சித்தர்கள் வளர்த்தெடுத்த இரசமருத்துவம்
- பால. சிவகடாட்சம்
ஆயுள்வேத மருத்துவக் கலையானது இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திற்கே மட்டுமே உரியது என்று எவரும் கருதியதில்லை. இந்தியாவின் பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள், தத்தமது பகுதிகளின் காலநிலை, அங்கு எளிதில் கிடைக்கக்கூடிய மருந்து மூலப்பொருட்கள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, தங்களுக்கேற்ற சிகிச்சை முறைகளை உருவாக்கிக் கொண்டனர். இந்தியப் பொதுமரபாக விளங்கிய ஆயுள்வேதத்தை அடித்தளமாகக் கொண்டு, உள்ளூர் அறிஞர்களின் அறிவுப் பங்களிப்புகளையும் அனுபவத்தின் வழியாகக் கண்டறியப்பட்ட சிகிச்சை முறைகளையும் இணைத்தே, பல்வேறு பிராந்தியங்களில் ஆயுள்வேத மருத்துவம் படிப்படியாக வளர்த்தெடுக்கப்பட்டது.
இவ்வாறு ஆயுள்வேத மரபு தொடர்ச்சியாகப் பேணப்பட்டு வந்த அதே நேரத்தில், ‘இரசமருத்துவம்’ என அழைக்கப்படும் ஒரு தனித்த உடல்நலம் பேணும் மரபும், பண்டுதொட்டே இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்பேசும் மக்களிடையே நிலவி வந்துள்ளது என்பது மருத்துவ வரலாற்றை ஆய்வு செய்யும் அறிஞர்களின் பொதுக் கருத்தாகும்.
எழுதப்படாத நூல்களின் மரபு:
ஆயுளை நீடிக்கச் செய்யும் வழிமுறைகளை மையமாகக் கொண்ட இரசமருத்துவம், எழுதப்பட்ட நூல்களை விட அனுபவத்தின் மூலம் பெறப்பட்ட அறிவையும் செவிவழியாகக் கற்றுக் கொள்ளப்பட்ட முறைகளையும் அதிகமாக நம்பி வளர்ந்தது. இதன் விளைவாக, ஆயுள்வேதத்தில் காணப்படுவது போன்று ஒழுங்கமைந்த பாடப்புத்தக மரபு இரசமருத்துவத்தில் தெளிவாக உருவாகவில்லை. குரு - சீடர் மரபின் வழியாகவே தலைமுறை தலைமுறையாகப் பரிமாறப்பட்டதால், இந்த மருத்துவ அறிவு நீண்ட காலம் வரை குறிப்பிட்ட சில யோகிகள் மற்றும் துறவிகள் குழுவினரால் பேணப்பட்டு வந்துள்ளது.
இரசவாதமும் காயகல்பமும்:
இரசமருத்துவ மரபின் மையக் கருத்துகளாக இரண்டு முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவற்றில் ஒன்று இரசவாதம் ஆகும் - செம்பு போன்ற தாதுக்களைப் பொன்னாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இதன் அடிப்படையாக இருந்தன. மற்றொன்று காயகல்பம் எனப்படும் கருத்தாகும். இது உடலை முதுமையிலிருந்து காக்கவும், நோயற்ற நீண்ட ஆயுளை வழங்கவும் நோக்கமுடைய சாவா மருந்து பற்றிய சிந்தனையை மையமாகக் கொண்டது.
திருமூலர் இவ்விரு கருத்துகளையும் தமது திருமந்திரம் நூலில் குறியீட்டுப் பாங்கில் விளக்குகிறார்:
செம்புபொன்னாகும் சிவாயநம என்னில்
செம்புபொன்னாகத் திரண்டது சிற்பரம்
செம்புபொன்னாகும் =யுங் கிரீயுமெனச்
செம்புபொன்னாவது திருவம் பலமே
திருமந்திரம், தந்திரம் 4, பாடல் 903
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே
திருமந்திரம், தந்திரம் 3, பாடல் 724
இங்கு ‘உடம்பு’ என்பது வெறும் உடலாக மட்டுமன்றி, ஆன்மிக சாதனைக்கான ஒரு முக்கிய கருவியாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. உடலைப் பேணுவதன் மூலம் உயிரையும் ஆன்மிக முன்னேற்றத்தையும் வளர்த்துக்கொள்ளலாம் என்ற இந்தக் கருத்தே, சித்தர் மருத்துவத்தின் அடிப்படைத் தத்துவமாக விளங்குகிறது.
