Thaiveedu
Latest Articles
ஆளுமை

முலையறுகாதை!பெண் துயரப் பெருங்கதை - 13

மா. சித்திவினாயகம்
மா. சித்திவினாயகம்
March - March 10, 2026

முலையறுகாதை!

பெண் துயரப் பெருங்கதை - 13

- மா. சித்திவினாயகம்

நிலவொளி சிந்தும் கப்பலின் மேல்தட்டில் அமர்ந்திருந்த செம்பகத்தின் கண்கள் கலங்கியிருந்தன. மனதினுள் பெரும் பாரம். கணேசனைக் கூர்ந்து நோக்கியவளின் கண்ணுள் கடலின் எல்லையற்ற ஆழம்போல் பெருஞ்சோகம் திரையிட்டது.

‘கணேசா, இந்தக் கப்பலில் ஏறியிருப்பது வெறும் மனிதர்கள் மட்டுமல்ல; தங்களின், மொழியை, உறவுகளை, மண்ணை, கலாசார விழுமியங்களைத் தொலைத்துவிட்டு, கண்ணீரை மட்டும் துணையாகக் கொண்டு புலம் பெயரும் பாவப்பட்ட ஆன்மாக்கள். இதுவெறும் மரக்கப்பல் அல்ல, தத்தமது கனவுகளையும் ஏக்கங்களையும் சுமந்து செல்லும் ஒரு மிதக்கும் சிறை.

அவர்கள் கண்கள் விட்டு வந்த கரையைத் தேடுகின்றன. அங்கே மறைந்து கொண்டிருப்பது வெறும் தேசம் மட்டுமல்ல; ஒரு இனத்தின் அடையாளமும், மூதாதையர்கள் புதைக்கப்பட்ட புனித மண்ணும்தான். 'இனி எந்த நாட்டுச் சுடலையில் எம் உடல் வேகுமோ?' என்று பெருமூச்சோடு நிறுத்தினாள் அவள்.

ஊரில் விட்டு வந்த அந்தச் சின்னஞ்சிறு சிரிப்புகள், கேரளத்து மண்ணின் அந்தச் சுகந்த மணம், வழியனுப்பி வைத்த முதியோரின் தளர்ந்த கைகள், அவள் வளர்த்த ஆட்டுக்குட்டி, நாய், முல்லைச்செடி, அவள் ஊஞ்சல் கட்டி ஆடிய ஆலமரம்... இவற்றை மீண்டும் நாம் காண்போமா? தன் சுயத்தை இழந்து, அகதியாகிக் கப்பலேறும் ஒவ்வொரு மனிதரும் ஒரு பெரும் மௌனச்சோகத்தின் சாட்சி. கரையே தெரியாத இந்தப் பெருங்கடலில், தங்களின் அடையாளத்தைத் தொலைத்துவிட்டுப் புதியதொரு திசை நோக்கி நகர்கிறார்கள்’.

அந்தப் பெருங்கடலின் அலைகள், ஓர் இனத்தின் வரலாற்றையே அடித்துச் செல்லத் துடிப்பதுபோலக் கப்பலில் மோதிக் கொண்டிருந்தன.

கப்பல் நகர நகர, அடிவானத்தில் நிலம் மெல்லக் கரைந்து கொண்டிருந்தது... செம்பகம் கடலைப் பார்த்தவாறே பேசினாள். அவளது சொற்கள் ஒவ்வொன்றும் அலைகளின் ஓசையோடு கலந்து ஒரு காவியத்துயராக உருவெடுத்தன.

பார் கணேசா, நிலம் மறையும் போதே எங்களது அடையாளங்களும், மொழிகளும், கலாசாரங்களும் கூடவே மங்கத் தொடங்குகின்றன. சுற்றிலும் எல்லையற்ற நீல நிறக் கடல்... ஆனால் இந்தக் கப்பலில் இருப்பவர்களோ, சொந்த நாடிழக்கும் சோகப் பெருமூச்சுப் பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தக் கடலின் ஆழத்தை வேண்டுமானால் மனிதர் அளந்துவிடலாம்; ஆனால், தன் சொந்த மண்ணைப் பிரியும் ஓர் ஏழையின் ஏக்கத்தை அளக்க எந்தக் கருவியால் முடியும்? இந்த அலையடிக்கும் ஒவ்வொரு நீர்த்துளியிலும் ஏழை சிந்திய கண்ணீரின் உப்பு உறைந்திருக்கிறது.

