ஓர் ஈழ நாட்குறிப்பு...
- ஓவியர் ஜீவா
இன்று உலகம் சுருங்கிவிட்டது என்று சொல்வார்கள். எல்லோருக்குமே அப்படி என்றால், நிச்சயமாக இல்லை. இப்படி ஒரு நிலையில் இலங்கை செல்வதும் எனக்கு ஓர் ஆடம்பரம்தான். ஆனாலும் தாய்வீடு இதழின் வருடாந்திர கூடுகைக்கு இந்த வருடம் என்னையும் ஓர் அழைப்பாளராகத் தேர்ந்தெடுத்ததில் பெருமகிழ்ச்சியடைந்தேன். இந்த பெருமையை பீற்ற ஒரு கட்டுரையா என்று நீங்கள் நினைப்பது எனக்கு கேட்கிறது. இந்தக் கட்டுரை தமிழ்நாட்டில் வாழ்பவர்களுக்கு நானறிந்த தகவல்களை சொல்வதற்கும், ஈழத் தமிழர்கள், ஒரு இந்தியத் தமிழனின் பார்வையை அறிவதற்கும்தான். தாய்வீடு கூடுகையில் நான் கலந்து கொள்வது இது முதல் முறையல்ல. 2013-இல் அழைக்கப்பட்டு தாய்வீடு குழுவினருடன் கனடாவில் மகிழ்ச்சியாக 3 வாரங்களை கழித்தேன். பத்துக்கும் மேற்பட்ட இலவச ஓவியப் பட்டறைகளை பள்ளி மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு, தமிழாசிரியர்களுக்கு மற்றும் முதியோர்களுக்கும் நடத்தினோம். ஏராளமான தமிழர்களிடம் இருந்து அவர்கள் வாழ்க்கை அனுபவங்களை கேட்டறியும் வாய்ப்பும் கிடைத்தது.
இந்த வருடம் இலங்கையில் கூடுகை மட்டக்களப்பில் நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பெப்பிரவரி 9 அன்று நானும் நாகர்கோவிலில் இருந்து வந்த தாய்வீட்டின் தொழில்நுட்ப வல்லுநர் சாம் டேனியலும் யாழ்ப்பாணத்திற்கு சென்னையில் இருந்து விமானம் ஏறினோம். 80 பயணிகளைக் கொண்ட இன்டிகோ விமானம் மதியம் சுமார் 12 மணியளவில் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமான நிலையம் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. மிகவும் சிறிய நிலையம். ஒரே ஒரு நபர் பயன்படுத்தக்கூடிய கழிவறைகள் மட்டுமே இருந்தன. எங்கள் பெட்டிகளையெல்லாம் ஒரு அறையில் குவித்து வைத்திருந்தனர். சுழலும் டிராலி எல்லாம் இல்லை. உரிய சீட்டுக்களை காட்டி பெட்டிகளை பெற்றுக்கொண்டோம். விமான நிலையத்திற்கு நண்பர் பொன்னையா விவேகானந்தனும், அவர் தங்கையின் மருமகன் சுப்பிரமணியம் சிரஞ்சீவனும், விவேகானந்தனின் தமக்கை பேரன் அரவாணனும் வந்திருந்தனர். சீயான் என்றழைக்கப்பட்ட சிரன்சீவன், இந்த பயணம் முழுவதும் எங்களுடனேயே இருந்து காரையும் வேனையும் திறமையாக ஓட்டி எங்களை கவனமாக பார்த்துக்கொண்டார்.
கார் பலாலியிலிருந்து யாழ் நகரை நோக்கி சென்றது. கடைகளையும், கடை போர்டுகளையும், மக்களையும் வியப்போடு பார்த்துக்கொண்டே பயணித்தேன். நெற்றி நிறைய விபூதிப்பட்டையுடன் திருவள்ளுவர் சிலையை ஒரு நாற்சந்தியில் பார்த்தேன். தூய தமிழ் சொற்களே கடை விளம்பரப் பலகைகளை அலங்கரித்தன. தமிழ்நாட்டில் பேக்கரி என்றும் அடுமனை என்றும் அழைக்கப்படும் கடைகள் அங்கு வெதுப்பகங்களாக காட்சியளித்தன.
