பதின்மவயதினருக்கும் உங்களுக்கும் இடையே - 11எமது பிள்ளைகளின் கண்களில்...
பதின்மவயதினருக்கும் உங்களுக்கும் இடையே - 11
எமது பிள்ளைகளின் கண்களில்...
- எஸ்.கே. விக்னேஸ்வரன்
தர்க்கத்தின் வரம்புகள்:
பெற்றோர்களாகிய நாம் வாழ்க்கையைப் பற்றி யோசிக்கிறோம்; உண்மைகளிலும் தர்க்கங்களிலும் நம்பிக்கை வைத்து அதைப்பற்றிச் சிந்திக்கிறோம்; பொருத்தமான கருத்தியல்களை உருவாக்குகிறோம்; பின் அவற்றின் அடிப்படையில் விவாதிக்கிறோம், அதன் மூலமாகப் பகுத்தறிந்து அது பற்றிய ஒரு முடிவுக்கு வருகிறோம். வீட்டுக்கு வெளியே இவை வாழ்க்கையைச் சமாளிப்பதற்குப் பயன்தரக்கூடிய வழிமுறைகள்தான். ஆனால், நமது சொந்தக் குழந்தைகளுடனான செயற்பாடுகளில் இந்த வழிமுறைகள் எமக்குத் தோல்வியைத்தான் தருகின்றன. குடும்ப உறவுகளில் தர்க்கங்களுக்கென்று வரம்புகள் இருக்கின்றன: அவை எங்கள் மனதுக்கு இதமாக இருப்பதில்லை. அவை சூடாக இருப்பதுடன் அதிருப்தியின் காரணமான நீண்ட எரிச்சல்களைக் கொண்டுவருகின்றன. பதின்மவயதினர் எங்கள் பகுத்தறிவைத் தோற்கடிக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையின் உயர்வு பற்றிய - பணம், அந்தஸ்து, வாழ்விற்கான பிற ஆதார வாய்ப்புகள் என்பவை பற்றிய - எங்களது கருத்துகளை நிராகரிக்கிறார்கள். அவர்கள் அதிகளவில் கற்பனாபூர்வமான வாய்ப்புகளை நாடுகிறார்கள். சகாக்களது போக்குகளை ஏற்றுக்கொள்வது, நண்பர்களின் மீது நம்பிக்கை வைப்பது, எதிர்ப்பாலினர் மீது ஈடுபாடு கொள்வது என்பவற்றை விரும்புகிறார்கள்.
நம் சொந்தக் குழந்தைகளுடனான போராட்டத்தில் வெற்றி பெற எங்களுக்கு எந்த வழியும் தெரிவதில்லை. அவர்களுக்கோ எல்லாவற்றுக்குமான நேரமும் சக்தியும் தாராளமாக இருக்கின்றன. நாம் அணிதிரண்டு ஒரு போரில் வெற்றி பெற்றாலும், அவர்களால் நாம் கற்பனை செய்ய முடியாத பழிவாங்கல் உணர்வுடன் எங்களுக்குப் பதிலடி கொடுக்க முடியும். அவர்கள் எதிராளிகளாகவோ குற்றச் செயலில் ஈடுபடுபவர்களாகவோ நடந்துகொள்ளக் கூடும். அல்லது வெறுமனே செயலற்றவர்களாகவோ நரம்பியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களாகவோ மாறலாம். அவர்களிடம் எல்லா ஆயுதங்களும் உள்ளன: போதுமான அளவு கோபப்பட்டால், ஒரு பதின்மவயதுப் பையன் ஒரு வாகனத்தைத் திருடலாம், ஒரு பதின்மவயதுப் பெண் கர்ப்பமாகலாம். அவை நம்மை மரணத்தை நோக்கித் தள்ளலாம் அல்லது எங்களைப் பகிரங்கமான அவமானத்திற்கு உள்ளாக்கலாம்.
