‘நந்தசேன’
- செங்கதிரோன்
அன்று மதியம் சாப்பாட்டை முடித்துக் கொண்டகையோடு மட்டக்களப்பு, செங்கலடியிலிருந்து வீட்டை விட்டுப் பயணம் வெளிக்கிட்ட முத்துசாமி செட்டியார் கொழும்பு புறக்கோட்டை பஸ் நிலையத்தை வந்தடைந்து அங்கிருந்து மாறி நீர்கொழும்புக்கு பஸ் எடுத்து ‘ஜாஎல’ பஸ் நிலையத்தை அடையும்போது இரவு பத்துமணியாகிவிட்டிருந்தது.
செங்கலடியிலிருந்தே தனியார் வாகனமொன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு நீர்க்கொழும்புப் பயணத்தை மேற்கொள்ளுமளவுக்குச் செட்டியாரிடம் பணவசதியிருந்தபோதிலும் அன்று இலங்கையில் நாடு முழுவதிலும் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் அதனால் விளைந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாகவும்தான் தனியார் வாகனத்தைத் தவிர்த்துக்கொண்டு இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான அரசாங்கப் பொதுப்போக்குவரத்தில் பயணிப்பதுதான் பாதுகாப்பானது என்பதால் செங்கலடியிலிருந்து புறப்பட்டு ‘ஜாஎல’ வரைக்கும் பஸ்சில் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
அவருடைய துரதிஸ்டமோ என்னவோ புறக்கோட்டையிலிருந்து நீர்கொழும்புக்குச் சென்றுகொண்டிருந்த பஸ் வழியில் இயந்திரக்கோளாறு காரணமாக ‘பிறக்டவுண்’ஆகி ‘ஜாஎல’வுடன் பயணத்தை இடையில் நிறுத்திக்கொண்டது.
செட்டியார் ‘ஜாஎல’ பஸ் நிலையத்தை வந்தடைந்த நேரம் மழையும் சற்றுத்தூறி விட்டிருந்தது. என்றாலும் கருமேகங்கள் இன்னும் கலையாது வானம் இருட்டியிருந்தது. பஸ் நிலையத்தின் அருகில் இருந்த கடைகள் யாவும் பூட்டியிருந்தன. பஸ் நிலையம் சனநடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தது. பஸ் நிலையத்தில் வழமையாகப் படுத்துறங்கும் கட்டாக்காலி மாடுகளும் தெருநாய்களும்கூட வேறெங்கோ ஒதுங்கிக் கொண்டன. பஸ் நிலையத்தில் செட்டியாரையும் ஏனைய பயணிகள் சிலரையும் ‘அம்போ’வென்று இறக்கிவிட்ட பஸ் ‘ஜாஎல’ பஸ் ‘டிப்போ’-வுக்குப் போய்விட்டது. செட்டியாரோடு வந்திறங்கிய ஏனைய பயணிகள் எல்லோரும் ஆளுக்கொருதிசையில் சென்று மறைந்துவிட்டிருந்தனர். செட்டியார் பஸ் நிலையத்தில் தனித்து விடப்பட்டிருந்தார். பஸ் நிலையத்தில் மயான அமைதி. ‘ஜாஎல’ சிங்கள ஊர். தமிழரான செட்டியாருக்குப் பயம் மெல்ல மெல்லத் தொற்றத் தொடங்கிற்று. மடியில் கனம்வேறு. அதனால் வழிப்பயம் அவரை ஆட்கொண்டும் விட்டது.
செங்கலடியில் நகை அடகு வியாபாரம் செய்பவர் அவர். செட்டியார் பரம்பரையைச் சேர்ந்தவரல்லர், ஆனால் அவரது பூர்வீகம் இந்தியா என்பதால் அவரை அங்கு செட்டியார் என்றே எல்லோரும் அழைத்தனர். நகை அடகு வைத்தவர்கள் மீளமுடியாமல் அறுதியாகிப்போன நகைகளை நீர்கொழும்பிலுள்ள தனது வழமையான வாடிக்கையாளரான நகைக்கடை உரிமையாளரொருவரிடம் அவற்றை விற்றுப் பணம் பண்ணும் நோக்குடன்தான் அன்றைய பயணத்தை அவர் மேற்கொண்டிருந்தார்.
