ஆளுயர ஜன்னல்
சகி
தமிழில்: அரவிந்த் வடசேரி
எழுத்தாளரைப் பற்றியது:
(சகி எனும் புனைபெயரில் அறியப்படுபவர் ஆங்கில எழுத்தாளர் H.H. முன்ரோ. 1870-1916 கால அளவில் வாழ்ந்த இவர் ஓ. ஹென்றி போன்ற சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கு நிகரானவர். இவரது கதைகள் நையாண்டியும் நகைச்சுவையும் ததும்ப சமூகத்தை விமர்சனம் செய்பவை. அந்தக்கால வழக்கப்படி பத்திரிகைகளில் முதலில் வெளியான இவரது சிறுகதைகள் பல தொகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளன. சொந்தப் பெயரில் வெளியிட்ட The rise of the Russian empire எனும் வரலாற்று ஆராய்ச்சி நூலும் நாவல்களும் நாடகங்களும் இயற்றியுள்ளார். பிரபல Alice in wonderland நூலினை பகடி செய்து The Westminster Alice மற்றும் ஜேர்மனியின் ஆக்கிரமிப்பில் இங்கிலாந்து இருப்பதான கற்பனை When William Came போன்றவை குறிப்பிடத்தக்க படைப்புகள். சகியின் தந்தை பர்மாவில் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பணியாற்றிய காலத்தில் பிறந்தவர் முன்ரோ. முன்ரோ தானாக முன்வந்து இங்கிலாந்தின் குதிரைப்படையில் சேர்ந்து முதலாம் உலகப் போரில் பங்குகொண்டார். பலமுறை போரில் காயமடைந்த இவர் பிரான்ஸில் போர்க்களத்தில் எதிரியின் தொலைவிலிருந்து குறிபார்த்து சுடும் போராளியின் (sniper) குண்டினால் வீரமரணம் அடைந்தார். ‘அந்த நாசமாய்ப் போன சிகரெட்டை அணைத்துவிடு’ என்பது இவரது இறுதி வார்த்தைகளாக இருந்தன எனச் சொல்லப்படுகிறது.)
கதைக்குள் செல்வோம்...
ஆளுயர ஜன்னல்
‘அத்தை இப்ப வந்துடுவாங்க,’ மிகவும் அமைதியான அந்தப் பதினைந்து வயது இளம்பெண் நட்டேலிடம் சொன்னாள்; ‘அது வரையிலும் நீங்கள் என்னைப் பொறுத்துக்கொண்டு என்னிடம் பேசிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.’
நட்டேல் வரவிருக்கும் அத்தையை விட்டுக்கொடுக்காமல் தற்போதுள்ள மருமகளைப் புகழ்ச்சியால் வீழ்த்தத் தோதான வார்த்தைகளைக் கண்டடைய பெருமுயற்சி மேற்கொண்டார். அதே நேரம், முற்றிலும் அறிமுகமற்றவர்களுடனான இது போன்ற மரியாதை நிமித்த தொடர் சந்திப்புகள் தற்போதுள்ள தான் அனுபவிப்பதாகச் சொல்லப்படும் பதட்டத்தைத் தணிக்க எவ்வளவு உதவியாக இருக்குமோ என உள்ளுக்குள் ஐயம் கொண்டார் அவர்.
‘அது எப்படியிருக்கும் என்பது எனக்குத் தெரியும்,’ கிராமப்பகுதிக்கு அமைதியைத் தேடிச் செல்லும் அவரிடம் சகோதரி சொன்னார், ‘அங்கே நீ யாருடனும் பேசாமல் உனக்குள்ளேயே புதைந்து கிடப்பாய், உன் பதட்டம் தணிக்கப்படுவதற்கு மாறாக மோசாமாகத்தான் போகும். அங்கே எனக்குத் தெரிந்த அனைவருக்கும் அறிமுகக் கடிதம் தருகிறேன். அவர்களில் சிலர் மிகவும் நேர்த்தியானவர்கள் என்பது என் ஞாபகம்.’
திருமதி சாப்பிள்டன், அறிமுகக் கடிதங்களில் ஒன்றைக் கொடுக்க தற்போது வந்திருக்கும் மாது, நேர்த்தியானவர்களில் வருவாரா என நட்டேல் வியந்தார்.
அவர்களது சந்திப்பில் மௌனம் போதுமான அளவை எட்டிவிட்டது என்பதைக் கணித்து, ‘இங்கே நிறையப் பேரை உங்களுக்குத் தெரியுமா?’ என மருமகள் கேட்டாள்.
