Thaiveedu
Latest Articles
அரசியல்வரலாறு

எம்.வி. வெங்கட்ராமின் ‘பைத்தியக்காரப் பிள்ளை’ சிறுகதையில் வன்முறையும் மனவடுவும்

மைதிலி தயாநிதி
மைதிலி தயாநிதி
March - March 10, 2026

எம்.வி. வெங்கட்ராமின் ‘பைத்தியக்காரப் பிள்ளை’ சிறுகதையில் வன்முறையும் மனவடுவும்

- மைதிலி தயாநிதி

கும்பகோணத்தில் சௌராஷ்டிர குடும்பத்தில் உதித்த எம்.வி. வெங்கட்ராம் (1920-2000) தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர். நித்தியகன்னி, காதுகள் போன்ற நாவல்களையும் பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார். அவரின் ‘பைத்தியக்காரப் பிள்ளை’ என்ற சிறுகதை தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த சிறுகதைகளுள் ஒன்று என்பது என் கருத்து. கும்பகோணத்தில் வறுமையில் வாடும் சௌராஷ்டிர பட்டு நெசவுத் தொழிலாளர் குடும்பத்தைப் பின்னணியாகக் கொண்ட இந்தச் சிறுகதை, ஆணாதிக்கக் குடும்ப அமைப்பில் நிகழும் வன்முறையின் பாதிப்புகளை எவ்வாறு வெளிப்படுத்துகிறது என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

இக்கதை குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படுவோர் பெண்கள் மாத்திரமன்று, பிள்ளைகளுமே என்பதைத் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது. வன்முறையினாற் பாதிக்கப்பட்ட தாய் அதே வன்முறையைத் தன் பொருளாதார அதிகாரத்தை எதிர்க்கும் மூத்த மகன் ராஜத்திடம் காட்டுவதும், அவனைத் தன் கணவனின் பிரதிநிதியாக உணர்வதும் குடும்ப வன்முறையின் தாக்கத்தை உணர்த்துகிறது. தந்தை போன்று, தானும் ஒரு வன்முறையாளனாக மாறிவிடுவோமா என்று இடையறா அச்சத்தில் ராஜம் இருப்பதும், தாய் மீது வன்முறை புரிந்த தகப்பன் தற்பொழுது இல்லாத காரணத்தால், தன் ஆத்திரம் முழுவதையும் குடும்பத்தின் பிரதிநிதியாக விளங்கும் தன் தாயிடம் காட்டுவதும், குடும்ப வன்முறையைப் பார்த்து வளர்ந்த குழந்தையின் மன உளைச்சலைப் பிரதிபலிக்கிறது.

வன்முறையால் பாதிக்கப்பட்ட தாயும், ராஜமும் அப்பாதிப்பினை வெவ்வேறு விதத்தில் வெளிப்படுத்துகிறார்கள். உடல்ரீதியான ஆக்ரோஷமான செயற்பாடுகள் மூலம் கணவனிடமிருந்து தன்னைப் பாதுகாக்க முயன்ற தாய், கணவன் இறந்த பின்னர் நிலவும் சமூக ஆதரவற்ற சூழலில், தன் ஆத்திரங்களையெல்லாம் வெளியே வன்சொற்களாய்க் கொட்டுகிறாள். அவளின் சொல் வன்முறை, ஏலவே தந்தையின் வன்முறையைப் பார்த்திருந்த ராஜத்தின் மனக்காயத்தை ஆழப்படுத்துகிறது. ஆனால், அவன் பாதிப்பு அவன் மனதுள்ளே புதைந்திருப்பதனால், அது மீண்டும் மீண்டும் வரும் பயங்கரமான கனவாகவும், பின்னர் தற்கொலை எண்ணமாகவும் மாறுகிறது. தந்தையிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ள முயலும் ராஜத்துக்குத் தாய் தொடர்பான வன்முறை எண்ணங்கள், அவளைப் பார்க்கும்போது, வன்மொழி பேசும்போதெல்லாம் எழுகின்றன. தாய்க்கு எதிரான தன் வன்முறைச் செயற்பாடுகள் சமூகத்தில் ஒருபோதும் நியாயப்படுத்தப்படமுடியாதவை என்ற காரணத்தால் அவற்றையும் தன் மனதிலேயே புதைத்துக் கொள்கிறான். இவ்வாறு தந்தையின் வன்முறையாற் பாதிக்கப்பட்ட தாயும் மகனும் தத்தம் மனவடுவினை வெவ்வேறு விதமாக வெளிப்படுத்துகின்றனர். தாய்க்கும் ராஜத்துக்குமான மோதல் தந்தை அறிமுகப்படுத்திய வன்முறையின் எச்சம் என்று கூறலாம்.

