சிதைவுகளில் ஓர் எழுச்சி
- =ரஞ்சனி
பனி ஓயாமல் பொழிந்துதள்ளிக்கொண்டிருந்தது. Park Lane என்ற அந்தப் பாடசாலை வாசலிலிருந்த அழைப்பு மணியைக்கையுறைக்குள் இருந்த வலது சுட்டுவிரலால் பலமாக அழுத்திவிட்டுக் காத்திருந்தேன். கதவு திறப்பதற்காகக் காத்திருந்த அந்த ஓரிரு நிமிடங்களுக்குள் காற்று சுழன்றடித்து உடலைச் சில்லிடச் செய்தது. அது சிதறிவிட்ட பனித்துகள்களில் நெற்றி விறைத்துப்போனது.
பாடசாலை முடிந்தபின் நிகழும் தமிழ் வகுப்புகளுக்கு வரும் மாணவர்களை பாடசாலையின் முன்பகுதியில் இருந்த ஜிம்மில்தான் நாங்கள் சந்திப்போம். பின்னர் அங்கிருந்து எங்கள் எங்கள் வகுப்புகளுக்கு அவர்களைக் கூட்டிச்செல்வோம். அந்தப் பாடசாலையில் கற்பிக்கும் ஆறு தமிழ் ஆசிரியர்களில் என்னையும் சேர்ந்து மூவர் மட்டுமே அந்த நேரத்தில் சமுகமளித்திருந்தோம். பனிப்பொழிவினால் ஏற்பட்டிருந்த போக்குவரத்து நெருக்கடி மற்றவர்களின் தாமதத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம். மூன்றாம் மாடியின் கோடியிலிருக்கும் வகுப்புகளிலிருந்து என்னுடைய ஏழாம், எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஜிம்முக்கு வந்துசேரத் தாமதமாகும் என்பதால், வழமைபோல அங்கிருந்த வாங்கொன்றில் நான் அமர்ந்துகொண்டேன்.
அப்போது, பாலர் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் ஆசிரியையான விமலா, ‘இவன் இதிலையிருக்கட்டும். சும்மா, மற்றப்பிள்ளையளுக்கு அடிச்சுக்கொண்டிருக்கிறான். அடியெண்டால் அந்தமாரி, குடிகார ஆக்கள் அடிக்கிறமாரி விடாமல் அடிக்கிறான்!’ எனக்கூறியபடி, ஒரு சிறுவனைக் கொண்டுவந்து என்னருகே இருத்திவிட்டார். பின்னர், ‘ஒருத்தரையும் தொடுறேல்லை! பேசாமல் இதிலை இருக்கோணும், சரியோ!’ என அவனுக்குக் கொஞ்சம் காரசாரமாய்ச் சொல்லிப்போட்டு அகன்றார்.
அவனைப் பார்க்க எனக்கு ஏனோ பாவமாக இருந்தது. கோபத்தினதோ, வெறுப்பினதோ உச்சமான கடுகடுப்பு அவனின் முகத்தில் தெரியவில்லை, மாறாகக் கபடமற்ற குழந்தைத்தனமான முகம்தான் எனக்குத் தெரிந்தது. ஆங்கிலம்தான் அவனுக்குச் செளகரியமான மொழியாக இருக்குமென்ற நினைப்புடன் ஆங்கிலத்தில்நான் அவனுடன் பேச்சுக்கொடுத்தேன்.
‘மற்றவை உங்களுக்கு அடிசால், உங்களுக்கு எப்பிடியிருக்கும்? அது பிடிக்குமோ?’
அவன் தலையை வலமும் இடமுமாகப் பலமாக ஆட்டினான்.
‘அப்ப, உங்களுக்குப் பிடிக்காததை ஏன் நீங்க மற்றவைக்குச் செய்யிறீங்க? அடிச்சா நோகுமெல்லோ?’
‘அவை என்னைக் கெட்ட வார்த்தைகளிலை பேசினவை.’
‘ஓ, அது கூடாது. கேட்கக் கோபமாகத்தானிருந்திருக்கும். ஆனா, அதை நீங்க ரீச்சரிட்டைச் சொல்லியிருக்கலாம். அடிக்கிறது கூடாத விஷயம். எங்கையிருந்து இதைப் பழகினீங்க,’
அவன் ஏதோ சொன்னான். எனக்கது சரியாக விளங்கவில்லை. ‘திரும்பச் சொல்லுங்கோ’ என்றபடி அவன் மோவாயை என் வலக் கையால் மெதுவாகத் திருப்பி என் இடக் காதை அவன் வாய்க்கருகில் கொண்டுசென்றேன்.
