மனம் வருந்திய பாவி
- லியோ ரோல்ஸ்ராய்
தமிழில்: என்.கே. மகாலிங்கம்
எழுத்தாளரைப் பற்றியது:
(லியோ ரோல்ஸ்ரோய் (1828-1910) ரஷ்ய எழுத்தாளர், ஆன்மீக சிந்தனையாளர். உலக இலக்கியத்தின் மாபெரும் எழுத்தாளர்களில் ஒருவராகவும் செல்வாக்குள்ளவராகவும் கணிக்கப்படுகின்றார். அவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆறு முறையும் சமாதானத்துக்கான நோபல் பரிசு இரண்டு முறையும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் கிடைக்கவில்லை. ரஷ்ய நிலப்பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்தவர். War and Peace, Anna Karenina, Crime and Punishment, Idiot, Brothers Karamazov போன்ற மாபெரும் நாவல்களையும், The Death of Ivan Ilyich, Family Happiness, Hadji Murad போன்ற குறுநாவல்களையும் நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் எழுதியுள்ளார். The Kingdom of God is within You என்ற நூல் காந்தியையும் மாட்டின் லூதர் கிங் யூனியர் போன்றவர்களையும் வெகுவாகப் பாதித்தது. அதில் வன்முறையற்ற எதிர்ப்புப் போன்ற கருத்துகளை எடுத்துக் கூறுகின்றார். பல கட்டுரை நூல்களையும் எழுதியிருக்கின்றார். ஆழ்ந்த ஆன்மீக விழிப்புணர்ச்சியை அடைந்த பின் எழுதியது Confesssion என்ற அபுனைவு நூல். யேசுநாதரின் மலைப்பிரசங்கம் அவரை ஒரு தணியாப்பற்றுள்ள கிறிஸ்தவ அராஜகவாதியாகவும் அமைதிவாதியாகவும் ஆக்கியது. ஜேர்மன் மொழியில் அவர் வாசித்த திருக்குறள் அவரை அகிம்சா வாதியாக ஆக்கியதாகச் சொல்லப்படுகிறது. காந்தி அவரிடம் கேட்ட அறிவுரைகளுக்கு அவர் காந்திக்கு எழுதிய A Letter to a Hindu கடிதங்கள் தொகுப்பாக்கப் பெற்றுள்ளன. அதில் அகிம்சை கருத்துகளை காந்திக்கு எடுத்துக் கூறியுள்ளார். இறுதிக் காலத்தில் அவர் புலால் உணவை தவிர்த்து சைவ உணவையே உண்டிருக்கிறார். அவரின் இறுதி நாட்கள் பற்றிய அருமையான திரைப்படம் ‘The Last Station.’
பலர் அவரின் படைப்புகள் பற்றி புகழ்ந்து எழுதியுள்ளார்கள். வேர்ஜினியா வுல்ஃப் இவரை, ‘நாவலாசிரியர்கள் அனைவரிலுமே மிக உயர்ந்தவர்,’ என்று சொல்லியிருக்கிறார். டோஸ்ரோயெவிஸ்கி அவருடைய நாவல்களை விரும்பி வாசித்து புகழ்ந்துள்ளார். அன்ரன் செக்கோவ் அவருடன் நேரடித் தொடர்பு வைத்திருந்தவர். குஸ்;ராவ் ஃப்ளோபியர் இவரின் ‘போரும் சமாதானமும்’ நாவலை வாசித்த பின், ‘எத்தகைய உயர்தரமான கலைஞர், எத்தகைய உளவியலாளர் இவர்,’ என்று புகழ்ந்துள்ளார். பிரித்தானியாவைச் சேர்ந்த விமர்சகரும் கவிஞருமான மத்தியு ஆர்னால்ட், ‘ரோல்ஸ்ரோயின் நாவல் ஒரு கலைப் படைப்பல்ல, வாழ்க்கையின் ஒரு பகுதி’ என்கிறார். ‘எல்லோரும் உலகத்தை மாற்றுவோம் என்று நினைக்கிறார்கள். ஆனால் எவரும் தன்னை மாற்ற நினைப்பதில்லை,’ என்பது அவருடைய சிறந்ததொரு மேற்கோள்.)
