Thaiveedu
Latest Articles
ஆளுமை

கம்பனின் கருவூலம் திறந்து... பகுதி 47

மாவிலி மைந்தன் சி. சண்முகராஜா
மாவிலி மைந்தன் சி. சண்முகராஜா
March - March 10, 2026

கம்பனின் கருவூலம் திறந்து...

பகுதி 47

- மாவிலி மைந்தன் சி. சண்முகராஜா

சென்ற மாதத் தாய்வீடு இதழில் கம்பராமாயணம், ஆரணிய காண்டத்தின் 7-ஆவது படலமாகிய மாரீசன் வதைப்படலத்தில் தண்டகாரணியத்திலிருந்து புறப்பட்ட சூர்ப்பணகை இராவணனின் அரண்மனையின் வாசலை வந்தடைந்ததைத் தொடர்ந்து அங்கே நிகழ்வனவற்றைக் கம்பரின் கவிநயம் சொட்டும் செய்யுள்களோடு சுவைத்து மகிழ்ந்தோம். அங்கே வந்த சூர்ப்பணகை தனக்கு நடந்தனவற்றை இராவணனிடம் கூறக் கொதித்தெழுந்த இராவணன், ‘உனக்கு அவர்கள் இவ்வாறு தீங்கிழைக்க அவர்களுக்கு நீ செய்த குற்றம் என்ன?’ என்று கேட்டதற்குச் சூர்ப்பணகையின் விடை இவ்வாறு வருகிறது.

என்வயின் உற்றகுற்றம் யாவர்க்கும் எழுதொணாத

தன்மையன் இராமனோடும் தாமரைதவிரப் போந்தாள்

மின்வயின் மருங்குல் கொண்டாள் வேய்வயின் மென்தோள் கொண்டாள்

பொன்வயின் மேனிகொண்டாள் பொருட்டினாற் புகுந்ததென்றாள்

கம்ப. ஆரணிய. 626

என்வயின் உற்றகுற்றம் - என்மீது உள்ள குற்றம் என்னவென்றால், தாமரை தவிர - தனக்கு இருப்பிடமான செந்தாமரை மலரைவிட்டு, யாவர்க்கும் எழுத ஒண்ணாத தன்மையன் இராமனோடும் போந்தாள் - எத்துணை வல்லவராலும் ஓவியமாகக்கூட வரைய முடியாத வடிவழகுகொண்டவனான இராமனுடனே வந்தவளும், மின்வயின் மருங்குல் கொண்டாள் - மின்னல் போன்ற இடையைப் பெற்றவளும், வேய்வயின் மென்தோள் கொண்டாள் - மூங்கிலைப் போன்ற மெல்லிய தோள்களை உடையவளும் - பொன்வயின் மேனிகொண்டாள் பொருட்டினாற் புகுந்தது என்றாள் - பொன்னைப் போன்ற நிறத்தையுடைய உடலழகைப் பெற்றவளுமான ஒரு பெண்ணினால் நிகழ்ந்தது என்றாள்.

‘அந்த இராமனுடன் ஒரு கட்டழகி வந்துள்ளாள். அவளை உனக்காக்கி உனக்கு நன்மை செய்யவேண்டும் என்று நான் கருதியது தான் நான் செய்த குற்றம்’ என்கிறாள் சூர்ப்பணகை. அந்தப்பெண் அவளது இருப்பிடமான தாமரையை விட்டு வந்தவள் என்பதால் அது அவளைத் திருமகள் என்று குறிப்பால் உணர்த்துவதாக இருக்கிறது. சீதையின் இடையையும், தோளையும், உடலையும் உவமை நயத்துடன் கம்பர் வருணித்திருப்பது சிறப்பு. சீதை மின்னலிடம் இடையையும், மூங்கிலிடம் தோள்களையும், பொன்னிடம் உடலையும் பெற்றுக்கொண்டாள் என்று வருணிப்பதாகவும் சில உரையாசிரியர்கள் பொருள் கொள்வர்.