தனியார் வாகனமொன்றை அங்கிருந்து வாடகைக்கு அமர்த்திக்கொண்டு நீர்கொழும்புக்குப் போவாமா? என்று எண்ணமெழுந்த போதிலும் அதனைத் தவிர்த்துக் கொண்டார். முன்பின் தெரியாத தனியார் வாகனத்தில் அதுவும் அன்றிருந்த அசாதாரண சூழ்நிலையில் தமிழரான தான் தனியே இரவு நேரத்தில் மடியில் கனத்துடன் பயணிப்பது பாதுகாப்பானதல்ல என அவர் உள்மனம் உரைத்ததே அதற்குக் காரணம். ஏதோ தாமதமானாலும் நீர்கொழும்புக்குச் செல்லும் இலங்கைப் போக்குவரத்துச்சபை பஸ் ஏதாவது வரும் என்ற அதீத நம்பிக்கையில் பஸ் நிலையத்தில் நிர்மாணிக்கப்பெற்றிருந்த ‘கொங்கிரீட்’ இருக்கையில் அமர்ந்தார்.
நேரம் கழிந்துகொண்டிருந்தது. நேரமும் இப்போது பத்தரையைத் தாண்டியிருந்தது. தனியனாக அமர்ந்திருந்த செட்டியார் நிலைகொள்ளாது தவித்துக்கொண்டிருந்தார். பயத்தில் பசியும் எடுக்கவில்லை. எங்கோ ஒரு மூலையிலிருந்து தெருநா யொன்று விட்ட ஊளைச்சத்தம் அவரை மேலும் பீதிக்குள் தள்ளியது. இப்போது கை கால்கள் உதறல் எடுக்காதகுறை. பயம் அவரை முற்றாக மூழ்கடித்திருந்தது. மழைபெய்துவிட்டிருந்த குளிர்நேரத்திலும்கூட பயத்தில் முகம் வியர்க்கவும் தொடங்கிவிட்டது. வேட்டியும் மேற்சட்டையும் அணிந்திருந்த அவர் வேட்டித்தொங்கலால் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.
என்னசெய்வதென்று தெரியாமல் தலையைத் தாழ்த்திக்கொண்டு கண்களை மூடியபடி கடவுளை வேண்டத் தொடங்கினார். வாய் அவரையறியாமலே கடவுளே! கடவுளே! என முணுமுணுத்தது. ஆபத்துவரும்போது ஆண்டவனை நாடுவதுதானே மனித இயல்பு.
சில நிமிடங்கள் கழிந்திருக்கும். திடீரென்று யாரோ ஒருவர் தனது தோளில் மெதுவாகத்தட்டி ஏதோ கதைத்தது போலிருக்கச் செட்டியார் பீதியில் உறைந்துபோன நிலையில் தலையை நிமிர்த்தினார். அவருக்கு முன்னால் ஒரு ஆளைக் கண்டதும் பயத்தில் செட்டியார் எழுந்து நின்றார்.
முன்னால் நின்றிருந்தவர் ‘வாடிவென்ன! வாடிவென்ன! உட்காருங்க ‘என்று சிங்களத்திலும் தமிழிலும் கூறியபடி செட்டியாரின் இரு தோள்களிலும் தனது கைகளை வைத்து அவரை இருத்தினார்.
இதயத்துடிப்பு நின்றுவிடுமோ எனும்படியாகச் செட்டியாரின் இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கியது. முகத்தில் வியர்வைத் துளிகளும் மீண்டும் அரும்பத் தொடங்கின. உடம்பும் வெலவெலத்து வியர்த்துக் கொட்டியது.
நிலைமையைப் புரிந்துகொண்ட முன்னால் நின்றிருந்த ஆள் ‘பயவென்டெப்பா! பயப்படவாணாம்!’ என்று மறுபடியும் சிங்களத்திலும் தமிழிலும் சொல்லியபடி செட்டியாரைத் தோளில் தடவிவிட்டார்.
செட்டியார் தன்னைச் சுதாரித்துக்கொண்டு தன் முன்னால் நிற்பவரை நன்றாக நிமிர்ந்து பார்த்தார்.
நல்ல உயரமான மனிதன். அறுபது வயதைத் தாண்டியிருப்பார். ஆனாலும் வாளிப்பான உடற்கட்டு. கறுப்புநிற நீளக்காற் சட்டையும் வெளிர்நீல முழுக்கை சேர்ட்டும் செப்பமாக அணிந்திருந்தார். முகத்தில் இந்தியாவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மனெக்ஷா வினதைப் போன்ற முறுக்கிய மீசை ஒரு கம்பீரத்தை அளித்தது.