‘அப்பா எனக்கடிக்கிறவர்... அம்மாவும்தான். அப்பா அம்மாக்கும் அடிக்கிறவர்.’
‘ஓ, அப்பான்ர பழக்கம் கூடாத பழக்கம். அவர் அப்பிடி உங்களை அடிக்கக்கூடாது. நீங்களும் ஒருத்தரையும் இனி அடிக்கக்கூடாது. மற்றவை ஏதாவது பிழையாய்ச் செய்தா அதை உங்கட ரீச்சருக்குச் சொல்லுங்கோ. அவையை நீங்க அடிக்கக்கூடாது. சரியோ? நீங்க எத்தினை பிள்ளையள்?
‘அஞ்சு.’
‘அஞ்சு? அஞ்சு பிள்ளையளா? நீங்களா கடைசி?’
‘இல்லை, தங்கைச்சி வீட்டிலையிருக்கிறா.’
‘ஓ, அப்ப நீங்களா மூத்தது?’
‘இல்லை, அது என்ரை அண்ணா.’
அண்ணா என அவன் சுட்டிக்காட்டியவனைக் கூப்பிட்டேன். அவன் மூன்றாம் வகுப்பு மாணவன்.
‘உங்கட தம்பி வீட்டிலும் ஆக்களுக்கு அடிக்கிறவரோ?’
‘சில நேரத்தில’
‘நீங்களும் அடிக்கிறனீங்களோ?’
அவன் எதுவும் சொல்லாமல் நின்றான்.
‘உங்களுக்கும் அப்பா அடிக்கிறவரோ?’
‘ஓம்... குழப்படி செய்தால் அம்மாவும் அடிப்பா.’
பேசிக்கொண்டிருந்தபோது என் மாணவர்களும் வந்துசேர்ந்துவிட்டனர். மூன்று மணியாகிவிட்டது என எல்லோரையும் வகுப்பு களுக்குப் போகும்படி மேற்பார்வையாளர் லீசா வந்து சொன்னார். ‘உங்களோடை கதைக்கோணும், பிறகு என்ர வகுப்புக்கு ஒருக்கா வாறீங்களா?’ என அவரை ஆங்கிலத்தில் கேட்டபடி என் மாணவர்களை வரிசையில் வரும்படி கேட்டுவிட்டு, அவர்களுக்கு முன்பாக நான் நடக்கத் தொடங்கினேன். அந்தச் சிறுவர்களுக்கு என்னுடன் பழக்கமில்லை. அப்படியிருந்தும், அவர்கள் எப்படி என்னுடன் மனம்திறந்து கதைத்தனர்? அத்தனை தூரத்துக்கு அவர்களின் மனம் பாதிக்கப்பட்டிருக்கிறதா? என் மனம் அவர்களுக்காகக் கலங்கியது. அதேவேளையில் எப்படியான இளைஞர்களாக அவர்கள் வளரப்போகிறார்களோ என்ற கவலையும் எனக்கேற்பட்டது.
மாடிப்படிகள் ஈரமாக இருந்தன. கவனமாக ஒவ்வொன்றாகக் கால்வைத்து ஏறினேன், இடையிலிருந்த landing இல் தேங்கியிருந்த தண்ணீரை caretaker mop பண்ணிக்கொண்டிருந்தார். எங்களைக் கண்டதும் ஒரு கரையில் ஒதுங்கி அவர் எங்களுக்கு வழிவிட்டார். என் பிள்ளைகள் படித்த Flemington ஆரம்பப் பாடசாலையில், இப்படியாகப் பனி தொடர்ந்து கொட்டிக்கொண்டிருந்த ஒரு நாள் பாடசாலை அதிபரின் அறைக்கு முன்பாகவிருந்த ஈரத்தை caretaker ஒருவர் mop பண்ணிக்கொண்டிருந்தபோது, நான் அங்கும் இங்குமாக நடந்திருந்த காட்சி என் கண் முன்விரிந்து என்னைச் சஞ்சலப்படுத்தியது.