இந்தச் சூழ்நிலையை ‘எலியாகசான்’ தனது ‘தி அரேஞ்ச்மென்ட்’(The Arrangement) என்ற நாவலில் இவ்வாறு விளக்குகிறார்:
‘மற்றப்படி எல்லா விதமான சிறப்பான வாய்ப்புகளையும் கொண்டிருந்த ஃபின்னேகனுக்கு இருந்த ஒரேயொரு பிரச்சினை, அவரது மகன்தான். அவன் குடிபோதையில் விழுந்து, தனது தந்தையின் நற்பெயரைக் கெடுக்கக் கூடிய அனைத்தையும் செய்வதில் உறுதியாக இருந்தான். ஒரு கட்டத்தில் ஃபின்னேகன் அவனைக் கைவிட்டு, அதுதான் கடைசி என்று கூறி ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்து, அவனை வீட்டிலிருந்து விலக்கி வைத்தார். மகன் அந்தப் பணத்தைப் பயன்படுத்தி தனது தந்தையை அம்பலப்படுத்தும் வகையிலான ஒரு பிரசுரத்தைத் தனிப்பட்ட முறையில் அச்சிட்டதுடன், அதை வாசிப்பதற்காகஅனைவருக்கும் இலவசமாகவும் வழங்கினான்.
ஃபின்னேகனைப் போலவே, அனைத்து பெற்றோர்களும் பாதிக்கப்படக்கூடியவர்கள்தான். அவர்களால் தமது பதின்மவயதினரைத் தாக்குவதன் மூலம் வெற்றிபெற முடியாது. பெற்றோர்கள் வெற்றி பெறுவதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அதுதான், தங்கள் குழந்தைகளை வெல்வது அல்லது வென்றெடுப்பது. இந்த வழி சாத்தியமற்ற ஒன்றாகத் தோன்றலாம், ஆனால் அது எம்கைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று அல்ல. நாம் எங்கு தொடங்குவது என்பது பற்றி எபிரேய முனிவர்கள் இவ்வாறு கூறினர்: ‘ஞானத்தின் ஆரம்பம் மௌனம்; இரண்டாவது நிலை செவிகொடுத்துக் கேட்டல்.’ பின்வரும் கூற்றுகள் பதின்மவயதினரால் செய்யப்பட்டன. அவற்றைக் கேட்போம்:
4 ‘ஒரு முரட்டுப் புத்திசாலி’:
பதினெட்டு வயதான ஹாரியட் கூறுகிறார்:
‘என் அப்பா தன்னை ஒரு அறிவுஜீவி என்று பெருமையாக நினைத்துக் கொண்டிருக்கிறார். அவர் இடைவிடாத பகுத்தறிவுடன் சிந்திக்கவும், கோட்பாடுகளை வகுக்கவும் செய்கிறார். அவர் ஒவ்வொரு பிரச்சினையினதும் அனைத்துப் பக்கங்களையும் பார்ப்பதுடன், பாரபட்சமற்றவராக இருக்கவும் முயல்கிறார். ஆனால், நான் அடிக்கடி அவர் மீது கோபப்படுகிறேன், எல்லாம் குழப்பமாக இருக்கும். என் அப்பா ஒரு கெட்டவர் அல்ல; அவர் நியாயமானவர்; கஞ்சத்தனமும் இல்லாதவர். ஆனால் அவருக்கு ஒரு முரட்டுத்தனமான புத்தி இருக்கிறது. அவரது மனம் ஒரு கடினமான சுத்தியல் போன்றது. அவரது தர்க்கம் கூர்மையான ஆணிகளைப் போன்றது. நான் ஒரு கருத்தைச் சொன்னாலோ கேள்வி கேட்டாலோ, அவர் என்னைச் சித்திரவதை செய்கிறார். நான் அவரிடம் என்ன சொன்னேன் என்பதை நான் எங்கே கண்டுபிடித்தேன், அது அப்படித்தான் என்று எனக்கு எப்படித் தெரியும் என்பதை அறிய விரும்புகிறார். என் சிந்தனைத் தொடரின் ஒவ்வொரு திருப்பத்தையும் அவர் பின்தொடர்கிறார். பிறகு, நான் தவறான பாதையில் இருக்கிறேன் என்று நிரூபிக்கிறார். அவர் ஒரு சாதாரண புத்திசாலியாக, ஒரு சாதாரணமான மனிதனாக இருக்க வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன்!. ஏதாவது ஒரு தேவை காரணமாக அவர் எதையாவது செய்வதை மட்டுமே நான் விரும்புகிறேன். அவர் ஒரு பூவைப் பறிப்பதற்காகவோ, நடப்பதற்காகவோ, அல்லது சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பதற்காகவோ வீதியோரத்தில் வாகனத்தை நிறுத்துவதை என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடிவதில்லை.
