Thaiveedu
Latest Articles
அரசியல்

அமரத்துவம் சாத்தியமா!

சுப்ரமணியம் ஜெயசீலன்
சுப்ரமணியம் ஜெயசீலன்
March - March 10, 2026

அமரத்துவம் சாத்தியமா!

- சுப்ரமணியம் ஜெயசீலன்

பேரண்டத்தின் விளக்க முடியாத கேள்விகள் பலவற்றிற்கு விடை கண்ட மனித இனமானது, சில சந்தர்ப்பங்களில் இயற்கை விதிகளுக்கு கட்டுப்பட வேண்டிய நிர்ப்பந்தத்தில் காணப்படுகின்றது என்றால் அது பிழையாகாது. இயற்கை அனர்த்தங்கள், வானிலை மாற்றங்கள், வயோதிபம் என்பன போன்றே மரணமும் வெல்ல முடியாத ஓன்றாகவே காணப்படுகின்றது. பிறக்கும் அனைவரும் ஒரு நாளில் மரணிக்க வேண்டியது என்பது எழுதப்பட்ட நிச்சயமான விதியாகும். எனினும், மனித குலத்தின் ஆற்றுகைகளினால் இந்த மரணத்தைக் காலம் தாழ்த்துவதற்கோ நித்திய அமரத்துவத்தை அடைவதற்கோ வழி உண்டா என ஆய்வு செய்யும் அளவிற்கு எமது விஞ்ஞான உலகம் விசாலமாகியுள்ளது என்றால் சற்றே ஆச்சரியமாகத்தான் இருக்கும். எனினும், உண்மையில் வயது முதிர்ச்சியிலிருந்து மீண்டு இளமைப் பருவத்திற்கு திரும்பக்கூடிய அல்லது ஆயுளை நீட்டிக்கக்கூடிய ஆய்வுகள் தீவிர முனைப்புடன் முன்னெடுக்கப்படுவதனை ஆய்வாளர்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கின்றனர். அவ்வாறான ஓர் ஆய்வு பற்றிய ஊடாடுகையாக இந்தப் பத்தி அமைகின்றது.

உலக முதனிலை செல்வந்தர் எனப் போற்றப்படும் எலோன் மஸ்க் அண்மையில் வயது மூப்பை மாற்றியமைக்க முடியும் அல்லது வயோதிபத்திலிருந்து மீண்டு இளமைப் பருவத்திற்கு திரும்புதல் தொடர்பில் பொதுவெளியில் கருத்து வெளியிட்டிருந்தார்.

வயது மூப்பை மாற்றி அமைக்க முடியுமா? என ஓர் ஊடகர் எழுப்பிய கேள்விக்கு இந்த வயது மூப்பினை மாற்றியமைக்க முடியும் எனத் தாம் கருதுவதாகவும், ஆய்வாளர்கள் ஏன் நாம் வயது மூப்படைகிறோம் என்பதைக் கண்டறிந்தால் இந்த கேள்விக்கு விடை காண்பது இலகுவானது எனக் கருத்து வெளியிட்டிருந்தார். இந்த கருத்தை ஆமோதிக்கும் வகையில் ஆயுள் நீட்டிப்பு குறித்த உலகின் புகழ்பூத்த விஞ்ஞானி, பேராசிரியர் டேவிட் சென்கிளயார் (David Sinclair) ஆயுள் நீட்டிப்பு அல்லது வயது மூப்பினை மாற்றியமைப்பது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனை எளிமையாக விளக்க முடியும் எனவும் வயது மூப்பினைத் திருப்ப முடியும் எனவும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். மேலும், வயது மூப்பினைத் திருப்பக் கூடிய அல்லது வயது மூப்படைந்த ஒருவரை அவரது இளமை காலத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்லக் கூடிய மருத்துவ பரிசோதனைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்த பதிவிற்கு எலோன் மஸ்க் பதில் வழங்கியிருந்தார். அவர் இது ஈ.ஆர். 100 (ER100) முறையா என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பேராசிரியர் சென்கிளயார் ஆம் எனப் பதிலளித்திருந்தார்.