இராவணன், ‘அவள் யார்?’ என விசாரிக்க, சூர்ப்ணகை இராவணனிடம் சீதையின் மீது காம இச்சையை ஏற்படுத்துவதற்காக அவளின் உடல் உறுப்புகளை வருணித்து விவரிப்பதாக மேலும் 14 செய்யுள்களிலே கம்பரின் வருணனை வருகிறது. அத்தனை செய்யுள்களிலும் வருவதுபோல் சீதையின் அழகைச் சூர்ப்பணகை சொல்லியிருப்பாளோ தெரியாது. ஆனால் சூர்ப்பணகை வாயிலாகக் கம்பரே தனது கற்பனையில் சீதையின் அழகில் மூழ்குவது மட்டும் தெரிகிறது.

மஞ்சொக்குமளகவோதிமழையொக்கும் வடித்த கூந்தல்

பஞ்சொக்குமடிகள் செய்யபவளத்தின் விரல்க ளைய

அஞ்சொற்களமுதினள்ளிக் கொண்டவள் வதனமைதீர்

கஞ்சத்தினளவிற் றேனும் கடலினும் பெரியகண்கள்

கம்ப. ஆரணிய. 629

மஞ்சொக்கும் அளகவோதி - அள்ளி முடிக்கப்பட்ட கூந்தல் மேகத்தை ஒத்ததாகும், மழையொக்கும் வடித்த கூந்தல் - வார்ந்து தாழவிடப்பட்ட கூந்தல் கீழிறங்கிய மழை மேகத்தை ஒக்கும், பஞ்சொக்கும் அடிகள் - அவளது காலடிகள் செம்பஞ்சுக் குழம்பை ஒத்திருக்கும், செய்ய பவளத்தின் விரல்கள் - அவளது விரல்கள் சிவந்த பவளத்தின் நிறத்தை ஒத்திருக்கும், ஐய அஞ்சொற்கள் அமுதின் அள்ளிக் கொண்டவள் - அழகிய சொற்களை அமுதத்திலிருந்து அள்ளிக்கொண்டவள், வதனம்மைதீர்கஞ்சத்தின் அளவிற்று ஏனும் - அவளுடைய முகம் குற்றமற்ற தாமரை மலரின் அளவை உடையதாயிருந்தாலும், கடலினும் பெரிய கண்கள் - அவளுடைய கண்களோ கடலைவிடப் பெரியதாகும் என்று சீதையின் அழகைச் சூர்ப்பணகை வருணிக்கின்றாள்.

இச்செய்யுளில் உவமை அணிநயம் மிகுந்து காணப்படுகின்றது. சீதையின் கூந்தலுக்கும், காலடிகளுக்கும், விரல்களுக்கும், முகத்துக்கும் ஒவ்வொன்றாக உவமை கூறிய கம்பர், அவளுடைய கண்கள் கடலிலும் பெரிது என்று உயர்வுநவிற்சி அணியில் வைத்துப் பாடியுள்ளார். கண்கள் சிறிதாயினும் அவளுடைய பார்வையின் வியாபகத்தைச் சொல்வதற்காகக் கடலினும் பெரியகண்கள் என்றார். சீதையின் அழகைப் பலவாறு வருணித்துச் சொல்லிவருகின்ற சூர்ப்பணகை, சீதை இராவணனுக்குக் கிடைத்தேவிட்டாள் என்பதுபோல அவனுக்குப் பொய்யான நம்பிக்கையை ஊட்டுகிறாள்.

