Thaiveedu
Latest Articles
இலக்கியம்

கனடாவில் கல்விவளப் பங்கீட்டுச் சமத்துவமின்மையும் கல்வித்தர வீழ்ச்சியும் காணப்படுகின்றதா?

த. சிவபாலு
த. சிவபாலு
March - March 10, 2026

கனடாவில் கல்விவளப் பங்கீட்டுச் சமத்துவமின்மையும் கல்வித்தர வீழ்ச்சியும் காணப்படுகின்றதா?

- த. சிவபாலு

கல்வி வளப் பங்கீட்டுச் சமத்துவமின்மை (Inequety Distibution of Resource) என்பது தனிமனிதர்களுக்கிடையே மட்டுமன்றி மாகாணங்களுக்கு மாகாணங்களும் வேறுபட்டனவாகக் காணப்படுகின்றன. கனடா அரசாங்கம் அனைவருக்கும் ஒரே வகையான கல்வி வளங்களை வழங்குவதில்லை என்ற குறை நீண்டகாலமாக நிலவிவருகின்றது. கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியில் மாகாணத்திற்கு மாகாணம் மட்டுமன்றி மாகாணங்களுக்குள்ளேயும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. கனடாவில் ஏற்பட்டுள்ள கல்விக்கான நெருக்கடி நிலைமைகளால் 90% மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதனைக் கடந்த ஜனவரி 13, 2025-இல் கனடா ஆசிரிய கூட்டமைப்பு எடுத்துக் காட்டியுள்ளது. கனடாவின் கல்வித்தரம் பற்றிப் பல்வேறு கருத்தூன்றிய கவனிப்புகள், நாட்டின் கல்விக்கான இலக்குகள் என்பவை எதிர்காலத் தேவையை உணர்ந்து, மாற்றத்தை உள்வாங்கி, எதிர்காலத்திற்கான மாணவ சமுதாயத்தை உருவாக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்.

ஒரு நாட்டின் மேம்பாடு அந்த நாட்டுக் கல்விமுறையிலேயே தங்கியுள்ளதென்பது வரலாறு கற்றுத்தந்த பாடம். கனடாவில் கல்வி வரலாறு ஐரோப்பியரின் வருகையோடு தொடர்புபடுகின்றது. அவர்கள் கல்வியின் ஊடாகத் தமது மதத்தையும் மொழியையும் பரப்புவதோடு தங்கள் நடைமுறைகளையும் அவர்களை ஏற்றுக் கொள்ளவைப்பதனை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டுள்ளனர். எது எவ்வாறெனினும் ஐரோப்பிய கல்வி வரலாற்றை கனடாவில் புகுத்தியதன் மூலம் கனடா கல்வி முறையில் புதிய மாற்றங்கள் புகுத்தப்பட்டன. இதனால் உலக நாடுகளோடு ஒப்பிடக்கூடிய கல்வித்தரத்தைக் கனடா எட்டியுள்ளது என்பது மறுப்பதற்கில்லை. அண்மைக்காலப் போக்குக்கள் கனடாவில் கல்வித்தரத்தில் வீழ்ச்சியைக் காட்டுவதற்கு கல்விமீதான அரசின் அக்கறை குறைந்து வருகின்றது என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளின் கல்வித்தரம் அதன் முன்னேற்றம் மட்டுமன்றி கல்விக்கொள்கைள் பயிற்று முறைகள், பாடத்திட்டம் என்பவை பற்றிய கணிப்பீட்டையும், தரத்தையும் மேற்பார்வை செய்து, அளவிட்டு அறிக்கை சமர்ப்பிப்பதில் ஐக்கிய நாடுகள் கல்வி விஞ்ஞான கலாசார (UNESCO) அமைப்பு முக்கிய பங்காற்றி வருவது உலகறிந்த விடயம். இந்த அமைப்பு கனடாவின் கல்வித்தரம் பற்றிக் காலத்திற்குக் காலம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. அதே வேளை கனடாவின் கல்வி மாகாண அரசாங்கத்தின் கீழ் உள்ளமையால் கல்விமுறை அமைப்பு பாடவிதானம் என்பன மாகாணங்களுக்கு மாகாணம் வேறுபாடுடையதாகக் காணப்படுவதால் கல்வித் தரத்திலும் வேறுபாடுகளைக் காணமுடிகின்றது. சில மாகாணங்கள் விஞ்ஞானம் கணிதம் போன்ற பாடங்களில் முதன்மை வகிக்கின்றன. சில மாகாணங்கள் இவற்றில் பின்னடைவைக் காட்டுகின்றன. இவற்றைவிடக் கனடாவில் கல்வித் தரத்தைத் தீர்மானிப்பவையாக கல்வியமைச்சின் ஆதரவு, வேலை வாய்ப்புகள், வேலைகளின் உறுதியற்ற தன்மை, வேலைகளின் தரமின்மை, மாணவர்களின் கல்விமீதான அக்கறையின்மை, அதிக மாணர்களைக் கொண்ட வகுப்பறைகள், பாடசாலை மாணவர்களிடையேயான வன்முறை அதிகரிப்பு, மாணவர்களின் மீது திணிக்கப்படும் அதிகளவு வேலைப்பழு, சிக்கலான பாடவிதானம், வருமான ஏற்றத்தாழ்வு, கல்வி இலக்குக்களைத் துரிதப்படுத்துதல், நீண்டகால (கோடைகால) விடுமுறை, கற்றல் முறைகளில் மற்றும் பாடவிதானங்களில் ஏற்படும் மாற்றங்கள் என்பன கல்வியின் தரத்தைப் பாதிப்பதாக ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