4 ‘என் தந்தையைப் போல இருப்பதற்கு நான் மறுக்கிறேன்’:
தனது பதினேழு வயது நண்பனுக்கு எழுதிய கடிதத்தில் ஹரோல்ட் இவ்வாறு எழுதினான்:
‘நான் பெரியவர்களைப் பார்க்கும்போது, அவர்களிடம் பேராசையையும் இலட்சியத்தையும் தான் காண்கிறேன். அவர்கள் தம் வாழ்க்கையில் விரும்புவது ஒரு வங்கியில் ஒரு பெரிய சேமிப்புக் கணக்கு, கிராமத்தில் ஒரு வீடு, இரண்டு கார்கள், அவற்றுடன் ஒரு படகு மட்டுமே. என் பெற்றோருக்கு இதெல்லாம் இருக்கிறது மட்டுமல்ல, இன்னும் நிறைய இருக்கிறது. எங்களுக்கு இரண்டு கார்கள், இரண்டு வீடுகள், ஒரு நாட்டுப்புற கிளப் ஒன்றில் உறுப்பினர் பதவி எல்லாம் இருக்கிறது. என் அப்பா பணக்காரர். கிட்டத்தட்ட எல்லாமே அவருக்குச் சொந்தமானவை. எங்கள் வீடு இலத்திரனியல் சாதனங்களால் நிறைந்துள்ளது. ஆனால் என் அப்பா மகிழ்ச்சியாக இருக்கிறாரா என்றால் இல்லவே இல்லை. அவர் பரிதாபகரமானவர். அவர் அதிக வேலைப்பளுவால் சோர்வடைந்து போய் இருக்கிறார். அவர் நேரப் பற்றாக்குறையாலும் வரிகளாலும் அழுத்தப்படுகிறார். தலைவலியாலும் சந்தேகங்களாலும் துன்புறுத்தப்படுகிறார். வெற்றியின் ஏணியில் ஏறிவிட்டார், ஆனால் அது இன்னும் அதிக ஏற்றத்தைத் தவிர வேறு எதையும் அவருக்கு வழிவகுக்கவில்லை. இப்போது அவர் பீதியடைந்துள்ளார். அவருக்கு மனச்சோர்வு ஏற்பட்டுள்ளது. அவர் தோற்றத்தில் வயதானவராகத் தெரிகிறார். தனது பிரபலத்தின் உச்சத்தில் இருக்கும்போதே, வீணாக இளைத்துப்போன ஒரு வயதான மனிதராக அவர் ஆகிவிட்டார். நான் என் தந்தையைப்போல இருப்பதை வெறுக்கிறேன். நான் செல்வங்களைக் குவிக்கவோ சொத்துகளை வாங்கிக் குவிக்கவோ விரும்பவில்லை. அத்தகைய வெற்றிகளையிட்டு நான் வெறுப்படைகிறேன். நான் இப்படியான ஒரு ‘எலி ஓட்டப்பந்தய’த்தைத் (Rat Race) தவிர்ப்பதில் உறுதியாக இருக்கிறேன்.’