திசை தெரியாத இந்தப் பெருவெளியில், கப்பலில் ஏறியுள்ளவர்க்குத் தெரிந்த ஒரே நம்பிக்கைத் திசை - ‘பசி’ என்னும் கொடுமையிலிருந்து தம் குடும்பத்தை மீட்கப்போகும் மலையகத்தினை சென்றடைகிற பெருங் கனவு மட்டும்தான்.

அந்தக் கனவே இப்போது எம்மை உயிர்க்கச் செய்கிறதென்றாள் செம்பகம்.

உண்மைதான்... எல்லோர் உள்ளத்துள்ளும் கவலையெனும் பெரு நெருப்பு எரிகிறதுதான். ஆனாலும் அது இலங்கையி்ல் கால் வைத்தவுடன் அனைத்தும் மறந்து கவலைகள் தீரும் என்றான் இலங்காபுரி சொர்க்கத் தீவு என்றெண்ணிய கணேசன்.

செம்பகத்தின் கவலையை மறக்க பேச்சைத் திசை திருப்பினான்.

நாமிருக்கும் இந்தப் பெருங்கடல் சாதாரணமானது அல்ல. இது பிரளயத்திற்கு முன்பிருந்த பெருநிலம். ஊழி அழிப்பதற்கு முன்பு உலகமெங்கும் கோலோச்சிய குமரிப் பெருமண்ணும், பஃறுளி ஆறும் அமிழ்ந்து கிடக்கிற கொடுங்கடல் இது. நம் மூதாதையர் வாழ்ந்த நிலத்தின் மீதேநாம் கடலாகி இன்று அலைக்கழிக்கப்படுகிறோம் என்றான் கணேசன்...

நீண்டு கிடந்த அந்த நீலக் கடலின் நடுவே, அவர்களின் அந்தப் பெரிய கப்பல் ஒரு சிறு சருகைப் போல அலைகளால் அலைக்கழிக்கப்பட்டது.

செம்பகம்... கல்கத்தா துறைமுகமே அமைதியில் உறைந்திருந்த 1796-இல், ‘கல்கத்தா வர்த்தமானி’யில் ஒரு செய்தி வெளியானது: சுதேசிகள் கப்பல் கட்டுவது தடை... அதேபோல் இந்தியத் தச்சர்களும், கொல்லர்களும் இனி கப்பல்களில் பணியாற்றத் தடை!’ என்பதுதான் அந்தச் செய்தி. முன்பெல்லாம் இந்தக் கடல்கள் எம் மரக் கலங்களால் மட்டுமே நிறைந்த கடல். எம்மவர்கள் கப்பல் கட்டும் பேராற்றலுடையவர்கள். அதையுணர்ந்துதான் வெள்ளையர்கள் சுதேசிக் கப்பல்களுக்கும், அதைக் கட்டுகிற ஊழியர்கட்கும் தடை விதித்தார்கள். அதுவரை சரக்குகளை சுமந்துநின்ற சுதேசிக் கப்பல்கள் தொலைய, வெள்ளையர் கப்பல்கள் மனிதர்களை அடிமைகளாகச் சுமந்து செல்லும் இருண்ட கூடாரங்களாக மாறிக்கொண்டிருந்தன.

செம்பகம் தன் குரலைச் சற்றே உயர்த்தி அடடா அதனால்தானா எம்மவர்கள் எவரும் இந்தப் படகுகளின் ஓட்டிகளாக இல்லை என்றாள்.

ஆனால், இந்தப் பெருங்கடல் அருண்மொழிச் சோழனின் நாவாய்கள் ஆதிக்கம் செலுத்திய ஆடற்களம். ஈழம் முதல் கடாரம் வரை நம் முன்னோர் வெற்றிக் கொடி நாட்டியவர்கள். சங்ககாலத் தமிழர்களின் மரக்கலங்கள் அத்தனை கடல்களிலும் பயணித்து, தென்னாசிய நாடுகளையே அதிரச் செய்தன.’

