தாமதமாகும் ஆர்டெமிஸ் - 2
- குரு அரவிந்தன்
ஆர்டெமிஸ் என்பது சந்திரனின் உருவகமான கிரேக்கப் பெண் தெய்வத்தின் பெயராகும். சந்திரனோடு தொடர்பு உடையதால், அந்தப் பெயரை ஆர்டெமிஸ் என்ற இந்தத் திட்டத்திற்குத் தெரிவு செய்தார்கள். இந்த விண்வெளிப் பயணக் குழுவில் கனேடிய விண்வெளி வீரர் ஜெர்மி ஹேன்சன் இடம்பெற்றுள்ளார். மார்ச் மாதம் இந்தத் திட்டம் செயலாக்கப்படும் போது, இவர் சந்திரனுக்குப் பறந்த முதல் அமெரிக்கர் அல்லாதவராக இருப்பார். மேலும் நீண்டதூர ஆழமான விண்வெளிப் பகுதிக்கு விண்வெளி வீரரை அனுப்பும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்ததாகக் கனடா நாட்டை இடம்பெறச் செய்வார். இந்தப் பயணம் சந்திரனைச் சுற்றிவருவது மட்டுமே, சந்திரனில் தரை இறங்குவது அல்ல என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.
ஆர்டெமிஸ் - 2 புளோரிடாவின் கேப் கனாவெரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து பெப்பிரவரி மாதம் 8-ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தரையிலிருந்து புறப்படவிருந்தது. ஆனால் பெப்பிரவரி 2-ஆம் தேதி நாசா, வெட் டிரஸ் ரிகர்சல் எனப்படும் ஒரு முக்கியமான எரிபொருள் நிரப்பும் சோதனையை நடத்திய பிறகு, 322 அடி உயரமுள்ள பிரமாண்டமான ஸ்பேஸ் லாஞ்ச் சிஸ்டம் ராக்கெட் உடனடியாகப் புறப்படுவதற்குத் தயாராக இல்லை என்று நாசா நிறுவனம் முடிவு செய்தது. திருத்தங்கள் மேற்கொண்டபின் எல்லாம் சரியாக அமைந்தால், ஆர்டெமிஸ் - 2 விண்கலம் மார்ச் மாதம் 6-ஆம் திகதி அல்லது 11-ஆம் திகதி ஏவப்படலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும், நாசா நிறுவனம் இன்னும் அதிகாரபூர்வ ஏவுதளத் திகதியை அறிவிக்கவில்லை.
2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நாசாவின் ஆர்டெமிஸ் திட்டம், மனிதர்களைச் சந்திரனுக்கு மீண்டும் திருப்பி அனுப்புவதையும், செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவதற்கான தயாரிப்பாக சந்திர தளத்தை நிறுவுவதையும் இலட்சிய இலக்காகக் கொண்டுள்ளது. முதல் பயணமான ஆர்டெமிஸ் - 1, 2022-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட்டது.
நிலவில் கடைசி மனிதன் கால் பதித்து 53 ஆண்டுகள் ஆகிறது என்றால் நீங்கள் நம்பமாட்டீர்கள். நாங்கள் சிறுவர்களாக இருந்த போது நடந்த அந்த நிகழ்வுகள் நேற்று நடந்தது போல் நினைவில் நிற்கிறது. பெற்றோர்கள் இதைப்பற்றிக் கதைத்தபோது, எங்களுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. காரணம் ‘நிலா நிலா ஓடிவா’ என்று சொல்லி உணவூட்டிய நிலாவைத்தான் எங்களுக்குத் தெரிந்திருந்தது. நிலவில் மனிதன் கால் பதித்தான் என்பதைச் சீனா கூட அப்போது நம்பவில்லை. காரணம் அமெரிக்காவைத் தவிர வேறு எந்த நாடும் இதுவரை மனிதனை நிலவில் தரையிறக்கவில்லை.