கனடாவின் கல்வித்தரம் வீழ்ச்சிப்போக்கு:

கல்வி அடைவுத்தரத்திற்கான, சர்வதேச கூட்டாண்மை சர்வதேச தராதரப் பரீட்சை ஒவ்வோர் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்றது. அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் 2024-இல் 64 நாடுகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்படி கனடா 32-வது இடத்திற்கு நகர்ந்துள்ளதைக் காணமுடிகின்றது. கனடாவில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மாகாணத்திற்கு மாகாணம் வேறுபட்டுக் காணப்படுகின்றது. அது மட்டுமன்றி கனடாவின் பழங்குடி மாணவர்களுக்கான வளப்பங்கீடு வளர்ச்சியடைந்த மாகாணங்களோடு ஒப்பிடும் போது மிகக் குறைவாகவே உள்ளது. ஆசிரியர் வளம், நிதியோடு தொடர்புடையதாகக் காணப்படுவதால் கணிதம், வாசிப்பு, விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் மேற்கொள்ளபட்ட சர்வதேச மாணவர் மதிப்பீடுகளில் முதனிலையை ஆசிய நாடுகளான ஜப்பான், சிங்கப்பூர், தென் கொரியா ஆகியவை உச்சத்தில் நிற்பதாக அப்பரீட்சை முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்தத் தேர்வுகளின் முடிவுகள் 2022 ஆண்டோடு ஒப்பிடும் போதுவீழ்ச்சியடைந்துள்ளமையை அவ்வாய்வு சுட்டிக்காட்டுகின்றது. 81 நாடுகளைச் சேர்ந்த 690,000 மாணவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இதில் கனடாவில் உள்ள 867 பாடசாலைகளைச் சேர்ந்த 23,000 மாணவர்கள் கணிதம், வாசிப்பு அல்லது விஞ்ஞானப் பாடங்களின் பரீட்சைக்கு உள்வாங்கப்பட்டிருந்தனர். உண்மையிலேயே இந்த வீழ்ச்சிவீதம் ஒன்ராறியோ, பிரிட்டிஸ்கொலம்பியா மற்றும் அல்பேட்டா மாகாணங்களில் வீழ்ச்சி வீதம் குறைவாகவும் மற்றய மாணங்களில் மிக அதிகமாகவும் காணப்படுவதாக ஆய்வு எடுத்துக்காட்டியுள்ளது. இது கல்வி அமைச்சை மட்டுமல்ல அனைத்துக் கல்வி அலுவலர்களையும் சிந்திக்க வைத்துள்ளது. இதன்படி சிங்கப்பூரைச் சேர்ந்த மாணவர்கள் 575 புள்ளிகளைக் கணிதத்திலும் 543 புள்ளிகளை வாசிப்பிலும், 561 புள்ளிகளை விஞ்ஞானத்திலும் பெற்றிருந்தார்கள். கனடாவில் கணிதத்தில் 497 புள்ளிகளையும், வாசிப்பில் 507 புள்ளிகளையும் விஞ்ஞானத்தில் 507 புள்ளிகளையும் பெற்றிருந்தனர். இது கனடாவின் கல்வி முறைக்கு ஓர் எச்சரிக்கையாக அமைந்தது என பிறேஸர் நிலையம் அறிவித்துள்ளது. கனடாவின் கல்விமுறைமையில் பல்கலைக்கழக புகுமுக புள்ளிகளுக்கான தேர்வுகள் இலகுபடுத்தப்பட்டுள்ளமையையும் அவை தராதரத்தைக் குறைத்துள்ளன என்பதையும் அது சுட்டிக்காட்டுகின்றது.

கல்வி பெறும் முறைமையில் அனைவருக்கும் இடமளிக்கவேண்டும் என்னும் கொள்கை முன்வைக்கப்படுகின்றது. இதனால் மதிப்பீட்டுத் தரத்தைக் குறைத்து சமநிலையைப் பேண விளைவதனால் கல்வித்தரத்தில் வீழ்ச்சி ஏற்படுகின்றது எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. தகமை கூடிய மாணவர்கள் தாங்கள் தொடர்ந்து காட்டிவந்த ஈடுபாட்டைக் குறைத்துக்கொள்கின்றார்கள் என ஆசிரியர்கள் குறைகூறுகின்றனர். மாணவர்கள் தாங்கள் நினைத்ததைப் பெறுமுடியாதுள்ளது என்பதும் அனைவருக்கும் சமத்துவமான கல்வி என்பதால் விரைவாகக் கற்கும் மாணவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதும் சவாலாக உள்ளது. அதாவது புத்திக்கூர்மை உள்ள பிள்ளைகளின் கற்றல் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் மழுங்கடிக்கப்படுகின்றன. ‘வேகமாகக் கற்பவர்களை முன்னோக்கித்தள்ளு, மெல்லக் கற்பவர்களை இழுத்துச் செல்’ என்னும் கோட்பாடு இங்கு பின்பற்றப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களின் திமைக்கேற்ப அவர்கள் வழி நடத்தப்படவேண்டும் என்பது கனடாவின் கல்வி முறைமையால் மழுங்கடிக்கப்படுகின்றது.