4 ‘என் பெற்றோருக்காக நான் வருந்துகிறேன்’:
பதினெட்டு வயது ஸ்டூவர்ட் இவ்வாறு கூறுகிறான்:
‘என் பெற்றோருக்காக நான் வருந்துகிறேன். அவர்கள் பணத்தைக் கனவு கண்டு தங்கள் வாழ்க்கையை வீணடித்துவிட்டார்கள். என் தந்தை வாழ்க்கையை வாழவில்லை. அவர் அதைக் கணக்கிடுகிறார். அவர் கூட்டிக்கழித்துத் தீவிரமாக முதலீடு செய்கிறார். ஒரு வழக்கமான ‘IBM’ கணினியின் தரவுகளிலும் எண்களிலுமாக வாழ்பவர் அவர். என் அம்மாவும் அவருடன் அவரது பொருளீட்டுவதற்கான தேடல்களைப் பகிர்ந்து கொள்கிறாள்தான். ஆனால் அவள் ஏமாற்றமடைந்து களைத்துப்போய் இருக்கிறாள். ‘தாங்கள் எவ்வளவு அற்பமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.’
4 ‘நான் ஒரு இழிந்த நிலைக்கு மாறிக்கொண்டிருக்கிறேன்’:
பதினேழு வயது மிட்செல் கூறுகிறான்:
‘நான் வாழ்க்கையை தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன். நான் நெறிமுறைப்படி வாழ விரும்புகிறேன். ஆனால் மாறாக நான் ஒரு இழிந்த நிலைக்கு மாறிக்கொண்டிருக்கிறேன்.
எங்கள் கொள்கைகளுக்கு ஏற்ப வாழ வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதை நான் உணர்கிறேன். நீங்கள் அதற்கு முயற்சித்தால் நீங்கள் ஒரு அப்பாவியாக இருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். பாசாங்குத்தனம் நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது என்பதை நான் கண்டுபிடித்துள்ளேன். அதுதான் வீட்டிலும், பள்ளியிலும், சமூகத்திலும் எதிர்பார்க்கப்படுகிறது. என் தந்தை தனிப்பட்ட உறவுகளில் மிகவும் நல்ல நெறிமுறை கொண்டவர் தான். ஆனால் அவர் வணிகத்தில் கிட்டத்தட்ட ஒரு மோசடி செய்பவராகவே இருக்கிறார். அம்மா அரசியலில் ஒரு தாராளவாதி. ஆனால் எங்கள் சுற்றுப்புறத்தில் எந்த நீக்ரோவும் வரக்கூடாது என்று அவர் பிரார்த்தனை செய்கிறார். எங்கள் பாடசாலை சமத்துவத்தைப் போதிக்கிறது. ஆனால் ஆசிரியர்கள் அனைவரும் வெள்ளையர்கள்; அத்துடன், வகுப்புகள் அடையாள அடிப்படையில்தான் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.’
4 ‘அவர் வாழ்க்கையை ஒரு சூத்திரத்தில் பொருத்த முயற்சிக்கிறார்’:
பதினாறு வயது ஹோவர்ட் கூறுகிறான்:
‘என் தந்தைக்கு அறிவியலைப் பற்றி நன்றாகத் தெரியும், ஆனால் மனிதர்களைப் பற்றி அவருக்குத் தெரிந்தது மிகக் குறைவு. அவர் ஒரு இரசாயனவியலாளர். அத்துடன் வாழ்க்கையை ஒரு சூத்திரத்திரத்துக்குள் பொருத்த முயல்கிறார். அவருக்கு ஒழுங்கும் கட்டுப்பாடும் மிகவும் அவசியமானவை. அதனால் அவர் எப்போதும் விரக்தியடைகிறார். வாழ்க்கை என்பது அவருக்கு மிகவும் ஒழுங்கற்ற ஒன்று. அவரே தன்னை ஒருபோதும் சுதந்திரமாக உணரவில்லை. அவர் தனது உணர்வுகளைக்கட்டுப்படுத்துகிறார்; தனது ஊழியர்களைக் கட்டுப்படுத்துகிறார்; அவர் என் அம்மாவைக்கூடக் கட்டுப்படுத்துகிறார். அதைவிட அவர் என்னையும்கூடக் கட்டுப்படுத்த முயல்கிறார். அவருக்கு மக்கள் மீதான சகிப்புத்தன்மை என்பதே கிடையாது. அவர் தானே ஒரு முழு மனிதனல்ல. அவர் ஒரு கட்டுப்பாட்டுப் பரிசோதனைப் பொருளைப் போன்றவர். அவர் என்னை நேசிப்பதாகக் கூறுகிறார். எனக்கு அது தெரியவில்லை. எனக்கு சிறந்ததையே தான் விரும்புகிறேன் என்று கூறுகிறார். எப்படித்தான் அவருக்கு அது முடியும்? அவருக்குத்தான் என்னைப் பற்றி எதுவும் தெரியாதே.