கதைக்குள் செல்வோம்...
மனம் வருந்திய பாவி
‘அந்தப் பாவி, யேசுநாதரிடம் சொன்னான். ‘ஆண்டவரே, உம்முடைய இராச்சியத்துக்கு நான் வரும்போது என்னை ஞாபகம் வைத்திருங்கள்.’ யேசுநாதர் சொன்னார், ‘நிச்சயமாக, அப்பொழுது நீ வந்து என்னுடன் சொர்க்கத்தில் இருப்பாய்.’ (லூக் xxiii. 42, 43)
ஒரு காலத்தில் ஒரு மனிதன் எழுபது வயதுவரை இவ்வுலகில் வாழ்ந்தான். ஆனால் அவன் வாழ்நாள் முழுவதும் பாவங்களே செய்து வாழ்ந்து வந்தான். அவன் ஒருமுறை நோயுற்றான். அப்போதும் அவன் தான் செய்த பாவங்களுக்காக மனம் வருந்தவில்லை. கடைசியாக சாகும் இறுதி கணத்தில் மட்டும் அவன் அழுதுகொண்டு சொன்னான்.
‘ஆண்டவரே, என்னை மன்னித்து விடு. நீ சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோது உன்னுடன் இன்னொரு சிலுவையில் அறையப்பட்டிருந்த அந்தக் கள்வனை மன்னித்ததைப் போல என்னையும் மன்னித்து விடு.’
அந்த வார்த்தைகளை அவன் சொன்னபோது அவன் ஆன்மா உடலை விட்டுப் பிரிந்து போனது. அப்போது பாவியின் ஆன்மா கடவுளை நேசித்துக்கொண்டும், இறைவனுடைய கருணையிலும் நம்பிக்கை வைத்துக் கொண்டும் இருந்தது. அதனால் அது சொர்க்கத்தின் வாசல்களை அடைந்தது. வாசல் கதவுகளைத் தட்டி, தன்னை சொர்க்கத்தின் இராச்சியத்துக்குள் நுழைய அனுமதி தர வேண்டும் என்று பிரார்த்தித்துக் கேட்டது.
அப்போது அந்த வாசலுக்குள்ளிருந்து ஒரு குரல் பேசியது.
‘சொர்க்கத்தின் வாசலைத் தட்டும் அந்த மனிதர் யார்? அவர் தன் வாழ்க்கையில் என்னென்ன நற்செயல்களைச் செய்திருக்கிறார்?’
குற்றம் சாட்டியவரின் குரல் அதற்குப் பதில் அளித்தது. அந்த மனிதர் செய்த தீய செயல்களை எல்லாம் சொல்லியது. அவர் செய்த செயல்கள் எதிலும் ஒரு நல்ல செயல் கூட இருக்கவில்லை.
வாசலுக்குள்ளிருந்து வந்த குரல் அதற்குப் பதில் சொன்னது.
‘பாவிகள் எவரும் சொர்க்கத்தின் இராச்சியத்திற்குள் நுழைய முடியாது. இங்கிருந்து போய் விடு!’
அப்போது அந்தப் பாவி சொன்னான்.
‘ஆண்டவனே, உங்கள் குரல் எனக்குக் கேட்கிறது. ஆனால் உங்கள் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. உங்கள் பெயரும் எனக்குத் தெரியவில்லை.’
அந்தக் குரல் அதற்குப் பதில் அளித்தது.
‘எனது பெயர் பீற்றர். நான் தான் பீற்றர் என்கிற இறைத்தூதர்.’
பாவி பதிலளித்தான்.
