வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த கலையாக காமன் கூத்து - 15
வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த கலையாக காமன் கூத்து - 15
- அருணாசலம் லெட்சுமணன்
காமன் பொட்டல் தற்போது சோபை இழந்ததாக காட்சிதரும். பந்தல்கள் சிதைவடைந்திருக்கும். பந்தல்களுக்கு போடப்பட்டிருந்த வாதுகள், ஓலைகள் வெயிலில் காய்ந்து, பனியில் நனைந்து விரைவாக சிதைவுகளின் அடையாளத்தை காட்டி நிற்கும். இயற்கை பொருட்களால் வடிவமைக்கப்பட்டிருந்த காமன் பொட்டல் முதல் நாள் மங்களத்தின் அடையாளமாகவே காட்சி தரும். இரண்டொரு நாள் செல்கையில் அவ்வளாகத்தின் வெளிப்படுத்துகை வேறு விதமான சிந்தனையை, கவனிப்பை ஏற்படுத்துவதாக அமையப்பெறும். இதுவரையில் இடம்பெற்ற கூத்து நடைமுறையில், இறுதியம்சத்தை எடுத்துரைக்கும் வகையில் ஒரு துன்பியல் அம்சத்தை வெளிப்படுத்தும் வகையிலேயே காட்சியளிப்பதை அவதானிக்கலாம். எதையோ இழந்த அம்சத்தை வெளிப்படுத்தும் அடையாளம் அவதானத்திற்குரியதாக காட்சி தருகின்றமையை காணலாம். காமன் கூத்தின் இறுதியங்கம் போர்களமாக அமையப்பெற்றமையால் அதன் சுவடுகள் அதன் வெளிப்பாடாய் அமைந்திருப்பதையும் காணலாம்.
இயற்கை வனப்புமிக்க சோடனைகள், பந்தல்கள், தோரணங்கள் உள்ளிட்ட அலங்காரங்கள் பகல் வேளைகளில் கண்களுக்கு குளிர்ச்சியைத் தருவதாக அமைகின்றன. இரவு வேளைகளில் ஏற்றப்பட்டுள்ள விளக்குகள், பந்தங்களின் துணையால் கண்களை கவர்ந்து இழுப்பதாக அமையப்பெற்றிருக்கும். மின்சாரம் எனும் சமாச்சாரம் தோட்டங்களுக்குள் நுழையாத காலகட்டங்களில் ஒளி முதல்களாக விளக்குகளும் பந்தங்களுமே நிலைக்கப்பெற்றிருந்தன. மலையக அரங்க முயற்சிகளுக்கு இப்பந்தங்களும் விளக்குகளும் பெரிதும் துணை நின்றுள்ளதை அறியலாம். மலையக மக்களின் வாழ்வியலோடு பந்தங்களும், விளக்குகளும் நிறையவே செல்வாக்குப் பெற்று வந்துள்ளன. இதன் வழியில் ‘பந்தம் பிடித்தல்’ ‘விளக்கு பிடித்தல்’ போன்ற சொல்லாடல்கள் வேறு அர்த்தங்களில் பிரயோகிக்கப்படுவதையும் அவதானிக்கலாம். ஆரம்பக் காலகட்டங்களில் இயற்கையின் வளங்களைக் கொண்டே சோடனைகள் அமையப்பெற்றிருந்தன. தோட்டக்காடுகளில் காணப்படும் கொடிகள், மரங்கள் மற்றும் இயற்கை தாவர அம்சங்களில் கிடைக்கப்பெறும் வளங்களைக் கொண்டே அலங்காரங்கள் அமையப்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ‘கேஸ் லைட்’ எனப்படும் பெட்ரோல் மெக்ஸ், டோச் லைட் ஆகியவற்றின் வரவும் இத்துறையின் விருத்தியின் பங்காளிகள் ஆகின. தோரணங்கள் இயற்கையின் ஊடுருவலுடன் அமையப்பெற்றிருந்த நிலையில் பொலித்தீன் பிரயோகத்தின் தொடர்ச்சி நிலை, குறித்த காலத்தின் பின்னர் ஆதிக்கம் செலுத்தி வருக்கின்றமை கவனத்திற்குரியதாகும். அவ்வாறே தோட்டத் தொழிற்சாலைகள் ஊடாக கோயில்களுக்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்பை பெற்று மின்குமிழ்களை பிரயோகிக்கும் லாவகம் தொடங்கப்பெறுகின்றன. அதன் பின்னர் மின்குமிழ்கள் ஊடாகவும் அலங்காரங்கள் முனைப்பை பெறுகின்றன. இவ்வாறான அலங்காரத்தோடு அமையப்பெற்றிருந்த காமன்கூத்து களம் சோபை இழந்ததை அடையாளப்படுத்தி நிற்கின்றமை கவனத்திற்குரியதாகும்.
