Thaiveedu
Latest Articles
பெண்

திசைதிருப்பப்பட்ட வாகனம் ஓட்டுதல்

செந்தூரன் புனிதவேல்
செந்தூரன் புனிதவேல்
March - March 10, 2026

திசைதிருப்பப்பட்ட வாகனம் ஓட்டுதல்

- செந்தூரன் புனிதவேல்

கனடாவில் மாகாணத்திற்கு மாகாணம் வாகனம் செலுத்தும் வரையறைகள் வேறுபடும். 2026-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் முதலாம், திகதி வாகனம் ஓட்டுதலில் அதுவும் குறிப்பாக திசை திருப்பப்பட்டபடி வாகனம் ஓட்டுவதில் பல கெடுபிடியான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மாகாண அரசாங்கத்தின் உந்துதலினால் பாதை ஓரத்துக் கமராக்கள் விலத்தப்பட்ட நிலையில் மாகாண அரசாங்கத்திற்கு விபத்துகள் ஏற்படாது காப்பதற்கான கடமைப்பாடு உள்ளது. இந்நிலையில் கவனம் திருப்பிய நிலையில் வாகனங்களை ஓட்டி விபத்துகள் ஏற்படுவதைத் தவிர்க்க எடுத்த முடிவின் விளைவுதான் இந்தச் சட்டம்.

திசை திருப்பப்பட்ட வாகன ஓட்டுதல் என்றால் என்ன என்று முதலில் கவனிப்போம். வாகனத்தைச் செலுத்தும்வேளை கைத்தொலைபேசி, பொழுதுபோக்குச் சாதனங்களைக் கையில் வைத்திருப்பதனைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, பின்வரும் செயல்பாடுகளைத் தவிர்ப்பது அவசியமாகும்.

n டெக்ஸடிங் அல்லது டைப்பிங்

n தொலைபேசியில் அழைத்தல்

n வீடியோ படம் பார்த்தல்

n சமூக ஊடகங்கள் ஊடாகத் தொடர்பு கொள்ளுதல்

n கணினிகளைத் தொடுவது அல்லது செல்ல வேண்டிய இடத்தைக் குறிப்பது போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இந்தச் சட்டம் சிவப்பு விளக்கில் நிறுத்தி நிற்கும் வேளையிலும் செல்லுபடியாகும். தேவையானால் வீதி ஓரத்தில் நிறுத்திவிட்டு இவற்றைச் செய்யலாம்.

வாகனம் ஓட்டும்போது கைகளைப் பயன்படுத்தாமல், குரல் வழி உத்தரவுகள் (Voice Command) மூலம் சாதனங்களை இயக்குவதற்குத் தடையில்லை. ஓட்டுநர் அந்தச் சாதனத்தைத் தொடாதிருந்தால் தடை இல்லை. எனினும் நகரகாவலர் உங்கள் கவனம் திசை திருப்பப்படுகிறது என்று எண்ணினால் உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம். இத்தகைய விதிமீறல்களுக்கான தண்டப் பணமும், சட்ட நடவடிக்கைகளும் தற்போது மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 1-ஆம் திகதி 2026-இல் இருந்து கவனம் திருப்பப்பட்ட வாகனச் செலுத்தலுக்கான தண்டப்பணம் பெரிதளவு கூட்டப்பட்டுள்ளது. தயவு செய்து இவற்றைக் கவனித்தாவது கவனமாக வாகனங்களைச் செலுத்துங்கள்.

முழுமையாக வாகன ஓட்டுநர் பத்திரம் பெற்றவர் முதல் குற்றத்திற்கு:

n தண்டப்பணம் $ 500 முதல் $ 1000 வரை.

n 3 Demerit எனும் குறைபாட்டுப் புள்ளிகள் பெறுவர்.

n மூன்று தினங்களுக்கு வாகனம் செலுத்துதல் தடுக்கப்படும்.

இரண்டாவது குற்றத்திற்கு:

n தண்டப் பணம் $ 2,000 வரை

n 6 குறைபாட்டுப் புள்ளிகள் பெறுவார்.

n ஏழு தினங்களுக்கு வாகனம் செலுத்துதல் தடுக்கப்படும்.

மூன்றவதும் அதற்கு மேற்பட்ட குற்றத்திற்கு:

n தண்டப் பணம் $ 3,000 வரை.

n 6 குறைபாட்டு புள்ளிகள்.

n முப்பது தினங்களுக்கு வாகனம் செலுத்துதல் தடுக்கப்படும்.

இத்தகைய கடுமையான சட்டங்களின் நோக்கம், ஓட்டுநர்களை முழு கவனத்துடன் வாகனத்தைச் செலுத்தத் செய்து, விபத்துகளைத் தவிர்ப்பதே ஆகும்.

தகமைப் பத்திரம் பெற்றுக்கொண்டிருக்கும் வாகனச் சாரதிகள் மேலும் கடுமையாக கணிக்கப்படுவார்கள்.

