Thaiveedu
Latest Articles
வரலாறு

மகாவம்சம் தொகுதி – 5 (1956 - 1978)ஓர் அறிமுகம்

என். சரவணன்
என். சரவணன்
March - March 10, 2026

மகாவம்சம் தொகுதி – 5

(1956 - 1978)

ஓர் அறிமுகம்

- என். சரவணன்

‘மகாவம்சம்’ எனும் போதே அது வம்சவிருத்தி பற்றிய கதை என்கிற உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதை கண்டிருப்போம். இலங்கையில் இருந்த ஆட்சிகளையும் அதை ஆட்சி செய்தவர்களையும் பற்றிய அந்த காலவரிசைப்படியின் அடிப்படையிலேயே ‘மகாவம்சம்’ தொகுக்கப்பட்டு வந்திருக்கிறது.

மகாவம்சம் என்றதும் நம்மில் பலர் இன்றும் மகாநாம தேரர் எழுதிய மகாவம்சத்தை மட்டுமே அறிந்து வைத்திருக்கின்றோம். பொ.ஆ.மு. 543 ஆண்டிலிருந்து சுமார் பொ.ஆ.பி. 362-ஆம் ஆண்டு மகாசேனனின் ஆட்சி வரையிலான கிட்டத்தட்ட 900-ஆம் ஆண்டுகளுக்கிடையில் நிகழ்ந்த நிகழ்வின் தொகுப்பாக மகாவம்சம் அமைந்திருக்கிறது.

மகாவம்சம் அத்தோடு முடிவடையவில்லை. இன்னும் சொல்லப்போனால் மகாவம்சம் இன்றும் எழுதப்படுகிறது. அதன் அடிப்படையில் மகாவம்ச வரலாற்று நூலானது 2600 வருட காலப் பதிவுகளைக் கொண்டது. உலகில் ஒரு அரசே பொறுப்பேற்று இவ்வாறு நீண்ட கால வரலாற்றை உத்தியோகபூர்வமாக பதிவு செய்து வருகிற ஒரே நாடாக இலங்கையைக் குறிப்பிடலாம். வேறெந்த நாட்டிலும் அப்படியொரு நெடும் வரலாறு இல்லை என்று இறுதியாக வெளிவந்த 6-வது மகாவம்சத் தொகுதியை ஏற்கனவே நான் தமிழில் மொழிபெயர்த்திருந்தேன். குமரன் பதிப்பகம் அதை வெளியிட்டிருக்கிறது.

தமிழில் முதன் முதலில் முழுமையாக வெளிவந்த மகாவம்ச தொகுதி அந்த 6 தொகுதியாகும். இந்தக் காலப்பகுதியை நீங்கள் கவனிப்பது அவசியம். 1978 - 2010 வரையான காலப்பகுதியை உள்ளடக்கிய அந்தத் தொகுதி என்பது சரியாக ஈழப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக உருவெடுத்து அப்போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட காலமாகும்.

இதுவரை தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் குறித்து அரசாங்கங்களின் கருத்துகளை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் ‘இலங்கை அரசின்’ உத்தியோகபூர்வ விளக்கத்தை அறிந்துகொள்ள 2010-ஆம் ஆண்டு வரையிலான அந்த மகாவம்ச 6-வது தொகுதி தமிழ் சமூகத்துக்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது.

சிறுபான்மை இனங்களின் அபிலாசை பற்றிய அரச கொள்கை, நடைமுறை, அவற்றைக் கையாண்ட விதம் என்பவற்றை மகாவம்சம் வழியாக நாம் அறிந்து கொள்வதற்காகவே இத்தொகுதி தமிழில் மொழிபெயர்த்து முடிக்கப்பட்டது.