4 ‘என் தந்தையின் கனவு’:
பதினேழு வயது நிக்கோலஸ் கூறுகிறான்:
‘என் தந்தையின் மனதில் ஒரு சிறந்த மகனின் பிம்பம் இருக்கிறது. அவர் அவனை என்னுடன் ஒப்பிடும்போது, மிகவும் ஏமாற்றமடைகிறார். நான் என் தந்தையின் கனவை நிறைவேற்றவில்லை. சிறுவயதிலிருந்தே, அவரது ஏமாற்றத்தை நான் உணர்ந்திருக்கிறேன். ஆனால் அவர் அதை மறைக்க முயல்கிறார். ஆயினும் அது அவரது தொனியில், அவரது வார்த்தைகளில், அல்லது அவரது மௌனத்தில் என்று நூறு சின்னச் சின்ன வழிகளில் அது வெளிப்படுகிறது. அவர் தனது கனவின் ஒரு ‘கார்பன் பிரதி’ (carbon copy) யாக என்னை மாற்றக் கடுமையாக முயன்றார். அதில் அவர் தோல்வியடைந்தபோது, என்னைக் கைவிட்டுவிட்டார். ஆனால் அவர் ஒரு ஆழமான வடுவை, தோல்வியின் நிரந்தர உணர்வை விட்டுச்சென்றிருக்கிறார்.’
4 ‘வாழ்க்கையில் அவளுடைய ஒரே ஆர்வம் நான் தான்’:
பதினைந்து வயது மன்ரோ கூறுகிறான்:
‘என் அம்மா என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள். அது அவளைக் கொன்றாலும் கூட, வாழ்க்கையில் அவளுக்கு இருக்கும் ஒரே ஒரு ஆர்வத்துக்குரியவன் நான் தான். என் உடல்நலம், என் வீட்டுப்பாடம் என்னுடைய சமூக வாழ்வு எல்லாம் அவளுடைய முக்கிய கவலைகள். அம்மா கடினமாக உழைக்கிறாள்; எனக்காக தேவையற்ற எல்லா வகையான வேலைகளையும் செய்வதைக் கூட அவள் ஒருபோதும் நிறுத்துவதில்லை. நான் ஒருபோதும் அணியாத காலுறைகளைக்கூட அவள் பின்னுவாள். நான் நோய்வாய்ப்பட்டால், அவள் பதறிப்போய் விடுகிறாள். எங்கள் வீடு அன்ரிபயோட்டிக்களாலும் சிக்கன்சூப்களாலும் (antibiotics and Chicken soups) நிறைந்த மருந்துக் கடையாக மாறுகிறது. நோயிலும், ஆரோக்கியத்திலும் அவள் என்னை ஒரு பருந்து போலக் கவனித்துக்கொள்கிறாள்!.’
