Thaiveedu
Latest Articles
பெண்கதை

புவியின் மீட்சிக்கான உலகளாவிய அறைகூவல் (உலக வனவிலங்குகள் நாள்)

சி. நற்குணலிங்கம்
சி. நற்குணலிங்கம்
March - March 10, 2026

புவியின் மீட்சிக்கான உலகளாவிய அறைகூவல்!

உலக வனவிலங்குகள் நாள்

- சி. நற்குணலிங்கம்

உலக வனவிலங்குகள் நாள் (World Wildlife Day) என்பது வெறும் கொண்டாட்டத்திற்கான தினம் மட்டுமல்ல; அது ஒரு பெரிய மாற்றத்திற்கான வேண்டுகோள். அது இயற்கைக்கும் மனிதகுலத்திற்கும் இடையிலான பிணைப்பை மீளாய்வு செய்வதற்கான ஒரு முக்கியத் தருணமாகும். புவியின் நிலப்பரப்பில் வாழும் அரிய வகை விலங்குகள் மற்றும் தாவரங்களின் பன்முகத்தன்மையை அங்கீகரிப்பதோடு, அவை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் இந்த நாள் முன்னெடுக்கிறது.

சுற்றுச்சூழல் அமைப்பின் சமநிலையைப் பேணுவதில் வனவிலங்குகளும் தாவரங்களும் ஈடுஇணையற்ற பங்கினை ஆற்றுகின்றன. இவை வெறும் இயற்கை வளங்கள் மட்டுமல்ல; மாறாக, நிலையான வளர்ச்சி, பொருளாதார மேன்மை மற்றும் மனித சமூகத்தின் வாழ்வியல் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படைத் தூண்களாகவும் திகழ்கின்றன. பூமிப்பந்தின் உயிரியல் சமநிலையை உறுதிப்படுத்துவதும், மனிதத் தலையீடுகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதும் தற்காலத்தின் மிக முக்கியமான தேவைகளாகும். எனவே, இயற்கை வளங்களின் பாதுகாப்பை ஒரு கடமையாகக் கருதி, பசுமையான எதிர்காலத்தை நோக்கி ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது நமது பொறுப்பாகும்.

ஆனால் இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் - IUCN (International Union for Conservation of Nature) ‘சிவப்புப் பட்டியலின்’ தரவுகளின்படி, தற்போது 8,400-க்கும் மேற்பட்ட வன விலங்கினங்களும் தாவரங்களும் அழிந்துபோகும் நிலையில் உள்ளன. அதுமட்டுமன்றி, சுமார் 30,000 உயிரினங்கள் மிக ஆபத்தான அல்லது பாதிப்புக்குள்ளாகக்கூடிய நிலையில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இப்புள்ளிவிவரங்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வனவுயிரிகளின் எதிர்காலத்திற்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த மனிதகுலத்தின் பாதுகாப்பிற்கும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகும்.

ஏனெனில், மனிதர்களாகிய நாம் நமது அடிப்படைத் தேவைகளுக்கும் வாழ்வாதாரத்திற்கும் வனவிலங்குகள் மற்றும் இயற்கை வளங்களையே பெரிதும் சார்ந்துள்ளோம். உயிரினங்களின் இந்த வீழ்ச்சியானது இயற்கைச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தி, இறுதியில் மனித வாழ்விற்கே அச்சுறுத்தலாக முடியும். எனவே, புவியின் உயிரியல் சமநிலையை மீட்டெடுப்பதும், அதனைப் பாதுகாப்பதும் இன்றைய காலத்தின் தவிர்க்க முடியாத அவசியமாகும்.