இத்தொகுதி வெளிவந்ததும் ஏனைய தொகுதிகளையும் ஏன் கொண்டு வரவில்லை என்கிற கேள்வியை என்னிடம் பலர் எழுப்பி இருக்கிறார்கள். அதை கோரிக்கையை எற்காமைக்கான காரணங்கள் இரண்டு. முதலாவது; கலாசார திணைக்களம் மகாவம்சத்தின் முதலாவது தொகுதியிலிருந்து மொழிபெயர்க்கத் தொடங்கிவிட்ட செய்தியை அறிய முடிகிறது. அடுத்தது எனது நேரம், உழைப்பு, சக்தி, பொருள் அனைத்தையும் புதிய தேடல்களிலும் புதிய ஆய்வுகளிலும் ஈடுபடுத்துவது முக்கியமாக இருந்தது.

குறிப்பாக மகாவம்சம் பற்றியே இன்னும் பல ஆய்வு நூல்களைக் கொண்டுவந்துவிடலாம். அவ்வாறு மூன்று நூல்கள் இப்போதே பதிப்புக்கு தயாராகிவிட்டன.

அதேவேளை கலாசார திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மொழிபெயர்ப்பானது அத்தனை தொகுதியையும் முடிக்க இன்னும் பல ஆண்டுகள் செல்லும் என்று கணிக்க முடிகிறது. இந்த நிலையில் 5 தொகுதியை ஆராய்ந்து கொண்டிருந்தபோது அத்தொகுதி அவ்வளவு பெரிய தொகுதியாக இல்லை என்பதை உணர முடிந்தது. இதுவரை வெளியான தொகுதிகளில் 3-வதும் (1815 முதல் 1936 வரை) 5-வதும் தான் சிறிய தொகுதிகள். எனவே செய்து முடித்துவிடலாம் என்று தோன்றிற்று.

அந்த தொகுப்பும் இப்போது பதிப்பில் இருக்கிறது.

ஐந்தாவது தொகுதியானது எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலமான 1956-இலிருந்து 1978 ஜே ஆரின் இரண்டாவது குடியரசு ஆட்சி தொடங்கும் வரையான காலப்பகுதியை உள்ளடக்கியது. 125 - 129 வரையான 5 அத்தியாயங்களைக் கொண்டது. பேராசிரியர் பெல்லன = ஞானவிமல மகாநாயக்க தேரரரின் தலைமையிலான பண்டிதர் குழுவால் தயாரிக்கப்பட்டது இத்தொகுதி. ஞானவிமல மகாநாயக்க தேரரர் இலங்கையின் முன்னணி மகாநாயக்கர்களில் ஒருவராக அறியப்பட்டவர். அதுமட்டுமன்றி புத்த சாசனம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக இயங்கியவர். 2014-ஆம் ஆண்டு தனது 94 வயதில் அவர் காலமானார்.

அரச கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட ‘மகாவம்ச உருவாக்கக் குழு’வால் இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு 2010-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதுவும் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதிவி வகித்த காலத்தில் ‘மகிந்த சிந்தனை’ எண்ணக்கருவின் ஒரு திட்டமாக இது வெளியிடப்பட்டதாக அந்நூலின் உள்ளே குறிப்பிடப்பட்டிருப்பதையும் இங்கே குறிப்பட வேண்டும். பின்னர் 2018-ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த மகாவம்ச ஆக்கக் குழுவில் அங்கம் வகித்த 30 பேரைக் கொண்ட குழுவில் சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்கள் எவரும் இருக்கவில்லை என்பதையும் கவனிக்குக.

கலாசார திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அத்தொகுதி பரவலாக கிடைக்காத நிலையில் வேறு சில பௌத்த அமைப்புகளும் மறுபிரசுரம் செய்துள்ளன. இந்த தமிழ் மொழிபெயர்ப்புக்காக அத்தொகுதிகளையும் எடுத்து ஒப்பிட்டு சரிபார்த்திருக்கிறேன்.

இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும் 1956-ஆம் ஆண்டு பண்டாரநாயக்க ஆட்சியின் போது முதன்முதலில் கலாசார திணைக்களம் உருவாக்கப்பட்டது. அதன் அங்கமாக அன்றிலிருந்து மகாவம்ச குழு நிரந்தமாக இயங்கி வருகிறது. 1956 என்பது சிங்கள மொழி, சிங்கள இனம், பௌத்த மதம் என்பன மீளெழுச்சி கொண்ட காலம் என்பதை அறிவீர்கள்.

