புதிய சீருடைக் கலாசாரம்
- நடராசா சிறிரஞ்சன்
நான் 1978-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தபோது, மாணவர்கள் நீலக் காற்சட்டையும் வெள்ளை மேற்சட்டையும் அணிந்து வருதல் வேண்டும் என்ற சுற்றறிக்கை அதிபர் P.S. குமாரசாமி அவர்களின் கையெழுத்திடப்பட்டு வந்திருந்தது. அது மாணவர்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டது. தொடர்ந்து வந்த நாட்களில் சிலர் சீருடை அணிந்து வந்தார்கள். சீருடை அணியாது வந்த மாணவர்களுக்கு சீருடை அணியுமாறு காலத்துக்கு காலம் அறிவுறுத்தப்பட்ட போதிலும் அது கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தவணை விடுமுறை விடும் நாளில், அடுத்த தவணை முதல் எல்லா மாணவர்களும் சீருடை அணிந்து வருதல் கட்டாயமானது என்ற சுற்றறிக்கை ஒவ்வொரு வகுப்புகளுக்கும் அதிபர் அலுவலகத்தால் அனுப்பப்பட்டு, அது மாணவர்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டது. இது ஒவ்வொரு தவணை விடுமுறை விடும் நாளிலும் தொடர்வதாக இருந்தது. சீருடை அணியும் மாணவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்தபோதும் எல்லோரும் சீருடையில் பாடசாலைக்கு வரும் நிலை தோன்றவில்லை.
யாழ்பாணம் இந்துக்கல்லூரியில் மாணவர் அனுமதி பெறுவதற்கு எவ்வளவு போட்டி இருக்கிறது என்பது நாம் எல்லோரும் அறிந்ததொன்றுதான். அன்றும் அது அவ்வாறுதான் இருந்தது. அனுமதி தொடர்பில் என்ன நிபந்தனைகள் விதித்தாலும் அதைப் பின்பற்றுவதற்கு மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் தயாராக இருப்பர். சீருடை அணிந்துதான் மாணவர்கள் பாடசாலைக்கு வரவேண்டும் என்று அதிபர் கட்டளை பிறப்பித்திருந்தால் தாயின் தாலிக்கொடியை அடைவு வைத்தென்றாலும் பெற்றோர்கள் மகனுக்குச் சீருடை வாங்கிக் கொடுத்திருப்பர். அதை அதிபர் நன்கு அறிந்திருந்த போதும் அவ்வாறு செய்யவில்லை. ஏழை மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காகவே P.S. குமாரசாமி அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
பாடசாலைகளில் சீருடை அணிவதற்குக் காரணம் மாணவர்களிடையே எற்றத்தாழ்வு தெரியக்கூடாது என்பதற்காகவே. அந்தவகையில் பாடசாலை மாணவர்கள் சீருடை அணிவது சிறப்பானதுதான். ஆனால், இன்று எங்கு பார்த்தாலும் சீருடைக் கலாசாரம் தலை விரித்தாடுகிறது. பழைய மாணவர் ஒன்றுகூடல்கள், நிறுவன ஒன்றுகூடல்கள், விளையாட்டுக் கழகங்கள், திருமணம், சாமத்தியச் சடங்கு, கோயில் திருவிழாக்கள் என்று பற்பலவற்றில் சீருடை அணிவது வழக்கமாகி வருகிறது. அண்மையில் நண்பர்கள் சுற்றுலா ஒன்றில் குழுவாக ஓளிப்படம் எடுப்பதற்கு குறிப்பிட்ட நிறத்தில் அமைந்த குறிப்பிட்ட உடைகளைக் கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டள்ளது. அந்த உடைகள் எங்கு கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை, தமது பொருட்களை விற்பதற்கு இன்றைய வணிகர்கள் பயன்படுத்துமொரு உத்தி என்பதைத் தவிர்த்து வேறு எவ்வாறு அழைப்பது?
கலியாணவீடு, சாமத்தியவீடு போன்ற சுபகாரியங்களில் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் ஒரே வகையான உடைகளை அணியும் வழக்கம் தோன்றியுள்ளது. கோயில் திருவிழாக்களில் ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு ஒவ்வொரு நிறத்தில் அலங்காரம் செய்கிறார்கள். அதே நிறத்தில் குருக்கள் வேட்டி சால்வை அணிகிறார். பக்தர்களும் அவ்வாறே, பெண்கள் அந்த நிறத்தில் சேலையும் ஆண்கள் அந்த நிறத்தில் சால்வையும் அணிந்து வருமாறு எதிர்பார்க்கப்படுகிறது.
குருக்களுக்கு தர்மகர்த்தா அல்லது திருவிழா உபயகாரர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிறத்தில் வேட்டி சால்வை வாங்கிக் கொடுக்கக்கூடும். பக்தர்கள் தங்கள் சொந்தப் பணத்தில்தானே அவற்றைக் கொள்வனவு செய்ய வேண்டும். பத்து நாள் திருவிழா என்றால் பத்துச் சேலைகள், சால்வைகள். திருவிழா முடிந்ததும் இவற்றை என்ன செய்வது?