லைப் பயோசயன்சஸ் (Life Biosciences) என்பது விஞ்ஞானி சென்கிளயார் இணைந்து உருவாக்கிய ஓர் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் உயிரியல் துறையில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். மனித தன்னார்வலர்களைக் கொண்டு இளமையை மீட்கக் கூடிய ஆய்வுகளுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருத்துவ அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிறுவனம் ரீ ப்ரோக்ராமிங் அல்லது மறுநிரலாக்கம் என்ற ஓர் புதிய எண்ணக்கருவுடன் கண் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்த ஆய்வு திட்டத்திற்கு, சிலிக்கான்வெளி நிறுவனங்களான ஆல்டோஸ் லேப் (Altos Labs), நியு லிமிட் (New Limit) மற்றும் ரெட்ரோ பயோசயன்ஸ் (Retro Biosciences) போன்ற நிறுவனங்கள் பல நூறு மில்லியன் டொலர்களை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளன.

இந்த ரீ ப்ரோக்ராமிங் என்ற ஆய்வு முயற்சி அல்லது தொழினுட்பமானது உடலின் ஆரோக்கியமான உயிரணுக்களை உருவாக்கும் முயற்சியைக் குறிக்கின்றது. உடலில் ஏதேனும் ஒரு உறுப்பு பாதிக்கப்பட்டிருந்தால் அந்த உறுப்பினை மீளவும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக இந்த ரீ ப்ரோக்ராமிங் ஆய்வுத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இது நோய்களைக் குணப்படுத்துவதற்காகவும், இளமை நிலைக்குச் திரும்பவும் உருவாக்கப்பட்ட திட்டம் என்றால் மிகைப்படாது. குறிப்பாக எமது மரபணுக்களை இந்த ஆய்வு மாற்றி அமைக்கின்றது. இந்த முயற்சியானது எமது உடலில் உயிரணுக்களில் எவற்றை இயக்க வேண்டும் எவற்றை நிறுத்த வேண்டும் எனத் தீர்மானிக்கும் திறன்கள் குறித்து ஆராய்கின்றது.

இந்த தொழினுட்பமானது உயிரணுக்களை மாற்றி அமைப்பதாகும், குறிப்பாக ஆரோக்கியமற்று காணப்படும் உயிரணுக்களை ஆரோக்கியமானவையாக மாற்றும் ஒரு தொழினுட்பமாகும். இதனை, மேல் மரபியல் (Epigenetics) என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது மரபணுவின் அடிப்படை அமைப்பில் மாற்றம் செய்யாது அதன் செயற்பாட்டை மாற்றுவதைக் குறிக்கின்றது. ஏதேனும், ஒரு குறித்த செயற்பாட்டைத் தூண்டுதல் அல்லது அதனை முடக்கும் ஒரு தொழினுட்பமாகும்.

ரீ ப்ரோக்ராமிங் என்பது உயிரியல் உலகின் செயற்கை நுண்ணறிவாகக் கருதப்படுகின்றது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் முதலீடு செய்வதாக ஷிப்ட் பயோசயன்ஸ் (Shift Bioscience) நிறுவனத்தின் முதலீட்டாளர் கார்ல் ப்ஃப்ளெகர் (Karl Pfleger) தெரிவிக்கின்றார்.

நிறுவனம் இந்த ஆய்வுகளை மேம்படுத்துவதற்கு அதாவது நோயுற்ற உயிரணுக்களைச் சீரமைப்பதற்கான சிகிச்சைகளுக்காக முன்னெடுக்கும் ஆய்வு முயற்சிகளுக்கு கூடுதல் முதலீடுகள் தேவைப்படுவதாக சென்கிளயார் குறிப்பிடுகின்றார்.

ரீ ப்ரோக்ராமிங் சில வேலைகளில் ஆபத்தானவை எனவும், சில சமயங்களில் இவ்வாய்வு கூட விலங்குகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அபாயம் காணப்படுகின்றது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், சென்கிளயாரின் லைப் பயோசயன்ஸ் நிறுவனம் ஆரம்பகட்ட பாதுகாப்பு பரிசோதனைகளைக் கடந்துள்ளது. விலங்குகளுக்கு இந்த பரிசோதனை நடத்தப்பட முடியும் என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இருப்பினும், இந்த ஆய்வுகள் இன்னும் சிக்கல் மிகுந்தவையாகவே காணப்படுகின்றன.