அந்த நேரத்தில் பாலர் வகுப்பிலும், முதலாம் வகுப்பிலும் இருந்த என் பிள்ளைகள் இருவரும் அவர்களின் அப்பாவுக்கும் எனக்கும் இடையிலான முரண்கள் உருவாக்கும் வாக்குவாதங்களினால், அவரின் கோபம் என் உடலில் ஏற்படுத்தும் காயங் களினால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அன்றுகூட வீங்கிய உதடுகளுடன்தான் பிள்ளைகளைப் பாடசாலைக்குக் கூட்டிச் சென்றிருந்தேன். முதல் நாள், பிள்ளைகள் பசியுடன் இருக்கிறார்கள், கடைக்குப் போட்டுவந்தால்தானே எதையாவது நேரத்துக்கு நான் சமைத்துக் கொடுக்கலாமென்ற கரிசனையுடன் அவரை நான் ஓரிரு தடவைகள் மீள மீள அழைத்திருந்தேன். வீட்டுக்கு வந்தவர், நண்பர்களுடன் தான் இருந்தபோது, அப்படி நான் அவரை அழைத்தது, தன்னை அவமானப்படுத்துமொருசெயலெனக்கத்தியபடி, என்னை அறைவதற்குக் கையை ஓங்கினார். பயத்தில் நான் மறுபக்கத்துக்குத் திரும்பிக்கொள்ள, அவரின் ஆத்திரத்துக்கு என் உதடுகளும் பலியாகியிருந்தன. என் முரசிலிருந்தும் உதட்டிலிருந்தும் வழிந்த இரத்தத்தைப் பார்த்த பிள்ளைகள் கதறியழுதனர்.
அப்போதும் கோபமடங்காதவர் கதிரை ஒன்றையெடுத்து சுவரில் மூர்க்கமாக மோதியதில் சுவரில் விழுந்த ஓட்டையும் அவரின் ஆக்ரோஷத்துக்குச் சாட்சியானது. எங்களின் அவலங்களை ஒரு முடிவுக்குக்கொண்டுவருவதற்கு அந்தச் சான்றுகளையெல்லாம் பயன்படுத்தினாலென்ன என நான் யோசித்தேன். அதனால், வீட்டுப்பிரச்சினைகளைக் கூறி, அந்தப் பாடசாலை அதிபருக்குக்கூடாக சிறுவர் உதவிச் சபையின் இடையீட்டுக்கு வழிவகுக்க வேண்டுமென நினைத்தேன். எனினும், அதற்கான துணிவு எனக்கு அன்று வரவில்லை. அதனால், தொடர்ந்தும் என் பிள்ளைகளின் மனங்கள் காயப்படுவதற்கு நானும் காரணமாக இருந்திருக்கிறேன் என்பது என் கண்களை நனைத்தது.
முடிவில், லீசாவிடம் அந்தச் சிறுவன் எனக்குக் கூறியதைக் கூறி, அது பற்றிச் சிறுவர் உதவிச் சபைக்கு அறிவித்த பின்னரே என்னால் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது. ‘பிள்ளை வளக்கத் தெரியாட்டில் ஏன் ஐஞ்சைப் பெத்தவை?’ என்ற லீசாவிடம், ‘பிள்ளை வளக்கிறது எப்பிடியெண்டு தெரிஞ்சுகொண்டே பிள்ளயளைப் பெறுறம்? ஐஞ்சு சின்னப்பிள்ளயள் எண்டால் எவ்வளவு பொறுமை வேணும்... அபிவிருத்தியடைந்த ஒரு நாட்டிலை இருந்துகொண்டு, எத்தனை வழிமுறை இருக்கத்தக்கதா, ஏன்தான் இத்தினை பிள்ளையளைப் பெறுகினமோ? என நான் சலித்துக்கொண்டேன்.