n கல்வி அமைச்சின் ஆதரவின்மையும் தவறுகளும்:

கல்வி அமைச்சின் செயற்பாடுகளும் பொறுப்புகளும் பற்றிப் பார்க்கும்போது கல்விக்கொள்கைகளை விருத்திசெய்தல், நடைமுறைப்படுத்துதல், பாடசாலைகளுக்கு நிதிகள் மற்றும் வளங்களை ஒதுக்குதல், பாடசாலைகளின் செயற்பாடுகளை மேற்பார்வை செய்தல், கல்வித்தரத்தை மேம்படுத்துதலும் தலையிடுதலும் போன்றவற்றை மேற்கொள்ளும் கடப்பாடுடையது.

அதேபோன்று கல்வி அமைச்சின் பொறுப்புகள்களாக கல்வித் தரத்தை ஒழுங்கமைத்தல், பாடவிதான விருத்தி மற்றும் மறுபரிசீலனை, கல்விச் சமநிலையைப் பேணுவதை உறுதிப்படுத்துதல், ஆசிரிய பயிற்சிகளும் விருத்தியும் என்பன உள்ளன. இவை எவ்வளவிற்கு செயற்படுத்தப்படுகின்றன என்பதைப் பொடுறுத்தே கல்வித் தரத்தை உயர்த்த முடியும்.

n உறுதியற்ற வேலை நிலைமைகள்:

ஆசிரியத் தொழில் இன்று மிகவும் சவால்கள் நிறைந்தவையாகவும் நிச்சயமற்ற தன்மை உடையதாகவும் காணப்படுவதற்குக் கல்வி அமைச்சின் செயற்பாடுகளே காரணமாகும். தொடர்ந்து வேலையில் பயணிக்க முடியுமா என்ற ஐயம் ஆசிரியர்களிடம் எழுந்தவண்ணம் உள்ளது. என்னதான் தொழிற்சங்கங்கள் போர்க்கொடி தொடுத்தாலும் கல்வி அமைச்சு தமது கல்விச் செலவினத்தைக் குறைத்துக்கொள்வதற்கு ஆசிரியர்களுக்கு மேலதிக வேலைப் பழுவைச் சுமத்துகின்றது என்பது உண்மைதான். மாணவர்களின் தொகையை 16-இல் இருந்து 23, பின்னர் 30 ஆக அதிகரித்த காலங்களில் ஆசிரியர்கள் பலர் பணியில் இருந்து விலக்கிக்கொள்ளப்பட்டனர். இதனைவிட மாணவர்களோடு ஊடாடுவதும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் சிக்கலாக அமைந்துவிடுகின்றது. எடுத்துக்காட்டாக ஒரு மாணவருக்கு ஆசிரியர் ஏசிவிட்டார் அல்லது அடித்துவிட்டார் எனப் பெற்றோர் முறையிட்டால் அந்த ஆசிரியர் விசாரணை முடியும் வரை பாடசாலைப் பக்கமே தலைகாட்டக்கூடாது என்ற மிக கடினமான வரையறைக்கு உட்பட்டு ஆசிரியர்கள் கொதிநீரில் நிற்பது போன்று வகுப்பறைகளில் செயற்படவேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

n மிகவும் வறிதான வேலை நிலைமைகள்:

ஆசிரியர்களின் வேலை நிலைமைகள் மிகவும் தன்னார்வமற்ற, தன்னிச்சையாக இயங்கமுடியாத நிலைமைகளைக் கொண்டுள்ளது. வகுப்பறைகளில் போதிய வளங்கள் அற்ற நிலைமைகள், மாணவர்கள் தொகை அதிகம், இரண்டு ஆசிரியர்கள் செய்யவேண்டிய பணியை ஒரு ஆசிரியர் செய்யவேண்டிய நிலைமைகள், வகுப்பறையில் உதவியாளருக்குப் பணிகளை நல்கவேண்டிய நிலைமை, மாணவர்களோடு உதவியாளரையும் மேற்பார்வை செய்யவேண்டிய நிலைமைகள், அதிகமான மாணவர்களுக்குத் தனித்தனியாக உதவவேண்டிய நிலைமைகள், மாணவர்களின் முன்னேற்றம் தொடர்பாகப் பொறுப்புக்கூற வேண்டிய நிலைமைகள், விரைவாகக் கற்கக்கூடிய மாணவர்களுக்கும் மிகவும் மந்த கதியில் கற்கும் மாணவர்களுக்கும் அவர்களின் கற்றல் முறைகள் தேவைகள் என்பனவற்றை நிவர்த்தி செய்யவேண்டிய கடப்பாடு உண்டு. மாணவர்களின் கல்வித்தரத்தைப் பேணத்தக்க வகையில் அனைத்து மாணவர்களின் முன்னேற்றத்தை அளவீடு செய்து அவர்களின் அடைவுகளை மறுபரிசீலனை செய்யவேண்டிய பாரிய பொறுப்பும் ஆசிரியர்களுக்கு உண்டு. இவற்றைவிடத் தம்மை சுயமதிப்பீடு செய்வதோடு தங்களது கற்பித்தல் முறைமைகள், திறன்களை அதிகரிக்கவேண்டிய செயற்பாடுகளுக்குப் போதியளவு காலமும், நிதியும் ஒதுக்கப்படாமை போன்ற விடயங்கள் ஆசிரியத் தொழிலை வறிதாகவே ஆக்குகின்றது.