யோகம், தவம், மருத்துவம்:
இரசமருத்துவம் ஒரு வழக்கமான தொழில்முறை வைத்திய முறையாக அல்லாமல், யோக சாதனையின் ஓர் அங்கமாகவே வளர்ச்சி பெற்றது. இதன் காரணமாக, இரச சித்தர்கள் பெரும்பாலும் தவம், தியானம் மற்றும் யோகப் பயிற்சிகளில் ஆழமாக ஈடுபட்டவர்களாக இருந்தனர். அவர்கள் நோயை மட்டும் குணப்படுத்துவதே தங்கள் குறிக்கோளாகக் கொள்ளவில்லை; நோய் வராத உறுதியான உடல்நிலையை உருவாக்குவதே அவர்களின் முதன்மை இலக்காக இருந்தது.
ஐரோப்பியர் பார்வையில் இரசசித்தர்கள்:
இரச சித்தர்களின் இரசவாதம் மற்றும் காயகல்பம் தொடர்பான ஆய்வுகளில், பாதரசத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆயுளை நீடிக்க உதவும் மருந்துகளுக்குப் பயன்படுத்தப்பட்ட ‘இரசம்’ என்ற சொல், காலப்போக்கில் பாதரசத்திற்கே பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது.
இது குறித்து மார்க்கோ போலோ (Marco Polo), பிரான்சுவா பேர்னியர் (François Bernier), கார்சியா டி ஓட்டா (Garcia de Orta) போன்ற ஐரோப்பியப் பயணிகளும் மருத்துவர்களும் தங்களின் பதிவுகளில் குறிப்பிடுகின்றனர். இந்திய ‘யோகிகள்’ பாதரசம் கலந்த மருந்துகளைப் பெரிதும் பயன்படுத்தியதாக அவர்கள் எழுதியுள்ள குறிப்புகள், இரசசித்த மரபின் தனித்துவத்தையும் அதன் உலகளாவிய கவன ஈர்ப்பையும் வெளிப்படுத்துகின்றன.
மார்க்கோ போலோ (1292 CE) பாண்டிய நாட்டில் தாம் சந்தித்த சித்தர்கள் குறித்து பின்வருமாறு பதிவு செய்துள்ளார்:
‘இந்தப் பிரதேசத்தில் வாழும் பிராமணர்கள், உலகின் பிற பகுதிகளில் வாழும் மக்களைவிட நீண்ட ஆயுளைப் பெறுகின்றனர். அவர்கள் பாதரசமும் கந்தகமும் கலந்து தயாரிக்கப்படும் ஒரு பானத்தை அருந்துகின்றனர். அந்தப் பானமே தங்களது ஆயுளை நீடிக்கச் செய்கிறது என்று அவர்கள் நம்புகின்றனர். இப்பானத்தை வாரத்திற்கு இருமுறை அல்லது சில சமயங்களில் மாதத்திற்கு இருமுறை தவறாமல் அருந்துகின்றனர்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வைத்தியரும் பயணியுமான பிரான்சுவா பேர்னியர், 1656 முதல் 1668 வரை சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்தவர். அவர் யோகிகள் குறித்து எழுதிய பதிவுகளில்,
‘எப்போதும் அலைந்து திரிந்து, உலகியலான விஷயங்களில் அக்கறையின்றி வாழும் யோகிகளிடம் பல முக்கிய இரகசியங்கள் மறைந்துள்ளன என்று மக்கள் நம்புகின்றனர். இவர்கள் பொன் செய்யும் கலையில் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும், பாதரசத்தை மிகுந்த திறமையுடன் சுத்திகரித்து மருந்துகள் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த மருந்துக் குளிகையை நாள்தோறும் ஒன்று அல்லது இரண்டு எடுத்துக்கொண்டால் நோய்கள் நீங்கி உடல் வலிமை பெருகும் என்று நம்பப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார்.
பேர்னியரின் எழுத்துகளை உறுதிப்படுத்தும் வகையில், பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த ஆனந்தநாதர் (Anand Nath) என்ற சித்தருக்கு 1661 அல்லது 1662-ஆம் ஆண்டுகளில் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. 89 ஆண்டுகள் வாழ்ந்த அவுரங்கசீப், தமது 43-வது வயதில் எழுதிய அந்தக் கடிதத்தில், அந்தச் சித்தரால் தமக்கு அனுப்பப்பட்ட பாதரச மருந்தின் தரம் குறித்தும், மேலும் சுத்திகரிக்கப்பட்ட பாதரசத்தை மீண்டும் அனுப்புமாறும் கேட்டுள்ளதைக் காணலாம்.