நாசா நிறுவனத்தின் திட்டப்படி 1972-ஆம் ஆண்டு அப்பல்லோ திட்டம் முடிவடைந்திருந்தது. விண்வெளிச் சாதனைகளில் மிகவும் முக்கிய திருப்பமாக சந்திரனில் மனிதர் தரை இறங்கிய செயற்பாடு அமைந்தது. கற்பனையில் கவிதைகளில் வடிக்கப்பட்டது போன்று சந்திரனில் கால் பதித்தமை விண்வெளி ஆய்வுகளுக்குப் பலமூட்டிய நிகழ்வாகவும் இருந்தது. உங்களுக்கு இப்போது 52 வயதென்றால் உங்கள் காலத்தில் யாருமே சந்திரனில் கால் பதிக்கவில்லை. அது போன்ற ஒரு நிகழ்வைப் பார்க்கும் அதிஸ்டம் உங்களுக்கு வெகுவிரைவில் கிடைக்கலாம். காரணம் அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன.
விண்வெளிப் பயணத்தை முதலில் தொடக்கி வைத்தது அன்று சேவியத்யூனியன் என்று அழைக்கப்பட்ட ரஸ்யாதான். 1961-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ‘யூரி காகரின்’ என்ற ரஸ்யர்தான் முதன் முதலாக விண்வெளிக்குச் சென்றார். அமெரிக்காவைச் சேர்ந்த நீல் ஆம்ஸ்ரோங் என்பவர்தான் 1969-ஆம் ஆண்டு யூலை மாதம் 20-ஆம் திகதி முதலில் சந்திரனில் கால் பதித்தவர். அப்பல்லோ 11 என்பது அமெரிக்காவின் அப்பல்லோ திட்டத்தில் சந்திரனுக்கு மனிதர்களைக் கொண்டு சென்ற விமானமாகும். இந்த விண்கலம்தான் சந்திரனில் மனிதர்களை தரையிறக்கிய முதல் விண்கலமாகும். கமாண்டர் நீல் ஆம்ஸ்ட்ராங், பைலட் பஸ் ஆல்ட்ரின், மற்றும் மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் இதில் பயணம் செய்தனர். ஜூலை 20-ஆம் திகதி லூனார் மாட்யூல் ஈகிளைச் சந்திரனில் தரையிறக்கினார்கள். தரை இறங்கிய பின் ஆம்ஸ்ட்ராங் அதில் காத்திருந்து சுமார் ஆறு மணி நேரம் கழித்து, ஜூலை 21-ஆம் திகதி சந்திரனின் மேற்பரப்பில் காலடி எடுத்து வைத்தார். அதனால் சந்திரனில் காலடி எடுத்து வைத்த முதல் விண்வெளி வீரரானார்.
சுமார் 19 நிமிடங்களுக்குப் பிறகு பஸ் ஆல்ட்ரின் தரையில் கால்பதித்து அவருடன் இணைந்து கொண்டார். மைக்கேல் காலின்ஸ் விண்கலத்தை இயக்கியதால் அவர் தரை இறங்கவில்லை. இது மூவரின் கூட்டு முயற்சியாக இருந்தாலும், முதலில் தரையில் கால்பதித்த ஆம்ஸ்ட்ராங்கின் பெயர்தான் நிலைத்து நிற்கிறது. அவர்கள் திரும்பி வரும் போது, சுமார் 47.5 இறாத்தல் நிறையுள்ள சந்திரப் பொருட்களைச் சேகரித்துக் கொண்டு வந்தனர். மொத்தத்தில், அவர்கள் சந்திரனின் மேற்பரப்பில் 21 மணி நேரம் இருந்தனர். கொலம்பியா கட்டளை மாட்யூல் விண்கலத்தை மைக்கேல் காலின்ஸ் என்பவரே இயக்கினார்.
இதன் பின் இதுவரை 24 அமெரிக்கர்கள் சந்திரனுக்குப் பயணித்தாலும், இதில் 12 பேர்தான் சந்திரன் தரையில் கால் பதித்தனர். அப்பல்லோ 17 மிசனில் சென்ற கமாண்டர் யூஜின் செர்னன்தான் டிசம்பர் 14, 1972 சந்திரனில் கடைசியாகக் கால் வைத்த மனிதராவார். அவர் திரும்பி வரும் போது, கடைசியாக சந்திரத் தொகுதியின் ஏணியில் ஏறுவதற்கு முன்பு தனது ஒரே குழந்தையின் முதலெழுத்துகளை சந்திரனின் தூசியில் வரைந்திருந்தார். ஆர்டெமிஸ் பயணத்தைப் பார்க்க அவருக்குக் கொடுத்து வைக்கவில்லை. காரணம், அவர் ஜனவரி 16, 2017 அன்று தனது 82-வது வயதில் ரெக்சாஸில் காலமானார்.