மேற்குறித்த சோபை நிலை புத்துணர்ச்சியை பெறும் நாளாக மூன்றாவது நாள் அமையப்பெற்றிருக்கும். பந்தல்கள் அப்புறப்படுத்தப்பட்டிருக்கும. சோடனைகள், அலங்காரங்கள், தோரணங்கள் களையப்பட்டிருக்கும். கழிவுகள் முறையாக முகாமை செய்யப்பட்டிருக்கும். பொலித்தீன் பாவனை உள் நுழையாத வரை சுற்றாடல் பாதுகாப்பு நிலை நூறு வீதம் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும். பின்னரும் அலங்காரத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொலித்தீன்கள் அடுத்துவரும் வருட தேவைகளுக்காக பத்திரப்படுத்தப்படும் நடைமுறையும் கவனத்திற்குரியதாகும். அலங்கார நடைமுறைகளில் இயற்கை பொருட்களை உச்சமாகவும், உசிதமாகவும் பயன்படுத்தும் மலையக மக்களின் நுட்பம் மிகுந்த அவதானத்திற்குரியதாகும். தற்போது தோட்டம் புதுப்பொலிவை பெற்றிருக்கும். காமன் திண்ணை சானத்தால் மெழுகி ஒற்றை விளக்கு ஏற்றப்பட்டிருக்கும். விளக்குக்கு அருகில் முடிச்சிடப்பட்ட பொட்டலம் வைக்கப்பட்டிருப்பதையும் காணலாம். இப் பொட்டலத்தில் மதன் எரிந்ததன் அடையாளமான சாம்பல் வைக்கப்பட்டிருக்கும். மதன் எரிக்கப்பட்ட நிலையில் ரதியின் கோரிக்கையை மனதில் இருத்தி சிவனின் பணிப்பிற்கமைய அச்சாம்பலை ஒன்றிணைக்கும் பணியில் இணையும் பாத்திரமாகவே குண்டோதன் கொள்ளப்படுகிறான்.
காமன் கூத்திற்காக பந்தலிட்டு அலங்காரம செய்யும் நடைமுறையை போலவே வீடுகளில் திருமணம், பெண் பிள்ளைகள் பூப்பெய்தல் நிகழ்வின் கொண்டாட்டம் போன்ற மங்கல நிகழ்வுகளுக்கும் பந்தலிட்டு அலங்கரிக்கும் நடைமுறைகள் காணப்படுகின்றன. அது போலவே அம்மன் ஆலயங்களில் திருவிழா ஏற்பாடுகளிலும் பந்தலிட்டு அலங்கரிக்கும் நடைமுறைகள் கருத்திற்கொள்ளப்பட வேண்டியதாகும். காமன் கூத்து நிறைவுற்று மூன்றாம் நாளிலையே பந்தலை அப்புறப்படுத்தும் நடைமுறை முழுமை பெறும். அவ்வாறே வீடுகளில் நிகழும் மங்கள நிகழ்வுகளுக்காக போடப்பட்ட பந்தலை அப்புறப்படுத்தும் நடைமுறை ‘பந்தல் பிரித்தல்’ என அழைக்கப்படுகிறது. பந்தல் இடுவதற்கு நல்ல நேரம் பார்த்து உற்றார், உறவினர்கள், அயலவர்கள், ஊர் மக்கள் ஒன்றுகூடி பந்தலுக்கான முதற் தூண் நடப்படும் செயன்முறை ‘முகூர்த்தக்கால் ஊண்டுதல்’ என அழைக்கப்படுகிறது. தூண் ஒன்று தெரிவு செய்யப்பட்டு, அத்தூணில் திருநீறு, சந்தனம், குங்குமம் பூசப்படுவதுடன் தூணின் முனியில் மாங்கொப்பு, பொல்பொலா, மஞ்சல் தூர் என்பன இணைத்து பட்டுத்துணியால் இணைத்து கட்டப்படும். இயற்கை நேசிப்பின் அடையாளமாகவே இப்பொருட்கள் அமைகின்றன. சில வேளைகளில் முதற் தூணில் பட்டை சீவப்பட்டிருக்கும். குறித்த தூணை ஊன்றுவதற்கு குழி தயார் செய்யப்பட்டுள்ள நிலையில் அக்குழியில் சில்லறை காசுகள் இடப்பட்டு, பால் ஊற்றப்பட்டும். தீபராதணையோடு ஒற்றைப்பட ஏழு, ஒன்பது, பதினொரு பேர் என்ற வகையில் ஒன்றிணைந்து குழியில் அத்தூணை ஊன்றுவார்கள். அதன் பின்னர் பங்கேற்றவர்களுக்கு இனிப்பு வழங்கப்படும். சிறிது