Thaiveedu
Latest Articles
புத்தகம்

பிள்ளைகளைப் பாடசாலைகளிடம் ஒப்படைக்கும் பெற்றோர்களே...

அகமட் பிஸ்தாமி
அகமட் பிஸ்தாமி
March - March 10, 2026

பிள்ளைகளைப் பாடசாலைகளிடம் ஒப்படைக்கும் பெற்றோர்களே...

- அகமட் பிஸ்தாமி

புத்தாண்டு மலர்ந்து பிள்ளைகளைப் பாடசாலைகளில் இணைத்து விட்டிருப்போம். பிள்ளைகள் இரண்டு மாதங்களைப் பாடசாலைகளில் கழித்திருப்பார்கள். கிட்டத்தட்ட ஆறு வயதைப் பிள்ளைகள் அடைந்து விட்டால் அவர்களைப் பாடசாலைகளில் ஒப்படைத்து விடுவதற்காகப் பெரும்பாலும் எல்லா பெற்றோர்களும் படாத பாடுபட்டு தவியாய்த் தவிப்பர். பிள்ளைகளுக்கு மிகச்சிறந்த தரமான கல்வியைப் பெற்றுக் கொடுத்து, அவர்களுடைய கல்வி வாழ்க்கையை ஆரம்பித்து, ஒளிமயமான எதிர்காலம் ஒன்றை உருவாக்குவதற்கான சிறந்த எண்ணமாக இது அமையலாம். அல்லது பிள்ளைகளை வீட்டுச் சூழலில் வைத்து வளர்ப்பது, பராமரிப்பது மிகப் பெரும் சுமை எனக் கருதி அவர்களே பாடசாலைகளிலும் ஆசிரியர்களிடமும் ஒப்படைத்துவிட்டு ஓரளவு மனதிருப்தியை எதிர்பார்த்து இதனைச் செய்யலாம். எனினும், பிள்ளைகளை ஆறு வயதில் பாடசாலைகளுக்கு ஒப்படைப்பது என்பது இன்னும் 18 வருடங்களில் மிகச்சிறந்த தரமான முழுமையான ஆளுமையாக (perfect personality) அவர்களைக் காண்பதற்கான முதலீடு ஆகும் என்பதனை மறந்துவிடக் கூடாது.

பெற்றோர்களால் பிள்ளைகளுக்கு அன்பை ஆதரவை கணிப்பை தாராளமாக வழங்கி விட முடியும். ஆனாலும் பெற்றோரின் உட்கிடக்கைகளை (inner desire), மன எண்ணங்களை, உள்ளுணர்வுகளை ஒருபொழுதும் நேரடியாகப் பிள்ளைகளுக்கு கையளித்து விட முடியாது. பிள்ளைகளுக்கென்று தனித்துவமான ஆசைகள், ஆர்வங்கள், எதிர்பார்ப்புகள், எண்ணங்கள் உள்ளன. அவற்றை அடையப் பாடுபடுவது, போராடுவது முயற்சி செய்வது அவர்களது அடிப்படை உரிமை. அவற்றில் யாரும் தலையிட முடியாது. குறிப்பாக மேற்குலகில் குழந்தை உரிமைகள் கண்ணும் கருத்துமாக கரிசனையோடு பார்க்கப்படுகின்ற சூழலில் பெற்றோரின் பிரதியாக பிள்ளைகளை உருவாக்க எத்தகைய வாய்ப்புகளும் அங்கு இல்லவே இல்லை. சட்டரீதியாக, அது சிறுவர் உரிமை மீறல் (violation on child rights) போல மனித உரிமை மீறலாகவும் கொள்ளப்படும். பிள்ளைகளாலேயே பெற்றோருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்குரிய எல்லா ஏற்பாடுகளும் அங்கு காணப்படுகின்றன.

பிள்ளைகளது உடல், அறிவு, ஆன்மா போன்றன அவர்களுக்கே சொந்தமானவை. அவற்றில் எத்தகைய அழுத்தங்களையும் அத்துமீறலையும் பெற்றோர்களாகிய நாம் செய்ய முடியாது. பெற்றோர்கள் வழியாக பாடசாலையில் நிர்வகிக்கக்கூடிய அதிபரோ, ஆசிரியர்களோ கூட எந்த அழுத்தங்களையும் மேற்கொள்ளவே முடியாது. பிள்ளைகளின் உடலும் மனமும் சிந்தனையும் உணர்வும் அவர்களுக்கே சொந்தமானவை. அவர்களுக்கு எம்மால் வழிகாட்டல் நெறிப்படுத்தல்களை மாத்திரம்தான் வழங்க முடியும். எமது எண்ணங்களை எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்ககூடிய இயந்திரமாக அவர்களை மாற்ற முடியாது.

