந் திறலோடொரு பாணினி
ஞான மீதில் இலக்கணங்கண்டதும்
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்...
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
தாங்கிலம் பயில் பள்ளியும் போகுனர்’
என்ற பாடல் மூலம் இதனை அறிந்து கொள்ளலாம். பாரம்பரியக் கல்வி மரபில் குருவிடம் பாடங்கேட்பதும் பணிவிடை செய்வதும் அக்கால மரபிலொன்று. பாரதியும் குருகுலக் கல்வியை நன்கு அனுபவித்து இருந்தான் என்பதை தனது சின்னச் சங்கரன் கதையூடாக வெளிப்படுத்தியுள்ளான்.
‘சோலையழகுக் கடவுண்டனிடத்தில் சங்கரன் தினம்
பள்ளிக்கூடம் விட்டவுடனே போய் பழைய
புலவர்களின் சாஸ்திரங்களும் பழைய கடினமான
விடு கவிகளுக்கும் பொருளும் கதைகளும் கேட்டுக்
கொண்டிருப்பான்... கிழக் கடவுண்டனிடம்
கம்பராமாயாணமும் கேட்க ஆரம்பித்தான்’
என்று தாம் பெற்ற மரபுக் கல்வியைப் புலப்படுத்தியுள்ளான். மேலும், எட்டயபுர சமஸ்தானக் கவிஞர்களிடமும், தமிழ்ப் புலவர்கள், பண்டிதர்கள், வித்துவான்கள் போன்ற தமக்கு வயதிலே முதிந்தவர்களோடும் உரையாடுவதிலேயும் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்து கொள்வதிலும் காலத்தைச் செலவு செய்தான். இதன் காரணமாகவே பாரதியின் இயல்பான ஆற்றலுக்குத் தமிழ் அறிவும் புலமையும் மெருகூட்டின எனலாம். பாரதியின் தேசியப் பாடல்கள் தவிர்ந்த அநேகமான பாடல்களிலே அவன் பாரம்பரியக் கல்வி மூலம் பெற்ற கம்பராமாயாணம், பாரதம், திருக்குறள், பட்டினத்தடிகள், தாயுமானவர் பாடல்கள் என்பவற்றின் தாக்கம் நேரடியாகவும், மறைமுகமாகவும் இடம்பெறுவதை நாம் மறுக்கமுடியாது. பாரதியின் அற்புதப் படைப்பான பாஞ்சாலி சபதம் புதுமையும், புரட்சியும் எளிமையும், இனிமையும் கொண்டு படைக்கப்பட்ட போதிலும், தண்டியாசிரியர் கூறும் காப்பிய நிலையோடு உறவாட முயல்வதையும் காணலாம். மேலும், பாரதி புதிய ஆத்திசூடி பாடக் காரணம் பாரம்பரியக்கல்வி தந்த பாடமெனலாம். வடிவ அமைப்பிலேகூட வசனக் கவிதையைத் தள்ளிவிட்டுப் பார்த்தால் பெருமளவுக் கவிதைகள் பழையமரபுப் பரப்பிலே சேர்ந்து கொள்வதை அவதானிக்கலாம். எனவேதான், பாரதி புதிய உத்திகள், புதிய அணுகுமுறைகளைக் கொண்டு புதுமையும், புரட்சியும் கொண்ட இலக்கிங்களைப் படைத்தபோதும் அவற்றிற்குத் துணையாகப் பாரம்பரியக் கல்வி இருந்திருக்கிறது எனலாம். பாரதி பாரம்பரியக் கல்வியைக் கற்றபோதும் வெறுமனே மரபுக் கவிஞனாக இருந்துவிடவில்லை. தொல்காப்பியமும் நிகண்டும் கற்றுவிட்டுச் சொற்சிலம்பமாடும் பண்டிதர்கள் போலவோ திண்ணை வேதாந்திகள் போலவோ மாறியவனோ; அல்லது இன்றைய சிலரைப் போல வளையாபதி - குண்டிலகேசியில் காணாமற்போன வரிகளுக்குக் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தவனோ இல்லை. மரபுவழிக் கல்வியை நன்கு புரிந்து கொண்டதன் விளைவாகத்தான் சொல் புதிது, சுவை புதிது என எல்லாவற்றிலும் அவனால் புதுமையைக் காணும் போக்கு வளர்ந்தது. பழைய பண்டிதர்களையும் அவர்களது பிரசங்கித் தனத்தையும்கூட பாரதி தனது சின்னச் சங்கரன் கதையூடாகக் கேலியும் கிண்டலும் செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. கல்வி என்பது படித்த பண்டிதர்களுக்கு மட்டும் உரிய சொத்தல்ல. எல்லோருக்கும் பொதுவானது எல்லோரும் கற்க வேண்டும். கல்வியைப் பரவலாக்க வேண்டும் அதற்கு ஏற்ற வகையிலே இலக்கியத்தின் போக்கிலே மாற்றத்தை விரும்பினான்.