கதையின் பெரும்பகுதி ‘மூன்றாம் நபர் வரையறுக்கப்பட்ட பார்வையில்’ (third-person limited narration) சொல்லப்படுகிறது. அதாவது, வாசகர்கள் ராஜத்தின் உலகத்தை மட்டும் அவன் எண்ணங்கள், நினைவுகள், உணர்வுகள் மூலமாகப் பார்க்கிறார்கள். இதன் காரணமாக, தாய் பெரும்பாலும் கொடியவளாகவும், நியாயமற்றவளாகவும் தோன்றுகிறாள். ராஜத்தின் கோபம், வெறுப்பு முதலான உணர்ச்சிகள் வழியாகவே நாமும் அவளை உணர்கிறோம். ஆனால், கதையின் இறுதியில், ராஜத்தின் மரணத்திற்குப் பிறகு, கதை சொல்லும் முறை ‘யாவும் அறிந்த கதைசொல்லி’ (omniscient perspective) முறைக்கு மாறுகிறது. அப்போதுதான் முதல்முறையாக தாயின் ஆழ்ந்த துயரத்தை நாம் உணர்கிறோம். இந்த மாற்றம் நமது புரிதலை மாற்றியமைக்கிறது. கதை சொல்லும் முறையில் ஏற்படும் இம்மாற்றமானது, வாசகர்கள் அவளை ராஜத்தின் வெறுப்பின் வழியாக மட்டும் மதிப்பிடுவதைத் தடுத்து, இரு தரப்பிலும் உள்ள அவலங்களைப் புரிந்துகொள்ளத் தூண்டுகிறது.

தாயின் கொடுமையான நடத்தையை இயல்பான குணமாகக் கருதாது, மதுபோதைக்கு அடிமையான கணவன் அவள் உடலிலும் உள்ளத்திலும் நிகழ்த்திய தொடர்ச்சியான உடல் மற்றும் சொல்ரீதியான வன்முறைகளின் விளைவால் உருவான மனநிலையாகவே கொள்ள வேண்டும். ராஜம் தாயை இயல்பாகவே கொடுமையானவளாக நினைக்கவில்லை. ‘அப்பாவால்தான் அம்மா கெட்டுப் போயிருக்க வேண்டும்…’ என்கிற அவனது எண்ணமே இதற்குச் சாட்சி.

‘அப்பாவால்தான் அம்மா கெட்டுப் போயிருக்க வேண்டும். ஆரம்பத்தில் அவள் அப்பாவை எதிர்த்துப் பேசுவதில்லை. அடிதாங்க முடியாமல் எதிர்த்து வாயாடத் தொடங்கினாள். உடம்பிலே தெம்பு குறைந்ததும் பதிலுக்கு அடிக்கவும், கடிக்கவும் ஆரம்பித்தாள். அம்மாவுக்கு சோழிப்பல். உதடுகளைக் காவல் காப்பது போல் வெளியே நிற்கும். அப்படி குடி போதையில் அவளை அடிக்கும்போது, கையோ, காலோ, வாயோ, வயிறோ, பல்லில் சிக்கிய இடத்தைக் கடித்துக் குதறி விடுவாள்.’