இந்திரன் சசியைப் பெற்றானிருமூன்றுவதனத் தோன்றன்

தந்தையுமுமையைப் பெற்றான் றாமரைச் செங்கணானும்

செந்திருமகளைப் பெற்றான் சீதையைப் பெற்றாய் நீயும்

அந்தரம் பார்க்கினன்மைஅவர்க்கில்லையுனக்கேயையா

கம்ப. ஆரணிய. 634

ஐயா - ஐயனே, இந்திரன் சசியைப் பெற்றான் - தேவர்களின் அரசனாகிய இந்திரன் இந்திராணியாகிய சசி என்பவளைத் தனக்குரியவளாகக் கொண்டான், இருமூன்றுவதனத்தோன் தன் தந்தையும் உமையைப் பெற்றான் - ஆறு முகங்களையுடைய முருகனின் தந்தையாகிய சிவனும் உமாதேவியைத் தனக்குரியவளாக அடைந்தான், தாமரைச் செங்கண்ணானும் செந்திருமகளைப் பெற்றான் - செந்தாமரைமலர்போலும் சிவந்த கண்களையுடைய திருமாலும் அழகுள்ள திருமகளைத் தனக்கு உரியவளாக அடைந்தான், சீதையைப் பெற்றாய் நீயும் - அவ்வாறே நீயும் சீதையை உனக்குரியவளாகப் பெற்றுக்கொண்டாய், அந்தரம் பார்க்கின் நன்மைஅவர்க்கில்லை உனக்கே - அழகான உயர்வு யாருக்கென்று ஆராய்ந்து பார்த்தால் சீதையை விடவும் அழகிற் குறைந்த பெண்களைத் தமக்குரியவர்களாக்கிக் கொண்ட அவர்களுக்கெல்லம் இல்லாத சிறப்பும், நன்மையும் உனக்குத்தான் இருக்கிறதென்று இராவணனுக்குப் பெருநம்பிக்கையை ஊட்டுகிறாள்.

மூவுலகங்களிலும் பெறுதற்கு அரியவளான சீதையை அவன் பெற்றதால் உயர்வும், நன்மையும் அவனுக்குரியதே என்று கூறுவதால் அவன் சீதையை அடைவது திண்ணம் என்பதாகச் சூர்ப்பணகையின் கூற்று அமைந்திருக்கிறது. சீதையை அடைவதால் நன்மை அவனுக்கே என்னும் கூற்றால் அவனுக்குப் பின்னாளில் விளையப்போகும் தீமையை இங்கே குறியீடாகக் கம்பர் காட்டியிருக்கின்றார் என்றும் கொள்ளலாம். சூர்ப்பணகையின் உள்ளக் கிடக்கையைக் கம்பர் மேலும் சில செய்யுள்களில் வெளிப்படுத்துகின்றார். ‘உனக்காக நான் சீதையைக் கவர்ந்துகொள்ளப் போனபோது இராமனின் தம்பி இடையிலே புகுந்து எனது உறுப்புகளை வாளால் அரிந்து அவமானப்படுத்திவிட்டான். உனது வலிமையால் நீ சீதையையும் இராமனையும் கைவசப்படுத்திச் சீதையை உனக்கு உரியவளாக்கிக்கொண்டு இராமனை எனக்கு உரியவனாக்கு.’ என இராவணனிடம் அவள் வேண்டுகின்றாள். சூர்ப்பணகையின் உறுப்புகள் அறுபட்ட செய்தியைக் கேட்டவுடன் இராவணனுக்கு ஏற்பட்ட சீற்றம் மனக்கொதிப்பு எல்லாமே, சீதையைப் பற்றிச் சூர்ப்பணகை சொல்லியனவற்றை எல்லாம் கேட்டமாத்திரத்திலேயே ஒழிந்துபோய்க் காமநோய் அவனை மொத்தமாகப் பற்றிக்கொண்டது. அதனைக் கம்பர் சில செய்யுள்களில் கூறுகின்றார்.