அக்கலாசார திணைக்களத்தின் ஊடாகத்தான் அன்றைய 2500-ஆம் புத்த ஜயந்தி கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1956 மே மாதம் 23-ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அரசாங்கத்தின் தலைமையில் பௌத்தர்களின் பங்களிப்புடன் பிரதான புத்த ஜெயந்தி விழா நடைபெற்றதுடன் அங்கே தேசியக் கொடிக்கு நிகராக நிரந்தரமான பௌத்த கொடிக்கம்பமும் நிறுத்தப்பட்டது.

மேலும் இந்த ஆட்சியின் போது தான் மாதாந்தம் பௌர்ணமி தினங்கள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டன. பௌத்த பேரிலக்கியமான திரிபீடகத் தொகுதிகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு சிங்களத்துக்கு மொழிபெயர்த்து வெளியிடப்பட்டன. அகில இலங்கை பௌத்த மகா சபை ஒரு ‘பௌத்த தகவல் விசாரணை ஆணைக்குழுவை அமைத்து அறிக்கை வெளியிட்டது. அதன் பரிந்துரைக்கு அமைய பண்டாரநாயக்கவும் பௌத்த ஆணைக்குழுவொன்றை நியமித்தார்.

மேலும் பாடசாலைகளின் இறுதிப் பரீட்சைக்குச் சமய பாடம் கட்டாயமாக்கப்பட்டது. வித்தியோதய, வித்தியாலங்கார ஆகிய இரு பிரிவெனாக்களைப் பல்கலைக்கழகங்கள் முறையே களனி, ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டதுடன் 17 பிரதான புதிய பிரிவெனாக்களை பண்டாரநாயக்க நிறுவினார்.

அரச கரும மொழிகள் திணைக்களத்தால் பல நூல்கள் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டன.

சிங்களம் மட்டும் சட்டம். 1958 இனக்கலவரம், = சட்டம், பண்டா செல்வா ஒப்பந்தம் என இன முறுகலை உச்சத்துக்கு கொண்டு சென்ற முக்கிய காலகட்டம் இது. இலங்கையின் இனப்பிரச்சினையை இன்னொரு பரிமாணத்துக்கு எழுச்சியடைச் செய்த முக்கியமான காலகட்டம் இது. சிங்கள மொழி - சிங்கள இனம் - பௌத்தம் ஆகியனவற்றை ஒரே பெருந்தேசியத்திற்குள் ஒன்றிணைத்து ஏனையவற்றுக்கெதிரான கருத்தியலை உருவாக்கி பலப்படுத்திய காலகட்டம் இது.

பின்னர் பண்டாரநாயக்கவின் படுகொலை, அதனைத் தொடர்ந்து தஹாநாயக்க, 1960-இல் ஆட்சியமைத்த டட்லி, பின்னர் வலுக்கட்டயமாக அரசியலுக்கு கொண்டிழுத்து வரப்பட்ட சிறிமாவோ பண்டாரநாயக்க, 1965-இல் தமிழரசுக் கட்சியோடு சேர்ந்து ஆட்சியமைத்த டட்லி. மீண்டும் 1970-இல் ஆட்சியமைத்த சிறிமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி ஆட்சி. இறுதியில் 1977-இல் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்த ஜே.ஆர்.

இந்தக் காலப்பகுதி என்பது இனப்பிரச்சினையை ஆயுதப் போராட்டம் வரை வளர்வதற்கு ஏதுவான அனைத்து நியாயங்களையும் உருவாக்கிய காலகட்டம்.

ஆனால் இந்தக் காலப்பகுதியை பதிவு செய்த இந்த மகாவம்சக் குழு இக்காலகட்டத்தை எவ்வாறு பதிவு செய்தது. எதை பதிவு செய்தது, எதை தவிர்த்தது. எவ்வாறு வியாக்கியானப்படுத்தியது. ‘மகாவம்சம் தகவல்களைத் தான் தருகிறது, கருத்தை அல்ல’ என்று இன்றும் வாதிட்டுக்கொண்டிருக்கும் மகாவம்ச தரப்பு முழுமையாகவே அது ஒரு இனவாத கருத்தியலின் அடிப்படையில் தொகுத்தது எப்படி என்பதை இந்த மகாவம்சத் தொகுதியில் நீங்கள் உணர முடியும்.

