Thaiveedu
Latest Articles
இலக்கியம்

மென்டோசா பீலியோவின் சர்வாதிகாரம், அடையாளம் பற்றி எரியும் கேள்விகள்

ரதன்
ரதன்
March - March 10, 2026

மென்டோசா பீலியோவின் சர்வாதிகாரம், அடையாளம்...

பற்றி எரியும் கேள்விகள்

- ரதன்

ஒரு கார் ஒன்று வந்து கொண்டிருக்கின்றது. எதிர்த் திசையில் இரு கால்களின் அடிப்பாதங்கள் தெரிகின்றன. கால்களின் மேல் ஒரு தடித்த மட்டை போடப்பட்டுள்ளது. அது ஒரு இறந்தவரின் உடல். பெற்றோல் நிலையத்தின் அருகில் அந்த உடல் தடித்த மட்டைகளால் மூடப்பட்டுள்ளது. அவ்வப்போது நாய்கள் அந்த உடலை சுற்றி வருகின்றன. காரில் வந்த பயணி பெற்றோல் நிலைய ஊழியரை அந்த உடல் பற்றி வினவுகின்றார். பெற்றோல் நிலையத்தில் திருட முற்பட்டவரை நிலைய ஊழியர்கள் சுட்டதனால் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கின்றார். இது ஒரு சர்வசாதாரண நிகழ்வு போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நிலையத்தின் தனிமை போன்றவை ஒரு வெற்றிடத்தை வெளிப்படுத்துகின்றது. இது 2025-இல் ஒஸ்காரின் இறுதிச் சுற்றுக்குத் தேர்வான த சீக்கிரட் ஏஜன்ட் என்ற படத்தின் காட்சி. பிரேசில் நாட்டுப் படமிது. ஏற்கனவே கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பாராட்டுகளைப் பெற்றுள்ளது. கிலெபர் மென்டோச பிலீயோ இப்படத்தை இயக்கியுள்ளார்.

1964-க்கும் 1985-க்கும் இடைப்பட்ட காலத்தில் பிரேசிலில் இராணுவ ஆட்சி நடைபெற்றது. இக்காலத்தில் 7 ஜனாதிபதிகள் ஆட்சி செய்தனர். இவர்கள் அனைவரும் இராணுவ உயர் மட்ட அதிகாரிகள். 1970-களில் நடைபெற்ற சம்பவங்களை மையப்படுத்தி வோல்ற்றர் செலீஸ் இயக்கிய ‘ஐ ஆம் ஸ்ரில் கியர்’ படம் 2024-ஆம் ஆண்டிற்கான ஒஸ்காரின் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான விருதைப் பெற்றது. பல திரைப்பட விழாக்களிலும் விருதுகளைப் பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து வெளியாகியுள்ள ‘த ஸ்கீரட் ஏஜன்ட்’ என்ற இத்திரைப்படம், 1974 முதல் 1979 வரை பிரேசிலை ஆட்சி செய்த ஜனாதிபதி எர்னஸ்டோ கைசல் (Ernesto Geisel) காலத்துச் சம்பவங்களை விவரிக்கிறது. குறிப்பாக, 1977-ஆம் ஆண்டில் அரசியல் நெருக்கடி காரணமாக நாடாளுமன்றம் (Congress) மூடப்பட்ட வரலாற்றுப் பின்னணியில் இக்கதை நகர்கிறது. இராணுவ அதிகாரியாக இருந்து ஜனாதிபதியான எர்னஸ்டோ கைசலின் ஆட்சிக் காலம், பிரேசிலின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் சவாலான ஒரு காலகட்டமாக இத்திரைப்படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் சர்வாதிகாரம் என்பது ஒரு சகோதரத்துவம் போன்று ஒன்றிணைந்து பயணிக்கும். இராணுவ ஆட்சி தென் அமெரிக்க மக்களுக்கு பழக்கமான விடயம். வோல்ற்றர் செலீஸ் ஐ ஆம் ஸ்ரில் கியர் என்ற படத்தில் பிரேசிலின் கொங்கிரஸ் உறுப்பினர் றுபென் பைவா கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைப் பதிவு செய்துள்ளார்.