கரனையுமறந்தான் றங்கை மூக்கினைக் கடிந்துநின்றான்

உரனையுமறந்தானுற்றபழியையுமறந்தான் வெற்றி

அரனையுங் கொண்டகாமனம்பினான் முன்புபெற்ற

வரனையுமறந்தான் கேட்டமங்கையைமறந்திலாதான்

கம்ப. ஆரணிய. 642

கேட்ட மங்கையை மறந்திலாதான் - சூர்ப்பணகை சொல்லக் கேட்டுணர்ந்த சீதை என்கின்ற பெண்ணை மறக்கமுடியாதவனான இராவணன், கரனையும் மறந்தான் - சிறந்த வீரனாகிய தன் தம்பி கரன் இராமனால் இறந்துவிட்டதையும் மறந்துபோனான், தங்கை மூக்கினைக் கடிந்துநின்றான் உரனையும் மறந்தான் - தன் தங்கையின் மூக்கை அறுத்துவிட்ட வீரனினது வலிமையையும் மறந்துவிட்டான், உற்றபழியையும் மறந்தான் - அதனால் தனக்கு உற்ற பெரும்பழியையும் மறந்துபோனான், அரனையும் வெற்றிகொண்ட காமன் அம்பினால் - சிவபெருமானையும் வெற்றிகொண்ட மன்மதனது அம்பு தாக்கியதால், முன்புபெற்ற வரனையும் மறந்தான் - தான் முன்னாளில் பெற்ற வரத்தையும் மறந்து போனான். காமம் மேலிட்டதால் சீதை என்கின்ற ஒன்றைத் தவிர மற்றவை அனைத்தையும் அவன் மறந்தொழிந்தான். அவன் கண்களால்கூடச் சீதையைப் பார்த்தவனில்லை. சூர்ப்பணகை சொல்லக் கேட்டே சீதையின் மீது ஏற்பட்ட காதலால் தனது மானம், வீரம், புகழ் அனைத்தையும் மறந்தவன், அவளை மறக்க முடியாது தவித்தான் என்பதை, ‘கேட்ட மங்கையை மறந்திலாதான்’ என்னும் அழகிய சொற்றொடரால் கம்பர் கூறுவது சிறப்பு.

பொன்வயமானநங்கைமனம்புகப் புன்மைபூண்ட

தன்மையோவரக்கன் றன்னையயத்ததோர் தகைமையாலோ

மன்மதன் வாளி தூவிநலிவதோர் வலத்தனானான்

வன்மையைமாற்றுமாற்றல் காமத்தேவதிந்ததன்றே

கம்ப. ஆரணிய. 646

பொன்வயமானநங்கைமனம்புக - பொன்மயமானவள் போலுள்ள சீதை தனது மனத்திலே புகுந்ததனால், புன்மைபூண்டதன்மையோ - அவ்விராவணன் தான் சிறுமை அடைந்துவிட்டதனாலோ, அரக்கன் தன்னை அயத்ததோர் தகைமையாலோ - அல்லது அவன் தன்னைத்தான் மறந்ததொருதன்மையினாலோ, மன்மதன் வாளி தூவிநலிவதோர் வலத்தன் ஆனான் - மன்மதன் அவன்மீது அம்புகளை எய்து அவன் வருந்தி நலிவடையும் தன்மையன் ஆனான். வன்மையை மாற்றும் ஆற்றல் காமத்தேவதிந்ததன்றே - ஒருவனிடத்தில் உள்ள எல்லா வல்லமையையும் அழித்துவிடக்கூடிய ஆற்றல் காமத்துக்கு உரியதல்லவா?

பல்வகை வலிமைகளையும், ஆற்றல்களையும் மிகுதியாகப் பெற்ற இராவணனிடத்தே தேவர்களும் அஞ்சி ஒடுங்கிக் கிடக்கையில் அவன் நலிந்துபோவதற்கும், மன்மதன் அவன்மீது மலரம்புகளைச் செலுத்தி வருத்துவதற்கும் அவன் ஒரு பெண்ணைவிரும்பிய காரணத்தால் அவன் சிறுமைப்பட்டதனாலோ, அப்பெண்ணையே நினைத்திருந்ததனால் தன்னையே அவன் மறந்துவிட்டகாரணத்தினாலோ அவன் வலிமையெல்லாம் ஒடுங்கிப்போனான் என்னும் கவிக் கூற்று எத்துணை வலிமையையும் அழிக்கத்தக்க ஆற்றல் காமத்துக்கு இருக்கின்றது என்னும் கருத்தைப் புலப்படுத்துகின்றது. சீதையின் நினைவு அவனை வருத்தஅவன் அரச சபையைவிட்டுத் தனது மாளிகைக்குச் செல்கிறான். தன்னைப் பின் தொடர்ந்தவர்களையும் விலக்கிவிட்டுத் தனியே படுக்கையில் புரண்டவனுக்குச் சீதையின் உருவெளித்தோற்றம் வந்து வந்து அவனின் காமநோயை முற்றிப்போகவைத்தது. அதனைப் பல செய்யுள்களிலே கம்பர் வடித்திருக்கின்றார்.