ஆரம்பகாலத்தில் மகாவம்சம் பாளி மொழியில் எழுத்தப்பட்டிருந்தது. ஆனால் 1956-இல் மகாவம்சத்தை எழுதும் பொறுப்பை இலங்கை அரசே ஏற்றுக்கொண்டதிலிருந்து சிங்களத்தில் அதனை எழுதி அதை பாளி மொழியிலும் மொழிபெயர்த்து இரண்டையும் ஒன்றாக வெளியிடும் மரபைத் தொடங்கியது.

அதன்படி 2010-இல் வெளியான இந்த 5-வது தொகுதி மொத்தம் 274 பக்கங்களை மட்டுமே கொண்டது. அதில் பாளி மொழி செய்யுள்கள் 157 பக்கங்களிலும் சிங்கள மொழியில் 98 பக்கங்களிலும் தொகுக்கப்பட்டிருக்கிறது.

6-வது மகாவம்சத் தொகுதியில் மொத்தம் 1173 பக்கங்களில் சிங்களத்தில் மாத்திரம் 825 பக்கங்களைக் கொண்டிருக்கிறது என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

இந்த ஐந்தாவது தொகுதி ஐந்து ஆட்சியாளர்களின் ஆட்சிகளை ஐந்து அத்தியாயங்களாக (125 -129-வது அத்தியாயங்களாக) பதிவு செய்திருக்கிறது.

n எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க: 1956 - 1959

n விஜயானந்த தகநாயக்க: 1959 - 1960

n டட்லி சேனநாயக்க: 1960 (மார்ச் - ஜூலை)

n சிறிமாவோ பண்டாரநாயக்க: 1960 - 1965

n டட்லி சேனநாயக்க: 1965 - 1970

n சிறிமாவோ பண்டாரநாயக்க: 1970 - 1977

n ஜே.ஆர். ஜயவர்தன: 1977 - 1978

இதில் ஜே.ஆர். 1977-இல் ஆட்சியமைத்தபோதும், அரசியலமைப்பை மாற்றி அடுத்த ஆண்டே ஜனாதிபதி ஆட்சி முறையைக் கொண்டுவந்ததால், ஜனாதிபதி ஆட்சி தொடங்குகிற 1978-ஆம் ஆண்டு காலப்பகுதி அடுத்த மகாவம்ச 6-வது தொகுதிக்குள் சென்று விடுகிறது. எனவே ஜே.ஆர். பிரதமராக பதவி வகித்த முதல் ஓராண்டு மட்டுமே இந்த 5-வது தொகுப்பில் உள்ளடக்கபட்டிருக்கிறது. அதுவே இறுதி அத்தியாயமாக அமைகிறது.

2018 ஆண்டு கலாசார திணைக்களத்தால் வெளியான இந்த மகாவம்சம் 5-வது தொகுதியின் பதிப்பின் பிரகாரம் நூலின் உள்ளடக்கத்தை விளங்கிக் கொள்ள இவ்வாறு நாம் பட்டியலிடலாம்.

இந்த மொழிபெயர்ப்பானது உள்ளதை உள்ளபடி மேற்கொள்ளப்படுகிறது. எந்த விதத்திலும் சொந்த அரசியல் கருத்துகளின் பாதிப்பை எற்படுத்தாதவகையில் மேற்கொண்டிருக்கிறேன்.

சிங்காத்தில் வெளியான இத்தொகுதியின் அறிமுகத்தையும் இங்கே தமிழில் அப்படியே தருகிறேன்.

‘மஹிந்த சிந்தனை’ ஊடாக கல்வியறிவு பெற்ற அறிவான சமுதாயத்தை உருவாக்குவோம்.

அதிமேதகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் வழங்கப்பட்ட ‘மஹிந்த சிந்தனை’ நிகழ்ச்சியின் நோக்கங்களில் ஒன்று புத்தகங்களை வாசிக்கும் கல்வியறிவு கொண்ட அறிவான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் உயர்தர நூல்கள் மற்றும் சஞ்சிகைகளை வெளியிடுவதை ஊக்குவிப்பதாகும். ஒவ்வொருவரிடமும் வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் சொற்பொழிவுகள், துல்லியமான புத்தகங்களைத் தயாரித்தல், அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள் மற்றும் தொழில்சார்களை மதிப்பீடு செய்தல், ஊக்குவித்தல் மற்றும் வசதிகளை வழங்குவது ஆகியன தேசிய மரபுரிமை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கடமையாகும்.

படித்த மற்றும் அறிவுள்ள சமூகத்திற்கு இந்த புத்தகம் ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கட்டும்!

தேசிய மரபுரிமைகள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம் மகாவம்ச ஏற்பாட்டுக் சபையின் அனுசரணையுடன்.

அறிமுகம்:

கலாசார அலுவல்கள் மற்றும் தேசிய மரபுரிமைகள் அமைச்சினால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட இந்த மகாவம்ச - 5-வது தொகுதி 1956 - 1978 காலப்பகுதியை உள்ளடக்கியது. மகாவம்சத்தை தொடர்ச்சியாக இயற்றி வெளியிடுவது கலாசார அமைச்சின் பொறுப்பாக மாறியுள்ளது. அதனடிப்படையில் அமைச்சரவையின் சபையினால் மகாவம்சம் தொகுப்பாளர் சபை நியமிக்கப்பட்டது. அதில் அங்கம் வகித்த அறிஞர்கள் இவர்கள்.

n கலாநிதி பெல்லன ஞானவிமல மகாநாயக்க தேரர் (தலைவர் மற்றும் ஆசிரியர்)

n பேராசிரியர் சந்திர விக்ரமகமகே (செயலாளர்)

n தொல்லியல் சக்ரவர்த்தி எல்லாவல மேதானந்த தேரர்

n அகுரடியே நந்த தேரர்

n பேராசிரியர் விமல் ஜி. பலகல்லே

n பேராசிரியர் மெண்டிஸ் ரோஹநதீர

n பேராசிரியர் வினி விதாரண

n பேராசிரியர் கே.என்.ஓ. தர்மதாச

n பேராசிரியர் ஆனந்த அபேசிறிவர்தன

n பேராசிரியர் வோல்டர் மாரசிங்க

n பேராசிரியர் மாலினி எந்தகம

n பேராசிரியர் அநுர மணதுங்க

n வெ.வி. அபயகுணவர்தன

n கலாநிதி சமன் சந்திர ரணசிங்க

n திரு. சுமித் ரணசிங்க

அந்தந்த விடயதானகளுக்காக பங்களித்த அறிஞர்கள் பின்வருமாறு:

n அகுரடியே நந்த தேரர்

n பேராசிரியர் மாலினி எந்தகம

n பேராசிரியர் சந்திர விக்கிரமககே

n பேராசிரியர் ஜயதேவ திலகசிறி

n பேராசிரியர் சுனந்த மகேந்திர டி மால்

n கலாநிதி உபாலி விக்ரமசிங்க

n ஏ.எம். கருணாரத்ன

n வழக்கறிஞர் கே.ஏ. கருணாரத்ன

n திருமதி குமுதினி குலதுங்க

n ஆர்.ஏ. ஆரியவன்ச ரணவீர

n கலாநிதி பி. திசாநாயக்க

n கலாநிதி அநுர மனதுங்க

n கலாநிதி அமரசிறி பொன்னம்பெரும

n பேராசிரியர் பியதாச அத்துகோரல

n பேராசிரியர் ரோலண்ட் அபேபால

n பேராசிரியர் மங்கள இலங்கசிங்க

n பேராசிரியர் எஸ்.பி. ஹெட்டியாராச்சி

n எஸ்.பி. சார்ல்ஸ்

n கே.எல். வசந்த பெரேரா

இந்த தொகுப்பை ராஜரீக பண்டிதர் லன்பந்துரே ராகுல தேரரும் (அத்தியாயம் 125), ராஜரீக பண்டிதர் மாவனானே சோமிந்த தேரரும் (அத்தியாயங்கள் 126-129) பாலியில் தயாரித்தார்கள்.