இங்கு அவளின் சோழிப்பல் கணவனின் வன்முறையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தற்காப்பு ஆயுதமாக இருக்கிறது. மேற்படி வர்ணனை மூலம், தந்தையின் வன்முறையே தாயின் குணமாற்றத்திற்கு (transformation) நேரடிக் காரணம் என்பது தெரியவருகிறது.

அவள் கணவனிடம் எதிர்கொண்ட வன்முறை உடல்ரீதியானது மட்டுமல்ல. ‘அதிர்ஷ்டம்’ நிறைந்த ஒரு குழந்தை பிறந்தால் செல்வம் பெருகும் என்ற மூடநம்பிக்கையினால் அவளது கணவன் அவளைப் பத்து முறை தாயாக்கியிருக்கிறான். இது ‘கட்டாயத் தாய்மை’ (reproductive coercion) ஆகும். ஒவ்வொரு குழந்தைப் பேறும் அவளின் உடம்பிலே வலுவையும் தெம்பையும் குறைத்தன. அந்த நேரத்திற்றான் அவள் கணவனின் அடியைத் தாங்க முடியாமல் அடிக்கவும் கடிக்கவும் ஆரம்பிக்கிறாள். மேலும், ஒரு குழந்தை ஆணாகவோ பெண்ணாகவோ பிறப்பதற்குத் தாய் பொறுப்பல்ல என்றாலும், ‘போயும் போயும் பெண்ணா பெத்தே?’ என்று கணவனால் இறுதியாகப் பெண் குழந்தை பெற்ற சமயத்தில் இழிவுபடுத்தப்படுகிறாள். இவையனைத்தும் பெண்களைத் தரம் தாழ்ந்தவர்களாகவும், ஆண் குழந்தைகளைப் பெறுவதற்கான கருவியாகவும் மட்டுமே பார்க்கும் ஆணாதிக்கச் சிந்தனையை வெளிப்படுத்துகின்றன. இத்தகைய சமூகக் கட்டமைப்பிலே, தாய் இயல்பிலே கொடுமையானவள் அல்லள் எனினும், வன்முறையால் பாதிக்கப்பட்டுத் தப்பிப்பிழைத்த (survivor), மனவடு சுமந்த பெண்ணாகவே காட்சி அளிக்கிறாள்.

கணவனை இழந்த பின்னர், பிள்ளைகள் தன்னைப் பராமரிக்க வேண்டும் என்கிற அந்தத் தாயின் பிடிவாதம், குடும்ப வன்முறையினால் ஏற்பட்ட பொருளாதாரம் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளின் பின்னணியில் வைத்துப் பார்க்கப்பட வேண்டும். உடல் மற்றும் சொல் ரீதியான வன்முறைக்குத் தொடர்ச்சியாக ஆளாக்கப்பட்ட தாய், கணவன் இருக்கும் காலத்திலே பிள்ளை பெறும் எந்திரமாக இருந்தவள். குழந்தை வளர்ப்பும் சமையலுமே அவள் தொழில்களாகிப் போனவை. குடும்பத் தொழிலில் ஈடுபடவோ குடும்ப வருமானத்தைப் பெருக்கவோ அவளுக்கு வாய்ப்புகளோ நேரமோ இருந்திருக்க முடியாது. இத்தகைய சூழலில், கணவனை இழந்தபோது, கைம்பெண் நிலை அவளுக்கு விடுதலையைத் தரவில்லை. மாறாகக் கடுமையான பாதுகாப்பற்ற உணர்வையே அவளுக்குக் கொடுத்திருக்கிறது. நீண்டகாலமாக அனுபவித்த வன்முறயானது, பாதிக்கப்பட்டவர்களிடம், ‘மீண்டும் பலவீனமாகிவிடுவோமோ’ எனும் அச்சத்தை உருவாக்குகிறது. எனவே, தாய் நிதிக் கட்டுப்பாட்டைத் தன்வசம் வைத்திருப்பதும், தன் பிள்ளைகள் தன்னை ஆதரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும், பல ஆண்டுகால உடல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைக்குப் பிறகு, தன்னை உறுதிப்படுத்தும் முயற்சியாகப் புரிந்துகொள்ளலாம். ஆனால், ராஜம் இவற்றையெல்லாம் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை.