மதிய உணவுக்கான இடம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருந்ததால் அங்கு சென்றடைந்தோம். பருத்தித்துறை சாலையும் நாவலர் வீதியும் சந்திக்கும் இடத்தில் யாழ்மனை என்ற அந்த உணவகத்தின் உள் அலங்காரங்கள் மிக எளிமையாக காட்சியளித்தன. பனை மட்டைகளினால் உட்சுவர்கள், அம்மி, ஆட்டுக்கல் போன்ற பொருட்களை ஆங்காங்கே காட்சிப்படுத்தியிருந்தனர். ‘பஃபே’ முறைப்படி உண்ணும் வசதி. மண்பானைகளில் உணவுகளை வரிசைப்படுத்தியிருந்தனர். தட்டும் மண்தட்டுத்தான். இரண்டு வகை அரிசியினால் சமைக்கப்பட்ட இரண்டு நிறங்களில் சோறு, கூட்டுப் பொரியல்கள் என்று சைவ வகையில் நாலைந்து பானைகளும் இன்னும் சில பானைகளில் சிக்கன், மட்டன், மீன், இறால் வகைகளும் உண்டு. அவற்றுக்கு தனிக்கட்டணம். ஆவலுடன் மீன்கறியை எடுத்துக்கொண்டேன். பெரிய துண்டத்துடன், கிட்டத்தட்ட நாஞ்சில் நாட்டு கருத்தக்கறியை நினைவூட்டும் ருசி. மோர், தயிர் போன்றவை இல்லை. இப்படி இலங்கையில் என் முதல் உணவை யாழ்மனை தந்தது. கண்ணில் பட்ட நாவலர் வீதி என்ற பெயர் ஒரு சரித்திரத்தை நினைவூட்டியது.
உணவு அருந்திய பின் சென்ற இடம், ஈழ வரலாற்றில் முக்கியமான இடத்தை பெற்ற யாழ் நூலகம். தீ வைக்கப்பட்டு நூல்கள் எரிந்து போனதாகவும், கட்டடம் அதிகமாக சேதமாகவில்லை என்றும் சொன்னார்கள். நான் சென்ற அன்று வார விடுமுறை. மீண்டும் ஒரு நாள் அங்கு சென்றபோது, செருப்புகள் உள்ளே அனுமதியில்லை என்பது அறிந்து வியந்தேன். முன்னால் இருக்கும் பழைய கட்டடத்தை போலவே, பின்னாலும் ஒரு புதிய கட்டடத்தை கட்டியிருக்கின்றனர். ஒரு சுற்றுலா தளம் போல மக்கள் வந்து போய்க்கொண்டிருந்தனர்.
அடுத்து சென்றது ‘ஒல்லாந்தர் கோட்டை’. ஒல்லாந்தர் என்பது டச்சு மக்களை குறிப்பது. அவர்களது ஆட்சி இலங்கையில் 1658 முதல் 1796 வரை, சுமார் 138 ஆண்டுகள் நடைபெற்றிருக்கிறது. நட்சத்திர வடிவிலான இந்த கோட்டையை போல பல கட்டமைப்புகளை டச்சு ஆட்சியாளர்கள் கட்டியிருக்கிறார்கள். ரோமன்-டச்சுச் சட்டம், டச்சுச் சீர்திருத்தத் திருச்சபை, பல கட்டடக்கலை, கல்வி மற்றும் வர்த்தக மேம்பாடுகள் இவர்களின் காலத்திலேயே உருவாயின. 1796-இல் ஆங்கிலேயரிடம் ஆட்சியை இழந்திருக்கின்றனர்.
நல்லூர் என்றதும் அங்கிருக்கும் கந்தசாமி கோவில்தான் நினைவுக்கு வரும். கோவிலுக்கு சற்று முன்பாக ஈழ விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து திலீபன் மரித்த இடம் உள்ளது. 15.09.1987 முதல் 26.09.1987 வரை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். அங்கு இப்போது ஒரு நினைவுச்சின்னம் சிறிய அளவில் உள்ளது. அதை கடந்தவுடன் நல்லூர் கந்தசாமி கோவில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. பல வீடியோக்களில் அந்த கோவில் திருவிழாவை பார்த்த நினைவுகள் வந்தன. அப்போது நடை சாத்தப்பட்டிருந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை. அந்த வட்டாரமே அந்தக் கோவிலின் சுவடுகளுடனேயே காட்சியளித்தது. கோவில் கட்டுமானத்தில் கோபுரங்கள் மட்டுமே தமிழ்நாட்டுக் கோவில்கள் போல இருந்தன. மற்றபடி வளைவுகளான ஆர்ச்சுகள் கோவில் கட்டடத்தில் பெருமளவு ஆக்கிரமித்திருந்தன. பின்னர் ஒரு முறை கோவிலுக்குள் சென்றபோது பிரகாரம் முழுதுமே வளைவான ஆர்ச்சுக்களால் அமைக்கப்பட்டிருந்தன. இலங்கையில் கோவில்களுக்குள் செல்லும்போது சட்டை அணியாமல்தான் செல்லவேண்டும் என்று கட்டுப்பாடுகள் உள்ளன. கிட்டத்தட்ட கேரள, குமரி மாவட்ட விதிகள்தான் இவை. நல்லூர் கோவிலில் அர்ச்சனை கட்டணம் வெறும் ஒரு ரூபாய்தான் என்பதும் ஒரு செய்தி!