இப்படம் பிரேசிலின் வட கிழக்கில் அமைந்துள்ள பெரனம்புக்கோ பிரதேசத்தைப் பிரதிபலிக்கின்றது. புத்திஜீவிகளும், செல்வந்தர்களும் வாழும் தென் கிழக்கு பகுதியினர் வட கிழக்கை ஒதுக்கியே வைத்து வருகின்றனர். ஒரு முற்போக்கான அரசியல் பாரம்பரியத்தையும் கொண்டுள்ள பெரனம்புக்கோ பிரதேசம், கார்னிவல் என அழைக்கப்படும் களியாட்டத் திருவிழாவிற்கு பெயர் பெற்றது. நிலமற்ற தொழிலாளர்கள் இயக்கத்தின் பிறப்பிடம் இப்பிரதேசம்.

த சீக்கிரட் ஏஜன்ட் ஒரு மஜிக்கல் யதார்தவாதப் படம். எனவே படம் பெரனம்புக்கோவுடன் களியாட்ட விழாக் கலாசாரத்துடன் இணைந்து பயணிக்கின்றது. ஒரு கற்பனையான 1977 பிரேசிலைத் தற்போதைய அமைதியற்ற நிலை என்று சித்தரிக்கிறது. த சீக்கிரட் ஏஜன்ட் இயக்குநர் சர்வாதிகாரத்தின் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்துகிறார். ஒரு சர்வாதிகாரம் என்பது அதன் மிகத் தெளிவான அரசியல் செயல்களின் மீது மட்டும் கட்டமைக்கப்படுவதில்லை. அரசு முகவரின் உறுதியான நடவடிக்கைகளின் மீதும் சர்வாதிகார ஆட்சியிலிருந்து வெளிப்படும் சர்வாதிகாரத்தை உள்வாங்கும் உறுதியான நடவடிக்கைகளின் மீதும் கட்டமைக்கப்படுகிறது.

அறமன்டோ சொலிமொய்ஸ், பெரனம்புக்கோ மாநிலத்தின் தலைநகரான றிசிபிக் வருகின்றார். அவரது மனைவி இறந்துவிட்டார். அவரது மகனை மனைவியின் பெற்றோர் வளர்த்து வருகின்றனர். அறமன்டோ சொலிமொய்ஸ் ஒரு பேராசிரியர். அவர் றிசிபிக்கிற்கு வரும் பொழுது நடைபெற்ற காட்சியே மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் றிசிபிக்கில் டொனா செபஸ்ரியானாவின் வீட்டில் ஒரு அறையில் தங்குகின்றார். டொனா செபஸ்ரியான ஒரு முதிய முன்னாள் இடதுசாரி. அங்கு அறமன்டோ சொலிமொய்ஸ் தன்னை மார்சலோ என அறிமுகப்படுத்துகின்றார். அங்கு அவர் பலரைச் சந்திக்கின்றார். அங்கோலாவிலிருந்து தங்கியுள்ள தம்பதிகள் கிளோடியோ, ஹரால்டோ எனப் பலர். றிசிபிக்கில் உள்ள ஒரு அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படும் அலுவலகத்தில் மார்சலோ வேலைக்கு இணைகின்றார். அவரது முந்தைய தொடர்புகள் மூலம் மார்சலோவிற்கு இந்த வேலை கிடைக்கின்றது. இங்கு இவருக்கு ஆதரவும் கிடைக்கின்றது. அதே சமயம் பல நிகழ்வுகளால் எரிச்சலும் அடைகின்றார். மார்சலோ அங்கு தனது மறைந்த தாயின் கோப்புகளைத் தேடுகின்றார். கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடர்கின்றார்.

இதற்கிடையில் நகரில் பிடிக்கப்பட்ட புலிச் சுறாக்குள் (Tiger Shark) இருந்து ஒரு மனிதனின் கால் மீட்கப்படுகின்றது. இது இராணுவ ஆட்சியின் அராஜகத்தின் வெளிப்பாடாக வெளிப்படுத்தப்படுகின்றது.

