Thaiveedu
Latest Articles
அரசியல்கல்வி

பாடும் திறன் வேண்டிய பாரதி

கிருங்கை சேதுபதி
கிருங்கை சேதுபதி
March - March 10, 2026

பாடும் திறன் வேண்டிய பாரதி

- கிருங்கை சேதுபதி

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்

கண்ணோட்டம் - 573

இத்திருக்குறளில் பண்ணும் கண்ணும் எதுகை மோனை கருதி வந்து இலக்கிய இன்பம் தருவதாக அமைந்தாலும் இது எதிர்மறையாய் அமைந்து உடன்பாடுடைய உண்மையை உணர்த்துகிறது.

பண் இல்லாத பாடல் பயனற்றது. அதுபோன்றது, கண்ணோட்டம் இல்லாத கண்ணும். ‘சங்கீத லட்சணம் இல்லாத பாட்டுப் பாட்டாமோ?’ என்று கேட்கிறார், இக்குறளுக்கு உரை வழங்கிய பரிதியார். பாட்டுக்கு அழகு பண் என்றால், கண்ணுக்கு அழகு கருணையாம் இரக்கம். அதனைக் கண்ணோட்டம் என்கிறது வள்ளுவம். தன்னிரக்கம், கழிவிரக்கம் ஆகியன கடந்து எவ்வுயிர்க்கும் இரங்குதல் மனித மாண்பு. இரக்கப்பண்பிற்கு எதிரானது அரக்கத்தனம். எவ்வுயிர்க்கும் இன்பம் தர அருளல் தேவகுணம். ‘யான் தேவனைப்போல் சிந்திக்க வல்லேன்’ என்றவர் பாரதி. ‘தெய்வம் நீ என்று உணர்’த்தியவரும் கூட.

எனவே, தன் காலத்துச் சங்கீத லட்சணங்களோடு, முற்கால லட்சணங்களையும் அறிந்த பாரதி, பிற்காலத்தில் அவை பெற வேண்டிய தன்மைகளையும் உணர்ந்து பாடியிருக்கிறார். தொடக்கத்தில் தன்னிரக்கம் என்றே தனிக்கவிதை தந்த அவர், பிற்காலத்தில் கழிவிரக்கத்திற்கும் இடம் கொடுக்காமல், எவ்வுயிர்க்கும் இரங்கி அருள்பவராக, அதற்காகவேண்டி எத்தெய்வத்தையும் துதிப்பவராகப் பரிணமிக்கிறார். அவர் பாடல்கள் சாதாரண நிலையில் பிறந்து அசாதாரண குணங்களைப் பெற்று, மந்திரத்தன்மை உடையனவாக மலர்ந்திருப்பதைப் பார்க்கலாம். அதற்கு, பாரதியின் ‘யோக சித்தி’ பாடல் ஒரு சான்றாகிறது.

வாழ்க்கை தவம். ‘வாழ்வனைத்தும் யோகம்’ என்றார் மகான் அரவிந்தர். மகாகவி பாரதி, ‘ஊருக்கு உழைத்திடல் யோகம்’ என்கிறார். தன் யோகம் சித்திக்க வரம் வேண்டும் பாடல்தான் ‘யோக சித்தி’.

வையத்துள் வாழ்வாங்கு வாழச் செய்ய வேண்டியவை எவை எனச் சிந்தித்து நெறிப்படுத்திய அறமாண்பு, பாரதிக்கும் உண்டு. அதற்குப் பராசக்தியைத் துணைக்கொண்ட அவர், பாடுகிறார். அறம் பாடும் திறன் வேண்டி அவர் வைத்த வேண்டுதல்கள் பலபடித்தானவை. அவை பற்றி விரித்துப் பேசுகிறது இக்கட்டுரை.

அறம் பாடும் திறன் வேண்டி:

வாழ்க்கையில் நெருக்கடியான சூழ்நிலைகள் எல்லோருக்கும் வரும். அவற்றை எவ்வாறு வெல்கிறோம் என்பதில்தான் நமக்கான வாழ்க்கை இருக்கிறது. அதற்கு முன்னர் எது வாழ்க்கை என்பதில் ஒரு புரிதல் இருக்க வேண்டும். பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட எழுந்த கோடிட்ட இடத்தை எது கொண்டு நிரப்பப்போகிறோம் என்பதைப் பொறுத்தது அது. அது இட்டு நிரப்பும் இடம் அன்று; திட்டமிட்டு முன்னேறவும் திடம்படச் செயலாற்றவும் காலம் கொடுத்த கொடை. அதனை வெற்றிடம் ஆக்கிய வீணர்கள் பலர்; விரையம் ஆக்கிய பலவீனர்கள் பலர்; மற்றவர்க்குக் கிட்டிய வாய்ப்புகள் பார்த்தே, அழுக்காற்றில் அழுந்திக் கெட்டவர் பலர். இவர்களுக்கு மத்தியில் பாமரராய், விலங்குகளாய், கஞ்சிக்கும் காமத்துக்கும் காலத்தைத் தொலைத்துத் துஞ்சி மடிந்தவர்கள் பற்பலர். அவர்களில் இருந்து விலகி, தன் பிறப்பின் தனித்தன்மை உணர்ந்து தரணியில் உயரவும் தரணிவாழ் உயிர்களை உயர்த்தவும் வேண்டிய தேவை மனிதர்க்கு உண்டு. அதிலும் குறிப்பாக, வையத்தை வாழவைக்க வேண்டும் என்கிற வைராக்கியத்தோடு புதுவை புகுந்த பாரதிக்கு மிகவுண்டு. அதனால்தான் உண்டு உறங்கி, இடர்செய்தும் வீண் கதைகள் பேசிப் பொழுதுகள் போக்கியும் அழிகிற வகையினரை ஆட்கொள்ள முனைகிறார்.

வயிற்றுக்குச் சோறு வாங்கிவரச் சென்றவர்கள் வருவதற்குள், உடனிருந்தவர்களைப் பயிற்றிப் பக்திமயமாக்கி அதிமானுடர்களாக்க விழைகிறார். பக்தி என்பது கடவுளை முன்னிறுத்திச் செலுத்தும் காதல் என்றாலும், அதில் தன்மயத் தன்மையும் உண்டு. ஆணும் பெண்ணும் இணைந்து பெறும் இன்பத்தின் தலைவாசல் காதல்; பரமாத்மாவும் ஜீவாத்மாவும் கலந்துபெறும் பேரின்பத்தின் நுழைவாயில், பக்தி. அது தாய் பிள்ளை உறவாகவும் தழைக்கும்; ஆண்டான் - அடிமை முறையாகவும் செழிக்கும்; குரு சீட மரபாகவும் சிறக்கும். மொத்தத்தில் இறைவனின் இராஜ்ஜியத்தில் இன்புற்று வாழும் இயல்பை எல்லாவுயிர்களும் பெறுதலே இதன் நோக்கம். (இது கருதியே, கண்ணனைத் தாயாக, தந்தையாக, குருவாக, அரசனாக, ஆண்டாக, தலைவன் - தலைவி, குழந்தை எனப் பன்முகத் தன்மையில் இருத்தித் தன்னை அதற்கேற்பத் தகவமைத்து, கண்ணன் பாட்டு இசைத்தவர் பாரதி. தெய்விக உணர்வாயினும் அது மனிதம் கலந்த புனிதம் என்பதை ஆழ்வாராதிகள் வழி அனுபவித்தவர் அவர். அதற்குப் பெருந்தூண்டுதல் குவளைக்கண்ணன் என்பதை மறந்துவிடக்கூடாது.)

பசியோடு இருத்தல் பக்தி மார்க்கத்திற்குத் துணைசெய்ய வல்லது. சராசரிப் பசி இரைதேட வைக்கும்; இலட்சியப் பசி இறை தேட வைக்கும். இரண்டுக்கும் இயற்கை நிச்சயம் வாய்ப்பளிக்கும் என்பதை அறிந்த பாரதி, பசிக்கு உணவு வரும் வரைக்கும் பக்தி மார்க்கத்தைத் துணைக் கொண்டு, தன் சீடர்களை ஆட்கொள்கிறார்; அதற்கு முன்னதாகத் தன்னையே ஆட்படுத்திக் கொள்கிறார். வீரை சக்தியாக விளங்கும் மூல சக்தியை முன்னிறுத்தி, பாரதி பேசுகிறார்.

நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை

நேரே இன்றெனக்குத் தருவாய்

அதிகம் கேட்க அவகாசம் இல்லை; ஆயிரம் வேலைகள் அன்னைக்கு. ஆனாலும், தேவை தனக்கு. அதனால் கேட்பவை சில. அவை எப்படிக் கிடைத்தாலும் போதும் என்கிற புத்தி தனக்கில்லை. வேறு ஒருவராலோ, வேறு வகைகளிலோ அவற்றைப் பெற விரும்பாத பாரதி, ‘நேரே நீயே - தாமதம் இல்லாமல், தவிர்த்துவிடாமல் - இன்று எனக்குத் தருவாய்’ என்று விண்ணப்பம் விடுக்கிறார். அதற்குத் தான் தகுதியுடையவன் தானா என்று தாயாகிய அவள் ஆராயக்கூடும். அதற்கு இடம் இல்லாமல் செய்துவிடுகிறது, முதலில் கேட்கும் வரம். அது.