காலங்களுக்கு முன்னர் காப்பரிசி வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. நீரில் ஊறவைத்த அரிசியில் சீனி, தேங்காய்ப்பூ ஆகியன கலந்து தயார் செய்தலை காப்பு அரிசி என்போம். முகூர்த்தக்கால் தூண்டுதலின் பின்னர் பந்தல் போடுதல் செயற்பாடு குறித்த அவதானம் மிகுந்த குறிப்பிடத்தக்கதாகும். அச்செயற்பாட்டின் பின்னர் பந்தல் போடுதல் செயற்பாடுகள் மும்முரமாக இடம்பெறும். இப்பணியில் சமூகத்தவர்களின் ஒன்றிணைந்த செயற்பாடுகள் குறித்த அவதானம் கவனத்திற்குரியதாகின்றது. இப்பணியை நிறைவு செய்யும் பொறுப்பில் தொண்டர் குழு மற்றும் வாலிப சங்கங்களுக்கு பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ள நடைமுறையும் குறிப்பிடத்தக்கதாகும். இதன் அவதானத்தில் திருமண மற்றும் பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ்களில் ‘தங்கள் நல்வரவை விரும்பும் தோட்டக் கமிட்டி தலைவர்கள் முதல், தொண்டர்கள் மற்றும் வாலிபர்கள் மாதர் சங்கம் வரை’ என குறிப்பிடப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. அவ்வகையில் சமூகத்தின் ஒன்றுப்பட்ட தன்மை கவனத்தை பெறுகின்றன. அவ்வாறே காமன் ஊன்றுதல் செயற்பாடும் இடம்பெற்ற நிலையில் மதன், ரதி திருமணம் நடத்தும் தினத்திற்கு முன்னைய நாளில் பந்தலிடும் நடைமுறையும் சில தோட்டங்களில் காணப்படுகிறன. இவ்வாறு மதன், ரதி திருமணத்தை முன்னிறுத்தி பந்தல் அமைக்கும் வேளையில் பின்பற்றப்படும் நடைமுறையே இச்சமூகத்தவர்களாலும் பின்பற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
‘பந்தல் போடுதல்’ அல்லது ‘பந்தல் அமைத்தல்’ செயற்பாட்டைப் போலவே ‘பந்தல் பிரித்தல்’ செயற்பாடும் முக்கியத்துவம் பெறுகிறது. காமன் கூத்திற்காக போடப்பட்ட பந்தலை பிரிப்பதற்காக பிரயோகிக்கப்படும் நடைமுறையையே வீட்டுத் தேவைகளுக்காக போடப்பட்ட பந்தல்களை பிரிக்கும் போதும் கைக்கொள்ளப்படுகிறது. அவ்வாறே தோட்டங்களில் ‘பந்தல் அமைத்தல்’ செயற்பாட்டிற்காக தொண்டர்கள், வாலிபர்களுக்கு அழைப்பு விடுக்கும் நடைமுறையும் அவதானத்திற்குரியதாகும். திருமணம், ருதுசாந்தி தேவைகளுக்காக அழைப்பு விடுக்கும் செயற்பாடு ‘பாக்கு வைத்தல்’ என அழைக்கப்படுகிறது. பாக்கு வைத்தல் செயற்பாட்டை தொடங்குவதற்கு முன்னதாக ‘பாக்கு படைத்தல்’ செயற்பாடு இடம்பெறுவது கட்டாய நிகழ்வாகவே அமைகிறது. தோட்டங்களில் ‘பாக்கு படைத்தல்’ செயற்பாட்டின் போது குறித்த வீட்டுடன் தொடர்புபட்ட முக்கியஸ்த்தர்கள் கலந்துக்கொள்வார்கள். அவ்வாறே தோட்டப் பிரிவில் உள்ள கோயில் கமிட்டி தலைவர், தோட்டக் கமிட்டி தலைவர், தொண்டர் கெப்டன், வாலிப சங்க தலைவர், மாதர் சங்க தலைவி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்படும். பாக்கு படைத்தல் நிகழ்வில் தாய்மாமனாருக்கு பாக்கு வைக்கப்படுவதைப் போலவே மேற்குறித்த தோட்ட கட்டமைப்பின் முக்கியஸ்த்தர்களுக்கு பாக்கு வைத்தல் செயற்பாடு இடம்பெறும்.