‘எளிய பதங்கள் எளியநடை எளிதிற் புரிந்து கொள்ளும்
சந்தம் பொது மக்களின் மனதில் விரும்பும்மெட்டு
இவற்றினையுடைய காவியம் செய்து தருவோன்
தமிழ் மொழிக்குப் புதிய உயிர் தருபவனாகிறான்’
என சமூகத்துக்கு அறைகூவல் விடுத்ததோடு அந்த வகையிலே தானும் இலக்கியம் சமைத்தான். கடலையும், மீனையும், வானையும், வாவியையும், பெண்ணையும் சுவைத்துக் கவிதை படைக்க முற்பட்டவனல்ல பாரதி. தன்னை வானத்திலிருந்து பூமியிலேகுதித்த தேவனாகப் பறைசாற்றியவனும் இல்லை. பாரதநாட்டின் தெருப்புழுதிகளிலே உருண்டான். ஒவ்வொரு மனிதரின் இன்ப துன்பங்களிலும் பங்குகொண்ட முழுமனிதனாக நின்று சுதந்திரமே இலட்சியமாகவும், நினைவாகவும் கொண்டு வரப்போகும் இன்னல்களையும், இடையூறுகளையும் வெல்ல வல்ல இறவாத புகழுடைய இலக்கியம் படைத்தான். பாரதநாடு சுதந்திரம் பெறவேண்டுமானால் தேச பாஷையிலான தேசியக்கல்வி அவசியம் என வலியுறுத்தினான். பாரதியின் சிந்தனைகள் காலம் முழுவதுக்கும் ஏற்றவை. பாரதத்திலோ, ஈழத்திலோ தேசியக்கல்வி மூலம் தாய்மொழி இன்னமும் சரியான முறையிலே போதிக்கப்படவில்லை. ஆனால் ஏறக்குறை முக்கால் நூற்றாண்டுக்கு முன்னர் தாய் மொழியிலான தேசியக்கல்வி பற்றி பேசிவிட்டான் பாரதி. அவன் தேசியக்கல்வி பற்றிக் கொண்டிருந்த நோக்கை அவனது பின்வரும் கூற்று தெளிவுபடுத்துகின்றது.
‘தேச பாஷையின் மூலமாக இந்தச் சரித்திரப் படிப்பு மட்டுமன்றி மற்றெல்லாப் பாடங்களும் கற்பிக்கப்பட வேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும். தேச பாஷையின் மூலம் பயிற்றப்படாத கல்விக்கு தேசியக் கல்வி என்ற பெயர் சொல்லுதல் சிறிதளவும் பொருந்தாது போய்விடுமன்றோ. பௌதீக சாஸ்திரங்கள் கற்றுக்கொடுப்பதில் மிகவும் தெளிவான தமிழ் நடையில் பிள்ளைக்கு மிகவும் சுலபமாக விளங்கும்படி சொல்லிக் கொடுக்க வேண்டும்’
தேசியக் கல்வி என்பது ஒரு நாட்டின் ஆன்மாவோடும் பண்பாட்டோடும் பிணைந்தது என்பதை பாரதி ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். ஒரு மாணவரின் அறிவு வளர்ச்சிக்கும், அவனது தேசப்பற்றிற்கும் ‘தேச பாஷை’ எனப்படும் தாய்மொழியே முதன்மையான கருவியாகும். சரித்திரம் போன்ற சமூகப் பாடங்கள் மட்டுமன்றி, சிக்கலான பௌதீக சாஸ்திரங்களையும் (Physics / Science) தெளிவான தமிழ் நடையில் கற்பிக்கும்போதே, அது மாணவர்களுக்குச் சுலபமாகச் சென்றடையும் என்பது பாரதியின் துணிபு. தாய்மொழி புறக்கணிக்கப்பட்டு அந்நிய மொழியில் புகட்டப்படும் கல்வியை 'தேசியக் கல்வி' என்று அழைப்பதே பொருந்தாது எனக் கருதிய அவர், அறிவியலை மக்களாக்க எளிய தமிழ் நடையே அவசியம் என்பதை இதன் மூலம் உணர்த்துகிறார்.