செட்டியாரைப் பார்த்து ‘நீங்க தமிள் ஆளா?’ என்று கேட்டார்.
செட்டியாரும் பயம் இன்னும் நீங்காத நிலையில் அடித்தொண்டைக்குள் ‘ஆம்’ என்று தலையாட்டினார்.
‘எங்கபோக வந்தது?’ என்றார் அந்த ஆள்.
‘நீர்கொழும்புக்கு’ என்று பதில் தந்தார் செட்டியார்.
‘ஆ! மீகமுவவுக்குத்தானே! உங்களுக்கு நாட்டுநிலம தெரியிற இல்லயா? இந்த நேரத்தில இப்படி தனிய நிக்கிறது ஆபத்து இல்லயா? சிங்கள ஊரில தமிள் ஆள் வந்து இப்படி நிண்டா ஆமி பொலிஸ் வந்து பிடிச்சிப்போறது. சந்தேகம்தானே. இல்லாட்டி கள்ளன் வந்து ஏதாவது பண்ணி இரிக்கிறதப் பறிச்சிப் போறது. கொஞ்சம் யோசிச்சி நடக்கவேணும்தானே’ என்று அறிவுரை கூறத் தொடங்கிய அந்தாள்,
‘இப்பமிச்சம் கதைக்க நேரமில்லே. மழையும் வருவாங்போல இரிக்கிறது. இங்க நீ தனியநிக்கிறது ஆபத்து. என்னோட எங்கடஊட்டுக்கு நீங்க வாறது. நம்மட ஊட்டில தங்கி நாளைக்கு காலம்பற மீகமுவவுக்கு பஸ்சில போறது. நாமவந்து பஸ்சில உங்கள அனுப்பி வைக்கிறது. பயப்படவாணாம். சரிதானே!’ என்று செட்டியாரின் பதிலுக்குக் காத்திராமல் பேச்சை முடித்தார்.
செட்டியாருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. முன்பின் தெரியாத ஒருவர் வீட்டுக்குவரச் சொல்கிறார். ஆபத்தான வேளையில் ஆண்டவனே அனுப்பியதுபோல வந்து நிற்கிறார். மறுக்கவும் மனம் வரவில்லை. மறுத்துவிட்டு விடியும்வரை பஸ் நிலையத்தில் தனியே நிற்பதும் ஆபத்து. செட்டியார் பதிலேதும் கூறாமல் ஒரு கேள்விக் குறியோடு அந்த ஆளை நிமிர்ந்துநோக்கினார்.
செட்டியாரின் மனநிலையைப் புரிந்துகொண்டவராய், ‘பயப்படவாணாம். சிங்கள தமிள் எல்லா ஆக்களும் மனிசன்தானே. நாமஉங்களுக்கு உதவிசெய்யத்தான் ஊட்டுக்குக் கூப்பிடிறது. இப்படி நாம முன்னால மிச்சம் தமிள் ஆக்களுக்கு உதவி செஞ்சிரிக்கி. பஸ் இல்லாம இப்படி வந்துதட்டுக்கெட்டு நிக்கிற தமிள் ஆக்கள் மிச்சம் பேருக்கு ஊட்டுக்குக் கூட்டிப்போய் நாம உதவி செஞ்சிரிக்கி. அது புண்ணியம்தானே. நீங்க யோசிக்காம நம்மளோட இப்ப ஊட்டுக்குவாங்க’ என்று அன்பான குரலில் அவர் மீண்டும் கேட்டதும் செட்டியாருக்கும் பயம் சற்று நீங்கி நம்பிக்கை துளிர்விட்டது.
சரியென்று தலையாட்டிவிட்டு பயணப் பையைக் காவிக்கொண்டு அந்த ஆள் முன்னே செல்ல அவர் அவ்வப்போது கேட்டகேள்விகளுக்கு மட்டும் மறுமொழி சொல்லியபடி, காலையிலே நடைப்பயிற்சி செய்யும் எஜமானின் பின்னே செல்லும் வளர்ப்பு நாயைப் போல அவரைப் பின்தொடர்ந்தார் செட்டியார். பத்துநிமிட நேர நடையில் ஒரு வீட்டை அடைந்தார்கள்.