தந்தையின் நேரடி வன்முறைக்கு ராஜம் ஆளானதாகக் குறிப்புகள் இல்லாவிட்டாலும், அவன் அந்த வன்முறைகளின் தொடர்ச்சியான சாட்சியாக வளர்ந்தவன். Witness Trauma என அழைக்கப்படும் இந்நிலை, வன்முறையைத் தடுக்கவோ அதிலிருந்து விலகவோ இயலாத நிலையில் அதனை மீண்டும் மீண்டும் கண்டு அனுபவித்ததனால் உருவாகும் மனச்சிதைவைக் குறிக்கிறது. இவ்வாறு காயமடைந்த மனப்பார்வையே தாயைக் ‘குரூரமானவள்’ எனக் கட்டமைக்கிறது என்பது கவனத்திற்குரியது. மேலும், மதுப்பழக்கமும், பொறுப்பற்ற தன்மையும் கொண்ட தந்தையிடமிருந்து, குடிப்பழக்கமற்றவனாயும், குடும்பச் சுமையைப் பொறுப்புடன் தாங்குபவனாகவும் தன்னை வேறுபடுத்திக் கொண்ட ராஜத்திற்கு வன்முறை தந்த தீர்க்கப்படாத மனக்காயம் வெறிநாய்க் கனவாக’ வெளிப்படுகிறது. கனவில் அந்த வெறிநாய் மூச்சுத்திணற ஓடும் அவனைத் துரத்தி, அவன் மேல் பாய்ந்து வலக்கால் கெண்டைச் சதையைக் கடித்துப் பிடித்துக்கொள்கிறது. ‘வெறி நாய் கடித்தால் மனிதனுக்குப் பைத்தியம் பிடிக்கும் என்கிறார்கள். கனவில் நாய் கடித்தாலும் பைத்தியம் பிடிக்குமா?’ என்று ராஜம் குழம்புகிறான். மீண்டும் மீண்டும் வரும் அந்த ‘வெறிநாய்க் கனவிற்குத் தந்தையைப் போன்றே வன்முறையாளனாக மாறிவிடுவோமோ என்ற அவனது உள்ளார்ந்த பேரச்சமே அடித்தளமாகிறது.

தன் தாயின் மீது ராஜம் கொள்ளும் கோபம், உண்மையில் அவனது தந்தை நிகழ்த்திய வன்முறைக்கு எதிராக வெளிப்படுத்தப்பட வேண்டியது. ஆனால் இதை இடம் மாறிய ஒரு எதிர்வினை (displaced response) என்று கூறலாம். தந்தையே தாயினதும், ராஜத்தினதும் மனவடுக்களுக்கு (trauma) முதன்மைக் காரணமாக இருந்தவர். இருப்பினும், அவரது மரணம் அவரை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் வாய்ப்பை ராஜத்திடமிருந்து பறித்துவிட்டது. தன் ஆத்திரத்திற்குரிய தந்தை இல்லாத நிலையில், ராஜம் தன் கோபத்தைத் தாயின் பக்கம் திருப்புகிறான். ஏனெனில், அந்தத் தாய் இப்போது குடும்பத்தின் அதிகாரம் மற்றும் நிதிக் கட்டுப்பாட்டைக் கையில் வைத்திருப்பவராக இருக்கிறாள்.