அருகிலேயே சங்கிலியன் தோரண வாயிலுடன் கூடிய கட்டடமே யாழின் மிகப்பழைய கட்டடம் என்று சொல்ல அறிந்தேன். கந்தசாமி கோவிலுக்கு சற்று எதிரில் உள்ள பகுதியில் இரண்டு புகழ் பெற்ற ஐஸ் கிறீம் கடைகள் இருக்கின்றன. முதல் நாள் லிங்கம் ஐஸ் கிறீம் கடையில் ப்ரூட் சாலட் ஐஸ் கிரீம் சாப்பிட்டேன். அற்புதமான சுவை. மேஜையில் அமர்ந்து ஆர்டர் தந்துவிட்டு பின்னர் பணம் தரும் முறை இந்தக் கடைகளில் இல்லை. முதலிலேயே பணம் தந்தால் மட்டுமே கிடைக்கும். காரணம் கேட்டபோது, கோவில் திருவிழாக்களின்போது பெரும் கூட்டம் இந்த கடைகளுக்கும் படையெடுப்பதால் கூட்ட நெரிசலில் பணம் கொடுக்காமல் செல்லும் அனுபவங்களை பெற்றதால் இந்த நடைமுறை என்று சொன்னார்கள். பின்னர் ஒரு முறை அங்கிருக்கும் றியோ ஐஸ் கிறீம் கடைக்கு சென்றபோது கிடைத்த அனுபவமே வேறு. ஐஸ் கிறீமுக்கு மட்டும் இவ்வளவு பெரிய கடையை நான் பார்த்தது கிடையாது. இரண்டு தளங்களில் விரிந்து பரந்திருக்கும் இந்த கடையில் ஆர்டர் கொடுக்க காத்திருந்த கூட்டம் கண்டு பிரமித்து போய்விட்டேன்.
அரியாலை சேத்துப்பாத்தி இந்து மயானம் அருகே வண்டி நிறுத்தப்பட்டது. இதன் அருகில்தான் செம்மணி புதைகுழிகள் என்று அழைக்கப்படும் இலங்கை வரலாற்றின் கொடிய சோகம் படர்ந்த இடம் என்று சொன்னார்கள். ராணுவத்தினரால் கொல்லப்பட்ட ஏராளமான தமிழர்களின் உடல்கள் இங்கே தோண்டியெடுக்கப்பட்டன, குழந்தைகளின் சடலங்கள் உட்பட. நீதிமன்ற உத்தரவிற்கிணங்க இது பாதுகாக்கப்பட்ட இடம். யாரும் உள்ளே பிரவேசிக்க முடியாது. ‘இது ஒரு குற்ற பிரதேசம். உள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டிருக்கிறது - இது யாழ்ப்பாணம் நீதிபதியின் உத்தரவுப்படி’ என்று ஒரு போர்ட் வாசலிலேயே இருக்கிறது. அங்கு சென்றவுடனேயே உள்ளிருந்து காவல்துறையினர் வெளியே வந்து நம்மை தடை செய்கின்றனர்.