4 ‘என் அம்மா வளர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’:
பதினாறு வயது ஹென்றிட்டா கூறுகிறாள்:
‘என் அம்மா முதிர்ச்சியற்றவள். அவளுக்கு அதிக கவனிப்பு தேவைப்படுகிறது. வீட்டை எப்படி நிர்வகிப்பது, எங்களை எப்படிக் கவனித்துக் கொள்வது என்று அவளுக்குத் தெரியாது. அவளுக்குக் கார் ஓட்டுவதுகூடத் தெரியாது. அம்மா மிகவும் ஒழுங்கற்றவள், சுயமாக எதையும் செய்ய முடியாதவள். தொலைபேசி இலக்கப் புத்தகத்தில் உள்ள மஞ்சள் பக்கங்களை (yellow pages) எப்படிப் பயன்படுத்துவது அல்லது வார இறுதியிலான ஒரு பயணத்திற்கு ஒரு ‘சூட்கேஸை’ (suitcase) எப்படி அடுக்கி ஒழுங்குபடுத்துவது என்று அவளுக்குத் தெரியாது. அவளது வாழ்க்கையை ஒழுங்கமைக்கவும் இன்னும் விவேகமானதாகவும்மாற்றுவதற்கு நான் அவளுக்கு உதவ முயன்றேன். ஆனால் அவள் என் மீது அதிகமாகச் சார்ந்திருக்கிறாள். உன் உதவி இல்லாமல் நான் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியவில்லை என்று அவள் என்னிடம் கூறுகிறாள். என் அம்மா வளர்ந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.’
4 ‘அவள் வெளிப்படையானவற்றைப் பற்றிப் பேசுகிறாள்’:
பதினாறு வயது ஹெலன் கூறுகிறாள்:
‘என் அம்மா தான் ஒரு திறந்த மனம் கொண்டவள் என்று கூறுகிறாள். ஆனால் அது மிகவும் திறந்திருக்கிறது மட்டுமல்ல அது காலியாகவும் உள்ளது. அவளுக்குச் சொந்தமாக ஒரு சிந்தனை இருப்பதாகத் தெரியவில்லை. அவள் காலையில் ‘ஸ்போக்கையும்’ இரவில் ‘பிராய்டையும்’ பற்றிப் பேசுகிறாள். (காலையில் தர்க்க ரீதியாகவும் மாலையில் உளவியல் சார்ந்த ஊகங்களோடும் பேசுகிற, ஒரு குழம்பிய நிலையில் பேசுகிறாள் என்று கொள்ளலாம்: மொழிபெயர்ப்பாளர்) அவள் வெளிப்படையான விடையங்களைப் பற்றி மர்மமான இரகசியக் குரலில் பேசுகிறாள். ஆபத்துகள், அவற்றால் வரப்போகும் விளைவுகள் என்பவை பற்றி அவள் விரிவாக உரத்துப் பேசி என்னை எச்சரிக்கிறாள். அவள் வெளிப்படையான விடயங்களை எச்சரிக்கும் தோரணையில் பேசுகின்றபோது, அது என்னால் சிரிக்காமல் இருக்க முடியாத அளவுக்கு நகைச்சுவையாக இருக்கிறது. இது அவளுடைய மதிப்பைக் குறைத்துவிடுகிறதே ஒழிய அவளுடைய வைராக்கியத்தை அல்ல. என் எதிர்காலம் அழிவில்தான் போய் முடியப் போகிறது என்று கூறி அவள் இவ்வாறு என்னிடம் சொன்னாள்: உன்னால் உன் பாடசாலைக்கு அவமானம், எங்கள் குடும்பத்திற்கு உன்னால் ஒரு பெருமையும் இல்லை, நீ சாக்கடையில்தான் போய் விழுவாய். ஆஸ்கார்வைல்ட் (Oscar Wilde) ஒருமுறை சொன்னதை நான் அவளிடம் சொன்னேன்: ‘நான் சாக்கடையில் இருக்கலாம், ஆனால் நான் நட்சத்திரங்களைப் பார்க்கிறேன்.’
4 ‘அந்த அசலான திருமதி. பரிசுத்தம்’ (Mrs. Clean):
பதினேழு வயது ரால்ஃப் கூறுகிறான்:
‘என் அம்மாதான் அசலான திருமதி. பரிசுத்தம். அவளுக்கு நேர்த்தியாக இருக்கவேணும் என்று ஒரு பைத்தியம் - ஒரு வழக்கமான சுகாதாரப் பிரச்சினை.
