Thaiveedu
Latest Articles
புத்தகம்

அண்ணையோடு ஓர் அளவளாவல்

பஞ்சகல்யாணி
பஞ்சகல்யாணி
March - March 10, 2026

அண்ணையோடு ஓர் அளவளாவல்

- பஞ்சகல்யாணி

பத்தொன்பது வயசில நான் ஊரவிட்டுப் போகேக்க ஊரில உள்ள எல்லாரும் எங்கட படலைக்க பயணம் அனுப்ப வந்திருந்திச்சினம். அது எண்பதுகளை அண்மித்த காலப்பகுதி.

‘கவனமடா தம்பி, பாசை தெரியாத ஊரில, என்ன பிரச்சனை எண்டாலும், பாதை தெரியாட்டாலும் பொலிசுட்ட கேள்’ எண்டு வெள்ளாந்தியாய்க் கதைத்தார் ஓர் அப்பு. ‘பொரியரிசி மா, உழுத்தம்மா கொம்மா செய்து தந்தவதானே?’ என்று துளைத்தார் ஓர் ஆச்சி.

எல்லாரும் வெளிநாட்டுக்கு ஒளிச்சுப் போறது. ஆனால் நான் அப்படிப் போகேல்ல. எனக்கு அது முடியாது. ஊரில எல்லாரையும் மதிச்சன், பாசம் வைச்சன்.

என்ர அப்பு அம்மாக்கு என்னோட சேர்த்துப் பத்துப் பிள்ளையள். அதில மூண்டு பெடியள். ஏழு பெட்டையள். எனக்கு முன்னால ஐஞ்சு பேர், அக்காமார். அந்தக் காலத்தில உந்தக் குடும்பக் கட்டுப்பாடு ஒண்டும் இல்லைப் போல. அப்பு ஒரு தோட்டக்காரன். குமருகளைக் கரை சேர்க்கோணும் என்று அவர் ஓயாத உழைப்பு. தோட்டத்தறை கொத்துறது, கத்தரி, மிளகாய், புகையிலை எனக் கண்டு வைக்கிறது, தண்ணி மாற்றிக் கட்டுறது, புல்லுப் புடுங்கிறது என்று எல்லாத்தையும் கூடுதலாகத் தானே செய்வார். அம்மா மத்தியானம் மூடுபெட்டியில சோறு கொண்டு போவா. நான் அப்பப்ப தேத்தண்ணி கொண்டு போவன்.

எனக்குச் சின்னனில படிச்சு வாத்தியாராய் வரோணுமெண்டு ஆசை. ஆனால், பள்ளிக்கூடத்தை விட்டிட்டுத் தோட்டத்தில கண்டு வச்சன்; தண்ணி பாய்ச்சினன்; துலா மிதிச்சன்; மரக்கறியளைச் சந்தைக்குச் சுமந்தன். சில நாட்களில இராக் காவலுக்கும் தோட்டத்தில படுத்தன். அப்ப பசளையாக மாட்டெரு, ஆட்டுப் பிழுக்கை, பனை ஓலை, பன்னை, காவிளாய் தான் பாவிக்கிறது. பின்னேரத்தில, மாடு கட்டிற இடங்களில தெருவழிய கிடக்கிற சாணங்களைக் கடகத்தில பொறுக்கிக் கொண்டந்து வீட்டில குவிப்பன். பனங்காணியழுக்கை கிடக்கிற பனங்கொட்டைகளைப் பொறுக்கிப் பாத்தி போடிற இடத்தில குவிப்பன்.

ஒருகாலத்தில சோறு குடுப்பித்தலோட முடிஞ்ச கலியாணம், பிறகு ஓலைப் பொருத்தம் பாத்து, ஸ்ரூடியோவில படமெடுத்துக் காட்டி, பொம்பிளையை வீட்டில நேர பார்த்து, சீதனம், டொனேசன் எல்லாம் கேட்டுத்தான் முற்றாகுது. நகைநட்டு, காணி, வீடு, காசு எண்டு ஒரு லிஸ்ற் இருக்கு.

‘ஏழு பெட்டைகளைக் கரை சேர்க்க இஞ்சை உழைச்சுக்காணுமோ? பெடியனை வெளியால அனுப்பு ‘எண்ட துணி விக்கிற ஆண்டியர் மாமான்ர ஆலோசனைப்படி அப்பு ‘ஏஜென்சி’ ஒராளைப் பிடிச்சு என்னை வெளிநாட்டுக்கு அனுப்பிட்டார். அம்மாக்குச் சொட்டும் விருப்பமில்லை.

பிரான்சில போய் ஊண் உறக்கமில்லாமல் உழைப்பு. ஒரு கட்டத்தில எனக்கு என்ன விருப்பம், என்ன விருப்பமில்லை எண்டே மறந்து போச்சு. மாசத்துக்கொருக்கால் வீட்டையிருந்து வரும் கடிதங்களைச் சேர்த்து வைச்சு வாசிக்கிறதுதான் மன ஆறுதல். அப்பு எங்களைக் கண்டிப்பாக வளர்த்தபடியால் குடி வெறி எண்டு நான் பழகேல்ல. நண்பர்களும் குறைவு. ஒரு மாதிரி ஒண்டொண்டா அக்காமாரைக் கரை சேர்த்தாச்சு. அத்தான்மார் இரண்டு பேரையும் தம்பியையும் வெளிநாட்டுக்கு எடுத்துவிட்டாச்சு.