பிள்ளைகளை எமது கடந்த கால கஷ்டங்களைத் துன்பங்களைச் சொல்லிச் சொல்லியே அலுப்புத் தட்ட வைக்காமல் அவர்களுக்கான ஒளிமயமான எதிர்காலத்தை வடிவமைக்க நிகழ்காலத்தை திட்டமிட்டு பயன்படுத்துவதற்கு வசதியான உகந்த சூழலை (comfort zone / suitable environment) ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களாகிய எமது கடமை. அதுபோலவே பிள்ளைகள் கல்வி கற்கக்கூடிய பாடசாலைக் கட்டமைப்பு, சூழல், வகுப்பறை போன்றவற்றையும் ஏற்படுத்திக் கொடுப்பதும் பெற்றோரின் கடமை.

எமது எதிர்பாராத கனவுகளை விடுபட்ட ஆசை அபிலாசைகளை அவர்களுக்கூடாக நிறைவேற்றிக் கொள்ள முனைவது என்பது அப்பட்டமான அத்துமீறலாக பழிவாங்கலாக உரிமை மீறலாகவே அமைகின்றது. எமது உலகம், உணர்வுகள் வேறுபட்டவை போலவே அவர்களது உணர்வு, உரிமைகள், வாழும் காலம், பழக்கம், சூழல்கள், எதிர்பார்ப்புகள், கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் வேறுபட்டவை.

பிள்ளைகளிடம் எந்த அளவுக்கு நாம் உண்மைக்கு உண்மையாக (trustworthy) நேர்மைக்கு நேர்மையாக நீதிக்கு நீதியாக அநியாயத்துக்கு எதிராக உடனுக்குடன் குரல் கொடுக்கக் கூடியவர்களாக வாழ்ந்து காட்டுகின்றோமோ அவற்றைப் பிரதிபலிக்கக் கூடியவர்களாக பார்த்து தம்மை தாமே பிள்ளைகளும் மாற்றிக் கொள்வார்கள். இதற்கு மறுதலையாக அவர்களுக்கு நாம் பாடம் எடுக்கவோ விரிவுரை நிகழ்த்தவோ உபதேசங்கள் செய்யவோ முற்பட்டால் நிச்சயமாக இந்தப் பிள்ளைகள் அவற்றைக் கண்டு கொள்ள மாட்டார்கள். கணக்கில் எடுக்க மாட்டார்கள். கடந்து செல்வார்கள். இன்றைய பிள்ளைகள் வித்தியாசமானவர்கள். எதிலும் சுயமாக ஈடுபடுபவர்கள் சுயமாக முடிவெடுக்கக்கூடிய சிந்தித்து தீர்மானம் எடுக்கக்கூடிய ஆற்றலும் திராணியும் வலிமையும் பெற்றவர்கள். அவர்களை நாம் மிகச் சிரமப்பட்டு வளர்த்து ஆளாக்க வேண்டிய தேவைகள் கிடையாது. முன்னெப்போதும் இல்லாத அளவில் பிள்ளைகள் தாமாக வளரக்கூடிய சூழலே இப்பொழுது அவர்களுக்கு கையில் இருக்கின்றன. இதற்கு திறன் பேசிகளும் சமூக ஊடகப் பாவனையும் தக்க சான்று.

பொய் சொல்வதைப் பாவமாக உபதேசிக்கக்கூடிய பெற்றோர்களே தமது தனிப்பட்ட குடும்ப சமூக பொருளாதார வாழ்க்கையிலே பொய் சொல்வதை வாடிக்கையாக வேடிக்கையாக அற்பமாக வழமையாக கொண்டிருந்தால் பொய் சொல்வதில் இருந்து விடுபட்டு, ஒழுக்க விழுமியம் பேணக்கூடிய ஒரு சமூகத்தின் சாமானிய உறுப்பினராக கூட அந்த பிள்ளை வருவதற்கு முனைய மாட்டான். ஏனென்றால், பெற்றோரிடமிருந்து நேரடியாகக் கடத்தப்பட்ட பெற்றுக்கொண்ட கண்ட பழகிய விடயமாக பொய் இருப்பதனை அந்த பிள்ளை நிச்சயம் உணர்வான். மிகச் சிரமப்பட்டே இவை போன்ற துர்க்குணங்களிலிருந்து கடந்து செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை அவனுக்கு ஏற்படும்.