வகுப்பு முடிந்துபோகும்போது, விமலா ரீச்சர் என்னிடம் வந்து சிறுவர் உதவிச் சபைக்கு அறிவித்தனீங்களோ என்றார். நான் பதில்சொல்வதற்கு வாயைத் திறக்க முன்பாக, ‘நான் முந்தி daycare இலை வேலை செய்யேக்கை, இப்பிடி எத்தினை பிள்ளையள் எனக்குச் சொல்லியிருப்பினம். மேற்பார்வையாளர்மாருக்கு நான் ஒண்டுமே சொல்றேல்லை. பிறகு, அந்தப் பிள்ளையளைக் கூட்டிக்கொண்டு போறதுக்கு அவையின்ர அம்மாவோ, அப்பாவோ வரேக்கே, பிள்ளை இப்பிடிச் சொல்லுது. இந்த நாட்டிலை இதெல்லாம் பிழை. அடிக்காம பிள்ளையை வளக்கப்பாருங்கோ. நீங்களும் சண்டை பிடியாதேயுங்கோ எண்டுதான்புத்தி சொல்லி அனுப்புறனான். அதிலை தமிழ் பிள்ளையளும்தான் இருந்தவை. குடும்பங்களுக்கை பிரச்சினையள் வாறதுக்கு, குடும்பங்கள் பிரியிறதுக்கு நாங்க காரணமாயிருக்கக்கூடாது. தெரியாதே? வேலைக்களைப்பில வரேக்கை அப்பிடி இப்பிடி நடக்கும்தானே,’ என்றா.
‘ரீச்சர்… சிறுவர் உதவிச் சபை பிள்ளையளை அவையிட்டையிருந்து பிரிச்சுக்கொண்டு போகப்போறதில்லை. பிரச்சினையளைஎப்பிடிக் கையாள்றதெண்டு தெரியாததாலைதானே இப்பிடியெல்லாம் அவை நடக்கினம். சரியான வழியிலை எப்பிடிப் பிரச்சினையளைத் தீர்க்கலாமெண்டு அவை அறிஞ்சுகொள்ளுறதுக்கும், பிள்ளையள் பாதுகாப்பாய் இருக்கிறதுக்கும் அதுகளின்ரமனங்கள் பாதிக்கப்படாமல் இருக்கிறதுக்கும் ஒரு வழி வேணும்... அதுதான் நான் அறிவிச்சிருக்கிறன், அதோடை அது எங்கடகடமையெல்லே,’ என்ற நான் அங்கிருந்து விலகினேன்.
‘அப்பா அடிக்கிறாரெண்டு என்ர பிள்ளையள் சொல்லியிருக்கினமெண்டு சுரேனுக்கு தெரிய வந்திருந்தால் பிள்ளயளை அவர் அச்சுறுத்தியிருப்பார். என்னிலையும் குற்றம் பிடிச்சிருப்பார். வேறென்னத்தைச் செய்திருப்பார்?அப்பிடித்தான் மற்றவையும் செய்திருப்பினம், அல்லது செய்வினம். வன்முறை கூடாததெண்டு தெரியாமலே அவை அதைக் கையாளுகினம்,’ எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
வாகனம் நிறுத்துமிடத்தில் சேறும் சகதியும் நிறைந்திருந்தது. என்னுடைய கார் முழுவதும் படர்ந்திருந்த பனியை வழித்தெடுப்பதற்கிடையில் எனக்குப் போதும்போதுமென்றாகிவிட்டது. கைகள் கையுறைகளுக்குள் இருந்தபோதும், குளிரில் சுள்ளிட்டன.
ஒருவாறாகக் காரை ஸ்ராட் செய்தேன். கொட்டும் பனியுடன் போட்டிபோட்டபடி wipers இரண்டும் முன் காரின் கண்ணாடியில் விழும் பனியைத் துடைத்துக்கொண்டிருந்தன. இடையிடையே windshield fluid இனையும் விசிறி விசிறி, அதில் படியும் புகாரைஅகற்றியபடி மிகக் கவனமாக காரை ஓட்டிக்கொண்டிருந்தேன். அடிக்கடி கண்ணீரால் நிறைந்து கொண்டிருந்த கண்களைத் தொடர்ந்து துடைக்க வேண்டியிருந்தது.
செல்லும் வழியைக்காட்டிக் கொண்டிருந்த தொலைபேசி மீளவும் சுரேனிடமிருந்து செய்தி வந்திருப்பதைச் சொன்னது. மூத்த மகள் யாழினியின் திருமணம் மிகவும் எளிமையான பதிவுத் திருமணமாக நாளைக்கு நடக்கவிருக்கிறது. அதைத் தங்கை கேசினியுடனும் தன் இரண்டு சினேகிதிகளுடனும் மட்டுமே கொண்டாடுவதற்கு அவள் தீர்மானித்திருக்கிறாள். மணமகன் பக்கத்திலிருந்தும் ஒரு சிலர் மட்டும்தான் வருகின்றனர். அதற்குத் தன்னையும் அழைக்கும்படி யாழினியிடம் கூறும்படி அவர் மீளமீள என்னை வற்புறுத்திக்கொண்டிருக்கிறார்.