பரங்கிடந்தமாதிரஞ்சுமந்தபாழியானையின்

கரங்கிடந்தகொம்பொடிந்திரங்கவென்றகாவலன்

மரங்குடைந்ததும்பிபோலநங்கன் வாளிவந்துவந்

துரங்குடைந்துநொந்துநொந்துளைதுளைந்தொதுங்கினான்

கம்ப. ஆரணிய. 652

பரம் கிடந்த - பிரபஞ்சத்தின் பாரம் தாங்கியவாறு, மாதிரம் சுமந்தபாழியானையின் - எட்டுத் திக்குகளையும் சுமந்த வலிமையுடைய யானைகளின், கரம் கிடந்தகொம்பொடித்து - துதிக்கைகளிலே பொருந்தியிருந்த கொம்புகளை முறித்து, இரங்கவென்றகாவலன் - அதனால் அந்த யானைகள் வருந்தும்படி வெற்றிகொண்ட அரசனாகிய இராவணன், மரம் குடைந்த தும்பிபோல - மரத்தைக் குடைகின்ற வண்டுகளைப்போல, அநங்கன் வாளிவந்துவந்து உரம் குடைந்து- மன்மத பாணங்கள் வந்து வந்து அவனது வலிய மார்பைத் துளைக்க, நொந்துநொந்து உளைந்து உளைந்து ஒதுங்கினான் - அதனால் மிகவும் வருந்தி ஒடுங்கினான்.

மிகப்பெரிய வலிமையுடைய திக்கு யானைகளின் வலிமையான தந்தங்களை எளிதாக முறித்த வல்லமை பொருந்திய இராவணன், மன்மதனின் மென்மையான மலரம்புகளுக்கு ஆற்றமுடியாமல் வண்டுகள் துளைத்து உக்கிப்போன மரம்போல மிகவும் வருந்தினான் என்கிறார் கம்பர். இங்கே மரத்தைத் துளைக்கும் வண்டுகளை மன்மத பாணத்துக்கும், மரத்தை இராவணனது மார்புக்கும் உவமையாகக் கம்பர் வைத்துள்ளார்.

அவன் தனது மாளிகையில் இருப்புக் கொள்ளாமல், ஒரு சோலைக்குச் சென்று அங்கே ஒரு மண்டபத்தில் உள்ள படுக்கையில் சேர்கின்றான். அவனைக் கண்டதும் சோலையில் உள்ள பறவைகள் யாவும் அஞ்சி ஒலியெழுப்பாமல் இருந்தனவாம். பனிக் காலமும் அவனுக்கு அஞ்சிவிலக வேனிற்காலம் வருகிறது. அதனாலும் அவனது வேட்கை தணியாததால் எல்லாப் பருவ காலங்களையும் மாறிமாறிக் கொண்டுவருக என்று பணியாளர்களுக்குக் கட்டளையிட அவர்கள் கொண்டுவந்த எந்தப் பருவங்களாலும் அவனது தாபத்தை ஒழிக்க இயலவில்லை. திங்களையும் கதிரவனையும் அழைத்துவருகிறார்கள். பகலையும், இருளையும் அழைத்துவருகிறார்கள். எதுவுமே அவனது தாபத்தைத் தீர்ப்பதாக இல்லை. அவற்றின் வருகையையும். அவனதுவேட்கை மேன்மேலும் கொழுந்துவிட்டு எரிவதையும் அழகிய பல செய்யுள்களிலே கம்பர் வருணிக்கின்றார். காம வேட்கைமேலிட இராவணன் சீதையை உருவெளித் தோற்றத்தில் காண்கிறான்.