பாக்கினை பெற்றுக்கொண்ட தொண்டர் கெப்டன், வாலிபர் சங்கத் தலைவர் தங்கள் அமைப்பின் அங்கத்தவர்களுக்கு கூறி விடுவார்கள். அதன் பின்னர் குறித்த தேவை இடம்பெறும் வீட்டிலுள்ள நிகழ்வோடு தொடர்புபட்ட வேலைகளை இணைந்து உதவுவார்கள். விறகு வெட்டுதல், தோட்டத்திலுள்ள வீடுகள் தோறும் பாக்கு வைத்து அழைப்பை விடுத்தல், பந்தல் அமைத்தல், பந்தல் பிரித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள். அவ்வாறே நிகழ்வுக்கு வருகை தருபவர்களை உபசரித்தல், பந்தி வைத்தல் செயற்பாடுகளிலும் ஈடுபடுவார்கள். தற்போது தொழிற்சங்க பிளவுகள் போன்ற இன்னோரன்ன காரணங்களால் இந்நிலைமை குறைவடைந்துள்ள போதிலும் ஒன்றுபட்டு உதவுகின்ற தன்மை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். நிகழ்வு வீட்டிற்கு உறவுக்காரர்களுக்கு அழைப்பை விடுக்கும் போது பொதுவாக தபாலில் இடுவதன் ஊடாகவே அழைப்பு விடுக்கப்படும். குறித்த தேவையொன்றிற்காக குறிப்பிட்ட குடும்பத்தவர்களுக்கு சிரமத்தை கொடுக்காமல் உதவுகின்ற போக்கிலேயே உறவுகளும் ஊரவர்களும் செயற்பட்டதை அறிய முடிகிறது. சமகாலத்தில் வீட்டிற்கு வந்து அழைப்பு விடுக்காவிட்டால் அதனை அழைப்பாகவே கருதாத நிலை காணப்பட்டது. அண்மைக் காலங்களில் வட்சப் தொடர்பு ஊடாக அழைப்பிதழ்களை பரிமாறும் பொறிமுறையும் கவனத்தை பெறுகின்றன.