பாரதி ஐரோப்பிய காலத்து நிறுவன ரீதியான கல்வி மரபையும் சந்தித்தவன். ஆங்கிலத்தை நன்கு தெரிந்து கொண்டிருந்தான். பாரதி மொழிப்பற்றும் இனப்பற்றும் கொண்டவன். ஆனால், இன வெறியோ, மொழி வெறியோ அவனை ஆட்டிப்படைக்கவில்லை. எதையும் தெளிந்த சிந்தையுடன் நோக்கித் துல்லியமான கருத்துகளைப் படைக்கும் அறிவும், ஆற்றலும் கொண்ட படைப்பாளி. அதனாலேதான் ஆங்கிலக் கல்வியின் ஆதிக்கம் தமிழ் மொழியின் தனித்துவத்தைக் குலைத்துவிடும் என்பதையும் சுதந்திர உண்மையை மழுங்கடித்துவிடும் என்பதையும் கண்டுகொண்டதோடு ஆங்கிலக் கல்வியால் எதுவித பயனுமில்லை என்பதை சுயசரிதை என்னும் பகுதியிலே
‘செலவு தந்தைக்கோர் ஆயிரம் சென்றது
தீதெனக்குப் பல்லாயிரம் சேர்ந்தன
நலமோ ரெட்டுணையும் கண்டிலேனிதை
நாற்பதாயிரம் கோயிலிற் சொல்லுவேன்’
என்று உறுதியாகவும் முடிபாகவும் சொல்லும் பாரதி ‘அறிவு எங்கிருந்தாலும் அதனைத் தேடிப் பெற வேண்டும்’ என்ற சோக்கிரதீசனின் கொள்கையைச் சிந்தையிலே கொண்டவன். அதனாலேயே
‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புது நூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமையில்லை
திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
அதை வணக்கம் செய்தல் வேண்டும்’
எனக் கூறி பிறநாட்டினரது அறிவு நூல்களையெல்லாம் தமிழிலே மொழிபெயர்க்க வேண்டும் என விளக்குகிறான். இவன் ஆங்கில நெறியை எதிர்க்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். மேலும், பாரதி விரும்பிய கல்வி தமிழ்மொழியிலான தேசியக்கல்வியாகும். இதனைப்பற்றி ஞானரதத்திலே குறிப்பிடும்போது பிள்ளைகள் தமிழ்பாடம் கற்றார்கள் என்பதை
‘தபோ முனி அந்த உபாத்தியாரை நோக்கி
சண்வாச் சாரியாரே இவர்கள் என்ன பாடம்
படித்துக்கொண்டிருக்கின்றார்கள்? என்று கேட்டான்
அதற்கு கண்வர் இவர்கள் கணித சாஸ்திரம்
படிக்கின்றார்கள் என்றான் தபோமுனி’
என்று விளங்க வைக்கின்றார். தமிழ்மொழி எந்த வகையிலும் மற்றைய உலக மொழிகளைவிடக் குறைந்து போய்விடவில்லை. மொழியென்பது ஒவ்வொருவரும் தமது கருத்தைப் புலப்படுத்திக் கொள்ளும் ஒருவகை ஒலிவடிவந்தான். தமிழ் மக்களுக்கு அறிவியலைப் புகுத்தும்போது அவர்கள் விளங்கக்கூடிய மொழியிலே மொழிபெயர்த்து இலகுவாகப் புகுத்த வேண்டும். இதனால், தமிழ்மொழி வளர்ச்சி அடையும் என்ற கருத்தை வெளியிடும் பாரதி இத்தகைய மொழிப் பெயர்ச்சிக்கும் அறிவு வளர்ச்சிக்கும் தேசியக் கல்வி முக்கியமாக இருக்க வேண்டும் என எண்ணினான். அதனாலேயே தேசியக்கல்வி தேசப்பாஷை கொண்டதாக மிளிர வேண்டும் எனக் கூறினான். தமிழ்நாட்டிலே தமிழ்மொழியே தேசியக்கல்வி மொழியாக இருக்க வேண்டும் எனவும் அதற்கான உறுதிமொழியளிக்கப்பட வேண்டும் எனவும் கூறினான்.