ஆரம்ப கட்டமாகக் கண் நரம்பில் உயர் அழுத்தம் ஏற்படுவதனால் பார்வை நரம்புகள் சேதமடையும் குளுகோமா நோயாளிகளிடம், பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த நோய்ப் பாதிப்பை குணப்படுத்தும் நோக்கில் நோயாளிகளின் ஒரு கண்ணுக்கு மூன்று ரீ ப்ரோக்ராமிங் உயிரணுக்கள் கொண்ட வைரஸ்கள் ஊசி மூலம் ஏற்றப்படவுள்ளன.

இந்தச் சிகிச்சை முறை பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்துவதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ரீ ப்ரோக்ராமிங்கின் போது உயிரணுக்களைக் கட்டுப்படுத்தக் கூடிய வகையில் மருந்துகள் வழங்கப்படவுள்ளன.

இந்த வைரஸ்களைக் கட்டுப்படுத்தக்கூடிய நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் வழங்கப்படவுள்ளன. ஆரம்பத்தில் இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் வழங்கப்பட உள்ளன. இந்த நோயாளிகளுக்கு குறித்த மருந்தினை இந்த ஆண்டில் வழங்க முடியும் என நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த மருந்து அல்லது சிகிச்சை முறைமை வயது மூப்பினை மாற்றி அமைக்கக்கூடிய புதிய யுகத்திற்கான ஆரம்ப புள்ளியாக இருக்கலாம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது மருத்துவ உலகில் மிகப்பெரிய ஒரு விடயம் என லைவ் பயோசயன்ஸ் நிறுவனத்தில் பிரதம செயற்பாட்டு அதிகாரி மைக்கேல் ரீஞ்சில் (Michael Ringel) தெரிவிக்கின்றார்.

மனித உயிர்கள் உருவாகி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் வரலாற்றில் முதல் தடவையாக உடல் உறுப்புகளைப் பாதிப்புக்களில் இருந்து மீட்டு பழைய நிலைக்குக் கொண்டு வரக்கூடிய ஒரு சிகிச்சை முறை அறிமுகம் செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, பாதிக்கப்பட்ட உடல் உறுப்பின் உயிரணுக்களில் திருத்தங்களைச் செய்து பழைய நிலைக்கு கொண்டு வரக்கூடிய ஓர் சிகிச்சை முறை குறித்த ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தொழினுட்பமானது இரண்டு தசாப்த காலங்களுக்கு முன்னதாக நோபல் பரிசு வென்றெடுக்கப்பட்ட ஒரு தொழினுட்பம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு உயிரணுவில் சில சக்தி வாய்ந்த மரபணுக்களை அறிமுகம் செய்வது அது மீண்டும் ஒரு கரு உயிரணுவாக மாறும். இவ்வாறு மாற்றம் வருவதால் அது ஆரம்ப காலக் கருவில் காணப்படும் பல்வேறு சிறப்பு உயிரணு வகைகளாக உருவாகும். இதனை யாமனாக்கா (Yamanaka) காரணிகள் என ஆய்வாளர்கள் அழைக்கின்றனர்.

இது உண்மையில் ஃபேக்டரி ரீசெட் (factory reset) அல்லது பழைய அல்லது ஆரம்ப நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய ஒரு நிலையை விவரிக்கின்றது. நாங்கள் எங்களது அலைபேசிகளில் அல்லது டிஜிட்டல் சாதனங்களில் இந்த ஃபேக்ட்ரி ரீசெட் அல்லது ஆரம்ப புள்ளிக்குச் செல்லும் ஒரு தொழினுட்ப வசதி காணப்படுவதனை அவதானித்திருப்போம். அதேபோல், உயிரணுக்களை ஆரம்ப நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய ஒரு தொழினுட்பமாக இந்த தொழினுட்பம் கருதப்படுகின்றது. எனினும், இவை ஆபத்தானவை என்பதையும் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. ஏனென்றால், இவ்வாறு உயிர் வாழும் விலங்கு ஒன்றில் மாற்றங்கள் நடைபெறும்போது கட்டிகள் வேகமாக உருவாகக்கூடிய சாத்தியங்கள் உண்டு என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த ஆபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில் விஞ்ஞானிகள் புதிய ஒரு முயற்சியை முன்னெடுத்தனர். விஞ்ஞானிகள் ‘பகுதி’ அல்லது ‘ஸ்திரமற்ற’ ரீ ப்ரோகிராம் என்று அழைக்கப்படும் ஒரு புதிய யோசனையை முன்மொழிந்தனர். உடலில் உயிரணுக்களின் பங்கு என்ன என்பது குறித்து முழுமையான மறதி நிலைக்குச் செல்லாது, சக்திவாய்ந்த மரபணுக்களுக்கு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவது - அல்லது அவற்றின் ஒரு துணைக்குழுவை மட்டும் பயன்படுத்தி உயிரணுக்களை இளமையாகச் செயற்படுத்துவதே இந்த மாற்று யோசனைத் திட்டமாகும்.