தோட்டமொன்றில் வீடு அல்லது பொது நிகழ்வுகளில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கும் உதவும், உறுதுணை புரியும் மனித வளங்கள் குறித்த அவதானத்தில் பூசாரி, சோதிடர்கள், சிகையலங்கரிப்பாளர், சலவையாளர், ‘வாசல்கூட்டி’ எனப்படும் வாசல் சுத்தம் செய்யும் நபர்களின் வகிபங்குகளும் கவனத்தை பெறுகின்றன. இதுதவிர பெருந்தோட்டப் பொறிமுறையில் நிர்வாகம் சார், சுகாதாரம் சார், பராமரிப்பு சார் ஆளனியினர் பற்றிய அவதானம் வேறு வகையில் நோக்கத்தக்கதாக அமைகிறது. பூசாரி எனப்படுவோர் சமயம் சார் நம்பிக்கையின் வெளிப்பாடுகளாக திகழ்கிறார்கள். அவ்வாறே சோதிடர் பிறப்பு, இறப்பு, வாழ்க்கை தொடர்பான கணிப்புகளை வலியுறுத்துபவர்களாக திகழ்கிறார்கள். சிகையலங்கரிப்பாளர், சலவையாளர், என்போர் சமய வழிபாட்டுடனும் வாழ்வியல் செயற்பாடுகளின் பங்கேற்பாளர்களாகவும் செயற்படுகிறார்கள். ‘வாசல்கூட்டி’ என அழைக்கப்படும் துப்பரவு தொழிலாளி முழுத் தோட்ட அமைவின் கழிவுகளை முகாமை செய்யும் பொறுப்புடன் உதவும் நபராக சிறப்பு பெறுகிறார். லயன் முறையில் வாழ்விடங்கள் காணப்பட்ட போதிலும் கழிவகற்றும் கால்வாய்கள் முறையாக அமைக்கப்பட்டிருந்தமையும் பராமரிக்கப்பட்டமையும் கவனத்திற்குரியது. இவ்கழிவகற்றும் முறையை கவனிக்காமல் விட்டதன் விளைவினாலேயே தோட்ட லயக் குடியிருப்புகள் சரிவுக்குள்ளாகி வருகின்றன. மாறாக தற்போது தோட்டங்களில் அமைக்கப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டங்கள் முறையான பாதை ஏற்பாடுகளையும் கழிவகற்றும் முறையையும் கொண்டே அமைக்கப்படுகின்றன. கடந்த காலங்களில் பெற்ற அனுபவங்களைக் கொண்டு பார்க்க வேண்டியது அவசியமாகும். அவ்வகையில் பார்க்கின்ற போது அவ்வாறு அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் விரைவில் சரிவுக்குள்ளாகும் என்பது கவனத்திற்குரியதாகும். இவ்விடயங்களை கருத்திற்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து யோசிக்க வேண்டியது அவசியமாகும். இனி வருகின்ற வீடமைப்புத் திட்டங்களாவது முறையான பாதை, சீரான கழிவகற்றும் முறைகளை கருத்திற்கொண்டு அமைக்கப் பெறுதல் அவசியமாகும்.
காமன் கூத்து ஏற்பாட்டாளர்களினாலும் மதன் ரதி திருமணத்திற்கு பாக்கு வைக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. அதன் தொடர்ச்சி நிலையில் மலையக மக்களின் வாழ்வியலோடு பாக்கு வைக்கும் நடைமுறை மிகுந்த செல்வாக்கு நிலை பெறுகிறது. கோயில் திருவிழா போன்ற நிகழ்வுகளுக்கு வாத்திய கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்தல், ஒலிபெருக்கி பொருத்துனர்களுக்கு அழைப்பு விடுத்தல், வாகன சேவையினை வழங்குனர்களுக்கு அழைப்பு விடுத்தல், தோட்டத்துறை மற்றும் தோட்ட நிர்வாகத்து உத்தியோகத்தர்களுக்கு அழைப்பு விடுத்தல், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிதிகளுக்கு அழைப்பு விடுத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு பாக்கு வைத்தல் செயன்முறையே பிரயோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அவ்வாறே வீடுகளில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கான ஒலியமைப்பு, சமையற்காரர், வாத்திய கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கும் செயற்பாடுகளுக்கும் பாக்கு வைத்தல் செயற்பாடு இன்றிமையாததாகும். குறித்த நபரின் அல்லது அமைப்பின் பாக்கை எடுத்துவிட்டால் ஏற்கனவே பேசிய தொகையை விட அதிகமான தொகையில் புதிய தொகையில் அழைப்பு வந்தாலும் அதனை ஏற்பதில்லை. பாக்கு பெற்றுக்கொள்ளுதல் என்பது கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைக்கு ஒப்பானதாகவே அணுகப்பட்டமை கனத்திற்குரியதாகும். மூன்று வெற்றிலையின் மேல் பாக்குத்துண்டுகள், சிறிய பூக்கள் இணைத்து, அதனை வழங்கி, நிகழ்வு தொடர்பான விடயத்தை கூறி அழைப்பை விடுப்பதையே ‘பாக்குவைத்தல்’ என சுருங்கக் கூறலாம். தாய்மாமனாருக்கு வைக்கும் போது பணத்தையும் இணைத்து வைப்பது வழமை. அதனை பணம்பாக்கு என அழைப்பதுண்டு.