மார்செலோ பொறியியலில் பணிபுரியும் ஒரு கல்வியாளராக இருந்தார். தனியார் வணிக தொடர்புகளைக் கொண்ட ஒரு அமைச்சர் தனது பல்கலைக்கழகத் துறையை மூடிவிட்டு, அதன் அனைத்து ஆராய்ச்சிகளையும், அதன் இலாபகரமான தொழிற்றிறனுடன், அமைச்சருக்கு சொந்தமான ஒரு தனியார் நிறுவனத்திற்கு மாற்றத் தயாராக இருப்பதைக் கண்டறிந்தார். இதன் விளைவு அமைச்சர் இவரை கொல்வதற்கு இருவரை நியமிக்கின்றார். எனவே, இவர் தனது மகனுடன் நாட்டை விட்டு வெளியேறவேண்டும். மார்சலோ ஒரு அதிருப்தியாளரோ அல்லது இடது சாரியோ இல்லை. இந்தச் சம்பவத்தினால் அதிருப்தி அடைகின்றார். இருப்பினும், விஷயங்கள் அவ்வளவு எளிதானவை அல்ல. மார்சலோ றிசிபிக்கு ஏன் வருகின்றார் என்பது பார்வையாளர்களுக்குத் தெரியாது. படத்தில் பல விடயங்களை உரையாடல்கள் மூலமே உணர்ந்து கொள்ள முடியும்.

சுறா - பைத்தியம் பிடித்த உள்ளூர் மக்கள், வயிற்றில் மனிதக் காலுடன் ஒரு சுறா பிடிபட்டது என்ற செய்தியால் பயம்கொள்கின்றனர். ஊடகங்கள் சுறாவிற்குள் இருந்து எடுக்கப்பட்ட கால்களைப் பற்றி வதந்திகளைப் பரப்புகின்றன. எனவே படம் அரசியல் வன்முறையை கருப்பு நகைச்சுவை மற்றும் வெகுஜன மாயத்தோற்றமாக மாற்றுகிறது.

கொலை எல்லா இடத்திலும் நடக்கிறது. சில மரணங்கள் ஆட்சியின் எதிர்ப்புக்கு எதிராக விதிக்கப்படும் தண்டனைகளாகும். மற்றவை தெருக் குற்றங்களின் துணை விளைபொருள்களாகும். நிறைய ஓவர்லாப் உள்ளது. வாடகைக்கு எடுக்கப்பட்ட கொலையாளிகள் சுதந்திரமான முகவர்கள். அவர்கள் ஒரு அந்நியரைக் கொன்று பிணத்தை அப்புறப்படுத்துவார்கள். வாடிக்கையாளர் அரசாக இருந்தாலும் சரி, ஒரு நிறுவனமாக இருந்தாலும் சரி, அல்லது வெறித்தனமான ஒரு நபராக இருந்தாலும் சரி, பின்னர் ஒரு நல்ல இரவு உணவை சாப்பிட்டு நித்திரைக்குச் செல்வார்கள். இதுபோன்ற விஷயங்கள் நடக்கக்கூடிய ஒரு உலகத்தை மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார்கள்? அதற்குள் செல்லக் கற்றுக்கொள்கிறார்கள். இந்த உலகத்தை இயக்குநர் காட்டியுள்ளார்.

முதல் காட்சியில் பெற்றோல் நிலையத்திற்கு வரும் பொலிசார் அங்குள்ள உடலைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. மார்சலோவின் காரினுள் ஒரு மீறலைத் தேடுகின்றனர். அவரிடம் லஞ்சம் பெற முயற்சிக்கின்றனர். இறுதியில் அங்கு நடைபெறும் கேளிக்கை திருவிழாவிற்கு நிதி கேட்கின்றனர். அங்கு சட்டவிரோதம் தன்னை முன்வைக்கிறது. இயக்குநர் ஒரு நல்ல கதைசொல்லி. அதே சமயம் ஒரு விமர்சகராகவும் வெளிப்படுகின்றார். பல காட்சிகளில் அவர் நகரத்துக்கு வெளியே இருந்து ஒரு அந்நியராக பார்ப்பது போல் தெரிகின்றது.