2020-ஆம் ஆண்டில், இத்தகைய பகுதி ரீ ப்ரோகிராமிங்களில் எலிகளின் பார்வை நரம்புகள் சேதமடைந்த பின்னர் பார்வையை மீட்டெடுக்க முடியும் என்று சென்கிளயார் கூறினார். நரம்புகள் மீண்டும் வளர்ந்ததற்கான சான்றுகள்கூட இருப்பதாகக் கூறினார்.

அவரது அறிக்கை உலகின் பிரபல விஞ்ஞான ஆய்வு சஞ்சிகைகளில் ஒன்றான நேச்சர் (Nature) இதழின் அட்டைப்படத்தில் ‘காலத்தைத் திருப்புதல்’ என்ற தலைப்புடன் பிரசுரமானது.

ரீ ப்ரோகிராமிங் என்ற தொழினுட்பத்தின் ஊடாக உண்மையில் வயது திரும்பப்படுகின்றது என்பதை அனைத்து விஞ்ஞானிகளும் ஒப்புக்கொள்வதில்லை. ஆனால், சென்கிளயார் இந்த ரீ ப்ரோகிராமிங் தொடர்பில் உறுதிப்பாட்டுடன் கருத்துகளை வெளியிட்டு வருகின்றார். நமது மரபணுக்களில் சரியான மேல்மரபியல் epigenetic தகவல்களைப் படிப்படியாக இழப்பதுதான் முதுமைக்கு இறுதிக் காரணம் என்ற கோட்பாட்டை சென்கிளயார் வலியுறுத்துகின்றார்.

எலோன் மஸ்க் இந்தத் துறையில் கவனம் செலுத்துவதாகத் தென்படுவதாகவும், மேலும் தமது கோட்பாட்டுடன் ஒத்திசைந்ததாகத் தெரிவதாகவும் சென்கிளயார் ஒரு மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட ஆயுள் அல்லது அமரத்துவம் தொடர்பில் சென்கிளயரின் ஆய்வுகள் நூல்கள் பல காணப்படுகின்றன. அதன் ஓரு பகுதியாகவே இந்த ரீ ப்ரோகிராமிங் காணப்படுகின்றது. ஆயுள் நீட்டிப்பு உள்ளிட்ட பல விஞ்ஞான உலகின் விந்தைகள் தொடர்பில் சென்கிளயார், அதிகம் விற்பனையாகும் பல புத்தகங்களை எழுதியவர். மற்றும் ஆயுள் நீட்டிப்பு குறித்த அறிவார்ந்த ஊடாடுகைகளில் சென்கிளயார் ஒரு முக்கியமான நபராகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நீண்ட ஆயுளுக்கு உதவக் கூடிய சர்டுயின்கள் எனப்படும் புரத மூலக்கூறுகளின் நன்மைகள் குறித்தும் சென்கிளயார் தகவல்களை வெளியிட்டிருந்தார். சிவப்பு வைனில் காணப்படும் ஒரு மூலக்கூறான ரெஸ்வெராட்ரோல் வயது மூப்பினைத் தவிர்க்கும் ஒரு பொருள் என அவர் பரிந்துரை செய்திருந்தார். ஆனால், சில விமர்சகர்கள் அவர் விஞ்ஞான அறிவியல் முன்னேற்றத்தை பெரிதும் மிகைப்படுத்துவதாகக் குற்றம் சுமத்துகின்றார்கள்.