இரசசித்தர்கள்: வரலாறும் மரபும்:
நெடுங்காலமாக எழுதப்படாத நூல்களாகவே இருந்து வந்த இரசசித்தர் மரபு, இந்திய அறிவியல் மற்றும் மருத்துவ சிந்தனையின் தனித்துவமான ஒரு முகமாக இன்றளவும் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்தியா முழுவதும் பல சித்தர்கள் குறித்து ஏராளமான விசித்திரமான கதைகளும் மரபு வழிப் பதிவுகளும் பரவலாகக் கூறப்பட்டு வருகின்றன.
தமிழகத்தின் சித்தர் மரபு:
தமிழகத்தின் ‘பதினெட்டுச் சித்தர்கள்’ குறித்து அடிக்கடி பேசப்பட்டாலும், தமிழ்நாட்டுச் சித்தர்கள் பட்டியல் எப்போதும் ஒரே மாதிரியாக வழங்கப்படுவதில்லை. நந்திநாதர், திருமூலர், அகத்தியர், கம்பளிச் சட்டைமுனி, காகபுசுண்டர், போகர், சிவவாக்கியர், யூகி, காலாங்கிநாதர், புலிப்பாணி, கொங்கணர், கோரக்கர், கமலமுனி, கருவூரர், பூனைக்கண்ணர், உரோமரிஷி, வரருஷி, சுந்தரானந்தர் போன்ற பல பெயர்கள் வெவ்வேறு பட்டியல்களில் இடம்பெறுகின்றன. சில சமயங்களில் தன்வந்தரி, தேரையர், இடைக்காடர் போன்றவர்களும் பதினெட்டுச் சித்தர்களில் சேர்க்கப்படுகின்றனர்.
சித்தர்கள் அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே என்றும் கூற முடியாது. போகர், புலிப்பாணி, யூகி போன்றோர் சீன தேசத்தைச் சேர்ந்தவர்கள் என சில மரபுகள் தெரிவிக்கின்றன. தன்வந்தரி ஆயுள்வேத மருத்துவத்தின் பிதாமகராகவும், அறுவைச் சிகிச்சையின் தந்தையாகவும் அறியப்படுகிறார். புத்தபகவானின் மருத்துவரும் சீடருமான ஜீவகன் என்பவரின் நினைவாகவே, பிற்காலத்தில் ‘தேரையர்’ அல்லது ‘தேரர்’ என்ற பெயர் நிலைபெற்றதாகக் கருதப்படுகின்றது. மச்சமுனி, கம்பளிச் சட்டைமுனி, காகபுசுண்டர், பத்திரகிரி, கோரக்கர், காலாங்கி போன்றோர் வட இந்தியாவிலும் புகழ்பெற்ற சித்தர்களாக அறியப்படுகின்றனர்.
தமிழகத்தின் சைவ சித்தாந்த மரபில் நந்தி, அகத்தியர் மற்றும் திருமூலர் ஆகியோர் சித்த மரபின் தொடக்க முன்னோடிகளாகக் கருதப்படுகின்றனர். இவர்களுள், திருமூலரின் வரலாற்று இருப்பை இலக்கியம் மற்றும் தத்துவம் சார்ந்த பல சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. திருமூலர் இயற்றிய திருமந்திரம் என்பது யோகம், தத்துவம், மருத்துவம் ஆகிய மூன்றையும் ஒன்றிணைத்த அரிய படைப்பாகும். இதன் மூலம், தமிழகத்தில் ஒழுங்குபட்டதும் தொடர்ச்சியானதும் ஆன சித்தர் மரபு நிலைபெற்றிருந்ததை அறிய முடிகிறது. உடல்நலத்தைப் பேணுவது ஆன்மிக முன்னேற்றத்திற்கான அடிப்படை என்ற எண்ணமே, இந்த மரபின் முக்கிய தனிச்சிறப்பாக விளங்குகிறது.