என்றன்முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்

மூளாது அழிந்திடுதல் வேண்டும்

முன்னைத் தீய வினைப் பயன்கள் மூளாது அழித்துவிட வேண்டி:

வினை - செயல். முன்பு செய்த செயல்களுக்கான நன்மை தீமைகள் தாமே விளையும். அவற்றுள் தீமையை அழித்து நன்மையைப் பெறுவதில்தான் அறிவின் இயக்கம் முற்பட வேண்டும். எனவே, தீய வினைப்பயன்கள் மீளவும் மூண்டு எழுந்து நம்மை அழித்துவிடாது இருக்க, அதனைத் தாயாகிய நீயே முந்திக் கொண்டு அழித்துவிடவேண்டும். இது முற்காப்பு மட்டுமல்ல, தற்காப்பும் ஆகும். பழைய கட்டுகளைத் தவிர்த்த உயிர் புதிய உயிராகிவிடுகிறது. இதன்மூலம் தான் புதிதாய்ப் பிறக்கும் தருணம் வாய்த்துவிடுகிறது. இது இப்பிறவியிலேயே கிட்டிய இரண்டாவது தனிப்பிறவி; புதுப்பிறவி. இதனை மறுபடியும் முன்னைத் தீவினைகள் மூண்டு பாழ் செய்யாது இருக்க வேண்டும். பழக்க தோஷத்தில் நாம் பெறவேண்டிய சந்தோஷத்தை இழந்துவிடக்கூடாது அல்லவா? அதுதான், இனிக் கேட்க இருக்கும் இரண்டாவது வரமாக அமைகிறது.

என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்தல் வேண்டி:

இந்த வரம் சரி. இதனைப் பயன்படுத்தும் வழியையும் அதன்படி தன்னைச் செலுத்திக் கொள்ளும் தந்திரத்தையும் உள்ளடக்கி, சற்றே விளக்கமாக, இவ்வரத்தினை எடுத்து மொழிகிறது, பாரதியின் கவிவாக்கு.

இனி என்னைப் புதிய உயிர் ஆக்கி - எனக்கு

ஏதும் கவலைஅறச் செய்து - மதி

தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்

சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்

எல்லாவுயிர்களும் அனுபவிக்க வேண்டி, இந்த உலகத்தில், எத்தனையோ கோடி இன்பங்கள் வைத்தவன் இறைவன் மற்றவுயிர்கள் அனுபவிக்கும் இன்பத்தைக் கூட, இந்த மனிதவுயிர் அனுபவிக்க விடாமல் செய்துவிடுகிறது, அதன் மனம். தன் போக்கில் காரண காரியங்களை ஆராய்வதாய்க் கருதிக் கவல்வதே அதன் வேலையாகிவிடுகிறது. அதனால், மனதைக் கவலை சூழ்கிறது. அதில் உடல் ஆழ்கிறது. உயிர் அதன் வாதனையை அனுபவிக்கிறது. இதற்கு எதிரானது இன்பம். அது உயிரால் அனுபவித்து உணரப்பெறுவது. அதனை ஆனந்தம் என்றும் சொல்வர். விவேகத்தால் (மெய்யறிவால்) ஆனந்தம் பெற்றவர் விவேகானந்தர்.

முகத்தின் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்

அகத்தின் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்

என்கிறது திருமூலர் திருமந்திரம். அக இன்பம் ஆனந்தம். எனில், அகமும் புறமும் (உடலும் உள்ளமும் ஒன்றி உணர்கிற) ஒருசேர அனுபவிக்கிற இன்பம் மகிழ்ச்சி. அதனை சந்தோஷம் என்று சொல்வதும் உண்டு. அதனை அடையவிடாமல் தடுப்பதுதான் கவலை. தேவையில்லாத காரண காரியங்களை ஆராய்ந்து கவலையைத் தேடிக் கொ(ள்/ல்)கிற சகவாச தோஷம் மனதுக்கு உண்டு. அதனை அவ்வழியில் செல்லவிடாமல் தெளிவுபடுத்த உதவுவது மதி (அறிவு). அதுவே நிம்மதி. அதனை முன்னிறுத்தி, தெளிந்த மதியுடன் தெளிவாகக் கேட்கப்பெறுவது இரண்டாவது வரம்.