n மாணவர்களின் அக்கறை இன்மை:

இன்று ஆசிரியர்களும் பெற்றோர்களும் எதிர்கொள்ளும் மிகவும் கவலை தரும் விடயம் மாணவர்களின் அக்கறை இன்மை. இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. ஏன் மாணவர்களின் ஈடுபாடு குறைவடைந்து செல்கின்றது என்பது இன்று கல்வியாளர்களிடமும் பெற்றோரிடமும் எழும் கேள்வியாகும். இந்தப் போக்குக் கனடாவின் ஆதிக்குடிகள் மத்தியில் அதிகளவாகக் காணப்படுகின்றது என்பதை ஐ.நா. கல்வி விஞ்ஞான கலாசார அமையம் எடுத்துக்காட்டியுள்ளது: ‘எல்லாக் குழந்தைகளும் வாழ்க்கையில் ஒரு சமமான வாய்ப்பைப் பெற உரிமை கொண்டிருக்கின்றனர்,’ என்று மோர்லி கூறினார். ‘கனடாவிலும், அதிகமான கனடாவின் முதல்குடி (Indigenous) குழந்தைகள் பின்தங்குகின்றனர். ஜாதியியல் அடிப்படையில் பாகுபட்டுள்ள மக்கள் குழுக்களில் உள்ள குழந்தைகள், பராமரிப்பில் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்கள், வறுமை மற்றும் பிற வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ளும் குழந்தைகள் அனைவரும் தங்கள் தனிப்பட்ட திறன்களுக்கு இணையான உரிமைகள் கொண்டு சேர்க்கப்படுவதற்கும் பராமரிக்கப்படுவதற்கும் உரிமை உள்ளவர்கள்.’

ஐ.நா. கல்வி விஞ்ஞான கலாசார அமையத்தின் அறிக்கை கல்வி சமத்துவத்திற்கு எதிரான அபாயங்களை அடையாளம் காட்டுகிறது. வருமானத்தில் உள்ள பாகுபாடு கல்வி இடைவெளிகளை மூடியுள்ளதைக் கடினமாக்குகின்றது. இது கல்விச் சாதனை இடைவெளியின் இரண்டு பக்கங்களிலும் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் சவால்களை உருவாக்குகிறது.

மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரிப்பதற்குப் பெற்றோர், ஆசிரியர் பாடசாலைகளுடன் இணைந்து செயற்படவேண்டியது அவசியமாகின்றது. மாணவர்கள் வாழும் சூழல், அவர்களின் தொடர்புகள் என்பனவும் அவர்களின் கல்விமீதான ஈடுபாட்டை அதிகரிக்கவோ அன்றிக் குறைக்கவோ முடியும். மாணவர்களின் கற்றல்மீதான ஈடுபாட்டைப் பெற்றோர் அறிந்துகொள்ளத்தக்க வகையில் ஆசிரியர்-பெற்றோர் சந்திப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. பாடசாலைகளும் பெற்றோரும் இணைந்து மாணவர்களின் வரவை அதிகரிப்பதோடு அவர்களின் செயற்றிறனை மட்டுமன்றி ஈடுபாட்டையும் அதிகரிக்க முடியும். பெற்றோரின் கண்காணிப்பு மட்டுமன்றி பாடசாலைகளில் மாணவர்களின் கற்றல் ஈடுபாடு பற்றிய தெளிவைப் பெற்றோருக்குத் தெரியத்தக்கதாக பெற்றோர் ஆசிரியர் ஊடாட்டம் அதிகரிக்கப்பட வேண்டும். கனடாவில் 16 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை பெற்றோருக்குச் சட்டத்தால் வரையறுக்கப்பட்டுள்ளமையும் ஒரு சாபக்கேடாகவே உள்ளது. கற்றலுக்கான நிதியினைப் பெற்றோரே பொறுப்பேற்க வேண்டும் என்றாலும் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலைமைகள் மாணவர்களின் கல்விமீதான அக்கறையின்மையை தடுக்கமுடியாததாக ஆக்கியுள்ளது என்பது கருத்திற்கொள்ளற்பாலது.

சிக்கல் நிறைந்த அளவுக்கு அதிக மாணவர்களைக் கொண்ட வகுப்புகள்:

மாணவர்கள் அதிகமாக உள்ள வகுப்புகளில் தனிப்பட்ட கவனிப்புகள் குறைவடையும், ஒவ்வொரு மாணவருக்கும் தேவையானவற்றை திருப்தியாகச் செய்யமுடியாத நிலைமை, அவர்களின் தேவைகள் தொடர்பில் ஆசிரியர் அறிந்து செயற்படமுடியாது இருப்பதால் ஆசிரியர், மாணவர்களுக்கிடையிலான இடைவெளி அதிகரித்துச் செல்லும்.