அறிவியல் பார்வையில் சித்தர் மரபு:
உடல்நலம், யோகம், இரசவாதம், ஆன்மிகம் ஆகியவை இணைந்து உருவான தமிழகத்தின் சித்த மரபு, பின்னாளில் தமிழர்களிடையே ‘சித்த மருத்துவம்’ என்ற பெயரில் ஒரு தனித்துவமான மருத்துவ முறையாக அடையாளம் பெற வழிவகுத்தது.
சித்த மருத்துவத்தில் உலோகங்கள், தாதுக்கள், உப்புகள் மற்றும் பாதரசம் போன்ற பொருட்கள் சிறப்பு முறைகளில் பதப்படுத்தப்பட்டு மருந்துகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறு ‘சுத்திகரித்தல்’, ‘சுடுதல்’ போன்ற முறையான செயல்முறைகள் மூலம், இயல்பில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்களும் சிகிச்சைக்கு ஏற்ற பாதுகாப்பான வடிவங்களாக மாற்றப்படுகின்றன.
தொடக்க காலங்களில் சித்தர்களின் மருத்துவப் பங்களிப்புகள் அலட்சியப்படுத்தப்பட்டாலும், காலப்போக்கில் ஆயுள்வேதியர்கள் சித்தர் மருந்துகளையும் மருத்துவ நடைமுறைகளையும் தங்களின் சிகிச்சை முறைகளில் ஓர் அளவுக்காவது இணைத்துக் கொண்டனர். 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சாரங்கதாரர் என்பவரே, சித்தர்களின் இரசமருந்துகள், நாடிப் பரிசோதனை, சிறுநீர்ப் பரிசோதனை போன்ற நடைமுறைகளை முதன்முதலாகத் தமது ஆயுள்வேத நூலில் சேர்த்துகொண்ட வடமொழி ஆசிரியராக அறியப்படுகிறார்.
இதனால், இரசசித்தர் மரபும் ஆயுள்வேத மருத்துவமும் தனித்தனியாக வளர்ந்தவை அல்ல; மாறாக, ஒன்றுடன் ஒன்று ஊடாடி, பரஸ்பரத் தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டு வளர்ந்த அறிவுமுறைகளாக இருந்தன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் பின்னணியில், சித்த மருத்துவத்தை ஆயுள்வேதத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட தனிச்சிறப்புடைய மருத்துவ முறையாக மட்டும் அடையாளப்படுத்த முயல்வது அறிவியல் நோக்கில் பொருந்தாததாகும்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், சித்தர்கள் உருவாக்கிய பஸ்பங்கள், செந்தூரங்கள், குளிகைகள் போன்ற மருந்துகளின் தயாரிப்பு முறைகளையும், உலோகங்கள் மற்றும் கனிமங்களைச் சுத்திகரித்து மருந்தாக்கும் நுட்பங்களையும் விளக்கும் சித்தர் நூல்களைப் பயின்ற சில தமிழ் மருத்துவர்கள், தங்களை ‘சித்த மருத்துவர்’ அல்லது ‘சித்த ஆயுள்வேத மருத்துவர்’ என அழைக்கத் தொடங்கினர். பொது ஆண்டு 1920-க்குப் பிறகே ‘சித்த மருத்துவம்’ என்ற சொல்லாட்சி அரசு ஆவணங்களில் பயன்படுத்தப் பெறத் தொடங்கியது. ‘சித்த மருத்துவம்’ என்பது தனித்துவமான, சுயாதீனமான ஒரு மருத்துவ முறையாக இருபதாம் நூற்றாண்டுக்கு முன்பே நிலைபெற்றிருந்ததை உறுதிப்படுத்தும் வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்பதே, இன்றைய ஆய்வுகள் முன்வைக்கும் முக்கியமான உண்மையாகும்.
தமிழில் சித்த மருத்துவ நூல்களின் தோற்றம்:
இன்று நாம் ‘சித்த மருத்துவ நூல்கள்’ என்று குறிப்பிடும் தமிழ் மருத்துவ இலக்கியங்கள், ஒரே காலத்திலோ ஒரே சூழலிலோ உருவானவை அல்ல. அவற்றின் மொழிநடை, செய்யுள் அமைப்பு மற்றும் கருத்து வெளிப்பாடு ஆகியவற்றை கவனமாக ஆய்வு செய்தால், கால இடைவெளிகளும் மரபு மாற்றங்களும் தெளிவாகப் புலப்படுகின்றன.
இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக, பதினாறாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் உருவான செகராசசேகரம், பரராசசேகரம்போன்ற நூல்களுக்கும், பதினேழாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழகத்தில் சித்தர்கள் பெயரில் கிடைக்கப்பெற்ற நூல்களுக்கும் இடையே காணப்படும் வேறுபாடுகளை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மொழிநடையிலும் யாப்பு, அதாவது செய்யுள் அமைப்பிலும், இந்நூல்களுக்கு இடையே ஒரு தெளிவான இடைவெளி இருப்பது இன்றைய ஆய்வுகளின் மூலம் வெளிப்படுகிறது.
இந்த வேறுபாட்டை எளிதாகப் புரிந்துகொள்ள, நாடிப் பரிசோதனை குறித்த பாடல்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
செகராசசேகரம் நூலில் வரும் பாடல் இதோ:
அன்னமே கோழி ஓணான் மயிலென நடக்கில் வாதம்
பின்னையோர் ஆமை அட்டை பெருகவே நடக்கிற் பித்தம்
சொன்ன மாமயில் போல் நல்லாய் தொங்கிய தவளை நாகம்
என்னவே நடக்கில் அய்யென் றியம்பினார் நாடிதானே
இதற்குப் பிற்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் அகத்தியர் வைத்திய காவியம் நூலில் வரும் பாடல்:
ஆமப்பா வாதம் தானும் அன்னநடை கோழி ஆமை
தாமப்பா பித்தம் தானும் தவளையைப் போலே பாயும்
போமப்பா ஐயந் தானும் சர்ப்பம்போல் ஓடும் ஓடும்
நாமப்பா கண்டு சொன்னோம் நரம்பொன்றில் நாடி மூன்றே
இரண்டு பாடல்களும் நாடியின் தன்மையை உவமைகளின் மூலம் விளக்குகின்றன. ஆனால் சொல்லாட்சி, நடை, செய்யுள் வடிவம் ஆகியவற்றில் காணப்படும் வேறுபாடு, இவை ஒரே காலத்தைச் சேர்ந்தவை அல்ல என்பதை உணர்த்துகிறது.
இன்று நாம் பொதுவாக ‘சித்தர் வைத்திய நூல்கள்’ என்று அழைக்கும் தமிழ் மருத்துவ நூல்கள் பல, உண்மையில் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை என்ற கேள்வி நீண்ட காலமாக ஆய்வாளர்களிடையே விவாதமாக இருந்து வருகிறது. மொழிநடை, செய்யுள் அமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, சித்தர்கள் பெயரில் இன்று கிடைக்கும் பெரும்பாலான மருத்துவ நூல்கள் 14-ஆம், 15-ஆம் நூற்றாண்டுகளுக்குப் பின்னரே உருவானவை எனக் கூறுகிறார். அதேசமயம் இத்தகைய நூல்களின் உள்ளடக்கத்தில் கிடைக்கப்பெறும் செய்திகளும் இவற்றைப் பிந்தைய காலங்களில் ஆக்கப்பெற்றனவாகவே காட்டுகின்றன.
திருவள்ளுவர் பெயரில் வந்த மருத்துவ நூல்கள்:
திருவள்ளுவர் பெயரில் பத்துக்கும் மேற்பட்ட மருத்துவ நூல்கள் உள்ளதாக அறியப்பட்டுகின்றது. அவற்றில் ஞானவெட்டியான்என்ற நூல் அச்சிலும் வெளியாகியுள்ளது. அந்த நூலில் இடம்பெறும் ஒரு பாடலில்,
‘சாயாமல் அதிவீர ராம பாண்டியன் சொல்லும்
தமயந்தி சரித்திர நைடதமும்’
என்ற வரிகள் வருகின்றன.
இங்கு குறிப்பிடப்படும் நைடதம் என்னும் நூலை இயற்றிய அதிவீரராமபாண்டியன் 16-ஆம் நூற்றாண்டில் (1564-1604) திருநெல்வேலி பகுதியை ஆண்ட மன்னர். 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசர் ஒருவரை மேற்கோள் காட்டும் இந்த நூலை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்பப்படும் திருவள்ளுவர் எழுதியிருக்க முடியாது. இதன் மூலம், திருவள்ளுவர் பெயரில் வழங்கப்படும் மருத்துவ நூல்கள் பிற்காலத்தில் எழுதப்பட்டவை என்பது தெளிவாகிறது.