பெற்ற வரங்களைப் பேணிக்காத்துக்கொள்ள மற்ற வரங்களும் வேண்டுமே. தனித்தவம் புரிந்து அவற்றை நிலைப்படுத்திக் கொண்டாக வேண்டும். அதற்கு முற்றிலும் துணையாவன உடலும் உள்ளமும். அவற்றை உறுதிப்படுத்திக் கொள்ளத் தேவையானவற்றை ஒரு பட்டியலாக்கிப் பாடுகிறார் பாரதி.

தவ மேன்மை கொடுத்தருள வேண்டி,

தோளை வலி உடைய தாக்கி - உடல்

சோர்வும் பிணிபலவும் போக்கி - அரி

வாளைக் கொண்டுபிளந் தாலும் - கட்டு

மாறா வுடல் உறுதி தந்து - சுடர்

நாளைக் கண்டதோர் மலர்போல் - ஒளி

நண்ணித் திகழு(ம்) முகம் தந்து - மத

வேளை வெல்லுமுறைகூறித் - தவ

மேன்மை கொடுத்தருளல் வேண்டும்

தவம் மேன்மைப்படத் தகுந்த உள வலிமை வேண்டும். அதற்கு முதலில் உடல் வலிமை வேண்டும். உடலோ, உள்ளமோ எவ்வளவு வலியைத் தாங்கிச் செயற்படுகிறதோ, அதுதான் வலிமை. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் எனில், அதற்கு முதற்கண் எதையும் தாங்கும் தோள் வலிமை வேண்டும். உடலுக்குச் சோர்வோ, பிணியோ வந்துவிடக்கூடாது. அவை வலிமைக்கு ஊறு செய்யும் உள் காரணிகள். அடுத்து, அரிவாளைக் கொண்டு பிளந்தாலும் கட்டு மாறாத உடல் வலிமை வேண்டும். அரிவாள் ஒரு குறியீடு. உடலைச் சிதைக்கும் எந்தப் புறக்கருவிகளாலும் சிதையாத திடம்படு உடம்பு இன்றியமையாத் தேவை. அதற்கான உணவு முதலான ஊட்டம் பெற்ற உடம்பு, பின்னர் தினவெடுத்து அலையும். தசை நசை கொண்டு, தடுமாறும்; உள்ளம் தடம் மாறும்; மதவேள் ஆகிய காமனின் கையாளாக நம்மை ஆக்கிவிடும். அவனை வெல்லும் முறை சொல்லி, என் உயிரை மேம்படுத்தும் தவ ஆற்றலைத் தருதல் வேண்டும் என்பது மூன்றாவது வரம்.

அந்தத் தவம் எப்படி இருக்கவேண்டும் என்பதை நுட்பமாய் உணர்த்த, பாரதி சுடர்நாளைக் கண்டதோர் மலர்போல், ஒளிநண்ணித் திகழு(ம்) முகம்வேண்டும் என்கிறார்.

அகத்தின் அழகை முகத்தில் காணலாம். அது அன்றலர்ந்த மலர் போல் ஒளிதர வேண்டும். அதற்கு அன்றாடம் எழுகிற சூரியனின் உதவி வேண்டும்.

மேலோட்டமாகத் தெரியும் இக்காட்சிக்குள் நீரோட்டம்போல், ஒரு தரிசனம் வாய்க்கிறது. இந்த உலகில் இயங்கும் எல்லாவற்றோடும் பிரபஞ்சப் பேராற்றல் தொடர்பு கொண்டிருக்கிறது. இடையறாத இயக்கம் அதன் கொடை.

எப்படி மின்னாற்றல் பெற்ற எந்திரம் அதன்வழி பெற்ற தன்னாற்றல் உள்ளவரை இயங்குகிறதோ, அதுபோல், இயற்கை ஆற்றலைத் தன்னுள் நிரப்பி இயங்கும் எல்லாவுயிரும் அது இருக்கும் வரைக்கும் இயங்கும்; குறையக் குறையக் குறையும்; நிறைவில், மறையும்; அது இறப்பாய் முடியும். ஆக, பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் அமையும் இருப்பையும், இயக்கத்தையும் தக்கவைத்துக்கொள்ள, (செல்போனுக்கு, சார்ஜ் போட்டுக்கொள்வது போல.) மூலப் பேராற்றல் கொண்டு தன்னை அவ்வப்போது உயிர்ப்பித்துக் கொள்ள வேண்டும். புதிய உயிராக்கிக் கொள்ளல் என்பது அதன் சுருக்கக் குறிப்பு.