அவரின் கோபத்துக்குப் பிள்ளைகளும் பல தடவைகள் இரையாகியிருக்கிறார்கள்.
எங்களுக்கிடையே சண்டைகள் ஏற்படும்போது கேசினி பயத்தில் ஒளிந்துவிடுவாள். ஆனால், என்னைக் காப்பாற்றும் நோக்கில் எங்களுக்கு இடையில் நின்று யாழினி அவதிப்பட்டிருக்கிறாள். தான் வாங்கிய அடிகளுக்காக அழுததைவிட, எனக்கு விழுந்த அடிகளுக்காகவே அவள் மிக அதிகமாக அழுதிருக்கிறாள். அப்படியான நாள்களில் தண்டனையாக, router ஐக்கூட அவர் off பண்ணிவிட்டிருக்கிறார். பின்னர், அவர் நித்திரை கொள்ளும்வரை காத்திருந்து, இணையத்தின் உதவியுடன் செய்யவேண்டிய வீட்டு வேலைகளைச் செய்துபோட்டு மீளவும் router ஐ off பண்ணிப்போட்டு அவர்கள் நேரம் கழித்துப் படுத்திருக்கிறார்கள். இன்னொரு நாள் அவரின் தாக்குதலிலிருந்து தப்புவதற்காக வெளியில் நான் ஓட, வீட்டைப் பூட்டிவிட்டு அவர் எங்கோ சென்றுவிட்டார். பள்ளிக்கூடம் முடிந்துவந்த கேசினிதான் யன்னலுக்கூடாகப் புகுந்து வீட்டைத் திறந்திருக்கிறாள். நல்ல வேளையாக வரவேற்பறையின் வெளியேயிருந்த சிறியதொரு யன்னல் அன்று திறந்திருந்தது.
நினைவுகள் தொடர்ந்து என் மனதில் கொட்டப்பட்டுக்கொண்டிருந்தன.
சில வேளைகளில் எனக்கு ஏதாவது அவர் செய்துவிடுவாரோ எனப் பயமேற்படும்போது, யாழினியின் அறையில்தான் நான் படுத்திருக்கிறேன். அவளின் வயதுக்கு மேற்பட்ட, தேவையற்ற பொறுப்பை அவள் மேல் சுமத்துகிறேன், அவளையும் பதற்றத்துக்கு உள்ளாக்குகிறேன் என்பது எனக்கு அந்த நேரம் விளங்கவில்லை. இப்படியான விடயங்கள்தான் பல்கலைக்கழகத்துக்குச் சென்ற நாள் முதல் தகப்பன் என்ற உறவு வேண்டாமென்றே அவர்கள் இருவரையும் வாழ வைத்திருக்கிறது என்பதும் எனக்கு விளங்கியிருந்தது.
பிள்ளைப்பராயம் அவர்களில் ஏற்படுத்திய மனச்சிதைவை மேவுவதற்கு அவர்கள் செலவழித்த நேரமும் பணமும் மிக அதிகமானது. அப்போதெல்லாம் அவர்களின் மனங்களுக்கு ஒத்தடம் கொடுப்பதற்கு அவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள், அவர்களுடனான உறவைச் சீராக்குவதற்கு ஏதாவது செய்யுங்கள் என அவரை நான் கேட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால், அவர் எதையும் பொருட்படுத்தவேயில்லை. தன் பிழைகளை ஒத்துக்கொள்வதற்கு அவர் இப்போதுகூடத் தயாராக இல்லை.
யாழினியின் திருமணத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பது தனக்குக் கெளரவக் குறைச்சல், மற்றவை என்ன நினைப்பினம் என்பதுதான் அவரின் பிரச்சினை. அதற்காகப் பிள்ளைகளுடன் நான்தான் தன்னை ஒட்டவைக்க வேண்டுமென்று என்னைத் தொந்தரவு செய்கிறார். ஆனால், அவரின் கதையை எடுத்தவுடனேயே யாழினி அழுகிறாள். அவளின் வாழ்க்கையின் மிக முக்கியமான ஒருநாளைப் பாழாக்கவேண்டாமென கேசினி எனக்கு ஆலோசனை சொல்கிறாள். அதனால், இன்றிரவு நான் வீட்டுக்குப் போகாமல் இருப்பதே உசிதமென நாளைக்குப் போட வேண்டிய உடைகளை ஏற்கனவே எடுத்துக் கொண்டுபோய் கேசினியின் வீட்டில் வைத்திருக்கிறேன்.