இராவணன் பெயரில் வழங்கப்படும் நூல்கள்:
இதேபோல, இலங்கை மன்னன் இராவணன் பெயரில் வழங்கப்படும் மருத்துவ நூல்களிலும் வரலாற்றுச் சிக்கல்கள் உள்ளன. அவற்றில் அர்க்கப் பிரகாசம் என்ற நூல் குறிப்பிடத்தக்கது. இதில் ‘அர்க்கம்’ எனப்படும் மருந்துத் தயாரிப்பு விளக்கப்படுகிறது. நூல் முழுவதும் இராவணனுக்கும் அவன் மனைவி மண்டோதரிக்கும் இடையிலான உரையாடல் வடிவில் அமைந்துள்ளது.
இந்த நூலில் குறிப்பிடப்படும் முக்கிய நோய் ஒன்று கவனத்தை ஈர்க்கிறது. ‘பறங்கியர்’ என்று அறியப்பட்ட போர்த்துக்கேயர்களால் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்ட பால்வினை நோயான சிபிலிஸ், தமிழில் ‘பறங்கி நோய்’ என்று அழைக்கப்பட்டது. அர்க்கப்பிரகாசத்தில் பறங்கி நோய்க்கு மருந்தாக பாதரசம் கலந்த ‘சங்க திராவகம்’ கூறப்படுகிறது. போர்த்துக்கேயர்கள் இந்தியாவுக்கு வந்த பிறகே இந்த நோய் பரவியதால், இத்தகைய குறிப்புகள் உள்ள நூல்கள் 16-ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக இருக்க முடியாது என்பது வெளிப்படையாகிறது.
மேலும், பறங்கி நோய்க்கு மருந்தாகப் பரிந்துரைக்கப்படும் ‘பறங்கிப்பட்டை’ (சீனவேர்) போன்ற மருந்துப் பொருட்களைக் கூறும் எந்த சித்தர் நூலும் 16-ஆம் நூற்றாண்டுக்கு முன்பதாக இருக்க முடியாது. அந்த அடிப்படையில், அகத்தியர் வைத்திய காவியம் 1500, அகத்தியர் வைத்திய சிந்தாமணி 584, தேரையர் காப்பியம் போன்ற நூல்களும் பிற்காலத்தைச் சேர்ந்தவையாகவே கருதப்படுகின்றன.
அகத்தியர் வைத்திய காவியம் 1500 என்னும் நூலில் பறங்கிபட்டைச் சூரணம் பற்றிக் கூறும் பாடல் ஒன்றை இங்கு நோக்குவோம்.
போமப்பா கரப்பனொடு கிரந்தி சூலை
புண்பொடிகள் கிரந்தி வெட்டை குட்டம் போக
நாமப்பா பட்டையிலே சூரணம் சொல்வோம்
நல்லவுரு வானதாய் புதுசாய் வாங்கி
ஆமப்பா பறங்கி என்ற பட்டை அஞ்சு பலம் தான்
அப்பனே தூக்கியபின் அமுக்கிரா சங்கு
வேமப்பா சிறு பிரப்பங்கிழங்கு கொன்றைப்பட்டை
வெற்றிபுரி சாரணைவேர் கொடிவேலி வேரே
தேரையர், போகர், புலிப்பாணி நூல்கள்:
தேரையர் பெயரில் கிடைக்கும் தேரையர் மகா கரிசல் என்னும் நூலில் தெலுங்குப் புலவர் வேமனார் பற்றிக் குறிப்புகள் உள்ளன. வேமனாரின் பாடல்களை ஆராய்ந்த சி.பி. பிரவுண், வேமனார் பொது ஆண்டு 1652-இல் பிறந்தவர் என்றும், அவரது படைப்புகள் 17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குரியவை என்றும் கூறுகிறார். இதனால், தேரையர் மகா கரிசல் 18-ஆம் நூற்றாண்டில் அல்லது அதற்குப் பின்னர் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது தெரிகிறது.
இராமதேவர் என்னும் சித்தர் அராபியா சென்று இஸ்லாம் மதத்துக்கு மாறி யாகோபு என்னும் பெயருடன் மெக்கா நகருக்குச் சென்று இந்தியா திரும்பியதாக போகர் 7000 (பாடல் 5700) என்னும் சித்தர் நூல் கூறுகின்றது.