ஒன்ராரியோவில் G1,G2 மற்றும் M1,M2 பெற்று ஜனவரி 1-ஆம் திகதி 2026-ற்குப் பின் மேற்படி சாரதிகளுக்கான கட்டுப்பாடு பின்வருமாறு அமையும்.

n முதல் கவனக் குறைவாக செலுத்துதல் பிடிபட்டால் உடனே அனுமதி தடுக்கப்படும்.

n தொடர்ந்து பிடிபட்டால் அவரது ஓட்டுநர் உரிமைப் பத்திரம் பறிமுதல் செய்யப்படும்.

n அப்படி தடுக்கப்பட்டவர்கள் மீண்டும் ஆரம்பத்திலிருந்து கற்கத் தொடங்கவேண்டிவரும்.

அனுபவத்தில் ஆரம்பகால ஓட்டுநர்கள் கவனக்குறைவாக வாகனம் செலுத்தினால் அவர்கள் கூடிய விரைவிலேயே விபத்துக்குள்ளாவதை அவதானித்துள்ளார்கள்.

வணிக (Commercial) வாகன ஓட்டுநர்கள் சாதாரண வாகன ஓட்டுநர்களிலும் கூடிய தரநிலையில் கணிக்கப்படுவார்கள். உதாரணமாக லாரிகள், பேருந்துகள், மற்றும் வணிக வாகனம் செலுத்துபவர்களுக்கு,

n கூடிய தண்டப் பணம்

n நீண்ட காலத்திற்கு ஓட்டுநர் பத்திரம் தடுக்கப்படும்.

உதாரணத்திற்கு, முதல் தவறுக்கு ஏழு நாட்களுக்குத் தடை செய்யப்படும் என்பதுடன் இரண்டாம்முறை அறுபது தினங்களுக்குத் தடை செய்யப்படலாம். இப்படி வணிக வாகனங்களுக்கு கூடிய தண்டம் விதிப்பதன் காரணம் அவை பெரிய வாகனம் என்பதுடன், விபத்து நடக்கும் வேளைகளில் இழப்பும் பெரியளவில் இருப்பதவே. உபகரணங்களை சில நிபந்தனைக்கு உட்பட்டே செயற்படுத்தலாம். உதாரணமாக கைத்தொலைபேசி வழிகாட்டியாகப் பாவிக்கப்பட்டாலும், வாகனம் செலுத்தும் வேளை அதைத் தொடுவது தவிர்க்கப்பட்டுள்ளது என்பதனை மறக்க வேண்டாம்.

நகரக் காவலர்கள் தெளிவாகக் குறித்து உள்ளார்கள்.

n ஒரு சில வினாடிகளே என்றாலும், சாதனங்களைத் தொடுவதோ அல்லது அதில் தட்டச்சு செய்வதோ சட்டப்படி குற்றமாகும்; இதற்குத் தண்டனை உண்டு.

n சாதனங்களை கைகளால் தொடாதவரை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படும்.

n உங்கள் குரலால் சாதனங்களை இயக்குவது ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால், அந்தச் செயல்பாட்டின் போது எக்காரணம் கொண்டும் சாதனத்தைக் கைகளால் தொடக்கூடாது.

2026 ஜனவரி தொடக்க காலத்தில், வாகனத்தைச் செலுத்தும் போது மின்னணு கருவிகளில் கவனம் சிதறிய காரணத்திற்காகப் பலருக்குக் குற்றப்பத்திரிகை (Summons) வழங்கப்பட்டுள்ளதாகப் காவல்துறை அறிவித்துள்ளது.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதைத் தடுப்பதற்கு ஏன் இவ்வளவு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றால், இத்தகைய தவறுகளால் ஏற்படும் விபத்துகளில் விலைமதிப்பற்ற மனித உயிரிழப்புகள் ஏற்படுவதை நாம் அன்றாடம் காணக்கூடியதாயுள்ளதாலேயே. எனவே, ஓட்டுநர்களான நாம் வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும். வாகனத்தைச் செலுத்தத் தொடங்கும் முன்னரே, செல்ல வேண்டிய இடத்திற்கான திசைகாட்டியை (GPS Navigation) அமைத்துவிட வேண்டும். பயணத்தின் போது பயன்படுத்தத் தேவையில்லாத மின்னணு சாதனங்களைக் கைகளுக்கு எட்டாத தூரத்தில் அல்லது பார்வையில் படாதவாறு வைத்துவிடுவது நல்லது. பயணத்தின் போது ஏதேனும் அவசரத் தேவை இருப்பின், வாகனத்தைப் பாதுகாப்பாகச் சாலையோரம் நிறுத்திய பின், அத்தேவைகளை முடித்துவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடரலாம். விதிகளுக்கு மதிப்பளித்து, கவனத்துடன் செயல்படுவதன் மூலம் விபத்துகளே இல்லாத பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வோம். வருங்காலத்தில் நீங்கள் விபத்துகளின்றி வாகனத்தைச் செலுத்துவதற்கு வாழ்த்தி முடித்துக் கொள்கிறேன்.

நன்றி