மாணவர்கள் அதிகமாக இருப்பதால் பிரத்தியேகக் கவனிப்புகள் குறைவடையும், மாணவர்களின் கற்கும் திறன்கள் குறைவடையும், மாணவர்கள் கட்டுப்பாடின்றி ஏனையோருடன் உரையாடுவார்கள், தங்கள் பக்கம் கவனத்தை ஈர்க்க ஏதாவது செய்து ஆசிரியரின் கவனத்தை மறுபக்கம் திரும்பச் செய்வார்கள். இது ஆசிரியர்களுக்கு அதிகளவு சிரமத்தைத் தருவதாக அமைகின்றது.

வகுப்பறைச் செயற்பாடுகளில் எல்லா மாணவர்களுக்கும் வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும் என்பதால் குறைந்தளவான செயற்பாடுகளையே மேற்கொள்ளமுடியும். மாணவர் செயற்பாடுகள் குறைவடைய அவர்களின் கவனம் வேறு திசைக்குத் திரும்பவும் வழிவகுக்கும். அதிக உதவி தேவைப்படும் மாணவர்களுக்குப் போதிய தேவைகள் பூர்த்திசெய்யமுடியாத நிலைமை ஏற்படும்.

அதிகரித்துவரும் வன்முறையும் ஆக்கிரமிப்பும்:

அதிகளவு மாணவர்கள் இருக்கும் இடங்களில் குறும்புத்தனம், சிறு சிறு சேட்டை விளையாட்டுகள் விபரீதமாக முடிந்து வன்முறைக்கு இட்டுச் செல்வதைக் காணமுடிகின்றது.

சில பாடசாலைகளில் வலுவளர் பிள்ளைகளை இணைத்துக்கொள்வதால் அவர்களின் வன்முறைகள் வகுப்பறைகளில் இடம்பெறுவதும் பெற்றோரை அழைத்து அவர்களை வீட்டிற்கு அனுப்புவதும் வழக்கமாக உள்ளது. இவற்றைவிட அதிகளவு மாணவர்கள் வகுப்பில் உள்ளமையால் அவர்கள் அனைவரையும் மேற்பார்வை செய்வது மிகவும் சிரமமாகவும் சிக்கலானதாகவும் உள்ளமையை ஆசிரியர்கள் எதிர்கொள்கின்றனர். இதனால் மாணவர்கள் மத்தியில் குழப்ப நிலைமைகளும் ஏற்பட்டு அது வன்முறையாக மாற்றம் அடைகின்றது.

அதிகரித்த வேலைப்பழுவும் தயார்படுத்தலுக்கான நேரப் பற்றாக்குறையும்:

மாணவர்கள் அதிகரிக்க அதிகரிக்க ஆசிரியர்கள் அளவுக்கு அதிகமான வேலைப்பழுவைச் சுமக்கவேண்டியவர்களாக உள்ளனர். இதனால் மாணவர்களை மேற்பார்வை செய்வது, அவர்களின் அடைவினை அவதானித்து அதற்கேற்ப செயற்பாடுகளை முன்னெடுப்பது, வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் அதிகவனங்கொண்டு செயற்படுவது என்பவை கடினமானதாகவே அமைகின்றது.

மாணவர்களுக்குச் சுமையான பாடவிதானம்:

பல நாடுகளிலும் இன்று பாடவிதானங்களை அளவுக்கு அதிகமாக உட்புகுத்தியுள்ளதோடு சமத்துவமற்றவையாகக் காணப்படுகின்றன. பாடவிதான விருத்தி என்பது புதிய உள்ளடக்கங்கள் காலத்திற்குக் காலம் போதியளவு அவசாகம், கற்பிக்கப்படும் நேரம் என்பனவற்றைக் கருத்திற்கொள்ளாது சேர்க்கப்படுகின்றது. இவ்விதம் கொடுக்கப்படும் பாடத்திட்டங்களை முடிக்கவேண்டும் என ஆசிரியர்கள்மீது அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன. இதனால் மாணவர்களின் அடிப்படைத் தேவைகள் நிவர்த்திசெய்யப்படாது அழுத்தம் கொடுக்கப்படும் புதிய பாடத்திட்ட உள்ளடக்கங்களைக் கற்பிக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். பாடவிருத்தி தொடர்பான உள்ளடக்கங்களை மீள் பரிசீலனை செய்யப்படுவது குறைவாகவே உள்ளது. திட்டம் பொருத்தமாகச் செயற்படுத்தப்படுகின்றதா என்பது மாணவர்களிடம் பரீட்சார்த்தமாகப் பரீட்சிக்கப்படுவதில்லை. பாடத்திட்ட விருத்திக்கான திட்டமிடல் கீழ்த்தட்டில் உள்ள ஆசிரியர்களால் திட்டமிடப்படுவதில்லை, மாறாக கற்பித்தல் செயலில் இல்லாத மேற்பார்வையாளர்கள் மட்டத்தில் தீட்டப்படுவதும் கல்விச் செயல் ஒழுங்கு தோல்வியடைவதற்குக் காரணமாகின்றது.