கணேசன் பெருமிதத்தோடு சொல்ல, ‘பின்பு ஏன் நம்மவர்களை கப்பல் பணியிலிருந்து தடுத்திருக்கிறார்கள்? என்றாள் செம்பகம் வெகுளியாக...

‘அச்சம்தான் காரணம்! இந்தியத் தச்சர்கள் தங்களுக்கு நிகராகக் கப்பல்களைக் கட்டிவிட்டால், தங்கள் கடல் கொள்ளையை, வணிகத்தை நாம் முறியடித்துவிடுவோம் என்று வெள்ளையர்கள் பயப்படுகிறார்கள். கடல் ஆண்ட பரம்பரை இன்று அடிமை களாக மாற்றப்பட்டிருக்கிறது. வந்தாரையெல்லாம் பின்விளைவு யோசிக்காமல் அரவணைத்ததே நமக்குப் பெரு வினையாக முடிந்துவிட்டது.’

கணேசன் சோகத்தோடு சொல்லி முடிக்கையில் அவர்கள் பயணித்துக்கொண்டிருந்த அந்தக் கப்பல், ஒரு காலத்தின் தமிழர் சரித்திரப் பெருநிலமான குமரிக் கண்டத்தின்மேல் தம்மைச் சுமந்து செல்வது போலச் செம்பகத்திற்குத் தோன்றியது.

செம்பகம் கடலைப் பார்த்தவாறே, தமிழர் வரலாற்றின் அறியாப் பெருவாழ்வு ஆழப் புதைந்து இந்தக் கடலுள் இருக்கின்றதா என்றாள்.

‘ஆமாம் செம்பகம்... பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல்கொள்ள’ எனச் சிலப்பதிகாரம் சொல்கிற கடல் கொண்ட தென்னாடு இதன் கீழேதான் உள்ளது. இன்றைக்கு லெமூரியா எனப்படும் இந்தப் பகுதியில் 49 பெரு நாடுகள் இருந்ததாகவும், அவை ஏழ்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு என ஏழு பிரிவுகளாக வகுக்கப்பட்டிருந்ததாகவும் சொல்கின்றார்கள்... இந்தக் கடல் வெறும் தண்ணீரால் மட்டும் ஆனதல்ல. இது நம் முன்னோர்கள் நடந்த பாதை’ .இறையனார் அகப்பொருளுரை சொல்லுகிற கபாட புரத் தமிழ் சங்கம் அழிந்து கிடப்பதும் இந்த ஆழக் கடலுள் தான்... இந்தக் கடலிற்குமுன்னதான எம் பொற்கால வரலாறு அது...

கடலையே ஆண்ட இனம் தன் சொந்த மண்ணிலேயே இன்று அந்நியப்பட்டு நிற்கின்றோம். அந்தச் சோகத்தைத்தான் இந்தக் கடற்காற்று இன்றும் சுமந்து கொண்டிருக்கிறது.

செம்பகம் தன் பார்வையைத் தூரத்து அலைகளுக்குத் திருப்பினாள். நிலவொளியில் துள்ளும் மீன்கள் வெள்ளித் துண்டுகளாக ஜொலித்தன.

‘ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், தமிழரின் சேர சோழ பாண்டியப் பேரரசுகளின் அனைத்து எல்லைகளும் நீண்டு விரிந்தவை... அன்று பாண்டிய நாட்டின் கீழ் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட துறைமுகங்கள் மிகப் பரபரப்பாக இயங்கிய காலம்...

அங்கே 'கம்மியர்கள்' என்று அழைக்கப்பட்ட தமிழ்க் கப்பல் கட்டும் கலைஞர்கள் இருந்தார்கள். அவர்கள் உறுதியான தேக்கு மரங்களில், தம் தொழில் நுட்ப அறிவைக் கொண்டு பிரம்மாண்டமான கப்பல்களை உருவாக்கினார்கள். சொல்லப்போனால், உலகின் முதல் கப்பலை வடிவமைத்த பெருமை அந்தத் தமிழ்க் கலைஞர்களுக்கே உரியது.

இவ்வளவு பெரிய கடலில் அவர்கள் வழிதவற மாட்டார்களா? எப்படி திசையறிந்தார்கள்?

கணேசன் கதையை ஒரு வினாடியில் நிறுத்தி செம்பகத்தைப் பார்த்தான். நிலவொளியில் அவள்முகம் ஒரு மர்மப் புன்னகையோடு மின்னியது.