புடைகொண்டெழுகொங்கையுமல்குலும் புல்கிநிற்கும்

இடைகண்டிலமல்லதெல்லாவுருவுந் தெரிந்தாம்

விடநுங்கியகண்ணுடையாரிவர் மெல்லமெல்ல

மடமங்கையராயென் மனத்தவராயினாரே

கம்ப. ஆரணிய. 703

புடைகொண்டு எழுகொங்கையும் அல்குலும் - பூரித்து வளர்ந்தெழுகின்ற மார்பையும், அல்குலையும், புல்கிநிற்கும் இடைகண்டிலம் அல்லது - தாங்கி நிற்கின்ற இடையென்னும் உறுப்பை நாம் காணவில்லையே அல்லாது, எல்லாஉருவுந் தெரிந்தாம் -மற்ற எல்லா உறுப்புகளையும் பார்த்தறிந்தோம், விடம் நுங்கிய கண்ணுடையார் இவர் - நஞ்சை உண்ட கண்களையுடையவரான இவர், மெல்லமெல்ல மடமங்கையராய் என் மனத்தவர் ஆயினாரே - மெல்ல மெல்ல என் மனத்திலுள்ளவரானார் என இராவணன் சீதையின் உருவெளித் தோற்றத்தை மனதில் காண்கின்றான்.

பருத்த மார்பையும், அல்குலையும் தாங்கி நிற்கின்ற இடை அதன் நுண்மையால் கண்ணுக்குப் புலனாகாமல் இருப்பதாகக் கூறுகின்றார். சூர்ப்பணகை சொன்ன அடையாளங்கள் ஒரு பெண்ணின் முழு வடிவமாகி அவள் தனது மனத்தில் ஊறிப்பதிந்துவிட்டாள் என்று இராவணன் கூறுவதாக ‘மெல்லமெல்ல மடமங்கையராய் என் மனத்தவராயினரே’ என்று உயர்வுப் பன்மையாகக் கம்பர் இச்சொற்றொடரை வைத்துள்ளார்.

‘இப்போது எனக்குத் தெரிகின்ற இந்தப் பெண்ணின் உருவத்தை ஏழு உலகங்களிலும் நான் காணவில்லையே. இந்த உருவம் என் தங்கை தெரிவித்த சீதையின் வடிவமே,’ எனக் கருதி ஏவலாளரை நோக்கிச் சூர்ப்பணகையை அழைத்துவரக் கட்டளை யிடுகிறான். அவளும் இராவணன் இருக்குமிடம் வர. ‘நான் காணும் உருவம் நீ சொன்ன சீதை என்பவள் தானா?’ எனக் கேட்கிறான்.

செந்தாமரைக் கண்ணொடும் செங்கனிவாயினோடுஞ்

சந்தார் தடந்தோளொடுந் தாழ்தடக் கைகளோடும்

அந்தாரகலத்தொடுமஞ்சனக் குன்றமென்ன

வந்தானிவனாகுமவ் வல்விலிராமனென்றாள்

கம்ப. ஆரணிய. 708

செந்தாமரைக் கண்ணொடும் - செந்தாமரை மலர்போலும் கண்களோடும், செங்கனிவாயினோடும் - சிவந்த கொவ்வைப்பழம் போன்ற வாயினோடும், சந்து ஆர் தடந்தோளொடும் - அழகு பொருந்திய பெரிய தோள்களுடனும், தாழ்தடக்கைகளோடும் -தாழ்ந்து தொங்குகின்ற பெரிய கைகளோடும் அம் தார் அகலத்தொடும் - அழகிய மாலை அணிந்த மார்பினோடும், அஞ்சனக் குன்றமென்ன வந்தான் - நீலநிற மலையைப்போல வந்தவன், இவனாகும் அவ்வல்வில்இராமன் என்றாள் - இவன் வலிமையானவில்லையுடைய அந்த இராமன் என்றாள் சூர்ப்பணகை.