அதேபோல, வீட்டுச் சூழலிலே பெற்றோர்கள் அறிவுக்கு கொடுக்கின்ற அழுத்தத்தை அடுத்தவர்களது உணர்வுகளுக்கும் நடத்தைகளுக்கும் எண்ணங்களுக்கும் மனப்பாங்குகளுக்கும் கட்டாயம் கொடுக்க வேண்டும். இவற்றைப் புறக்கணித்துவிட்டு வெறுமனே வெளிப்படையாக மாத்திரம் நடிக்கக்கூடிய சூழலைத்தான் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கையளிப்பார்களேயானால் நிச்சயம் பிள்ளைகள் தத்தமது பரீட்சை மைய கல்வியில் மாத்திரம் கவனம் எடுத்து செயற்படுவார்கள். உண்மையான கல்வி மனித சமூகத்திலே தோற்றுவிக்க விரும்புகின்ற, உருவாக்க விரும்புகின்ற மானசீக ரீதியான ஒழுக்க ரீதியான பண்பாட்டு ரீதியான மாற்றங்கள் எதனையும் அந்த பிள்ளை கருத்தில் கொள்ளவே மாட்டாது என்பது உண்மை.

பாடசாலைகளுக்கு பிள்ளைகளைக் கையளித்துவிட்டு பெற்றோர்களால் நிம்மதியாக இருக்க முடியாது. பிள்ளைகளின் ஒவ்வொரு நடத்தையின் மீதும் கூர்ந்த கவனமும் அவதானிப்பும் கரிசனையும் தேவை. பிள்ளைகளிலே ஏற்படக்கூடிய உடலியல் ரீதியான உயிரியல் ரீதியான சமுகவியல் ரீதியான மாற்றங்கள், வயதுக்கு ஏற்ற மாற்றங்கள், நண்பர்களால் சூழலால் ஏற்படக்கூடிய மாற்றங்கள், சிந்தனை சார்ந்த மாற்றங்கள் போன்ற அனைத்தையுமே பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பிள்ளைகளை வழிப்படுத்த வேண்டும். பாடசாலைகளிடம் கையளித்து விடுவதால் ஆசிரியர்கள் அவர்களை உருவாக்கி விடுவார்கள் என்று மாத்திரம் நாங்கள் நினைத்துவிடக் கூடாது. பாடசாலைகளுக்குப் பிள்ளைகளை மூலப்பொருளாகக் கையளித்துவிட்டு அவர்கள் பிள்ளைகளை முடிவுப் பொருளாக மாற்றி அனுப்புவார்கள் என எண்ணுவது தவறு. பிள்ளைகள் உயிருள்ள ஜீவன்கள் எனவே, உடலுக்கு மாத்திரம் அல்ல உணர்வுக்கும் சிந்தனைக்கும் அவர்களுடைய வளர்ச்சிக்கும் ஏற்ப வழிகாட்டல் பாடசாலைகளில் வழங்கப்படுகின்றனவா என்ற விடயத்திலும் பெற்றோரின் கவனம் குவிய வேண்டும்.

அதே போல பிள்ளைகளிடம் தன்னம்பிக்கையை (self confidence) கட்டி எழுப்பக் கூடிய அளவுக்கு அவர்களுடைய உள்ளார்ந்த அக ஆளுமையிலும் பெற்றோர் பாடசாலைகளுக்கூடாகவும் பாடங்களுக்கூடாகவும் பாட ஆசிரியர்களுக்கூடாகவும் வழிகாட்டல்களை வழங்க வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் பிள்ளைகளைக் கண்ணியத்தோடு நடத்த வேண்டும். அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவர்களுடைய கருத்துகளைச் செவி தாழ்த்தி கேட்க வேண்டும். கருத்துச் சொல்ல அவர்களுக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும். தெரிவுகளுக்கு அவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். பிழை விடுகின்ற பொழுது அந்தப் பிழையைச் சுட்டிக்காட்டி அதனைச் சீர் செய்ய அல்லது சரியான முடிவு எடுப்பதற்கு அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். வீட்டுச்சூழலில் பிள்ளைகள் பெற்றோரிடம் இருந்து பெற்றுக் கொள்கின்ற மிகத் தரமான வாழ்நாள் நீடித்த நிலையான கல்வியாக வாழ்க்கைப் பாடமாக அமையும்.