இந்த இடத்தில் திருவள்ளுவரின் திருப்பேரனாகத் தன்னை வளர்த்துக்கொள்கிறார் பாரதி. அது தாத்தாவைத் தாண்டிய உயரத்தில் அவரை நிறுத்திக் காட்டுகிறது. பொன்னை நெருப்பிடை இட்டுப் பொசுக்கிப் புடம் போட்டுச் சுடர் ஏற்றுவதுபோல், தன்னை வருத்தித் தவம் செய்து மேன்மையுறுதலைத் திருக்குறள் சுட்டுகிறது. (சுடச் சுடரும் பொன்போல் - தவம் - 267)

எந்தச் சிரமமும் எய்தாமல், கதிரவன் முகம் கண்ட தாமரை போல, தன் தவ வலிவு பொலிவு பெற வேண்டும். அது முடியும் என்று முன்வைக்கிறது பாரதியின் கவியுள்ளம்.

இந்தத் தவ ஆற்றலை எதற்குப் பயன்படுத்த வேண்டும் என்கிற தொலைநோக்குப் பார்வையும் பாரதிக்கு இருந்தது. அது தன் காலத் தேவையை முன்னிறுத்திச் சொல்லத் தூண்டுகிறது. வேண்டியதுகளின் பட்டியலாக அடுத்த பாடல் அமைகிறது.

எண்ணும் காரியங்கள் எல்லாம் - வெற்றி

ஏறப் புரிந்தருளல் வேண்டும் - தொழில்

பண்ணப் பெருநிதியம் வேண்டும் - அதில்

பல்லோர் துணைபுரிதல் வேண்டும்

இவை பொதுவானவை. அவரவர்க்கும் உரிய வகையில் ஆக்கிப் பயன்கொள்ள வேண்டும் வரங்கள். இந்தியத் திருநாட்டில் எத்தகு தொழில்கள் மேம்பட வேண்டும் என்று கவிதைகளும் கட்டுரைகளும் அவை குறித்த செய்திகளும் தந்தவர் பாரதி. எனினும் இந்த இடத்தில் தனக்கான பணியை - தொழிலைத் தனித்து விரித்து உரைக்க முற்படுகிறார் பாரதி.

பாடும் திறன் வேண்டிய பாரதி:

புதுவைக்கு வந்த பிறகு, மணக்குளவிநாயகர் சந்நிதியில், அவர் திருமுன்பு, ‘நமக்குத் தொழில் கவிதை’ என்றும் ‘நாட்டுக்கு உழைத்தல்’ என்றும் தன் வாழ்வின் நோக்கத்தை வகுத்துக்கொண்டு செயல்பட்டவர் அல்லவா, அவர். பராசக்தியிடம் காணி நிலம் முதலான கோரிக்கைகள் வைத்து அவர் பாடிய பாடலின் நோக்கம், ‘பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திடச் செய்வது’தானே. அதனை முன்னிறுத்தி, இப்பாடல் முடிகிறது.

...பல்லோர் துணைபுரிதல் வேண்டும் - சுவை

நண்ணும் பாட்டினொடு தாளம் - மிக

நன்றாவுளத் தழுந்தல் வேண்டும் - பல

பண்ணிற் கோடிவகை இன்பம் - நான்

பாடத் திறனடைதல் வேண்டும்

இலக்கியச் சுவையும், தாளமும் பாட்டும் இணைய எழும்புகிற இசையின் அழகும் மிகுந்து கேட்போர் மனம் கொள்ளுமாறு விளங்கும் பண்ணில் கோடி வகை இன்பம் கொண்டுவரும் வண்ணம், தான் பாடும் பாடல் அமைதல் வேண்டும். அப்படிப் பாடும் திறன் அடைதல் வேண்டும் என்பது இப்பாடலின் வைக்கும் பாரதியின் வேண்டுதல்.

இங்கு அவர் முன்வைக்கும் பாடும் திறன் எதுகை, மோனை, இசை, தாளம் இணைய எழும் பல்வகைப் பண்கள் கொண்டு அமைந்த பாடல்களை இயற்றுவது என்று புரிந்துகொள்ளுவது பொருந்தாது; அது கேட்கும் இன்பத்தை மட்டுமே கிளர்த்துவது. பாரதியின் நோக்கம் அதுவன்று. அவர் பண்ணோடு இசைந்து பாடும் பாடல்கள் எல்லாம் கோடிக்கணக்கான இன்ப வகைகளைக் கொடுக்கும் ஆற்றல் வாய்ந்த அரியவை என்று அடுத்து வரும் பாடல் அடிகள் புரிய வைக்கும். அதனை விரித்துணர, பாரதியின் சித்த மனோபாவம் மொத்தமாய்ப் புலப்படத் தொடங்கும்.

நன்றி