கூடிய இலக்கையோ, அன்றி இலட்சியத்தைத் துரிதப்படுத்துதல்:

பாடத்திட்டம் எதிர்பார்க்கப்படும் கற்றல் வேகம், நடைமுறையில் உள்ள கற்றல் வேகத்துடன் சமநிலையில் பொருந்தும் போது அது வெற்றியளிக்கலாம். ஆனால் பொதுவாக இவ்வித பொருந்துகை மிகக்குறைவாக இருப்பதனால் மாணவர்கள் அடிப்படை மற்றும் மிக முக்கியமான அறிவு மற்றும் திறன்களில் தேர்ச்சிபெறக் கூடிய செயற்பாடுகளை ஆசிரியர்களால் செய்ய முடியாதுள்ளது. கல்வித் திணைக்களத்தின் குறிக்கோளை அடைவதற்காக மிகவேகமாக நகர்த்தப்படும் போது இவ்வித நிலைமைகள் தவிர்க்கமுடியாததாகின்றது. இதனால் மாணவர்களின் எதிர்பார்ப்புகளை விட கல்வித்தர நிலைமைகள் கீழே வீழ்ச்சியடைவதை ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

வருமான ஏற்றத் தாழ்வு:

மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பெற்றோரின் பங்கு பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பது மறுக்க முடியாததொன்று. மாணவர்களின் கல்விக்கான அணுகுமுறைகள், அதன் விளைவுகள் என்பன அவர்களின் குடும்ப வருமானத்தில் பெரிதும் தங்கியுள்ளது என்பது வெளிப்படை. குழந்தைகள் கல்வி கற்கும் பருவங்கள் வேறுபட்டன. குழந்தைப் பருவம், முதனிலைப் பருவம், இடைநிலைப் பருவம், உயர்கல்விப் பருவம் என்பன கல்வியில் மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் வளங்களைப் பொறுத்தே அமைகின்றன.

கனடா சமூகத்தில் உள்ளவர்களின் வருமான ஏற்றத்தாழ்வுகள் அதிகளவாகக் காணப்படுகின்றன. வேதனம் பெறுவோரை எடுத்துக்கொண்டால் அவர்களில் பல தட்டுகளில் வைத்துப் பார்க்கலாம். பொதுவாக மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சட்டவாளர்கள், கணக்கியலாளர்கள் என உயர்ந்த வேதனத்தைப் பெறுபவர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தரமான குழந்தைப் பராமரிப்பு, அனைத்துலகப் பாடசாலைகளில் அனுமதி, தனித்துவமான கல்வி வாய்ப்புகள், கல்விக்கான உயர்தர கற்றல் உபகரணங்கள், விலையுயர்ந்த உடை, பொழுதுபோக்கு, என்பனவற்றோடு குழந்தைகளோடு செலவிடும் நேரமும் அதிகமாகவே உள்ளது.

ஆனால் சாதாரண கூலித் தொழிலாளர்களால் இவ்வித வாய்ப்புகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு நல்கமுடியாதுள்ளது. அத்தோடு அதிக நேரம் வேலை செய்யவேண்டிய நியதியும் காணப்படுவதால் பிள்ளைகளுடன் நேரத்தைச் செலவிட முடியாதுள்ளது. பொழுதுபோக்காக செலவுகூடிய கோடைகால முகாம்கள், அல்லது வேறு நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகளும் மிகக் குறைவாகவே உள்ளது. பிள்ளைகளை வெளியிடங்களுக்குக் கூட்டிச்செல்லும் நிலைமைகளிலும் கல்வியோடு தொடர்பான அருங்காட்சியகங்களுக்குக் கூட்டிச்செல்வதோடு அங்குள்ளவை பற்றி பிள்ளைகளோடு கலந்துரையாடி அவர்களின் அறிவாற்றலை வளர்க்கும் தன்மையும் கற்ற மற்றும் உயர்ந்த வேதனம் பெறும் பெற்றோருக்கு வாய்ப்பாக அமைகின்றது. ஆனால் கூலித்தொழில் செய்யும் உயர்கல்வி அற்றவர்களுக்கு அவை பற்றிய விளக்கங்களையோ அன்றி தொழினுட்ப வளர்ச்சி பற்றியோ செயற்கை நுண்ணறிவு பற்றியோ பிள்ளைகளுக்குச் சொல்லித்தர முடியாதவர்கள் மட்டுமல்ல அவர்களிடமே தங்கள் கைத்தொலைபேசிகளை இயக்கவோ அன்றி கணினியில் சிலவற்றைச் செய்யவோ தெரியாதவர்களாகத் தங்கள் பிள்ளைகளிடம் உதவி கேட்கவேண்டிய நிலையில் உள்ளனர். இது பிள்ளைக்குத் தனது தந்தைக்கு தெரியாதவையை நான் அறிந்து வைத்திருக்கின்றேன் என்ற பெருமை மட்டுமன்றி ‘உங்களுக்கு ஏதும் தெரியாது’ என்று கூறுவதையும் மௌனமாக ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைமை காணப்படுகின்றது.