இருபது வருசத்துக்குப் பிறகு, ‘ஒருக்கால் ஊருக்குப் போகலாம், அப்பு அம்மாவைப் பார்க்கலாம்’ என்ற நினைப்பு வந்தது. ஊர்ல ரெலிபோனும் வந்திட்டுது. வீட்டுக்குத் தகவல் சொல்லியாச்சு. எனக்கு இது வேணும் அது வேணும் எண்ட பெரிய list ஓட கடிதம் வந்தது. ‘வந்திட்டுத் திரும்பிப் போவாய்தானே?’ என்றும் தங்கச்சி கேட்டிருந்தாள். home science diploma படிச்சுக்கொண்டிருந்தாள்.

சொக்லேட், சாராயப் போத்தல், உடுப்பு எண்டு வேண்டி அடுக்கிக் கொண்டு வந்திறங்கினால் அனுப்ப வந்ததிலும் பார்க்கக் கூடச் சனம் என்னைப் பார்க்க வந்தது. குட்டி ராசா போல குந்தியிருந்து இராப்பகலாய் எல்லாரோடையும் கதை. என்ர வயசுக்காறங்களெல்லாம் கட்டி இரண்டு மூண்டு வளர்ந்த பிள்ளையளோட இருந்தாங்கள். எனக்கு கலியாண வயசு போட்டுது என்று அப்புவின் காதில விழுத்தினாங்கள்.

‘அதென்னண்டு? ரண்டு குமருகளிருக்கு’ எண்டு அம்மா சொன்னா.

‘அப்ப என்ன மொட்டை விழுந்து மலடுபத்தினாப் போலயோ கட்டிக்குடுக்கப் போறாய்’ எண்டு மாமா வந்தார். தன்ர மகளைச் செய்யேலுமோ எண்டு அப்புவிட்டைக் கேட்டார். அப்பு ‘அது அவன் விருப்பம்’ எண்டு என்பக்கம் சாட்டிவிட்டார். நானோ ‘ஐயோ மாமா! நாங்கள் மச்சாளவையோட சின்னனில இருந்து சகோதரமாப் பழகினாங்கள்’ எண்டு என்ர நியாயமான எதிர்ப்பைத் தெரிவிச்சன். அதோட போன மாமாதான்.

எப்படியோ நண்பர்களின் முயற்சியால ஒரு வேற்றூர்ப் பிள்ளையைச் சீதனம் வாங்காமல் வெறும் பெம்பிளையாய்க் கட்டி ஊரில விட்டிட்டுப் பிரான்சுக்குத் திரும்பிட்டன். ‘எங்களைக் கைவிட்டிடாதை’ எண்டு அம்மா சொன்னது காதில கேட்டுக் கொண்டிருந்தது. மீண்டும் உழைப்பு. ‘எப்ப மகளை எடுக்கப் போறிங்கள்?’ எண்டு மாமியார் கடிதம் போட்டிருந்தார். நான் பதில் எழுதவில்லை. தங்கச்சிக்குக் கனடா மாப்பிளை பார்த்து, அவள் கனடா போட்டாள். மற்றவள் ஊரில விரும்பி, எழுத்து முடிஞ்சுது. ஒரு மாதிரி மூண்டு வருசத்தில மனுசியைப் பிரான்சுக்கு எடுத்திட்டன்.

நாங்கள் இப்ப வெளிநாட்டுக்காரர். கனடாவில சொந்தக்காரர் ஒரு get together வைச்சினம். நானும் மனுசியோட கனடாக்குப் போனன். ‘என்னடா மொட்டையெல்லாம் விழுந்து ஆளே மாறிட்டாய், எத்தினை பிள்ளையள்?’ எண்டெல்லாம் சொந்தக்காரர் மாறி மாறி விசாரிச்சினம். தங்கச்சி நிண்டாள். நான் பார்த்துப் பார்த்து வாங்கின சீலையில அழகாக இருந்தாள். அந்தக் காலங்களில எனக்கெண்டு எது வாங்கவும் காசு மிஞ்சிறேல்ல. நானும் பெரிசாய் அதைப்பற்றி யோசிக்கிறேல்ல. தம்பி நிண்டான். பலபேருக்கு மத்தியில சிரிச்சுக் கதைச்சபடி நிண்டான். என்னையும் கண்டான். கனநேரத்துக்குப் பிறகு வந்தான். ‘பிரான்சோ கனடாவோ நல்லது?’ எண்டு கேட்டான், அதோடை ‘அண்ணை நீங்கள் எடுத்துவிட்டுத்தான் நான் கனடா வந்தனான் எண்டில்லை, நீங்கள் எடுக்காட்டிலும் வந்திருப்பன்’ எண்டு சிரிச்சான். பாவம் அவன் பள்ளிக்கூடம் போகேல்ல. தோட்டத்துக்கும் போகேல்ல.

‘அண்ணை, என்ர மனுசனோட சும்மா அலம்பாதைங்கோ’ எண்டு சொல்லிவைத்தாள் தங்கை.

நல்லவேளை அந்தநேரம் என்ர மனுசி ஆரோ தெரிஞ்சாக்களோட கதைக்கப் போட்டுது.

நன்றி