‘திசையறியும் கருவியே இல்லாத அந்தக் காலத்தில், நம் முன்னோர் எதை வைத்து வழிகண்டார்கள் தெரியுமா?’ என்று கணேசன் சொல்ல, செம்பகம் ஆர்வத்துடன் அவனை நெருங்கி அமர்ந்தாள்.

காற்று வீசும் திசையை வைத்துப் பாய்மரங்களை அசைப்பது மாலுமிகளுக்கு கைவந்த கலை, அதைவிட ஆச்சரியம், அவர்கள் கடல் ஆமைகளை மிக அவதானித்து தமக்கான பாதைகளைக் கண்டறிந்தமை என்பதுவாகும். அந்த ஆமைகள் துடுப்புப் போடாமலே நீரோட்டத்தின் உதவியால் பல்லாயிரம் மைல்கள் பயணிப்பதைக் கண்ட எம் தமிழ் முன்னோர், அந்த நீரோட்டங்களையே தமது கப்பல்களுக்குப் பாதையாக்கினார்கள். உலகத்தின் 53-க்கும் மேற்பட்ட கடற்கரைகளுக்கு அந்த ஆமைகளே நமக்கு வழிகாட்டிகளாய் அமைந்தன' என்றான் கணேசன் ஒரு தேர்ந்த ஆய்வாளன் போல...

காலம் மெல்ல நகர்ந்தது. வணிகக் கப்பல்கள், இராசராச சோழன் மற்றும் இராசேந்திரசோழன் காலத்தில் வலிமைமிக்கப் போர்க் கப்பல்களாக மாறின. தென்கிழக்காசிய நாடுகள் எங்கும் சோழர்களின் புலிக்கொடி கம்பீரமாகப் பறந்த காலமது... அதனால்தான்' இன்று உலகத்தின் பல நாடுகளில் தமிழின் தாக்கம் இருப்பதையும், தமிழே மூத்த மொழி என்பவர்களையும் நாம் காணமுடிகிறது.’ என்று தொடர்ந்தான் கணேசன்.

பல வெளிநாட்டுச் சீமைகளில் இன்றும் தமிழ்ப் பெயர்களும், பண்பாடும் வேரூன்றி இருக்கின்றன. கடலின் அடியில் பாயும் ஒவ்வொரு நீரோட்டத்திற்கும் தமிழ்ப் பெயர் சூட்டி, உலகையே தன் அறிவால் ஆண்டவன் தமிழன்.'

செம்பகம் இப்போது வியப்புடன் கணேசனையும் கடலையும் பார்த்தான். அவளுக்கு அது வெறும் நீர்ப்பரப்பாகத் தெரியவில்லை; தமிழர்களின் வீரமும், அறிவும் கலந்த ஒரு மாபெரும் வரலாற்றின் சுவடாகத் தெரிந்தது.’

கணேசன் சொல்லச் சொல்ல, கப்பலைச் சுற்றியிருந்த அந்த நீலக்கடல் ஒரு பழைய வரலாற்றுப் புத்தகத்தைப் போலப் புரண்டு கொண்டிருந்தது.

செம்பகம் மெல்லக் கேட்டாள், ‘இவ்வளவு அறிவும் வீரமும் கொண்ட ஓர் இனம், இன்று எதனால் அகதிகளாகவும் கூலிகளாகவும் மாறி இந்தக் கப்பலில் கிடக்கிறோம்?’

அவளது கேள்விக்கு எந்த விடையை கணேசனால் சொல்ல முடியும்?

‘கணேசா, உற்றார் உறவுகளை எல்லாம் இழந்துவிட்டு, நாம் எங்கு போகின்றோமென்று கூடத்தெரியாத ஒரு பாழ் உலகத்திற்கல்லவா போய்க்கொண்டிருக்கிறோம்?’ என்று செம்பகம் விம்மினாள்.

‘மெல்லப் பேசு செம்பகம்!’ உயிர் பிழைக்க இது ஒன்றே எமக்கு வழி பாழ் உலகல்ல இலங்கை எம் வாழ்வளிக்கும் பேருலகு என்று சுற்றும் முற்றும் பார்த்தான் கணேசன்.