வெளிப்புற அறிஞர்களின் மேற்பார்வையின் பேரில் மகாவம்ச ஆசிரியர் குழுவின் ஒப்புதலுடன் அனைத்து தலைப்புகளிலும் எழுதப்பட்ட கட்டுரைகள் மகாவம்சம் தொகுதி 5-இல் சேர்க்கப்பட்டன.

மகாவம்சத்தை தொகுக்கும் மரபின் படி இந்தத் தொகுதியைத் தயாரிக்க வேண்டியது அரசாங்கத்தினதும் மகாவம்ச ஆசிரியர் குழுவினரதும் பொறுப்பாகும். அதன்படி, அரசியல், அரசு நிர்வாகம், வெளியுறவுக் கொள்கை, பௌத்த மதம், பொருளாதார நிலைமை, கல்வி, அறிவியல், தொழினுட்பம், சுகாதாரம் மற்றும் அந்தந்தக் காலத்தின் கலை - இலக்கியம் போன்ற விடயப் பரப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு விடயப்பரப்பிலும் அது சார்ந்த நிபுணர்களால் தேவையான கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, அவற்றின் உள்ளடக்கங்கள் இந்தப் புத்தகத்தில் பொருத்தமான முறையில் சேர்க்கப்பட்டன. மகாவம்ச மரபின்படி, அடிக்குறிப்புகளும் துணைத் தலைப்புகளும் நிராகரிக்கப்பட வேண்டியிருந்தது. இருப்பினும், நிகழ்வுகளைப் பதிவு செய்ய வழக்கமான ஆண்டு முறையைப் பயன்படுத்த மகாவம்ச ஆக்கக்குழு முடிவு செய்தது.

மகாவம்சம் 5-இன் 129-ஆம் அத்தியாயம் முழுமையடையவில்லை, ஏனெனில் இது மகாவம்சத்தின் முதலாவது தொகுதியில் அத்தியாயம் 37-ஐ போன்றே அடுத்த மகாவம்ச தொகுப்புடன் தொடர்புடையது.

மகாவம்ச ஏற்பாட்டுக் குழுவின் செயலாளர் பேராசிரியர் சந்திர விக்ரமகமகே அவர்களினால் இப்பணியில் ஈடுபட்ட அறிஞர்களின் பணி ஒருங்கிணைக்கப்பட்டது.

கலாசார அலுவல்கள் மற்றும் தேசிய மரபுரிமை அமைச்சர் திரு. மஹிந்த யாப்பா அபேவர்தன, கலாசார அலுவல்கள் அமைச்சர் திரு. பியசிறி விஜேநாயக்க, புதிய அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாராச்சி, பிரதி அமைச்சர் திரு. குணரத்ன வீரகோன் ஆகியோரின் தலைமையிலும் ஆதரவிலும், அவ்அமைச்சின் முன்னாள் செயலாளர் திரு. ஜி.எல்.டபிள்யூ. சமரசிங்க, தற்போதைய செயலாளர் திரு. விமல் ரூபசிங்க ஆகியோரின் ஆதரவுடனும், கலாசார அலுவல்கள் இயக்குநர் திரு. ஈ.எம். அபயரத்ன ஆகியோரின் ஏற்பாட்டிலும், மகாவம்ச ஆக்கக்குழுவின் வழிகாட்டுதலிலும், இந்த மகாவம்சத் தொகுதி தொகுக்கப்பட்டது. இதில் பங்கேற்ற அனைவருக்கும், அரசாங்கத்திற்கும் எனது நன்றி உரித்தாகும்.

பெல்லன ஞானவிமல மகாநாயக்க தேரர்

நன்றி