முகூர்த்தக்கால் நடப்பட்டு, பந்தல் இடப்பட்ட நாளில் இருந்து ஒற்றைப்பட ஐந்து அல்லது ஏழு நாட்களில் பந்தலை பிரிக்கும் செயற்பாடுகள் இடம்பெறும். காமன்கூத்தில் கையாளப்படுகின்ற நடைமுறையின் தொடக்கத்துடனேயே இச்செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றமையை அவதானிக்கலாம். மாறாக அம்மன் கோயில்களில் திருவிழா உற்சவங்கள் இடம்பெற்று கரகம் குடிவிடும் நாளில் இருந்து எட்டு நாட்கள் கோயில் கதவுகள் அடைக்கப்படுவது கட்டாய செயற்பாடாக கொள்ளப்பட்டது. கோயில் கதவு அடைக்கப்பட்டு எட்டாம் நாள் கிரியைகள் நிறைவடைந்ததுமே ஆலயம் திறக்கப்படும். அதன் பின்னரே ஆலய வளாகம் தூய்மையாக்கும் செயற்பாடுகள் இடம்பெறும். அண்மைக்காலங்களாக ஆகம முறையான வழிபாடுகள் ஆலயங்களில் உட்புகுத்தப்பட்டு இவ்அணுகுமுறைகளை தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்குறித்த அணுகுமுறைகளுக்கு அமைய காமன் பொட்டல் உள்ளிட்ட தோட்ட வளாகம் முழுதும் தூய்மையாக்கப்பட்டிருக்கும். தோட்டத்தை பார்ப்பதற்கு புத்துணர்சச்சியை ஏற்படுத்துவதாக அமையப்பெற்றிருக்கும். மாலை வேளையில் மீளவும் காமன் பொட்டல் சம்பிரதாய செயற்பாடுகளை செயற்படுத்துவதற்கு ஏற்றவாறான களச்சூழல் வாய்க்கப்பெற்றிருக்கும். ரதி, சிவன், விநாயகர், முருகன், நாரதர், இந்திரன், ஈஸ்வரி போன்ற பாத்திரங்களின் பிரசன்னத்தை கொண்டதாக அமைந்திருக்கும். தப்பிசைக் கலைஞர்கள் தப்புகளுடன் சபையின் கவனத்தை ஈர்த்திருப்பார்கள். சிறுவர்களினதும், வேடதாரிகளினதும் ஆர்வத்தை பொருத்தவாறு பாத்திரங்களின் எண்ணிக்கை அமைந்திருக்கும். குறித்த தோட்டப் பிரிவில் பொறுப்பாக இருக்கும் காமன் மாஸ்ட்டர், உதவி காமன் வாத்தியார்கள் உள்ளிட்டவர்கள் திரண்டிருப்பார்கள். இக் களத்தில் அயல் தோட்டங்களில் இருந்து அழைக்கப்பட்டிருந்த காமன் வாத்தியார்களும் இன்றும் அதிதிகளாக அழைக்கப்பட்டிருப்பார்கள். ஊர் மக்களும் திரண்டிருப்பார்கள். காமன் பொட்டலுக்கு அருகில் உள்ள நீர் நிலையில் தீர்த்தம் எடுக்கும் செயற்பாட்டிற்கு ஊர்வலமாக செல்வதற்கு தயாராக இருப்பார்கள். இந்நிலையில் மதன் வேடம் தரித்தவரின் உருவத்தை அடையாளப்படுத்தும் வகையில் காமன் திடலில் உருவம் ஒன்று நித்திரை கொள்வதுபோல் இருத்தப்பட்டிருக்கும். அருகில் உரல் வைக்கப்பட்டிருக்கும். பின்னர் தீர்த்தம் எடுத்து வந்தவுடன் அவ்இடத்தில் மதன் வேடம் தரித்தவர் இருத்தப்படுவார்.