டிசம்பர் 20, 2013 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் அதன் 68-ஆவது அமர்வில், மார்ச் 03-ஆம் திகதி உலக வனவிலங்கு நாள் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கான தீர்மானம், அழிந்து வரும் உயிரினங்களான காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகத்திற்கான மாநாட்டின் (CITES) 16-ஆவது கூட்டம் மார்ச் 2013-இல் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் நடைபெற்றபோது நிறைவேற்றப்பட்டது. முதன்முறையாக உலக வனவிலங்கு நாள் 2014-ஆம் ஆண்டில்தான் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் மார்ச் 03-ஆம் தேதியன்று உலக வனவிலங்கு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

1973-ஆம் ஆண்டு அதே தேதியில் CITES (Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை ஒட்டி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை 2013-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதியை உலக வனவிலங்கு நாளாக அறிவித்தது. வனவிலங்குகளின் சர்வதேச வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவதில் CITES முக்கிய பங்கு வகிக்கிறது. 38,000-இற்கும் மேற்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்குகளை வர்த்தகத்தில் சீரான முறையில் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதுடன், அத்தகைய நடவடிக்கைகள் அவ்வுயிரினங்களின் உயிர்வாழ்வை அச்சுறுத்துவதில்லை என்பதையும் இது உறுதி செய்கிறது. இக்கட்டுப்பாடுகளினால், வனவிலங்குகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மிக முக்கியமான உலகளாவிய வருடாந்திர நிகழ்வாக இது மாறியுள்ளது. இவ்வொப்பந்தத்தில் 184 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

உலக வனவிலங்கு நிதியத்தின் தலைமையகம் சுவிற்சலாந்தில் (World Wildlife Fund Headquaters: Gland, Switzerland), 29 ஏப்ரல் 1961 நிறுவப்பட்டது. உலக வனவிலங்கு நிதியத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கார்ட்டர் ராபர்ட்ஸ் (Carter Roberts). வனவிலங்கு பாதுகாப்பு, திடமான நிதி ஆதாரங்கள் இல்லாமல் முடியாது. விலங்குகளை வேட்டையால் பாதுகாப்பது, வாழ்விடங்களை மீட்டெடுப்பது அனைத்தும் நிதி ஆதாரத்தில்தான் செயற்படுகின்றன. எனவே உலக வனவிலங்குகள் விடயத்தில் உலக வனவிலங்கு நிதியத்தின் தொழிற்பாடு மிகவும் முக்கிய விடயமாகும்.

வனவிலங்குகளின் வியக்கத்தக்க பன்முகத்தன்மையையும் அழகையும் கொண்டாடுவதற்கு உலக வனவிலங்கு நாள் ஒரு சிறந்த வாய்ப்பாகும். இருப்பினும், காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் வனவுயிரிகள் இன்று கடுமையான அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருகின்றன. பல அரிய உயிரினங்கள் அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ள சூழலில், இந்நாளின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்கும் வறுமை ஒழிப்பு, நிலவளப் பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்துதல் போன்ற இலக்குகளுடன் பல்லுயிர்ப் பாதுகாப்பும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அழியும் நிலையில் உள்ள வனவிலங்குகள் மற்றும் தாவரங்களை இனங்கண்டு, அவற்றைப் பாதுகாப்பதற்கான முறையான செயற்றிட்டங்களை (Action Plans) வகுப்பதே இந்நாளின் முதன்மை நோக்கமாகும். இத்தகைய முயற்சிகள் இயற்கையோடு இணைந்த ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்க ஐக்கிய நாடுகள் சபை கொண்டுள்ள உறுதியை வெளிப்படுத்துகின்றன

உலக வனவிலங்கு நாள், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் விழிப்புணர்வுப் பணிகளை முன்னெடுத்து வருகின்றது. 2024-ஆம் ஆண்டில், ‘மக்களையும் கோளையும் இணைத்தல்: வனவிலங்கு பாதுகாப்பில் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை ஆராய்தல்’ (Connecting People and Planet: Exploring Digital Innovation in Wildlife Conservation) எனும் கருப்பொருளின் கீழ், நவீன தொழினுட்பங்கள் எவ்வாறு வனவுயிர்ப் பாதுகாப்பிற்குத் துணைபுரிகின்றன என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