வீட்டின் கதவைத் திறந்துவிட்ட அந்த ஆள் செட்டியாரை உள்ளே போகும்படி கையைக் காட்டினார்.
உள்ளே நுழைந்த செட்டியார் தனது பார்வையைப் பரவலாகப் பதியவிட்டார். விசாலமான மண்டபம். பல அறைகள் கொண்ட வசதியான கல்வீடு. வீட்டுக்காரர் ‘மெனிக்கே!’ என்று குரல் கொடுத்ததும் குசினிப் பக்கமிருந்து வந்த ஐம்பது வயதைத் தாண்டிய பெண்ணொருத்தி செட்டியாரைப் பார்த்து மலர்ந்த முகத்துடன் கைகூப்பி வணக்கம் செலுத்தி வரவேற்றார். செட்டியாரும் பதிலுக்குக் கைகூப்பினார். வீட்டுக்காரர் செட்டியாரிடம் ‘இதுதான் நம்ம நோனா’ என்றார். அவ சிரித்துக்கொண்டு மீண்டும் குசினிப் பக்கம் சென்றுவிட்டா.
செட்டியாருக்கு ஒரு பக்கம் சந்தோஷமாகவுமிருந்தது. இன்னொரு பக்கம் முன் பின் தெரியாத முகங்கள் என்பதில் சற்றுச் சங்கடமாகவுமிருந்தது.
மண்டபத்தின் சுவரில் பல படங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. அதிலொன்றில் பதக்கங்கள் பதிக்கப்பெற்ற இராணுவச் சீருடையுடனும் தொப்பியுடனும் வீட்டுக்காரர் கம்பீரமாக நின்றிருந்தார். இன்னொரு படத்தில் வீட்டுக்காரரும் மனைவியும் கல்யாணக் கோலத்தில் காட்சியளித்தனர். வேறொரு படத்தில் இராணுவச் சீருடையில் இடுப்புக்கு மேலே அரைவாசிப் படமாக இளைஞனொருவன். முகச்சாயல் வீட்டுக்காரரைப்போல. அவரது மகனாக இருக்கவேண்டுமென்று செட்டியார் நினைத்துக் கொண்டார். சுவரில் இன்னொரு இடத்தில் வாக்குச்சீட்டில் புள்ளடி போட்டதுபோல இரு வாள்கள் ஒன்றின் மேலொன்று குறுக்காக மாட்டப்பட்டிருந்தன.
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்குமிடையே நடைபெறும் யுத்தத்தில் மரணமடையும் இராணுவ வீரர்களின் உயிரற்ற உடலங்கள் தென்னிலங்கைச் சிங்களக் கிராமங்களுக்கு நாளாந்தம் வந்துகொண்டிருக்கும் ஓர் அசாதாரண சூழலில் ஒரு சிங்கள இராணுவக் குடும்பத்தின் வீட்டில் சரணடைந்துள்ளதை நினைக்கச் செட்டியாருக்கு மனம் பதற்றமடையவே செய்தது.
செட்டியாரின் பதற்றத்தை முகக்குறிப்பால் புரிந்துகொண்ட வீட்டுக்காரர் ‘இது நம்ம ஊடு. பயப்பட ஒண்டுமில்லே. நாம ஆமியில வேலை செய்து ‘கப்டன்’ ஆகிப் பென்சனுக்குப் போனது. எங்களுக்கு ஒண்ணே யொண்ணு ‘புத்தா’தான்’ என்றவர், படமொன்றைக் காட்டி இவர்தான் எங்கட மவன் நந்தசேன. ‘யாப்பன’யில ஆனஇறவு காம்ப்’ பில வேல செய்யிறது. அங்க சண்ட நடந்ததுதானே. அந்தக் கத நாம புறகுசொல்லிறது என்றவர், செட்டியாரிடம் முன் அறையைத் திறந்துகாட்டி ‘இந்த காம்பறயில நீங்க இரவைக்குத் தங்கிறது’ என்றுவிட்டு செட்டியாரைக் குசினிக்கு அருகில் கூட்டிப்போய் ஓரிடத்தைக் காட்டி’ இதுதான் ‘பாத்றூம்’ மட்டக்களப்பில இரிந்தி பிரயாணம் பண்ணின களைப்பு இரிக்கும். நல்லா குளிச்சி உடுப்பு மாத்தி வாருங்க. நாமளும் குளிச்சி வாறது’ என்று கூறிவிட்டு வேறொரு அறைக்குள் நுழைந்தார்.
ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான வீட்டுக்காரரின் கட்டளைகளை நிறைவேற்றுவதைத் தவிர அச்சமயம் செட்டியாருக்கு வேறொன்றிற்கும் கைகால்கள் ஓடவுமில்லை. கவனமும் செல்லவில்லை. வீட்டுக்காரர் ஆனையிறவுச் சண்டையைப் பற்றிக் குறிப்பிட்டதுதான் செட்டியாருக்கு அச்சத்தைக் கூட்டிவிட்டது.
செட்டியார் குளித்துவிட்டுவந்து உடைமாற்றி அறைக்குள்ளேயிருந்த கட்டிலில் அமர்ந்தார். உடலில் அசதி நீங்கினாலும் உள்ளத்தில் அச்சம் நீங்கவில்லை.
சில நிமிடங்கள் கழிந்திருக்கும். வீட்டுக்காரர் வந்து சாத்தியிருந்த அறைக்கதவில் ‘டொக்டொக்’ என்று தட்டினார். செட்டியார் எழுந்து கதவைத் திறந்ததும் வீட்டுக்காரர் புன்னகைத்துக் கொண்டே மண்டபத்துள் வந்து அமரும்படி அங்கு போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலியொன்றைக் காட்டினார். நாற்காலியின் முன்னே வைக்கப்பட்டிருந்த ‘ஸ்ரூல்’-இல் வெளிநாட்டு உயர்வகை மதுப்போத்தலொன்றும் இரண்டு வெற்றுக் ‘கிளாஸ்’களும் ‘பிளேன் சோடா’ப் போத்தலொன்றும் இரண்டு ‘டிஸ்’களில் அவித்த முட்டைகளும் பொரித்த கோழியிறைச்சியும் வைக்கப்பட்டிருந்தன. எதிரே மறுபக்கத்தில் இன்னொரு பிரம்பு நாற்காலி போடப்பட்டிருந்தது. இக்காட்சியைக் கண்டதும் செட்டியாரிடம் அடுத்து என்ன நடக்கப்போகிறதோ என்ற அச்சமும் அங்கலாய்ப்பும் தலைதூக்கின. ஆயினும் தனக்கு இடப்பட்ட கட்டளைப்படி கதிரையில் போய் அமர்ந்தார். எதிரே போடப்பட்டிருந்த நாற்காலியில் வந்தமர்ந்த வீட்டுக்காரர் செட்டியாரிடம் ‘ஸ்ரூல்’இல் வைக்கப்பட்டிருந்த மதுப்புட்டியைக் காட்டி ‘இது நீங்க பாவிக்கிறதானே!’ என்றார்.
செட்டியாரும் தன்னைச் சுதாரித்துக் கொண்டு ‘இருந்து போட்டு எப்பவாவது கொஞ்சம் எடுக்கிறநான்’ என்றார்.
‘நாமளும் அப்படித்தான். ஒவ்வொரு நாளும் இல்லே. உங்கள மாதிரி கூட்டாளி ஆரும் வந்தா கொஞ்சம் எடுக்கிறது’ என்று கூறி மதுப்போத்தலையும் சோடாப்போத்தலையும் அவற்றின் மூடிகளைத் திறந்து தன்னுடைய ‘கிளாஸ்’சில் அரைவாசிக்கு மதுவையும் மீதிக்குச் சோடாவையும் விட்டு நிரப்பிய பின் மதுப்போத்தலையும் சோடாப்போத்தலையும் செட்டியாரிடம் ‘இந்தாங்க’ என்று நீட்டினார்.
செட்டியாருக்கும் அந்த நேரத்தில் அது வேண்டும்போல்தான் இருந்தது. மனதைச் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு மறுக்க முடியாமல் வாங்கித் தனது ‘கிளாஸ்’சையும் வீட்டுக்காரர் போல் நிரப்பினார்.
வீட்டுக்காரர் தனது ‘கிளாஸ்’சை உயர்த்தி ‘சியர்ஸ்’ சொல்ல இருவரது ‘கிளாஸ்’களும் ஒன்றையொன்று இலேசாக மோதி ‘டிரிங்’ என்று ஒலியெழுப்பின.