இராவணன் கண்ணுக்கு அவ்வுருவம் சீதையாகத் தெரிய, சூர்ப்பணகையின் கண்ணிலே இராமனாகத் தெரிய ஏற்பட்ட குழப்பத்தில், ‘நமது காட்சி மாறுபடுவது ஏன்? அந்த மானுடர்களின் மாயையாக இருக்குமோ?’ என இராவணன் கேட்கிறான். அதற்கு அவள், தான் இராமனிடம் கொண்ட காதலை மறைத்து, ‘இது வெறும் உருவெளித் தோற்றமே. மூவுலகத்துக்கும் தலைவனாகிய நீ இவ்வாறு வருந்தவேண்டியதில்லை. நீ அங்கு சென்று சீதையைக் கவர்ந்துவா,’ என்று சொல்லிவிட்டு அவ்விடத்தைவிட்டு நீங்கிச் சென்றுவிட்டாள்.

பின்னர், இராவணன் என்ன செய்யப் போகின்றான், என்ன திருப்பங்கள் ஏற்படப் போகின்றன என்பவற்றை கம்பரின் கவிச்சுவையோடு அறிந்து அனுபவிக்க மாரீசன் வதைப்படலத்தின் மிகுதிப் பகுதியோடு அடுத்த இதழ்வரை காத்திருப்போம்.

(வளரும்...)

நன்றி

இன்னொரு உயிரை படைப்பதில் ஆர்வம் இல்லை என்று மறுக்கிறான். அந்த களேபரத்தில்  புதுமண த் தம்பதியர் காயமடைந்து மரணிக்க, பெரும் ஆவேசத்தில் தன்னை படைத்தவனையே தாக்குகிறான். படுகாயமடைந்த விக்டர் இப்போது கப்பலில் தஞ்சம் புகுந்திருக்கிறான்.

நடந்த சம்பவங்களை கேட்ட விக்டர் மனம் வருந்தி மான்ஸ்டரை மகனே என்று விளிக்கிறான் . அவனும் மனம் நெகிழ்ந்து இவனை தந்தை என்று அழைக்கிறான். கோபதாபங்கள் அடங்கி கப்பலை பனிப்பாறைகளிலிருந்து விடுவிக்க கப்பல் மிதந்து தன இருப்பிடம் நோக்கி மிதந்து செல்கிறது!

திரைப்படத்தை மெக்சிகன் இயக்குனர் கில்லர்மோ டெல் டோரோ இயக்கியிருக்கிறார். இவருடைய முந்தைய திரைப்படங்களின் பெயர் வரிசையை பார்த்தாலே இவரது திறன் தெரியும்.  எழுத்தாளர், ஓவியர், இயக்குனர் என்று பன் முகம் கொண்ட டோரோ கோதிக் பாணியில் இருண்மையான சித்திரங்களை படைப்பதில் ஆர்வம் கொண்டவர். இந்தத் திரைப்படத்தில் அவருடைய சட்டகங்கள், படத்தின் வண்ணம், உரையாடல்கள் அனைத்துமே அவருடைய அழகியல் ரசனையை பறைசாற்றும். ஒரு பயங்கரத் தன்மையுள்ள புதினத்தை, மிக அழகுற திரைப்படமாக்கியிருக்கிறார் டோரோ. மான்ஸ்டர்  பாத்திரம் இதற்கு முன் உள்ள திரைப்படங்களில் கொடூர முகமும், வடிவற்ற உடலும் கொண்டதாக இருந்தது. இதில் உளியால் செதுக்கப்பட்டது போல உடலும் முகமும் அமைந்திருக்கின்றன.  ஒளிப்பதிவு, இசை , நடிப்பு, அரங்க அமைப்பு, ஒப்பனை,  அனைத்துமே அற்புதம் என்றுதான் சொல்லவேண்டும். நடிகர்கள்  பெரும்பாலும் அறியாத முகங்களாக இருந்தாலும் பாலியல் நோயாளி ஹார்லாண்டராக வரும் கிறிஸ்டோப் வால்ட்ஸ் நமக்கெல்லாம் மிகவும் அறிமுகமானவர்.

குறைந்த அளவேயான திரையரங்களில் வெளியிடப்பட்ட இந்த திரைப்படம், நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி முதல் மூன்று நாட்களிலேயே 29.1 மில்லியன் பார்வையாளர்களை சென்று அடைந்திருக்கிறது என்பது பெரும் சாதனை. அந்த அளவுக்கு மக்களின் கவனத்தை கவர்ந்து இருக்கிறது!!!