கோடைகால கல்வி இழப்பு:

கல்வித் தரத்தின் வீழ்ச்சிக்கு ஆய்வாளர்கள் பல கருத்துகளை முன்வைக்கின்றனர். கனடாவில் பின்பற்றப்படும் கல்வி ஆண்டு மிக நீண்ட இடைவெளியுள்ள விடுமுறையைக் கொண்டுள்ளமையை ஒரு காரணமாக முன்வைக்கின்றனர். கோடை காலத்தில் இரண்டு மாதங்களுக்கு மேலாகப் பிள்ளைகள் கற்காமல் இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றார்கள் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் ஒன்ராறியோ கல்விக்கான ஆய்வுகள் நிறுவனத்தின் (OISE) கல்வியியல் மற்றும் உளவியல் இணைப்பேராசிரியர் ரொட் கண்ணிங்காம் என்னும் ஆய்வாளர். ஆண்டு முழுவதும் பிள்ளைகள் கல்வி கற்பது சிறந்தது எனக் குறிப்பிடுகின்றார். இருப்பினும் விடுமுறைகாலத்தில் வீட்டில் கற்றுக்கொள்ளப் போதுமான வசதிகள் வாய்ப்புகள் மற்றும் திறனை வளர்க்கும் நல்ல சூழ்நிலை காணப்பட்டால் வீட்டிலும் கற்றுக்கொள்ளலாம் எனக்குறிப்பிடும் அவர் பாடசாலைகளின் நீண்ட விடுமுறைக்கான இடைவேளையைத் தக்கவைத்துக்கொள்ளலாம் எனக் குறிப்பிடுவதில் இருந்து பிள்ளை கல்வியை இடைநிறுத்தாது தொடரவேண்டும் என்பது முன்வைக்கப்படுகின்றது. இது ஆசிய நாடுகளில் காணப்படும் இரண்டு அல்லது ஒரு வார விடுமுறைகளோடு ஒப்பிடும் போது கனடாவில் இரண்டு மாதங்களுக்கு மேலாக விடுமுறை வளங்கப்படுவது மாணவர்களின் கல்வித் தர வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக அமைகின்றது.

கனடாவில் கோடைகாலத்தில் கற்பதிற்குரிய வசதிகளைக் கல்வித் திணைக்களங்கள் வளங்குகின்றன எனினும் பெரும்பாலான மாணவர்கள் அவற்றைப் பயன்படுத்துவதில்லை என்ற குறையும் முன்வைக்கப்படுகின்றது.

பாடத்திட்டங்களில் / கற்றல் முறைகளில் மாற்றம்:

கல்விச் செலவீனத்திற்கு நிதியைப் பங்களிப்பது மாகாண அரசுகளின் பொறுப்பாகும். பாடத்திட்டங்களைத் தீட்டுவதும் மாற்றுவதும் மாகாண அரசுகளின் பொறுப்பாக உள்ளது. எனவே மாகாண அமைச்சர்களுக்குக் கீழ் உள்ள கல்வித் திணைக்களமே பாடத்திட்டத்தைத் தயாரித்தல், மாற்றுதல், நடைமுறைப்படுத்தல் என்னும் செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும் மேற்பார்வை செய்வதாகவும் உள்ளது. இது மாகாண அரசின் விருப்பு வெறுப்பைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது. கல்வி அமைச்சுகளின் கீழ் பாடவிதானத்திற்கான பிரிவு, இதற்கான தீர்மானங்களை மேற்கொண்டு நடைமுறைப்படுத்துகின்றது. எனினும் எந்தவித மாற்றம் இடம்பெற்றாலும் மாகாண அமைச்சின் அங்கீகாரத்தைப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதோடு கல்வியல் முன்னேற்றம் காண்பதற்கு கீழ்வரும் விதந்துரைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகின்றது:

n வகுப்பறைகளில் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைத்தல்

n கல்விக்கான துணை அலுவலர்களை நியமித்தல்

n சிக்கல் நிறைந்த விதிகளைத் தளர்த்துதல்

n ஆசிரியர்களின் பாடத்திட்டமிடல் தாயாரித்தலுக்கான பொருத்தமான நேரத்தை ஒதுக்குதல்

பாடத்திட்டத்தில் கட்டாயக்கல்வி உள்ளடக்கப்பட்டுள்ளது. 1 முதல் 12 வகுப்பு வரை மாணவர்கள் கல்வி கற்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த எதிர்பார்ப்பை அடிப்படையாகக் கொண்டே கல்வித் திட்டமிடல் மேற்கொள்ளப்படுகின்து.

கல்வியை நடைமுறைப்படுத்துவதில் ஆசிரியர்களின் ஆதரவு கற்றல் எதிர்பார்ப்புக்களோடு இணைந்து செல்ல வேண்டியுள்ளது. ஆசிரியர் கற்றலுக்கான உதாரணங்கள், முன்னெடுப்புகள், மற்றும் கற்றல் சாதனப் பயன்பாடுகள், வளங்களை ஒழுங்கமைத்தல் என்பனவற்றோடு தொடர்புடையதாக அமைகின்றது.