2025-ஆம் ஆண்டில், ‘வனவிலங்கு பாதுகாப்பு நிதி: மக்களிடமும் புவிக்கோளத்திலும் முதலீடு செய்தல்’ (Wildlife Conservation Finance: Investing in People and Planet) எனும் கருப்பொருள் முன்னெடுக்கப்பட்டது. போதுமானதாக இல்லாத தற்போதைய நிதி ஆதாரங்களை எவ்வாறு ஆக்கபூர்வமாகவும் நிலையானதாகவும் மாற்றுவது என்பதையும், புவியின் மீள்தன்மை கொண்ட எதிர்காலத்திற்காக நிதி ஓட்டங்களை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பதையும் இக்கருப்பொருள் வலியுறுத்துகிறது.

2025-ஆம் ஆண்டு உலக வனவிலங்கு நாளில், மிக அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள விலங்குகள் மற்றும் பறவைகளைப் பாதுகாப்பது குறித்த ஆலோசனைகள் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டன. இத்தகைய முன்னெடுப்புகள் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதுடன், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் மனிதகுலத்தின் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் பெரிதும் உதவும் எனக் கருதப்படுகிறது. இம்மாபெரும் இலக்குகளை அடையப் பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.

2026-ஆம் ஆண்டின் உலக வனவிலங்கு நாள், ‘மருத்துவ மற்றும் நறுமணத் தாவரங்கள்: ஆரோக்கியம், பாரம்பரியம் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்தல்’ (Medicinal and Aromatic Plants: Conserving Health, Heritage and Livelihoods) எனும் கருப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது. உலகெங்கிலும் பில்லியன் கணக்கான மக்கள் தங்களின் அடிப்படை ஆரோக்கியத்திற்கும் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் இத்தாவரங்களையே பெரிதும் சார்ந்துள்ளனர். இருப்பினும், அதீதச் சுரண்டல் மற்றும் வாழிட இழப்பு காரணமாக இத்தகைய அரிய தாவர இனங்கள் இன்று பெரும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளன.

இத்தாவரங்களின் மரபுசார் அறிவைப் பாதுகாப்பதோடு, அவற்றின் வணிக ரீதியான பயன்பாட்டைச் சர்வதேச வர்த்தக விதிகளுக்கு உட்பட்டு முறைப்படுத்துவதை இக்கருப்பொருள் வலியுறுத்துகிறது. சூழலியல் சமநிலையைப் பேணுவதிலும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதிலும் மருத்துவத் தாவரங்களுக்கு உள்ள முக்கியத்துவத்தை உலகளாவிய ரீதியில் பறைசாற்றுவதே இந்நாளின் முதன்மை இலக்காகும்.

வனவிலங்குப் பாதுகாப்பு என்பது வெறும் அரசாங்கங்களின் அல்லது சர்வதேச அமைப்புகளின் கடமை மட்டுமல்ல; அது ஒவ்வொரு தனிமனிதனின் அறப்பணியுமாகும். ஒவ்வொரு ஆண்டும் புதிய கருப்பொருள் அறிவிக்கப்பட்டாலும், பொதுமக்களின் தீவிரமான ஒத்துழைப்பின்றி இம்மாற்றம் சாத்தியமற்றது.

சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் போன்ற மாசுக் காரணிகளைக் குறைப்பதும், இயற்கையுடனான நமது பிணைப்பை மீளுருவாக்கம் செய்வதும் காலத்தின் கட்டாயமாகும். நம்முடன் வாழும் அரிய உயிரினங்களைப் பாதுகாப்பதில் சிறு மாற்றத்தையேனும் நாம் ஏற்படுத்த வேண்டும். கல்வி நிகழ்ச்சிகள், விழிப்புணர்வுத் தொடர்கள் மூலம் பெறப்படும் அறிவைச் செயல்பாடாக மாற்றி, உயிரியல் சமநிலையைப் பேண உறுதி ஏற்போம். பூமிப்பந்தின் வளமான எதிர்காலம் நம் ஒவ்வொருவரின் கைகளிலுமே உள்ளது.

நன்றி