ஒருசாரார், மற்றவர்களிடம் உள்ள பணத்தை எவ்வாறான புதுப்புது வழிகளில் தம்வசப்படுத்தலாம் என்று புதிது புதிதாகச் சிந்தித்துச் செயற்படுகிறார்கள். நாம் சிந்தித்துச் செயற்படுவதை விட்டு அவர்களின் மாயவலைகளில் அகப்பட்டு விடுகிறோம். மூடர்களைப்போன்று கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை வீணாக்கி, பிறர் கோடான கோடிகளைச் சேர்க்க வழிவகுக்கிறோம்.
அந்தக் காலத்தில் சிறுவர்களுக்கு உடை வாங்கும் போது வளர வளரப் போட வேண்டும் என்று உரிய அளவிலும் பார்க்கச் சற்றுப் பெரியதாக வாங்குவர். தேவைப்படின் அதைப் பக்கங்களில் பிடித்துத் தைத்துப் பயன்படுத்துவர். பல பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் அண்ணன், அக்கா பயன்படுத்திய உடைகளைத் தம்பி தங்கையர் வளர்ந்ததும் பயன்படுத்தும் வழக்கமும் காணப்பட்டது. ஏழைக் குடும்பங்களில்தான் இவ்வாறென்றில்லை, வசதி படைத்தவர்களும் அக்காலத்தில் அவ்வாறுதான் வாழ்ந்தனர். அவ்வாறு அவர்கள் சிக்கனமாக வாழ்ந்து சேர்த்த சொத்துக்களும்தான், நாம் இன்று நல்ல நிலையில் இருப்பதற்கு காரணமாகின என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.
படைப்பின் அடிப்படையே பன்முகத்தன்மைதான். இயற்கையின் ஒவ்வொரு அம்சங்களிலும் பன்முகத்தன்மையைக் காண்கிறோம். அதனால்தானே உலகத்தின் ஒவ்வொரு அம்சங்களும் அழகாகவும் ஒன்றையொன்று பார்த்து இரசித்து வியக்கத்தக்கனவாகவும் உள்ளன. ஒரு காட்டில் ஒரே வகையான மரங்கள் இருப்பதை விட, பலதரப்பட்ட செடிகளும் கொடிகளும் இருப்பதே அந்த இடத்திற்கு உயிரோட்டத்தைத் தருகிறது. இதனை மனித வாழ்க்கைக்கும் பொருத்திப் பார்ப்பது சுவாரஸ்யமானது. ஆடைகள் என்பவை வெறும் உடல் கவசம் மட்டுமல்ல; அவை ஒருவருடைய ஆளுமை, கலாசாரம் மற்றும் ரசனையின் வெளிப்பாடு. மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த ஆடைகளை அணியும்போது, அவர்களின் சுயமரியாதையும் தனித்துவமும் வளர்கிறது என்ற வாதம் வலுவாக உள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா (குறிப்பாக பிரான்ஸ், பின்லாந்து, ஜேர்மனி) போன்ற பல வளர்ந்த மேற்குலக நாடுகளில் அரசுப் பாடசாலைகளில் மாணவர்கள் சீருடையணியும் வழக்கம் இல்லை என்பதும் ஞாபகத்தில் கொள்ளத்தக்கது. சில சமயங்களில் சீருடைகளை விட சாதாரண ஆடைகள் விலை குறைவாக இருப்பதாலும் மாணவர்களின் ஜனநாயக உரிமை மதிக்கப்படுவதாலும் தினசரி என்ன ஆடை அணிய வேண்டும் என்று தீர்மானிப்பது ஒருவகையான படைப்புத்திறன் சார்ந்த செயலாக அமைவதாலும் மேற்குலக நாடுகளில் மாணவர்கள் சீருடையணியும் வழக்கம் மிகக் குறைவான அளவிலேயே பின்பற்றப்படுகிறது. பாடசாலைகளில் சீருடை இல்லாமல் இருப்பது மாணவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் சுய அடையாளத்தையும் அங்கீகரிப்பதாகும். இது வளர்ந்த நாடுகளின் நவீன கல்விச் சிந்தனை. அதே சமயம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இலங்கை போன்ற நாடுகளில், சீருடை என்பது ஏழை-பணக்காரர் என்ற வேறுபாட்டைத் தற்காலிகமாக மறைத்து, மாணவர்கள் அனைவரும் ‘சமம்’ என்ற உணர்வை வழங்கவும் உதவுகிறது. பன்முகத்தன்மை என்பது உடையில் மட்டும் இருக்க வேண்டியது அல்ல; அது மாணவர்களின் சிந்தனையிலும், செயற்பாட்டிலும் இருக்க வேண்டும். ஆடை சுதந்திரம் என்பது ஒரு ஆரோக்கியமான கல்விச் சூழலுக்கு வழிவகுக்குமே தவிர, அதுவே கல்வியின் தரம் ஆகாது.
நன்றி