போமேதான் பக்கிரி யாக்கோபுவென்றும்
பொங்கமுடன் சாத்திரத்தில் உரைத்தவர் போல்
நேமமுடன் வயததும் ஏதென்றக்கால்
நிலையான ஆண்டதுவும் இருநூற்றுச் சொச்சம்
நாமமுடன் நபிநாயகன் தன்னக் காண
நன்னயமாய் மக்கபுரி போனார் தாமே
இரந்துண்ணும் துறவிகளைக் குறிக்கும் அரபுப் பெயரான ‘பக்கீர்’ என்னும் சொல்லில் இருந்து பிறந்த ‘பக்கிரி’ என்னும் சொல் இந்தியாவில் பதினேழாம் நூற்றாண்டிலேயே வழக்கில் வந்தது.
போகர் பற்றிய பல கதைகளும் பரவலாகச் சொல்லப்படுகின்றன. பழனி முருகன் கோயிலில் உள்ள நவபாஷாண சிலையை வடிவமைத்தவர் போகர் என்பதும் அவற்றில் ஒன்று. ஆனால் போகர் பெயரில் இன்று கிடைக்கும் நூல்கள் பெரும்பாலும் 18-ஆம் நூற்றாண்டில் அல்லது அதற்குப் பின்னர் உருவானவையாகவே தெரிகின்றன. போகர் 7000 நூலில் 17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்ட பிரபுலிங்கலீலை பற்றிய குறிப்புகளும், புகையிரதம், நீராவிக் கப்பல், பரசூட் போன்ற நவீன கண்டுபிடிப்புகள் பற்றிய விளக்கங்களும் காணப்படுகின்றன. உலகின் முதல் புகையிரதம் 1825-ஆம் ஆண்டில்தான் ஓடியது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
போகர், புலிப்பாணி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் வைத்திய நூல்கள் குறித்து, தமிழ் மொழி அகராதியைத் தொகுத்த நா. கதிரவேற்பிள்ளை கூறுவது முக்கியமானது. போகரிடம் கற்ற மாணவர்கள் தங்கள் அனுபவங்களைச் செய்யுளாகப் பாடி போகர் நூலெனப் பெயரிட்டதாகவும், பிற்கால வைத்தியர்களும் தாம் அனுபவத்தால் அறிந்த முறைகளைப் பாடிக் காலந்தோறும் அந்த நூலில் நுழைத்தும் விட்டதாகவும், பிறகு அச்சிடப் புகுந்தோரும் கூட்டியும் திருத்தியும் மாற்றியும் அதனை அடியோடு பிறழ வைத்ததாகவும் கதிரவேற்பிள்ளை கூறுகிறார். போகரின் சீடர் என்று கூறப்படும் புலிப்பாணி பெயரில் உள்ள நூல்களும் அவரால் எழுதப்பட்டவை அல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்துகிறார்.
இன்று சித்தர்கள் பெயரில் கிடைக்கும் பெரும்பாலான மருத்துவ நூல்கள், அந்தச் சித்தர்கள் வாழ்ந்ததாக நம்பப்படும் காலத்தைவிட பல நூற்றாண்டுகள் பிந்தியவை என்பது புரிகிறது. சித்தர்கள் கண்டறிந்த மருத்துவ அறிவு நீண்ட காலம் எழுத்து வடிவில் இல்லாமல், வாய்மொழி மரபாகவே தலைமுறை தலைமுறையாகப் பரவி வந்திருக்கலாம். அந்த அறிவுகளைப் பின்னர் சேகரித்தவர்கள், தாம் கேட்டறிந்தவற்றைச் சித்தர்கள் பெயரில் நூல்களாக எழுதி வைத்திருக்க வாய்ப்புள்ளது.
இந்நூல்கள் பிற்காலத் தொகுப்புகளாக இருந்தாலும், அவற்றின் மதிப்பைக் குறைத்துப் பார்க்க வேண்டியதில்லை. மாறாக, சித்தர் மருத்துவ மரபு பல நூற்றாண்டுகளாக எவ்வாறு வளர்ந்து, காலச் சூழல்களுக்கு ஏற்ப மாற்றமடைந்து வந்தது என்பதைப் புரியவைக்கும் முக்கியச் சான்றுகளாகவே இவை விளங்குகின்றன. சித்தர் மருத்துவம் ஒரே காலகட்டத்தில் உருவான ஒன்று அல்ல; காலப்போக்கில் செழித்து வளர்ந்த, உயிர்ப்புள்ள ஒரு அறிவு மரபு என்பதையே சித்தர்கள் பெயரில் இன்று கிடைக்கப்பெறும் நூல்கள் நமக்குத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.
நன்றி