பிள்ளைகளை எந்த சந்தர்ப்பத்திலும் அசௌகரியத்திற்கும் நெருக்கடிக்கும் தர்ம சங்கடமான நிலைக்கு ஆளாக்கிவிட இடம் தரக்கூடாது. அத்தகைய நிலைப்பாடுகளுக்கு அவர்கள் ஆட்பட்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் அதிலிருந்து அவர்களை விடுவிக்க அவர்களுடைய உள்ளத்தை அழுத்தத்திலிருந்து வெளியேற்ற எம்மாலான உடனடி உதவிகளைச் செய்து அவர்களுக்கு அந்த ஆத்ம சக்தியை ஆத்ம பலத்தைக் கொடுக்கக் கூடியவர்களாகப் பெற்றோர்கள் இருக்க வேண்டும்.

பிள்ளைகளுடைய நடத்தைகளிலே கோளாறுகளை முரண்பாடுகளை அவதானிக்கின்ற பொழுது அவற்றை அன்பாக ஆதரவாக கனிவாக கரிசனையாக எடுத்துக்காட்டி அவர்களை அவற்றிலிருந்து விடுவிக்கும் முறைமைகளைப் பெற்றோர்களாகிய நாம் தேடிக் கற்றுப் பயிற்சி பெற வேண்டும்.

வேலைப் பளுவும் சோலிகளும் நிறைந்த நெருக்கடியான இன்றைய நவீன யுக வாழ்க்கைக்கு மத்தியில் எமது அழுத்தங்களுக்கு எமது பிள்ளைகள் இரையாகி விடாமல் அவர்களுக்கான நேரத்தை ஒதுக்கி அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்துக்கான தூண்களாக முதுகெலும்புகளாக நாம் இருக்க வேண்டும்.

அதேபோல, பிள்ளைகளை ஆளுமையாக உருவாக்குவதில் அவர்களுடைய சுதந்திரத்தில் நாம் எந்த வகையிலும் தலையீடு செய்யக்கூடாது. இதனுடைய அர்த்தம் அவர்கள் விரும்பியபடி வாழ்வதற்கு இடம் தருவது என்பதல்ல. அவர்கள் குறைந்தபட்சம் அவர்களுடைய சில விடயங்களிலாவது நம்பிக்கையோடு உறுதியோடு முடிவுகளை எடுக்கக் கூடிய அளவுக்கு அவர்களுக்கும் சுதந்திரத்தை வழங்க வேண்டும். எல்லா விடயங்களிலும் அவர்களுடைய தனிப்பட்ட விவகாரங்களில் நாங்கள் தலையீடு செய்யக் கூடாது. அது அவர்களுடைய ஆளுமையைச் சிதைக்கக் கூடியதாக இருக்கும் அல்லது பெற்றோர் குறித்தோ சமூகம் குறித்தோ எதிர்மறை எண்ணங்கள் அவர்களில் உருவாக வழியமைக்கும். இது எதிர்காலத்தில் எம்மை அறியாமலேயே சமூக விரோதிகளாக அவர்கள் மாறுவதற்கும் ஏதுவாக இருக்கலாம்.

பிள்ளைகள் எப்பொழுதும் புதுமையை விரும்புவார்கள். எனவே எங்களுடைய பிள்ளைகளைச் சேர்த்து விடுகின்ற பாடசாலைகள், வகுப்பறைகள், பிள்ளைகளின் நண்பர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள், பாடசாலை சமூகம், பாடசாலைக்கு உதவி செய்யக் கூடியவர்கள் என எல்லோருடனும் எமது தொடர்பு கட்டாயம் இருக்க வேண்டும். அதேபோல, பிள்ளைகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் உத்வேகமும் தரக்கூடிய அளவு எமது பாடசாலையை, வகுப்பறையை நாம் அமைத்துக் கொடுக்க வேண்டும். அதேபோல பிள்ளைகள் வீட்டிலேயே கற்பதற்குகந்த, பொருத்தமான, ஆரோக்கியமான, ரசிக்கத்தக்க சூழலை அவர்களுக்கு நாங்கள் உருவாக்கிக் கொடுக்கின்ற பட்சத்தில்தான் அவர்களும் கற்றலைச் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் பெற வேண்டும் என்ற உள்ளுணர்வைப் பெறுவார்கள்.

இந்த வழிகாட்டல்களை நாம் கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டும். வெறுமனே, பாடசாலைகளுக்குப் பிள்ளைகளை நாம் ஒப்படைத்து விடுவதால் மாத்திரம் வருட முடிவிலோ அல்லது பிள்ளைகளின் கல்வி வாழ்க்கை நிறைவடைகின்ற பொழுதோ முழுமையான, பரிபூரணமான அறிவுத் திறன், ஆளுமை, சிந்தனை, மனவெழுச்சி மேம்பாடு போன்றவற்றில் பூர்த்தியான ஒரு உருவாக்கத்தை கண்டு கொள்ள முடியாமல் போகும்.

நன்றி