வழியெங்கும் ஒரே இருட்டாக இருந்தது. தொலைபேசி ஒலித்தது. சுரேன்தான். என்ன செய்யவென ஒரு கணம் யோசித்ததில் காரின் கட்டுப்பாடு என்னிடமிருந்து விடுபட்டுப் போனது. கடைசியில் ரோட்டின் கரையிலிருந்த மரத்தில் மோதி கார் நின்றது. அப்படியாவது நின்றதே என்ற ஆறுதலுடன் இறங்கிப் பார்த்தேன். காரின் முன்பக்கம் முற்றாக உடைந்து தொங்கிக்கொண்டு நின்றது. காரைப் பார்க்க எனக்கு அழுகை வந்தது. எனக்கு உறுதுணையாக இருக்கிற அதை இப்படிச் சிதைத்திருக்கிறனே எனக் கவலையாக இருந்தது.
மீளவும் காருக்குள் ஏறிய நான், towing company ஒன்றை அழைத்துக் காரை வந்து எடுத்துச் செல்லமுடியுமா எனக் கேட்டுவிட்டு, கேசினியை அழைத்து ஸ்காபோரோ collision reporting centre இல் வந்து என்னை கூட்டிப்போக முடியுமா எனக் கேட்டபோது, நான் எப்படியிருக்கிறேன் என்பதே அவளின் பெரும் கரிசனையாக இருந்தது. எனக்கொன்றும் இல்லையென அவளுக்குத் தேறுதல் சொல்லிவிட்டு, சுரேனை அழைத்தேன்.
‘காரை மரத்தோடை மோதிப் போட்டன். இப்ப ஓட்டக்கூடிய நிலையில அது இல்லை.’
‘ஏனப்பா, காரைக் கவனமாய் ஒடுறேல்லையே? கார் ஓடேக்கே ஓடுறதிலைதான் கவனமாயிருக்கோணும்.’
‘மனசை எங்கெங்கேயோ பாயவிட்டு, மோட்டுத்தனமாய் காரை உடைச்சுப்போட்டன். அதிருக்க, கேளுங்கோ. பிள்ளையளோடை உறவைப் பேணுறதுக்கு ஏதாவது செய்யுங்கோ எண்டு பத்து வருஷமா சொல்லிக்கொண்டிருந்தன். ஆனா, நீங்க எந்த முயற்சியும் எடுக்கேல்லை. இப்ப அவளவையோடை உங்களை ஓட்ட வைக்கிறது என்ரை வேலையில்லை. உங்களுக்காண்டிக் கதைச்சுக் கதைச்சு பிள்ளையளின்ரை மனவேதனையைக் கூட்டுறதுக்கோ, அவளவையோட எனக்கிருக்கிற உறவைப் பாழாக்கிறதுக்கோ இனியும் நான் ரெடியில்லை. இவ்வளவு நாளும் அப்பிடி நான் கதைச்சதே பிழை.
கேசினி வந்து என்னைக் கூட்டிக்கொண்டு போவாள். கலியாணம் எங்கை நடக்குது, என்னைக் கூப்பிடச்சொல்லிச் சொல்லு எண்ட கதையெல்லாத்தையும் இனி நிப்பாட்டிப் போடுங்கோ. நான் உங்களைப் பொறுத்துக்கொண்டு வாழுறதுக்காண்டி, அவளவையும் பொறுக்க வேணுமெண்டு அவளவைக்குத் தலைவிதி இல்லை. ஏதாவது செய்து குழப்பம் விளைவிக்க நினைச்சீங்கஎண்டால், நான்தான் முதலில பொலிசைக் கூப்பிடுவன். ஏறுமாறாய் என்னோடை நடக்க வெளிக்கிட்டியள் எண்டால் நானும் வீட்டை விட்டிட்டு போடுவன்.’
அவரின் பதிலுக்குக் காத்திராமலேயே தொலைபேசியை வைத்தேன். நான் கூப்பிட்டிருந்தTowing company truck என்னுடைய காரின் பின் வந்து நின்றது. காரைவிட்டு இறங்கினேன் நான்.
நன்றி