லைப் பயோசயன்ஸ் நிறுவனம் 2017-இல் உருவாக்கப்பட்டது, முதலில் துணை நிறுவனங்களைத் தொடங்குவதற்கான ஒரு உத்தியைக் கொண்டிருந்தது, ஒவ்வொன்றும் வயது மூப்பு பிரச்சினையின் ஒரு அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு தொடர்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால், இவை மட்டுப்படுத்தப்பட்ட முன்னேற்றத்தை அடைந்த பின்னர், 2021-இல் அது ஒரு புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஜெர்ரி மெக்லாக்லினை நியமித்தது, அவர் சென்கிளயாரின் எலிகளின் பார்வை குறித்த ஆய்வு முடிவுகள் மற்றும் மனித சோதனையை நோக்கிய உந்துதலில் தனது முயற்சிகளைத் தீவிரப்படுத்தினார்.

மூளை உட்பட பிற உறுப்புகளை ரீ ப்ரோகிராம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நிறுவனம் கலந்துரையாடியுள்ளது. சென்கிளயாரைப் போலவே ரிங்கலும், ஒரு நாள் ஒட்டு மொத்த உடலையும் புதுப்பிப்பது கூட சாத்தியமாகும் என்ற கருத்தை முன்வைக்கிறார். ஆனால், இப்போதைக்கு, இந்த ஆய்வை இளமையை மீட்டெடுக்கும் சாத்தியம் வெகு தொலைவில் உள்ள ஒரு எண்ணக்கருவின் சான்றாகக் கருதுவதே மிகவும் நடைமுறைச் சாத்தியப்பாடுடைய நிலைப்பாடாகும்.

பார்வையை இழந்த சிலருக்கு பார்வை வழங்குவது நம்பிக்கைக்குரிய விடயமாக நோக்கப்பட வேண்டும் என முதலீட்டாளர் ப்ஃப்ளெகர் கூறுகிறார்

மருத்துவரினால் எழுதப்படும் ஒரு மருந்துச் சீட்டு மாத்திரையின் மூலம் இளமையைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற அளவிற்கு தற்போதைக்கு இது இலகுவானதல்ல என மேலும் தெரிவிக்கின்றார்.

லைஃப் நிறுவனத்தின் சிகிச்சையும் ஒரு நுண்ணுயிர்க்கொல்லி மாறுதல் பொறிமுறையை நம்பியுள்ளது, இது பெரும்பாலும் ஆய்வக விலங்குகளில் பயன்படுத்தப்பட்டாலும், இதற்கு முன்பு மனிதர்களில் முயற்சிக்கப்படவில்லை. ஈ. கோலை மற்றும் ஹெர்பெஸ் வைரஸிலிருந்து எடுக்கப்பட்ட மரபணு கூறுகளிலிருந்து உருவாக்கப்படுவதால், அது மனிதர்களில் நோயெதிர்ப்பு எதிர்வினையை ஏற்படுத்தக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பரவலான பயன்பாட்டிற்கு உங்களுக்கு வேறு ஒரு அமைப்பு தேவைப்படலாம் என்று நான் எப்போதும் நினைத்துக்கொண்டிருந்தேன்,’ எனச் சென்கிளயாரின் நுட்பத்தை செயற்படுத்த உதவிய விஞ்ஞானி நோவா டேவிட்சோன் கூறுகிறார்.

ரீ ப்ரோகிராமிங் அல்லது மறு நிரலாக்கத்தை ஆய்வு செய்யும் பிற நிறுவனங்கள், தேவையற்ற பக்க விளைவுகள் இல்லாமல் நேரத்தை மாற்றியமைக்க, எந்த மரபணுக்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதை ஆராய்வதில் தங்கள் கவனம் இருப்பதாகக் கூறுகின்றன.

இயற்கை விதிகளின் நிரந்தரமான பகுதிகளாகக் கருதப்பட்டு வரும் வயது மூப்பு, மரணம் போன்ற அசாத்திய ஏதுக்களை மாற்றியமைக்கும் முனைப்புக்களில் விஞ்ஞான உலகம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த அசுர வேக முயற்சி மனித இனத்தை நித்திய அமரத்துவம் நோக்கி நகர்த்துமா? இந்த வினாவிற்கு காலமே பதில் சொல்ல வேண்டும் என்றால் அது பிழையாகாது.

நன்றி.