‘தமிழ் நாட்டிலே தேசியக்கல்வி என்பதாக ஒன்று தொடங்கி அதில் தமிழ்ப் பாஷையைப் பிரதானமாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஸ் மூலமாகவும் தமிழ் ஒரு வித உபபாஷையாகவும் ஏற்படுத்தினால் அது தேசியம் என்ற பதத்தின் பொருளுக்கு முற்றும் விரோதமாக முடியும் என்பதில் ஐயமில்லை. தேச பாஷையே பிரதானமென்பது தேசியக்கல்வியில் ஆதாரக்கொள்கை இதை மறந்துவிடக்கூடாது. தேச பாஷையை விருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படுகின்ற இந்தமுயற்சிக்கு நம் நாட்டிலிருந்து பூரணசகாயத்தை எதிர்பார்க்க வேண்டுமானால் தமிழ் பாஷையே முதற் கருவியாக ஏற்படுத்தப்படுமென்பதை தம்பட்டம் அறிவிக்க வேண்டும்’
என்று தமது கட்டுரையிலே குறிப்பிட்டுள்ளார். மேலும் தேசியக்கல்வியை ஆரம்ப வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை எவ்வாறு புகட்ட வேண்டும் என்பதுபற்றிப் பாரதி தமது தேசியகல்வி என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட கட்டுரையில் சிறப்பாக விளக்கியுள்ளார். பிறமொழிச் சொற்களை எவ்வாறு தமிழ்மொழியில் மொழி பெயர்ப்பது என்பது பற்றியும் பாரதி ஆராய்ந்துள்ளார். இதிலிருந்து பாரதி தேசியக்கல்வி பற்றிக் கொண்டிருந்த நோக்கெல்லாம் ஓரளவு புலனாகும்.
எனவே, தொகுத்து நோக்குமிடத்துப் பாரதியார் தமிழகத்தின் பாரம்பரியக் கல்வி முறையின் மீது மிகுந்த மதிப்பும் ஈடுபாடும் கொண்டிருந்தார். அந்த மரபுசார்ந்த கல்வியே அவரது கவிதை ஆற்றலுக்கு வலுவான அடித்தளமாகவும் அமைந்தது. எனினும், காலப்போக்கில் அக்கல்வி மரபு நலிவடைந்திருந்த சூழலில், சமுதாயத்தை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல ஒரு புதிய கல்வி முறையை உருவாக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது என்பதை நாம் அறியலாம். பாரதியின் சிந்தனைகள் தொலைநோக்குள்ளன. பாரதி மறைந்து நூறு ஆண்டுகள் பறந்தோடிவிட்டன. ஆனால், அவரது சிந்தனைகளும் கருத்துக்களும் மறையாது இன்றைய சமுதாயத்துக்கும் பொருந்துவனவாகவுள்ளன. தாய்மொழிக் கல்வியோ, தேசியக்கல்வியோ அறிமுகப்படுத்தப்படாத, அதைப்பற்றிச் சிந்திக்காத, சிந்திக்கத் தெரியாத மூடக்கொள்கைகளும், வரட்டு வாதங்களும் ஏகாதிபத்திய இருளும் மூடிக்கிடந்த சமுதாயத்திலிருந்து மரபுவழிக் கல்வியூடாக வந்த பாரதி தேச பாஷை, தாய்மொழி, தேசியக்கல்வி என்றெல்லாம் தெளிவாகச் சிந்தித்துக் கருத்துக்களை வெளியிட்டான். ஆனால், இன்னும் இந்தியாவிலே தேசியக்கல்வி தாய்மொழியிலான கல்வி அறிமுகப்படுத்தப்படாமல் இருக்கிறது. இலங்கை ஓரளவு இதில் வெற்றி கண்டுள்ளது எனலாம்.
நன்றி.