‘என்மேல் இரக்கம் காட்டுங்கள், இறைத்தூதர் பீற்றரே! மனிதரின் பலவீனங்களையும் இறைவனின் கருணையையும் நினைத்துப் பாருங்கள்! நீங்கள் கிறிஸ்துநாதரின் சீடர் அல்லவா? அவருடைய போதனைகளை அவரின் வாயில் இருந்தே கேட்டறிந்தவர் அல்லவா? நீங்கள் அவருடைய உதாரணங்களைப் பின்பற்றும் மனிதர் அல்லவா? நினைத்துப் பாருங்கள். கிறிஸ்துநாதர் உங்களைப் பற்றிக் கவலைப்பட்டார் அல்லவா? மனம் வருந்தினார் அல்லவா? அவர் உங்களை விழித்திருந்து பிரார்த்தனை செய்யும்படி மூன்று முறை கேட்டார் அல்லவா? ஆனால் நீங்களோ அப்படிச் செய்யாமல் நித்திரை கொண்டீர்கள். ஏனென்றால் உங்கள் கண்கள் தூக்கத்தில் கனத்திருந்தது. நீங்கள் துயில்வதை அவர் மூன்று முறை அவதானித்தார். அப்படித்தான் நானும். நினைத்துப் பாருங்கள் சாகும்வரை அவருக்கு நீங்கள் விசுவாசமாக இருப்பீர்கள் என்று சொன்னீர்கள். அவரைத் தலைமைப் பூசாரி, கைப்ஃபாசிடம் அழைத்துச் சென்றபோது நீங்கள் மூன்று முறை அவரைத் தெரியாதென்று சொன்னீர்கள். அப்படித்தான் நானும். நினைத்துப் பாருங்கள். காலையில் சேவல் கூவியபோது நீங்கள் வெளியே போனீர்கள். கடுந்துயருடன் அழுதீர்கள். அப்படித்தான் நானும். நீங்கள் என்னை உள்ளே நுழைய அனுமதிக்காமல் இருக்க முடியாது.’
வாசலுக்குப் பின்னாலிருந்த குரல் இப்போது அமைதியாகிவிட்டது.
அதன் பின் பாவி சிறிது நேரம் நின்றான். பின் திரும்பவும் சொர்க்கத்தின் இராச்சியத்திற்குள் தன்னை விடும்படி கேட்பதற்காகக் கதவைத் தட்டினான்.
அப்பொழுது வாசலுக்குப் பின்னால் இருந்து இன்னொரு குரல் ஒலித்தது. அது சொன்னது.
‘யார் இந்த மனிதர். எப்படி அவன் பூமியில் வாழ்ந்தார்?’
குற்றம் சாட்டியவர் திரும்பவும் சொன்னார். இந்தப் பாவி அந்த உலகத்தில் பலவகையான தீமைகள் செய்திருக்கிறார். ஒரு நல்ல காரியம் கூடச் செய்யவில்லை.’
வாசலின் பின்னால் வந்த குரல் சொன்னது.
‘அப்படியானால் நீ வெளியே போய் விடு! அப்படியான பாவிகள் இந்தப் பரலோகத்தில் எங்களுடன் வாழ முடியாது.’
அப்பொழுது பாவி சொன்னான்.
ஆண்டவரே! உங்கள் குரல் எனக்குக் கேட்கிறது. ஆனால் உங்களை என்னால் பார்க்க முடியவில்லை. உங்கள் பெயரும் எனக்குத் தெரியாது.’
குரல் சொன்னது.
‘என் பெயர் டேவிட். நான் தான் அந்த அரசர், அந்த இறைத்தூதர்.’
பாவி நம்பிக்கையை இழக்கவும் இல்லை. பரலோகத்தின் வாசலை விட்டு அகலவும் இல்லை. அவன் சொன்னான்.
‘என்னில் இரக்கம் காட்டுங்கள், டேவிட் அரசரே! மனிதர்களின் பலவீனங்களையும் ஆண்டவரின் கருணையையும் நினைத்துப் பாருங்கள். இறைவன் உங்களை நேசித்தான், உங்களை மனிதருள் உயர்ந்தவனாகவும் ஆக்கினார். எல்லாம் உங்களுக்குக் கிடைத்தன. ஓர் இராச்சியமும், மேன்மையும், ஐசுவரியங்களும், மனைவிமாரும், குழந்தைகளும் கிடைத்தன. ஆனால் நீங்களோ ஓர் ஏழையின் மனைவியை உங்கள் வீட்டின் மேல்மாடியிலிருந்து பார்த்தீர்கள். உங்கள் மனதில் ஒரு பாவ எண்ணம் புகுந்தது. நீங்கள் அந்த ஏழை யூரியாவின் மனைவியை எடுத்துக் கொண்டீர்கள். ஒரு வாளால் அந்த ஏழையை வெட்டிக் கொன்றீர்கள். செல்வந்தனாகிய நீங்கள் அந்த ஏழையின் பெண் ஆட்டுக் குட்டியையும் எடுத்துக் கொண்டீர்கள். அதைப் போலத்தான் நானும் பாவங்கள் செய்தேன். நினைத்துப் பாருங்கள், நீங்கள் அதற்காக மனம் வருந்தி இப்படிச் சொன்னீர்கள். ‘நான் செய்த அறமீறல்களை ஏற்றுக் கொள்கிறேன். என் பாவங்கள் ஒவ்வொன்றும் எனக்குத் தெரியும்.’ அதேபோலத்தான் நானும் செய்தேன். உங்களால் என்னை உள்ளே அனுமதிக்காமல் இருக்க முடியாது.’