ராஜத்தின் இடம் மாறிய எதிர்வினை (displaced response) என்பதைச் சூசகமாகக் காட்டுவது போன்று சேவல் பற்றிய குறியீடு கதையின் தொடக்கத்தில் வருகிறது. தன்னைக் காலை 4.30 மணிக்கெல்லாம் கூவித் துயில் எழுப்பும் அடுத்த வீட்டுச் சேவல் பற்றி வேடிக்கையாக நினைத்துச் சிரிக்கிறான் ராஜம். ஆனால், சேவல் கூவி இரண்டு நிமிடங்களும் ஆகவில்லை. தாயினால் தினமும் ஏற்படும் சண்டை சச்சரவு நினைவுக்கு வந்தவுடன், ‘சுவரேறி குதிச்சு சேவல் கழுத்தைத் திருகி, குழம்பு வச்சி தின்னுடப் போறேன். அதெப்படி கரெக்டா நாலரை மணிக்குக் கூப்பாடு போடுது! காலை நேரத்திலே ஐயோய்யோ என்று கத்தறாப் போலே சகிக்க முடியல்லே!’ என்று சொல்கிறான். தாயிடம் வெளிப்படையாகக் காண்பிக்க முடியாத ஆத்திரத்தை அவன் சேவலிடம் காட்டுகிறான். இந்த வேகமான மனநிலை மாற்றம், ஏற்கனவே கசப்பான உணர்வுகளால் நிரம்பிய அவனின் தளும்பிக் கொண்டிருக்கும் உணர்ச்சித் தளத்தையே சுட்டுகிறது.

மேலும், தாயுடன் வாதம் புரியும்போது ராஜத்தின் மனம் இரண்டு இடங்களில் தாயைத் தாக்குவது போலக் கற்பனை செய்கிறது. இந்தச் சிறு கற்பனைகள் அவனுக்கு ஒரு திருப்தியையும் அதிகார உணர்வையும் கொடுக்கின்றன. ஆனால், இவை தந்தையின் அதே வன்முறைச் செயற்பாட்டின் பிரதிபலிப்பாகவே அமைகின்றன.

‘அம்மாவை பிடித்து இழுத்து, தலை முடியை உலுக்கி கன்னங்களில் மாறி மாறி அறைந்து, முகத்திலும் முதுகிலும் குத்தி, ‘விட்டுட்றா, விட்டுட்றா, இனிமே நான் உன் வழிக்கு வரல்லே; நீ பங்கஜத்தைக் கட்டிண்டு சுகமாயிரு. என்னை விட்டுடு’ என்று கதறக் கதற உதைத்துச் சக்கையாக மூலையில் எறிந்து விடலாமா என்ற ஒரு கேள்வி காட்சியாகக் கண்களுக்கு முன்னால் வந்தபோது அவன் மனசுக்கு சௌகரியமாயிருந்தது. ‘அப்பா அடிப்பாரே, அந்த மாதிரி, அப்பாவைக் கடிக்கப் பாய்வாளே, அப்படிக் கடிக்க வருவாளோ? வரட்டுமே; என்னிடம் பலிக்காது; பல்லைத் தட்டிக் கையில் தருவேன்’ என்று மனத்துக்குள் கறுவிக் கொண்டான்.

இது ‘தலைமுறை கடந்த வன்முறைப் பரிமாற்றத்தைக்’ (intergenerational transmission of violence) காட்டுகிறது. ராஜம் தன் தந்தையின் வன்முறையை வெறுத்தாலும், அவனை அறியாமலேயே தன் கற்பனையில் அதே வன்முறையைப் பின்பற்றுகிறான்.

அத்துடன், ராஜம் அதிகாலையில் தெருவில் போகும்போது தன்னை அமைதியாகப் பின்தொடரும் தெருநாயைத் திரும்பிப் பார்த்துக் குரைத்து அதைத் துரத்தும்போது, அந்நாய் அவனது தாய்க்குப் பதிலீடாக (substitution) மாறுகிறது. ஒருவேளை தாயையும் இதேபோன்று எதிர்கொண்டால் அவளும், அந்த நாயைப் போன்றே இப்படித்தான் பின்வாங்கி ஓடுவாள் என்று அவன் கற்பனை செய்கிறான். ராஜத்தின் இச்செயல் அவனது அடக்கப்பட்ட கோபத்தையும் (repressed anger), தற்போதைய குடும்ப அதிகாரப் படிநிலையை (hierarchy) மாற்றத் துடிக்கும் அவனது விருப்பையும் காட்டுகிறது. அதிகாரம் என்பது வலுக்கட்டாயமாகச் செயற்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்ற நம்பிக்கையை ராஜம் தனது வன்முறைசார் குடும்ப அனுபவங்கள் மூலமாகத் தன்னுள் ஆழமாகப் பதித்துக் கொண்டிருக்கிறான். எனவே, அவனது ‘அதிகார வேட்கை’ என்பது அவனது மனவடுக்களிலிருந்து (trauma) பிரிக்க முடியாத ஒன்று.