விவேகானந்தனின் ஊரான கிளிநொச்சியை நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது. வழியெங்கும் நெல்வயல்கள், உப்பளங்கள், உப்பும் மணலும் பாய்ந்து தரிசான நிலங்கள், பனங்காடுகள், கடலோரங்கள், உப்பங்கழிகள் என்று கண்ணுக்கு விருந்தான விஷயங்கள். அறுவடைக்காலம் என்பதால் எல்லா சாலைகளிலும் பாதிப் பகுதியை அடைத்து நெல்லை காயப்போட்டிருந்தார்கள். இது இங்கு மட்டுமல்ல. பயணம் முழுவதும் சாலைகளில் கண்ட காட்சி இது. யாழ்ப்பாண தீபகற்பத்தை மெயின்லேண்டுடன் இணைக்கும் இரண்டு பாலங்களில் ஒன்றான சங்குப்பிட்டி பாலத்தை கடந்து சென்றது ஒரு அற்புதமான அனுபவம். பாலத்தின் ஓரங்களில் அப்போதே பிடித்த மீனுடன் சிறு வியாபாரிகள் மீன் விற்றுக்கொண்டிருந்தனர்.
செல்லும் வழியில் பூநகரியில் ஆலடி சந்திக்கோட்டையின் சிதிலங்களை பார்வையிட்டோம். மண்ணால் அடைக்கப்பட்டிருந்த சுரங்கப்பாதையும் இருந்தது! வழியில் தேநீர் அருந்தலாமென்று இறங்கினோம். அது ஒரு ராணுவ கான்டீன். நெஸ்டீ, நெஸ்க்கோப்பி, பெரிய சைஸ் உளுந்துவடை, கொத்து ரொட்டி, இத்யாதி... என்று விலைப்பட்டியல் அறைகூவியது. இந்தியாவைப்போல அதிக அளவில் டீக்கடைகள் கண்ணில் படவில்லை. பாய்லர் டீ, அடுப்பில் காய்ச்சிய தேநீர் எல்லாம் அபூர்வம். பெரும்பாலும் பட்டன் அழுத்தினால் கொட்டும் பிராண்டட் டீ, கோப்பிதான். ராணுவ கான்டீன் என்பதால் சுத்தமாக இருந்தது. ரெஸ்ட்ரூமை கூட பூட்டி வைத்து, சாவி கேட்டால் மட்டுமே தருகிறார்கள். இப்போது ராணுவத்திற்கு வேலை குறைவு என்பதால் இப்படி கேன்டீன்கள் நடத்துகிறார்கள் என்று நண்பர் வேடிக்கையாக சொன்னார். இத்தகைய கேன்டீன்களை நான் சென்ற இடமெல்லாம் பார்த்தேன்.
நாங்கள் தங்கவேண்டிய இடம் விவேகானந்தனின் வீடு. கிளிநொச்சியில் பெரிய பரந்தன் பகுதி. வாய்க்காலை தாண்டும் ஐந்தாம் நம்பர் பாலம் வழியே வீட்டு வாசலுக்கு செல்லலாம். அங்கு அவரது தமக்கை வசிக்கிறார். நெல்வயல்களாக இருந்த பகுதியில் அந்தக்காலத்திலேயே அவரது தந்தை ஒரு தோட்ட வீடு கட்டியிருக்கிறார். இப்போது விவசாய நிலத்தில் வீடு கட்ட அனுமதி தருவதில்லை என்று சொன்னார்கள். ஒரு பகுதியில் தமக்கை, அடுத்த பகுதியில் தங்கை குடும்பத்தினர். அதற்கு அருகில் அவர்களது தாயார் வசிக்கிறார். அவர் வசிப்பது இந்தியாவில் இருந்து தாயகம் திரும்பியோருக்காக இந்திய அரசு கட்டித் தந்திருக்கும் ஒரு சிறிய வீடு. தாயார் தமிழ்நாட்டில் அகதிகள் முகாமில் நீண்டகாலம் வசித்தவர். மிக தைரியமான பெண்மணி.
எங்களுக்கு விவேகானந்தனின் அறை ஒதுக்கப்பட்டது. சுற்றிலும் மரங்கள். வேலிக்கு அந்தப்பக்கம் நெல்வயல்கள். ஈழ விடுதலைப் போரின்போது பக்கத்து ஆனையிறவு ராணுவதளத்தில் இருந்து கண்மூடித்தனமாக ஏவப்பட்ட ஷெல்கள் தாக்கி வீடே அழிந்து போய், இப்போது மீண்டும் கட்டப்பட்டது என்று சொன்னார்கள். வாசலில் இருந்த தென்னை மரத்தில் ஷெல் துளைத்த ஓட்டை இன்னும் இருக்கிறது. மரமும் காய்க்கிறது!
(தொடரும்...)