இருவரும் கண்களை மூடிக்கொண்டு முதலாவது ‘ட்ரிங்’-ஐ ஒரே மிடற்றில் உள்ளே செலுத்தினார்கள். வீட்டுக்காரர் ‘டிஸ்’களைஒன்றுமாறி ஒன்றாய் நீட்ட அவித்த முட்டையையும் பொரித்த கோழியிறைச்சியையும் செட்டியார் சுவைத்தார். இப்போது இருவரும் நெடுநாளைய நண்பர்களைப்போல அன்னியோன்யமாகிப் போனதுபோல இருந்தது.
இரண்டாவது ‘ட்ரிங்’ஐயும் ஊற்றி மெல்ல மெல்ல இருவரும் உமிஞ்ச ஆரம்பித்தபோது வீட்டுக்காரர் செட்டியாரைப் பார்த்து ‘நாம இப்ப நம்மட‘புத்தா’ட கதை சொல்லிறது’ என்று கதையை ஆரம்பித்தார். செட்டியாரை மீண்டும் ஆரம்பத்தில் இருந்ததுபோன்ற அச்ச உணர்வு ஆட்கொண்டாலும் சமாளித்துக் கொண்டார். உள்ளேபோன மதுத்துளிகளும் சற்று உற்சாகத்தை வரவழைத்திருந்தது.
வீட்டுக்காரர் இரண்டாவது ‘ட்ரிங்’ஐ உமிஞ்சியபடியே கதையை ஆரம்பித்தார்.
‘ஆனையிறவில ரெண்டுகால் புலிக்கும் - ‘கொட்டியா’வுக்கும் ஆமிக்கும் சண்ட நடந்ததானே. அதில நம்மட ‘புத்தா’-மவன் நந்தசேனவும் சண்டபோட்டது’ என்று கதையைத் தொடங்கச் செட்டியாருக்கு உற்சாகமெல்லாம் ஓடி ஒளிந்து உதறல் எடுக்க ஆரம்பித்தது. காட்டிக்கொள்ளாமல் கதைக்குக் கவனமாகக் காதுகொடுப்பதுபோல் பாவனை பண்ணினார்.
‘நாம சொல்லிற கத கேட்டுப் பயப்படவாணாம்’ என்ற பீடிகையுடன் வீட்டுக்காரர் கதையைத் தொடர்ந்தார். செட்டியாரும் ‘ஏறநனைந்தால் கூதலென்ன குளிரென்ன’ என்ற மனோநிலையில் நடப்பது நடக்கட்டும் என்று அசட்டுத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு இரண்டாவது ‘ட்ரிங்’ஐக் காலிசெய்துவிட்டு மூன்றாவது ‘ட்ரிங்’ஐ ‘கிளாஸ்’சில் நிரப்பிக் கொண்டார்.
செட்டியாரைத் தொடர்ந்து வீட்டுக்காரரும் தனது இரண்டாவது ‘டிரிங்’-ஐ முடித்துவிட்டு மூன்றாவது ‘ட்ரிங்’க்குத் தாவினார்.
‘சண்டையில நம்மட ‘புத்தா’ நந்தசேன செத்துப்போனது’ என்று வீட்டுக்காரர் கதையைத் தொடரச் செட்டியாருக்கு மண்டையிலே யாரோ ஓங்கி அடித்தது போலிருந்தது. இவரோடு வராமல் பஸ் நிலையத்திலேயே நின்றிருக்கலாம்போல என்றெண்ணினார். இந்த வீட்டிலேயே என் கதை முடிந்தாலும் முடியட்டும். கடவுள் விட்ட வழி அதுதான் என்றால் என்ன செய்வதுஎனத் தைரியத்தைச் செயற்கையாக வரவழைத்துக் கொண்டு ‘படக்’கென்று மூன்றாவது ‘டிரிங்’ ஐக் காலிசெய்தார். இனி எந்தக் கதையையும் கேட்க அவர் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டார். மதுவும் தனது வேலையை முடுக்கிவிட உடம்பும் மனமும் முறுக்கேறியது.
வீட்டுக்காரர் கதையைத் தொடர்ந்தார்.