விண்வெளிப் பயணம் என்பது ஆபத்தானது, எப்போ என்ன நடக்கும் என்று சொல்ல முடியாதது. பல உயிரிழப்புகளைச் சந்தித்துத்தான் சில சாதனைகளை நிலைநாட்ட முடிகின்றது. இன்று மனிதர் அனுபவிக்கும் ஒவ்வொரு வசதிகளுக்குப் பின்னாலும் பலருடைய தியாகங்கள் இருந்திருக்கின்றன. அவற்றை ஆவணப்படுத்தப்படாவிட்டால், இது போன்ற தியாகங்கள் நினைவுகூரப்படாமலே போய்விடலாம். விண்வெளி சார்ந்து பல விபத்துகள் நடந்தாலும், சிலவற்றை இங்கே குறிப்பிடுகின்றேன்.
ஜனவரி 27, 1967-ஆம் ஆண்டு அப்பல்லோ - 1 விண்கலச் சோதனையின் போது தீ விபத்து ஏற்பட்டதில், அமெரிக்கர்களான விர்ஜில் கஸ் கிரிஸோம், எட் வைட், ரோஜர் பி. சாஃபி ஆகியோர் மரணித்தனர். ஆனாலும் திட்டமிட்டபடி அப்பல்லோ 13 ஏப்ரல் மாதம் 11-ஆம் திகதி 1970-ஆம் ஆண்டு சந்திரனுக்குப் பயணமானது. ஆனால் ஏவப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆக்ஸிஜன் தொட்டி ஒன்று வெடித்ததால், சந்திரனில் தரையிறங்கும் திட்டம் கைவிடப்பட்டது.
ஆனால், உடனடியாகப் பூமிக்குத் திரும்ப முடியவில்லை, திட்டமிட்டபடி பூமிக்குத் திரும்ப, விண்கலம் சந்திரனைச் சுற்றி வர வேண்டியிருந்தது. ஜிம் லோவெல், பிரெட் ஹைஸ் மற்றும் ஜாக் ஸ்விகெர்ட் ஆகிய மூவரும் ஆற்றலைச் சேமிக்கக் கட்டளைத் தொகுதியில் இருந்து தற்காலிக உயிர்காக்கும் படகான சந்திரத் தொகுதிக்கு நகர்ந்தனர். அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு, குறைந்த வெப்பம் மற்றும் போதுமான உணவு மற்றும் நீர் விநியோகம் இல்லாமல் அவர்கள் சந்திரச் சுற்றுப்பாதையில் கிட்டத்தட்ட நான்கு நாட்கள் கழித்தனர். மிகக் கடினமான ஒரு பயணத்திற்குப் பிறகு, குழுவினர் உயிர் தப்பிப் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினர்.
28 ஜனவரி 1986-ஆம் ஆண்டு ஏவுதள பூஸ்டர் செயலிழப்பால் ஏவுதலின் போது வாகனச் சிதைவு காரணமாக விண்வெளி ஓடம் சலஞ்சர் பேரழிவைச் சந்தித்தது. அதில் அமெரிக்கர்களான கிரிகோரி ஜார்விஸ், கிறிஸ்டா மெக்அலிஃப், ரொனால்ட் மெக்நாயர், எலிசன் ஒனிசுகா, ஜூடித் ரெஸ்னிக், மைக்கேல் ஜே. ஸ்மித், டிக் ஸ்கோபி ஆகியோர் இதில் உயிர் இழந்தனர். 1 பெப்ரவரி 2003-ஆம் ஆண்டு விண்வெளி ஓடம் கொலம்பியா திரும்பிப் பூமியை நோக்கி வரும்போது, பேரழிவைச் சந்தித்தது. அதில் அமெரிக்கர்களான ரிக் டி. கணவர், வில்லியம் சி. மெக்கூல், மைக்கேல் பி. ஆண்டர்சன், டேவிட் எம். பிரவுன், கல்பனா சாவ்லா, லாரல் கிளார்க் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த இலன் ரமோன் ஆகியோர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவைத் தவிர வேறு எந்த ஒரு நாடும் இதுவரை சந்திரனில் மனிதரைத் தரை இறக்கவில்லை. விண்வெளி யுகத்தில் முன்னிலை வகித்த ரஷ்யா பொருளாதார நிலை காரணமாக சந்திரனை நோக்கிய பயணத்தில் தொடர்ந்து அக்கறை காட்டவில்லை. இதுவரை காலமும் சில தவிர்க்க முடியாத காரணங்களால், இது போன்ற சில குறைபாடுகள் இருந்ததால், சந்திரனுக்குச் செல்லும் பயணம் தடைப்பட்டிருந்தது. இத்தகைய குறைபாடுகளை நிவர்த்தி செய்து, மீண்டும் சந்திரனுக்குச் செல்வதற்கான புதிய வழிகளை நாசா நிறுவனம் நடைமுறைப்படுத்த இப்போது முன்வந்திருக்கின்றது.