நீங்கள் ஒரு சிகரெட்டை பற்றவைத்து ஒரு தடவை உறிஞ்சினால், அவள் உங்கள் சாம்பல் தட்டைக் காலி செய்யத் தொடங்குவாள். எங்கள் வீடு ஒரு வீடு அல்ல, அது ஒரு பூச்சிப் பொறி போன்றது. ஒருவித பிரச்சினையும் இல்லாமல் நீங்கள் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது. ஒவ்வொரு கழிவுத் துணிக்கையும் அவளைக் காயப்படுத்துகிறது, அவள் தொடர்ந்து கத்துகிறாள். நான் அவளிடம் சொல்கிறேன்: பாருங்கள் அம்மா, வாழ்க்கை வாழ்வதற்காகத் தானே ஒழிய, சுத்தம் செய்வதற்காக மட்டுமல்ல என்று. கம்பளத்திலிருந்து கொட்டுப்பட்டிருந்த சில துண்டுகளை எடுக்கக் குனிந்தபடி எனக்கு இப்படிப் பதிலளிக்கிறாள் அவள்: ‘நீங்கள் ஒரு பன்றித்தொட்டியில் வாழ விரும்புகிறீர்களா?.
நான் அவளுக்காக வருந்துகிறேன். அவளுடைய வாழ்க்கை மிகவும் கறையற்றது மட்டுமல்ல, மலட்டுத்தன்மை வாய்ந்ததும் தான்!.
4 ‘மனிதருக்கு மனிதர் துணை’:
பத்தொன்பது வயது ஹோல்டன் கூறுகிறான்:
‘நான் என் தந்தையுடன் நீண்டதும் தீவிரமானதுமான ஒரு உரையாடலை நடத்தினேன். ஒரு மனிதரோடான இன்னொரு மனிதரின் பேச்சு. அவரது தலைமுறை, அதன் பணத்தின் மீதான ஆசை என்பவை குறித்தும் அதன் மக்களைச் சுரண்டும் செயல், அதன் நேர்மையற்ற வணிகம், அதன் அரசியல் ரீதியான ஊழல், மற்றும் அதன் இரத்தக்களரிப் போர்கள் என்பவற்றால் நான் எவ்வளவு ஏமாற்றமடைந்துள்ளேன் என்று அவரிடம் சொன்னேன். என் தந்தை பதிலளித்தார்: ‘நீங்கள் உலகைப் பார்க்கும்போது அது பற்றாக்குறைகளுடன் இருப்பதைக் காண்கிறீர்கள். அது அப்படி இருப்பதைவிடச் சிறந்த ஒரு உலகமாக மாற்றப்பட வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள். உங்களுக்கு எப்போதும் அதற்கான எனது ஆசீர்வாதம் உண்டு. உங்கள் துணிச்சலான புதிய உலகம் சில மாற்றங்களைத் தாங்கக் கூடியதாக இருக்கலாம். ஆனால் அதன் மோசமான மொழி, உரத்த இசை, ஆபாச இலக்கியம் என்பவை எனக்குப் பிடிக்கவில்லை. என் வாழ்க்கையில் நிலவும் முரண்பாடுகளை நான் அறிவேன். ஆயினும் என்னிடம் அவற்றுக்கான பதில்கள் இல்லை. ஆனால் உங்கள் முழுமையான உண்மைகளை விட எனது நிச்சயமற்ற தன்மைகளையே நான் விரும்புகிறேன். உங்கள் பதில்களில் நீங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறீர்கள். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உங்களிடம் உடனடித் தீர்வுகள் இருக்கின்றன: யுத்தமில்லாத உலகு (flower-Power), கருத்தடை மாத்திரைகளும் போதை வஸ்துக்களும் பாவித்தல் (‘Pill and Pot’), இசையமைக்கவும், இயக்கவும், பின் அதை விட்டு வெளியேறவும் (Turn in, Turn out and drop off) கிளர்ச்சி செய்யவும் புதுமை செய்யவும் உள்ள உங்கள் உரிமையை நான் மறுக்கவில்லை. இது இளைஞர்களின் பணியாக இருக்கலாம். ஆனால் திட்டமிடப்பட்ட குழப்பங்களுக்கு எதிராகப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதே எனது பணி. அதை நான் அதை எனது வயதான ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் அதைச் செவிமடுத்துக் கேட்பார், நன்றாகப் பேசுவார். அதைவிடவும் அவர் உங்களைச் சிந்திக்க வைக்கிறார்.’