‘யாரையும் தெரியாது,’ நட்டேல் சொன்னார். ‘என் சகோதரி நாலு வருடங்களுக்கு முன்னர் இங்கே தங்கியிருந்தார், சாமியார் வீட்டில், தெரியும் இல்லையா. அவர்தான் இங்கே இருக்கும் சிலருக்கு அறிமுகக் கடிதம் தந்து அனுப்பியுள்ளார்.’
அவர் கடைசி வரியை, வருத்தம் வெளிப்படையாகத் தெரியும் தொனியில் சொன்னார்.
‘அப்போ, சொல்லப்போனா உங்களுக்கு எங்க அத்தையைப் பற்றி எதுவுமே தெரியாது, இல்லையா?’ அந்த அமைதியான பெண் தொடர்ந்தாள்.
‘அவருடைய பெயரும் முகவரியும் மட்டும்தான்’, வந்திருந்தவர் ஒப்புக்கொண்டார்.
திருமதி சாப்பிள்டன் கணவனுடன் இருக்கிறாரா இல்லை விதவையா என யோசித்துக் கொண்டிருந்தார் அவர். அந்த அறையின் இனம் காண முடியாத ஏதோ ஒன்று ஆண்களின் வசிப்பிடம் என்பதை உணர்த்தியது.
‘மூன்று ஆண்டுகளுக்கு முன்தான் அவர் வாழ்க்கையில் ஒரு பெரும் துயரம் நிகழ்ந்தது’ அந்தச் சிறுமி சொன்னாள்; ‘உங்களின் சகோதரி ஊரைவிட்டுப் போன பிறகாக இருக்கும்.’
‘துயரமா?’ நட்டேல் கேட்டார்; அந்த அமைதியான கிராமப் பகுதியில் துயரங்கள் பொருத்தமற்றவையாகத் தோன்றின.
‘ஒரு அக்டோபர் மாத மத்தியானத்தில் அந்த ஜன்னலை ஏன் விரியத் திறந்து வைத்திருக்கிறோம் என நீங்கள் வியக்கக் கூடும்,’ முற்றத்தின் புல்தரையினைப் பார்த்திருக்கும் பெரிய ஆளுயர பிரெஞ்ச் ஜன்னலைக் காட்டி மருமகள் சொன்னாள்.
‘இந்த ஆண்டு சூடு அதிகம்தான்’ நட்டேல் சொன்னார்; ‘ஆனால், அந்தத் துயரத்திற்கும் ஜன்னல் திறந்திருப்பதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?’
‘அந்த ஜன்னலின் வழியாகத்தான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரான இதே நாளில் அத்தையின் கணவரும் அவரது இரண்டு இளம் வயது சகோதரர்களும் அந்த நாளுக்கான வேட்டைக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் திரும்பி வரவே இல்லை. முட்புதர்களைத் தாண்டி அவர்களுக்கு விருப்பமான வேட்டை நிலத்திற்குச் செல்கையில் மூவரையும் ஒரு சதிகாரச் சதுப்பு விழுங்கிவிட்டது. அது எவ்வளவு கொடுமையான மழை நிரம்பிய கோடையாக இருந்தது தெரியுமா. மற்ற வருடங்களில் ஆபத்து ஏதுமற்றிருந்த அந்தப் பகுதி எந்த அறிகுறிகளுமின்றி திடீரென நொறுங்கியது. அவர்களது உடல்கள்கூட கிடைக்கவில்லை. அதுதான் மிகவும் கொடுமை.’ இந்த இடத்தில் அவளது குரலிலிருந்த அமைதி குலைந்து சாதாரண மனித நிலைக்கு தடுமாறிச் சரிந்தது. ‘பாவம் அத்தை, என்றாவது ஒருநாள், அவர்களுடன் காணாமல் போன அந்தச் செவலை நாயோடு, அவர்கள் திரும்பி வந்து, வழக்கம்போல அந்த ஆளுயர ஜன்னலின் வழியாக உள்ளே வருவார்கள் என இப்போதும் நம்பிக்கொண்டிருக்கிறார். அதனால்தான் ஒவ்வொரு நாளும் மாலையிலிருந்து நன்கு இருட்டும் வரையிலும் அந்த ஜன்னல் திறந்து வைக்கப்படுகிறது. பாவம் என் பிரியமான அத்தை, பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார் அவர்கள் எப்படி கிளம்பிச் சென்றார்கள் என்பதை, அவரது கணவர் வெள்ளை நிற மழைக் கோட்டினைக் கையில் போட்டுக்கொண்டும், ரோனி, அவரது கடைசி சகோதரர், அத்தைக்கு எரிச்சலூட்டும் என்பதற்காக, ‘பர்ட்டீ, நீ ஏன் குதிக்கிறாய்?’ எனப் பாடிக் கொண்டு, வழக்கம் போல கிண்டல் செய்து கொண்டும். உங்களுக்குத் தெரியுமா, சில நேரங்களில் இப்போதும்கூட, இது போன்ற அமைதியான மாலை வேளைகளில், அவர்கள் அனைவரும் இந்தத் திறந்திருக்கும் ஜன்னலின் வழியாக உள்ளே வருவார்கள் என்பதான ஒரு அச்சமூட்டும் எண்ணம் எனக்குள் எழும்.’