ஒருவரின் உள்வாங்கப்பட்ட வன்முறையானது, வெளிப்படுத்தப்பட முடியாதபோது, அது பெரும்பாலும் அவருக்கு எதிராகவே திரும்பும். இந்த வகையில், கதையின் இறுதியில் வரும் ராஜத்தின் தற்கொலை என்பது திசைமாற்றப்பட்ட வன்முறையின் ஒரு வடிவம். இது தாய்க்கு எதிராக அவன் நிகழ்த்திய இறுதிப் பதிலடி நடவடிக்கை (retaliation). அத்துடன், இது தலைமுறை தலைமுறையாகத் தொடரும் மனவடுக்களின் (intergenerational trauma) உச்சநிலையாகும்.

இக்கதையின் ‘பைத்தியக்காரப் பிள்ளை’ என்ற தலைப்பு ஆழமான முரண்பாடு (ironic) நிறைந்தது. ராஜம் ‘பைத்தியக்காரப் பிள்ளை’ என்று அவன் மணக்கவிருக்கும் பெண்ணாலேயே முத்திரை குத்தப்படுகிறான். பொதுவாக, ஒருவரது மனச் சிதைவுக்குக் காரணமான சமூக, குடும்ப, பண்பாட்டுச் சூழல்களை உணர்ந்து கொள்ளாமல், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை சமூகம் எவ்வாறு ‘பைத்தியக்காரன்’ என வகைப்படுத்துகிறது என்பதை இத்தலைப்பு நினைவுபடுத்துகிறது.

நிறைவாக, ஆணாதிக்க வன்முறை என்பது அந்த வன்முறையைச் செய்த ஆண் இறந்தவுடன் முடிந்துவிடுவதில்லை என்பதை எம்.வி. வெங்கட்ராமின் கதை உணர்த்துகிறது. அதன் பாதிப்பு குடும்ப உறுப்பினர்களில் தொடர்ந்து நீடிக்கிறது. அனுபவிக்கப்பட்ட வன்முறை மீண்டும் குடும்பத்திற்குள் புதிய வடிவங்களில் தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறது. ஒரு காலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட தாய், கணவனை இழந்த பெண்ணாகச் சமூகத்தில் பிழைத்திருப்பதற்கான போராட்டத்தில் கடின சித்தமும், மனதைப் புண்படுத்தும் பேச்சுமுள்ளவளாக மாறுகிறாள். பொறுப்பான மகனாக இருக்கும் ராஜம், வன்முறையைத் தன்னுள் உள்வாங்கியவனாக, தீர்க்கப்படாத மனவடுக்களால் (unresolved trauma) தாய் மீது வெறுப்பு நிறைந்தவனாக மாறி, தன்னை அழித்து அவளைத் தண்டிக்கிறான். தாயும் மகனும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் என்றாலும், ஒருவரை ஒருவர் எதிரிகளாகப் பார்ப்பதே இதிலுள்ள மிகப்பெரிய அவலம். மனவடுக்களை அடையாளம் கண்டு புரிந்து கொள்ளாதவரை, அவை உறவுகளைச் சிதைத்து, நாம் எதிலிருந்து தப்பித்துக் கொள்ள எண்ணுகிறோமோ, அதே வன்முறைப் பாதையில் நம்மைத் தள்ளும் என்று இக்கதை எச்சரிக்கிறது.

இக்கதையை அழியாச்சுடர்கள் தளத்தில் வாசிக்கலாம்: https://azhiyasudargal.blogspot.com/2010/10/blog-post_3000.html

நன்றி