பாடவிதானத்தின் உள்ளடக்கம் அரசின் கொள்ளை வகுப்புகளோடு தொடர்புபட்டதாக உள்ளது. பாடத்திட்டம் அனைத்துப் பாடப்பரப்புக்களையும் உள்ளடக்கியதாக அமைவதோடு ஒழுக்கக் கல்வியையும் உள்ளடக்கியதாக அமையவேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாடத்திட்டத்தைத் தீர்மானித்தல், திட்டத்தை வடிவமைத்தல், மதிப்பீடு மற்றும் அளவீட்டுத் தகவல்களைத் தருதல் போன்றவை பாடத்திட்டத்தின்பாற்படுகின்றன. மாணவர்கள் மத்தியில் ஒழுக்கக்கேடு, மது மற்றும் போதைப் பொருட்பாவனை அதிகரித்து வருவது பாடசாலைகளுக்கு மட்டுமல்ல அரசாங்கத்திற்கும் பெற்றோருக்கும் பெரும் தலையிடியாக மாறிவருகின்றது. எப்படி இவற்றை தவிர்க்கலாம் என்பது விடை காணப்பட முடியாத சங்கிலித் தொடராக நீண்டு செல்கின்றது. இளந்தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையைச் சீரழித்துப் பாதியில் வழிமாறி தடுமாறும் நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். அவர்களை மீட்டெடுப்பது யார்? எப்படி? என்ற கேள்வி கல்வியாளர்களுக்கு மட்டுமன்றி சட்டத்தை நிலைநாட்டவேண்டிய பாதுகாவலர்களுக்கும் புரியாத புதிராகவே உள்ளது. ஒரு புறம் மது உற்பத்தியையும் விற்பனையையும் அரசு ஊக்குவிக்கின்றது மறுபுறம் கட்டுப்படுத்தவேண்டும் என அதற்காகவும் பெருந்தொகையான நிதியைச் செலவீடு செய்கின்றது.

முடிவுரை:

கனடாவின் கல்வித்தரம் மாகாணங்களுக்கு மாகாணம் வேறுபட்டுக் காணப்படுவதற்குக் பொறுப்பக்கூறவேண்டிய நிலைமை அந்தந்த மாகாண அரசுகளையே சாரும். கல்விக்கான நிதி ஒதுக்குவதில் கனடாவின் மத்திய அரசின் பங்களிப்புக் காணப்பட்டாலும் அதனை நிர்வகிக்கும் பொறுப்பு மாகாண அரசுகளிடமே உள்ளது. இதனால் கனடாவின் தேசிய கல்விக் கட்டமைப்பு ஒரே சீராக இயங்கமுடியாத நிலையில் உள்ளது. அல்பேட்டாவில் உள்ள பாடசாலைகளின் கல்வித்தரத்தில் கணித விஞ்ஞானத்துறைகள் முதனிலை வகிப்பதை ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் முதலாம் ஆண்டுக்கான பாடத்திட்டத்திற்கு ஈடான கல்வியை உயர்தரத்தில் கற்பிக்கப்படுவதாக ஆய்வறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.

பொதுவாகக் கனடாவில் கல்வித்தரம் பற்றிப் பேசும்போது அது உலகத்தரம் வாய்ந்ததென்பது மறுக்கவியலாதது. கல்வியாளர்கள் நிறைந்த நாடாகக் கனடா காணப்படுகின்றது. கனடாவில் 55%-தத்தினர் பட்டதாரிகள் என்பது உலக நாடுகளில் உயர்தரமாகும். பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை ரொறன்ரோ, மைக்கில், பிரிட்டிஸ் கொலம்பிய பல்கலைக்கழகங்கள் உலகில் உள்ள பல்கலைக்கழகங்களில் மிக உயர்தரம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. பல்வேறு துறைகளிலும் கற்கை நெறிகளைக் கற்கும் வாய்ப்புக் கனடாவின் பல்கலைக்கழகங்களில் காணப்படுகின்றன. கனடாவில் உள்ள பல்கலைக்கழகங்களைப் பொதுப் (அரசாங்க) பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், பொதுக் கலைக் கல்லூரிகள் என மூன்று பிரிவுகளுள் அடக்கமுடியும். ஆதிக்குடிகளின் கல்விச் சமத்துவமின்மை இன்றும் பிரச்சினையாகவே உள்ளது. கிராமியப் பொருளாதார வருமான வேறுபாடுகள் கல்வியிலும் தாக்கத்தைச் செலுத்துவது கண்கூடு. பாலர் வகுப்புத் தொடக்கம் 12-ஆம் வகுப்பு வரை கல்வி இலவசமானதாகக் காணப்படுகின்றது. பல்கலைக்கழக மாணர்வர்கள் தங்கள் பாடத்தேர்வுக்கான கல்வி நிதியைச் செலுத்தக் கடப்பாடுடையவர்கள் எனினும் மாணவர்களுக்கான கடன் வசதிகளும் திறமையின் அடிப்படையிலான கொடுப்பனவுகளும் காணப்படுவது பட்டதாரிகளின் கற்றலை இலகுபடுத்துவதாகக் காணப்படுகின்றது என்பது வெளிப்படை.

நன்றி