ஒரு சிறு நடுக்கத்துடன் அவள் நிறுத்தினாள். அதே நேரம், தாமதமாக வந்ததற்காக சரமாரியாக மன்னிப்பைக் கோரியபடி அத்தை புயலாக நுழைந்தது நட்டேலுக்கு ஆறுதலாக அமைந்தது.
‘வர்ணா உங்களைச் சலிப்படையாமல் வைத்திருந்தாள் என நம்புகிறேன்.’ அவர் சொன்னார்.
‘இவர் மிகவும் சுவாரசியமானவர் ‘நட்டேல் சொன்னார்.
‘ஜன்னல் திறந்திருப்பது பரவாயில்லை அல்லவா?’ திருமதி சாப்பிள்டன் உற்சாகமாகக் கேட்டார்; ‘என் கணவரும் சகோதரர்களும் வேட்டை முடிந்து நேராக இங்கே வருவார்கள், அவர்கள் எப்பொழுதும் இந்த வழியாகத்தான் வருவது வழக்கம். அவர்கள் இன்று துப்பாக்கி சுட சதுப்புகளுக்குச் சென்றுள்ளனர், அதனால் அவர்கள் உள்ளே வரும்போது என் கார்பெட்கள் அனைத்தும் சகதியாகி விடும். நீங்கள் ஆண்கள் அப்படித்தான் இல்லையா? அதனால் இப்படி ஜன்னல் வழியாக வருவார்கள்.’
துப்பாக்கி சுடுவது, பறவைகளுக்கு ஏற்பட்டுள்ள பஞ்சம், குளிர்காலத்தில் வாத்துகள் இருக்க வாய்ப்பு என எதை எதையோ குறித்தெல்லாம் அவர் ஏதேதோ லொடலொடத்துக் கொண்டிருந்தார். நட்டேலுக்கு இவை அனைத்தும் பெரிய கொடுமையாக இருந்தது. கொடூரம் குறைந்த விஷயங்களுக்குப் பேச்சைத் திசைதிருப்ப அவர் மேற்கொண்ட கடுமையான முயற்சிகள் அரைகுறை வெற்றிகளை மட்டுமே ஈட்டின, அவரது உபசரிப்பாளரின் கவனத்தின் சிறு பங்கு மட்டுமே அவரின் மீது உள்ளது என்பதை அவர் கண்டார், அவளுடைய கண்கள் நிரந்தரமாக அவரைத் தாண்டி, திறந்திருந்த ஜன்னலுக்கும் அதற்கப்பாலுள்ள புல்வெளிக்கும் வழிதவறிக்கொண்டிருந்தது. சரியாக அந்தத் துயரத்தின் ஆண்டு நிறைவு அன்று அவர் இவர்களைச் சந்திக்க வந்தது நிச்சயமாக ஒரு துரதிர்ஷ்டவசமான தற்செயல் நிகழ்வு என அவர் எண்ணினார்.
‘முழு ஓய்வு எடுக்கவும், உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்க்கவும், கடுமையான உடல் உழைப்பினை விலக்கவும் ஆணையிடுவதில் மாற்றுக் கருத்து அற்றவர்களாக இருக்கிறார்கள், என் டாக்டர்கள் அனைவரும்,’ முற்றிலும் பழக்கமில்லாதவர்களும் தற்செயலாக சந்திக்க நேர்ந்தவர்களும்கூட ஒருவரது நோய்கள் மற்றும் உடல் உபாதைகளுக்கான காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் அறிந்துக்கொள்ள பெரும்பசி கொண்டிருக்கிறார்கள் எனும் பரவலான மாயத்தோற்றதில் உழன்றுகொண்டிருந்த நட்டேல் தெரிவித்தார். ‘ஆனால், உணவுக் கட்டுப்பாடு குறித்து அவர்களால் அப்படியான ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை,’ அவர் தொடர்ந்தார்.