வாசலுக்குள்ளிருந்து வந்த குரல் இப்போது அமைதியாகி விட்டது.
பாவி சற்று நேரம் அமைதியாக இருந்த பின், திரும்பவும் கதவைத் தட்டி தன்னை சொர்க்கத்தின் இராச்சியத்திற்குள்ளே விடும்படி கெஞ்சினான். அப்பொழுது வாசலுக்குள் இருந்து மூன்றாவது குரல் ஒன்று கேட்டது.
‘இந்த மனிதர் யார்? உலகத்தில் இவன் எப்படியான வாழ்க்கை வாழ்ந்தான்?
குற்றம் சாட்டுபவரின் குரல் மூன்றாவது முறை பதிலளித்தது. அது அவன் செய்த பாவங்களை பட்டியிலிட்டுச் சொன்னது. அதில் அவன் செய்த நல்ல செயல் ஒன்று கூட இருக்கவில்லை.
வாசலுக்குள்ளிருந்து வந்த அந்தக் குரல் சொன்னது.
‘நீ உடனே வெளியேறு! பாவிகள் சொர்க்கத்தின் இராச்சியத்திற்குள் நுழைய முடியாது.’
அதற்கு அந்தப் பாவி சொன்னான்.
‘நான் கேட்கும் உங்கள் குரல் தெளிவாக இருக்கிறது. ஆனால் உங்கள் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை.
அதேபோல உங்கள் பெயரும் எனக்குத் தெரியாது.’
அதன் பிறகு அந்தக் குரல் சொன்னது.
‘நான் தான் தெய்வீகனாகிய ஜோன், யேசு கிறிஸ்துவின் பிரியமான சீடன்.’
பாவி மகிழ்ந்து போய்ச் சொன்னான்.
‘இப்போது நிச்சயமாக என்னை உள்ளே நுழைய விடுவார்கள். பீற்றரும் டேவிட்டும் உள்ளே நுழைய விடுவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு மனிதரின் பலவீனங்களும் இறைவனின் கருணையும் தெரியும். நீங்கள் என்னை உள்ளே நுழைய விடுவீர்கள். ஏனென்றால் நீங்கள் மனிதர்களை அதிகம் நேசிப்பவர். நீங்கள் அல்லவா அன்பே கடவுள் என்றும் அன்பில்லாதவர்கள் கடவுளைத் தெரியாதவர்கள் என்றும் எழுதியவர். உங்கள் முதிய வயதில் மனிதர்களைப் பார்த்து, ‘சகோதரர்களே, ஒருவரை ஒருவர் நேசியுங்கள்,’ என்று சொன்னவர். அப்படி என்றால் என்னை வெறுப்புடன் பார்த்து இங்கிருந்து என்னைக் கலைத்து விட முடியாது. நீங்கள் முன்பு சொன்னதை மறுதலிக்க வேண்டும் அல்லது என்னை நேசித்து சொர்க்கத்தின் இராச்சியத்திற்குள் என்னை அனுமதிக்க வேண்டும்.’
சொர்க்கத்தின் வாசல் திறந்தது. ஜோன், மனம் வருந்திய பாவியை கட்டி அணைத்து சொர்க்கத்தின் இராச்சியத்துக்குள் அழைத்துச் சென்றார்.
நன்றி