‘செத்துப்போன நம்மட ‘புத்தா’ நந்தசேனட உடம்ப ஒரு பொட்டியில போட்டு மூடிச் ‘சீல்’ பண்ணி திறக்க வாணாம் எண்டுசொல்லிப் பொட்டிய எங்கட ஊட்டுக்கு ஆமி வாகனத்தில அனுப்பிவைச்சது. நாங்க எல்லாம் கத்திக் குளரி சொந்தக்காரங்கஎல்லாம் வந்து செத்தவீடு செஞ்சி முடிஞ்சது’ என்று கூறி நிறுத்திய வீட்டுக்காரர் செட்டியாரிடம் ‘கத இன்னும் முடியல்லே. பயப்படவாணாம். இனித்தான் ‘கிளைமக்ஸ்’ இரிக்கிறது’ என்று கூறியபடியே செட்டியாருக்குச் சமதையாக மூன்றாவது ‘ட்ரிங்’கைக் காலிசெய்தார்.
‘நம்மட ‘புத்தா’ட செத்தவீடு செஞ்சி முடிஞ்சி இரண்டு நாளையால இப்படித்தான் ஒரு இரவு நேரம் செத்துப்போன நம்மட ‘புத்தா’ நந்தசேன ஊட்டுக்கு வாறது’ என்று சொல்லிச் சிரித்தார் வீட்டுக்காரர்.
செட்டியாருக்கு என்ன சொல்கிறார் இவர் என்றே விளங்கவில்லை. நெற்றியை உயர்த்தி வீட்டுக்காரரை வியப்போடு நோக்கினார்.
‘அதிங் என்ன நடந்தது எண்டா, சண்டையில குண்டுவெடிச்சி மிச்சம் ஆமி செத்துப்போறதானே. அப்படிச் செத்த ஆக்களிலஆர்செத்த, ஆர் செத்துப்போக இல்லே எண்ட கணக்குத் தெரியாது. நம்மட புத்தாவும் செத்துப்போனது எண்டு நினைச்சி செத்த ஆக்களில ஒருத்தரிர வெடிச்சிப்போன தலை, இன்னொரு ஆளிர கால், வேறு ஆளிர கை இப்படிப் பொறுக்கி எல்லாத்தையும் சேத்து எடுத்து ‘பொலித்தீன்’ பையில போட்டு அடையாளம் தெரியாதுதானே பொட்டியில வைச்சி மூடி ‘சீல்’ பண்ணி திறக்க வாணாம் எண்டு சொல்லி நந்தசேன எண்டு ஊட்டுக்கு அனுப்பிவைச்சது. சண்டையில நந்தசேன செத்துப்போக இல்லே. அவன் சண்டையில தப்பிஓடி எப்பிடியோ ரெண்டு மூண்டு நாளையில களைச்சு உழுந்து எங்கட ஊட்ட வந்து சேந்தது’ என்று கதையை முடித்துச் சிரித்தார் வீட்டுக்காரர்.
செட்டியாருக்கும் தன்னையறியாமல் சிரிப்பு வந்தது...
‘சிரிக்கவாணாம். பொய் சொல்ல இல்லே. உண்மை. நாம சொன்னது நடந்தது தான்’ என்ற வீட்டுக்காரர் செட்டியாரைப் பார்த்து’ இன்னும் ஒண்டு ‘ட்ரிங்’ எடுங்க. எடுத்துச் சாப்பிடுவம். சாப்பிட்டு நல்லா நித்திர கொள்ளுங்க. காலம நேரத்துக்கு மீகமுவ பஸ் எடுக்கவேணும் தானே’ என்றார்.
செட்டியார் போதும் என்று சைகை காட்டினார்.
வீட்டுக்காரர் தன்னுடைய ‘கிளாஸ்’சில் மதுவையும் சோடாவையும் அரைவாசிக்கு நிரப்பி கால்வாசியை அவர் அருந்திவிட்டு மீதியைச் செட்டியாரிடம் ‘இது லவ் சிப் எடுங்க’ என்று நீட்டினார்.
செட்டியாருக்கு இப்போது பயமும் தெளிந்து மனமும் தெளிந்தது. நீட்டிய ‘கிளாஸ்’ சில் மீதியிருந்ததை உற்சாகம் மேலிட ஒரேமுடக்கில் உள்ளே ஊற்றினார்.
‘லவ் சிப்’ பரிமாற்றம் முடிந்த கையோடு இருவரும் சாப்பிடவென்று எழுந்தனர்.
நன்றி