4 ஒரு சிகிச்சையாளருக்கு ஒரு கடிதம்:
இந்தக் கடிதம் தனக்கான சிகிச்சையின் முடிவின் பின் ஒரு பதின்மவயதுப் பெண் பிள்ளையால் எழுதப்பட்டது. இது ‘கடினமான’ பதின்மவயதுப் பிள்ளைகளின் பெற்றோருக்குக்கூட, நம்பிக்கையளிக்கும் செய்தியைக் கொண்டுவருவதாக இருக்கிறது...
‘என்னுடன் அன்பாக நடந்துகொண்டதற்கு நன்றி. அப்படிச் சொல்வது ஒரு நம்பமுடியாத விஷயம்தான். ஆனால் நான் அதை உண்மையாகவே ஏற்றுக்கொள்கிறேன் என்பதுதான் அதன் அர்த்தம். உங்கள் அன்பு எனக்கு ஒரு தனிநபராக மட்டுமல்ல, அனைத்து மனிதர்களின் கண்ணியத்திற்கும் மிகுந்த மரியாதை அளிப்பதோடு பிணைக்கப்பட்டுள்ள ஒன்று என்பது எனக்குத் தெரியும். எனவே, என்னால் அதை ஒரு அழகான, அச்சுறுத்தப்படாத மகிழ்ச்சியாக, எளிதான யதார்த்தமாக ஏற்றுக்கொள்ள முடியும். கடந்த காலத்தில், காதல் என்பது உடைமை, போட்டி, சாதனை ஆகியவற்றுடன் சேர்ந்து மிகவும் குழப்பமடைந்திருந்தது. அனைவரையும் மகிழ்விக்க முயற்சிப்பதன் மூலமோ என் பெற்றோரின் தாராள மனப்பான்மையை மனோவியல் ரீதியாக சுரண்டுவதன் மூலமோ நான் அதைத் தேடிக்கொண்டிருந்தேன். அவர்களின் கோபம், வலி என்பவை குறித்து எனக்குக் குற்ற உணர்வு இருந்தது. அவர்கள் நிச்சயமாக என்னை நெருங்க முயன்றனர் என்றாலும் நான் அவர்களால் அணுக முடியாதவளாக இருந்தேன்.
‘இந்தச் சிகிச்சை எனக்கு நுண்ணறிவை மட்டுமல்ல - எனக்கு வளர உதவும் அத்தியாவசிய திறன்களையும் கொடுத்துள்ளது. குழப்பமான சூழலைக் கடந்து செல்லவும், குழப்பமான வயது வந்தவர்களது நரக உலகத்திலிருந்து ஒரு கணம் விடுபடவும் கற்றுக்கொண்டேன். கடந்த வாரம் எனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடினேன். எனக்கு இன்னும் பல தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளன. ஆனால், உங்களைப் போலவே, மக்கள் மத்தியில் இது ஒன்றும் தாமதமாகி விடவில்லை என்று நான் உணர்கிறேன். எனது கடந்தகால நடத்தைக்கு வாய்மொழி மூலம் மன்னிப்பு கேட்க நான் விரும்பவில்லை. மன்னிப்பு என்பது நேர்மையானதாக இருக்கும் என்று நான் நம்பவில்லை. ஆனால் மாற்றம் நிச்சயமாக மிகுந்த பலனளிக்கும்.’
நன்றி