2022-ஆம் ஆண்டில், நீண்ட காலத்தின் பின் அதாவது 53 வருடங்களின் பின் விண்வெளி நிறுவனம் ஆர்டெமிஸ் - 1 விண்கலத்தைச் சந்திரனை நோக்கி ஏவியது, இது தொடர்ந்து நிகழப்போகும் பயணங்களுக்கு அடித்தளம் அமைத்த ஒரு ஆளில்லாத விண்கலமாகும். இது நவம்பர் 16, 2022 அன்று, பூமியின் வளிமண்டலத்தின் வழியாக சந்திரனின் சுற்றுப்பாதைக்குச் சென்றது. இது பூமியின் குறைந்த ஈர்ப்புச் சக்திக்கு (LEO) அப்பால் ஈஸ்ட் மாதிரிகளை எடுத்துச் சென்ற ஒரு பணியாகும். கதிர்வீச்சு அளவுகள் மற்றும் உயிரினங்களின் விளைவைப் படிப்பதற்காகவே இது அனுப்பப்பட்டது. இந்தப் பயணத்தின் மூலம் எதிர்கால ஆர்டெமிஸ் பயணங்களில் விண்வெளி வீரர்கள் பறக்கும்போது பாதுகாப்பாக வைத்திருப்பது குறித்த முக்கிய நுண்ணறிவுகளை வழங்கும்.
2022-ஆம் ஆண்டில் ஆர்டெமிஸ் - 1 விண்வெளி வீரர்கள் இல்லாமல் சந்திரனைச் சுற்றி வெற்றிகரமாகப் பறந்தாலும், ஆர்டெமிஸ் - 2 பயணம் என்பது மனிதர்களுடன் விண்கலத்தில் பயணித்து 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் குறைந்த பூமி சுற்றுப்பாதையைத் தாண்டிச் செல்லும் முதல் பயணமாகும். இந்தப் பயணத்தின் போது, விண்வெளி வீரர்கள் சந்திரனுக்கு அப்பால் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணித்து, ஆழமான விண்வெளிக் கதிர்வீச்சை அனுபவிப்பார்கள், மேலும் உண்மையான விமான நிலைமைகளில் உயிர் ஆதரவு, வழிசெலுத்தல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளைச் சோதிப்பார்கள்.
இப்போது, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஆர்டெமிஸ் - 2 என்ற விண்கலம் சந்திரனுக்குச் சென்று திரும்புவதற்கான முதல் குழுவினருடன் கூடிய பயணமாக ஏவப்பட உள்ளது. 1972-ஆம் ஆண்டு நாசாவின் அப்பல்லோ திட்டம் முடிவடைந்ததிலிருந்து, மனிதர்களைச் சந்திரனை நோக்கி அழைத்துச் செல்லும் முதல் பயணமாக ஆர்டெமிஸ் - 2 இருக்கும். ஆர்டெமிஸ் - 2 சந்திரனுக்குப் போவதாக சில ஊடகங்கள் தலைப்புகள் போட்டாலும், சந்திரனில் யாரும் தரை இறங்கப் போவதில்லை. இது சந்திரனைச் சுற்றி வருவது மட்டுமல்ல, அதைக் கடந்து அதிக தூரத்திற்கும் சென்று வரப்போகிறது. இது இனி வருங்காலங்களில் சந்திரனில் தரை இறங்குவதற்குப் பரீட்சாத்தமான பயணமாக அமைய இருக்கின்றது. மார்ச் மாதம் ஆர்டெமிஸ் பயணம் திட்டமிட்டபடி நடந்தால், அதைப்பற்றித் தெரிந்து கொள்வோம்.
நன்றி