கேரளாவில் பெண்களுக்கு நடந்த கொடூரம் எல்லாம் கண்டு வந்தவள் செம்பகம்.

அதை விடவும் ஈனமான கொடூரம் அவர்கள் கப்பல் ஏறுவதற்காக நடந்து வந்து கொண்டிருந்தபோது பூதப்பாண்டியில் நடந்தது. ஒரு காலத்தில் பூதப்பாண்டியும், அழகிய பாண்டிய புரமும் பாண்டியர்களின் வீரம் செறிந்த மண். இன்று அடிமைத் தனத்தின் ரணங்களோடு ஆக்கினைப்பட்ட பூமியாய்க் கிடந்தது.

நள்ளிரவின் நிசப்தத்தில், காடுகளின் ஊடாகக் கணேசனும் செம்பகமும் தங்களின் அடிமை வாழ்வை அறுத்து நம்பூதிரிகளுக்கும், உள்ளூர் நாட்டாண்மைகட்கும் பயந்து இலங்கைக் கப்பலுக்கு ஓடிக்கொண்டிருந்த வேளையது. கால்களில் தைக்கும் முட்களை விடவும், தப்பித்து விடுதலையை நோக்கி ஓடும் வேகம் அவர்களை முன்னோக்கித் தள்ளி ஓட வைத்தது.

அதிகாலை விடியலில் நனைந்து கிடந்த பூதப்பாண்டி வயல்வெளிகளினூடாக அவர்கள் ஓடிக்கொண்டிருந்த போதுதான் அவர்கள் அந்த கொடூரக் காட்சியைக் கண்டு நிலை குலைந்து நின்றார்கள்.

ஒரு கொடிய பண்ணைக்காரன், மாட்டிற்குப் பதில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணை ஏரில் பூட்டினான். ஏர் முனையை விட அவளது பிரசவ வலி அவளைக் குத்தியது. ஊர் மக்கள் தடுத்தும் அவன் கேட்கவில்லை. இறுதியில், பனிக்குடம் உடைந்து அந்த மண்ணெல்லாம் அவள் இரத்தத்தால் சிவந்தது. அங்கேயே அவள் உயிர் பிரிந்தது,’

பெண் குலத்திற்கெதிரான பெரு அநீதி அது.

அவர்களால் என்ன செய்ய முடியும். தேம்பியழுத செம்பகத்தை அணைத்தவாறே கப்பலேறியவர்கள் அவர்கள்.

‘அன்னியர்களுக்கு எடுபிடி வேலை பார்க்கும் இந்த கொடூரவாட்சியில், ஏழைகளுக்கு இதுதான் கதி. அந்த அநீதிப் பூமியை விட்டு நாம் ஏறிய கப்பல் எவ்வளவோ மேல் என்றான் கணேசன்.

செம்பகம் நிமிர்ந்து உட்கார்ந்தாள். அவள் கண்களில் இப்போது கண்ணீருக்குப் பதில் கனல் தகித்தது. ‘இல்லை கணேசா! இந்தப் பெண்களின் சாபம் இவர்களைச் சும்மா விடாது. அன்று மதுரையை எரித்த கண்ணகியின் அதே சினம்தான் இதுவும். இந்தப் பெண்ணின் இரத்தத்திற்குச் சாட்சியாக, இனி வரும் உலகம் பெண்களின் போராட்டத்தை அங்கீகரிக்கும். பெண் அடிமை விலங்குகள் தெறிக்கும் ஒரு காலம் வரும். அன்று அகில உலகமே பெண்களுக்கென்று ஒரு தினத்தைப் போற்றும்!’ என்று தீர்க்கதரிசனமாகச் சொன்னாள்.

அவளது வார்த்தைகள் அந்த விடியல் பொழுதில் ஒரு சிறு ஒளிக்கீற்றாகத் தெரிந்தது.

‘உன் நம்பிக்கை வீண் போகாது செம்பகம். போராடுவோம், அடிமைத்தனம் இல்லாத புதிய உலகத்தைத் தேடி!’ என அவளது கையைப் பற்றிக்கொண்டான் கணேசன்.

கப்பல் ஆடியபடியே ஊர்ந்து கொண்டிருந்தது.

(தொடரும்...)

நன்றி