சர்வாதிகாரம் ‘சட்டம் மற்றும் ஒழுங்கு’ என்ற பெயரில் வளர்ந்து இருப்பினும், அது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தனிப்பட்ட நன்மைகளை உருவாக்க சீரழிவைப் பரப்பியது.

ஒரு சர்வாதிகாரியால் திட்டமிடப்பட்ட உயர்மட்ட அரசியல் துன்புறுத்தலைச் சித்தரிக்கவில்லை. மாறாக சர்வாதிகாரம் அதிகார கட்டமைப்பிற்குள் உள்ள அனைவருக்கும் சர்வாதிகாரமாகச் செயற்பட அதிகாரம் அளிக்கிறது என்பதைச் சித்தரிக்கிறது. சர்வாதிகாரம் என்பது ஊழலுக்கும் வன்முறைக்கும் இடையே இறுக்கமாகப் பிணைக்கப்பட்ட கூட்டணியாகும். தணிக்கை மற்றும் கட்டாயப்படுத்தப்பட்ட மௌனம் எந்தவொரு அதிகார நபரும் எதையும் செய்ய அனுமதிக்கிறது. தீவிர வன்முறையைப் பயன்படுத்துவது ஆட்சியின் கொள்கைகளை மேம்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், தனிப்பட்ட இலாபத்திற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. சர்வாதிகாரத் திட்டங்கள் அரசுக்கும் அதன் குடிமக்களுக்கும் இடையிலான உறவை மட்டுமல்ல, ஒட்டுமொத்தச் சமூகத்தின் கட்டமைப்பையும் எவ்வாறு சிதைக்கின்றன என்பதைப் படம் காட்டுகிறது. இதனால்தான் 25 ஆண்டுகாலச் சர்வாதிகாரத்தின் எதிரொலிகள் இன்றும் மிகவும் வலுவாக எதிரொலிக்கின்றன

படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக மார்சலோவாக நடித்த வக்னர் மொரா மிகச் சிறப்பாக நடித்துள்ளார். ஒரு சவால் மிக்க பாத்திரம், பல்வேறு யதார்த்தங்களை வெளிப்படுத்தவேண்டிய தேவையுள்ள பாத்திரம். இயக்குநருடன் இணைந்து பயணிக்கின்றார்.

பிரேசிலின் உருவப்படமாக இப்படமுள்ளது. இது ஒரு வரலாறு நினைவுகூறப்பட வேண்டும். இயக்குநரின் பார்வையின் கீழ் பாசிசம் வன்முறையும் வீரமும் உள்ளார்ந்த முறையில் இணைக்கப்பட்டுள்ள ஒரு மரண வழிபாட்டு முறையாகக் கருதப்படுகிறது. சர்வாதிகார ஒடுக்குமுறையின் கீழ் வாழ்க்கையின் அபத்தங்களை அம்பலப்படுத்துகிறார்.

இயக்குநரின் கோபத்தில் பல கேள்விகள் ஒளிர்கின்றன. நாம் யார்? நாம் எங்கிருந்து வருகின்றோம்? நாம் யாராக மாற அனுமதிப்போம்? எதை விட்டுச் செல்வோம்? அடையாளம் என்பது வரலாறு, உண்மை மற்றும் திணிக்கப்பட்ட பொய் ஆகியவற்றால் வரையறுக்கப்படுகிறது. அதுவே உண்மையும் கூட.

படத்தில் வரும் ஒரு பாடலின் பாடல் வரிகள் இவை - ‘நான் அவமானத்தின் கீழ் வாழ ஒரு நாய் அல்ல’

The Secret Agent

Directed by Kleber Mendonça Filho

Written by Kleber Mendonça Filho

நன்றி