‘இல்லையா?’ கடைசி நொடியில் ஒரு கொட்டாவியின் இடத்தைப் பிடித்த ஒரு குரலில் கேட்டார் திருமதி சாப்பிள்டன். பிறகு திடீரென விழிப்படைந்து கூர்ந்து கவனித்து உற்சாகமடைந்தார் - ஆனால் அது நட்டேல் சொல்லிக்கொண்டிருந்ததன்பால் அல்ல.
‘ஒருவழியாக அவர்கள் வந்துவிட்டனர்!’ அவர் கத்தினார். ‘சரியாக தேநீர் வேளைக்கு, மூக்குவரை சேற்றில் மூழ்கியவர்களைப் போலத்தானே தெரிகிறார்கள் அல்லவா!’
நட்டேல் மெலிதாக நடுங்கினார், புரிதலின் அனுதாபம் தெரிவிக்கும் பார்வையுடன் அவர் மருமகளைப் பார்த்தார். அந்தப் பெண் திகில் நிரம்பிய கண்கள் கொண்டு திறந்த ஜன்னலின் வழியாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். பெயர் தெரியாத ஒரு அச்சத்தின் சில்லிட்ட அதிர்ச்சியில் நட்டேல் தனது இருக்கையில் சுழன்று அந்தத் திசையை நோக்கினார்.
மங்கலான மாலை மயங்கும் ஒளியில் மூன்று உருவங்கள் புல்வெளியைத் தாண்டி ஜன்னலை நோக்கி வந்துக் கொண்டிருந்தனர், அவர்கள் அனைவரின் கையிலும் துப்பாக்கி இருந்தது, ஒருவரின் தோளில் கூடுதல் சுமையாக ஒரு வெள்ளை நிறக் கோட் தொங்கிக் கொண்டு இருந்தது. ஒரு களைத்துப் போன செவலை வேட்டைநாய் அவர்களை நெருக்கமாகத் தொடர்ந்து வந்துக்கொண்டிருந்தது. சத்தமின்றி அவர்கள் வீட்டை நெருங்கினர், அப்பொழுது கருக்கலிலிருந்து ஒரு கட்டையான இளமைக் குரல் பாடத் தொடங்கியது: ‘நான் கேட்கிறேன், பர்ட்டீ, நீ ஏன் குதிக்கிறாய்?’
நட்டேல் வெறித்தனமாக தனது தொப்பியையும் கைத்தடியையும் பறித்து எடுத்தார்; வாயில்படி, சரளைக்கல் நடைபாதை, வெளிப்புற கேட் அனைத்தும் அவரது தலைதெறித்த பின்வாங்கலின் மங்கலாகத் தெரிந்த படிநிலைகளாக இருந்தன. வீதியில் வந்துக் கொண்டிருந்த ஒரு சைக்கிளோட்டி அவருடன் மோதுவதைத் தவிர்க்க வேலிக்குள் பாய வேண்டியிருந்தது.
‘வந்ததுட்டோம்மா, ஜன்னலின் வழியாக உள்ளே நுழைந்தபடி வெள்ளை நிற மழைக்கோட் வைத்திருந்த நபர் சொன்னார்,’ சேறு நல்லாவே இருக்கு, ஆனால் ஏறக்குறைய காய்ந்துவிட்டது. யார் அது, நாங்கள் உள்ளே வரும்போது தெறித்து ஓடிய நபர்?’
‘நட்டேல், மிகவும் விந்தையான ஒரு மனிதர்,’ திருமதி சாப்பிள்டன் சொன்னார்; ‘அவரது நோயமையைப் பற்றி மட்டுமே பேசினார், நீங்கள் வந்ததும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டார். பேயைக் கண்டிருப்பாரோ எனத்தான் யாரும் எண்ணக்கூடும். ‘
‘இந்த நாயைப் பார்த்துதான் என நினைக்கிறேன்,’ மருமகள் அமைதியாகச் சொன்னாள், ‘நாய்கள் என்றாலே நடுக்கம். கங்கைக் கரையில் ஏதோ ஒரு இடுகாட்டுக்கு ஒரு தெருநாய்க் கூட்டம் அவரை விரட்டிச் சென்றதாம், அவருக்கு மேலாக பிராணிகள் உறுமிக்கொண்டும் இளித்துக்கொண்டும் நுரைதள்ளிக்கொண்டும் இருக்க இரவு முழுவதும் புதிதாக தோண்டப்பட்ட கல்லறை ஒன்றில் படுத்துக் கிடந்தாராம். யாராக இருந்தாலும் நிலைகுலைய போதுமானது அல்லவா.’
அவளுடைய தனித்துவமே உடனடியாக கதை கட்டுதல் தான்.
நன்றி