தீர்த்தம் எடுத்துவரும் ஊர்வலம் தொடங்கப்பெறும். தப்பிசை முழுங்க ஆரவாரத்துடன் ஆற்றங்கரை நோக்கி ஊர்வலம் நகர்த்தப்படும். ஆற்றங்கரையில் குடம் ஒன்றில் நீர் எடுத்த நிலையில் மீளவும் காமன் பொட்டல் நோக்கி ஊர்வலம் வருகை தருவார்கள். இவ்வாறே ஒவ்வொரு தோட்டங்களின் அம்மன் திருவிழாக்களின் போதும் கரகம் பாலிப்பதற்கு செல்லும் வேளையில் வரிசையாக செல்வதும், கரகம் பாலித்த நிலையில் மீளவும் வரிசையாக ஊர் மக்கள் தப்பிசையோடு வருகைத் தருகின்ற நிலையும் குறிப்பிடத்தக்கதாகும். அவ்வாறே மரண சம்பவம் நிகழ்ந்ததன் பின்னர் இறுதி சடங்கின் போது நீர்மாலை எடுத்துவரும் சந்தர்ப்பத்தின் போதும் இவ்வாறு நீர் நிலையில் இருந்து குடங்களில் நீர் எடுத்துவரும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. நீரோடு தொடர்புபடுகின்ற கிரியைகளுக்காக ஒவ்வொரு தோட்டங்களிலும் நீர்நிலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவ்வாறே மரணத்தின் பின்னர் நிகழும் கருமக்காரிய நிகழ்வுகளை மேற்கொள்ளவும் குறித்தவொரு நீர்நிலை ஒதுக்கப்பட்டிருக்கும். ஊரின் தொடக்கத்தில் ஓடை அல்லது ஆறு தொடக்கம் எடுக்கும் இடம் கரகம் பாலிப்பதற்கும், ஊர் நிறைவடையும் எல்லையில் கரகம் குடிவிடும் செயற்பாடும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. தனித்தனியே நீர்நிலைகளை ஒவ்வொரு செயற்பாடுகளுக்கும் வெவ்வேறாக நீர்நிலைகளை பயன்படுத்தும் வகையில் தாராளமாக நீர்நிலைகள் காணப்படுகின்றமையும் சிறப்பம்சமாகும். இவ்வாறு அமைந்த நீர்நிலைகளை அன்றாடத் தேவைகளுக்காக முறையாக முகாமை செய்யும் முறைமையும் அவதானத்திற்குரியதாகும். தப்பிசை முழங்க ஆட்டம் பாட்டங்களுடன் காமன் பொட்டலுக்குள் நீர் எடுத்துவரும் நிகழ்வு நிறைவடையும். பல்வேறு வாத பிரதிவாதங்கள் நிலவிய காமன்பொட்டல் தங்போது புரிந்துணர்வு களமாக அமைதிபெறும். வாத பிரதிவாதங்கள் எனும்போது எரிந்தக்கட்சி, எரியாதக்கட்சி விவாதங்கள் குறித்த பார்வை அவதானத்தை பெறுகின்றது. அவ்விடயம் தொடர்பான விரிவான பார்வைகளை அடுத்துவரும் அங்கத்தில் பார்க்கலாம்.
மதனுக்கு உயிரெழுப்பும் நிகழ்வோடு உரல் தொடர்பு படுகிறது. உரல், உலக்கை, சுளகு,கத்தி போன்ற அன்றாடம் பாவனைக்குரிய பொருட்கள் மக்களின் கிரியைகளோடு நிறையவே தொடர்புபடுகின்றன. ஒருவர் மரணமடைந்து விட்டால் வெற்றுடலை காட்சிக்காக வைத்திருக்கும் அருகில் உரலை மறுபுரம் திருப்பி வைத்து அதன் மேலேயே விளக்கு உள்ளிட்ட நிறைநாளியை வைப்பதுண்டு. அவ்வாறே இறுதி கிரியையை நிறைவடைந்து திரும்புகையில் வீட்டின் வாசல்படிக்கு குறுக்காக உரல் இடப்பட்டிருக்கும். அருகில் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தில் இருந்து தண்ணீரை எடுத்து கால்களை கழுவி, உரலை தாண்டிய நிலையிலையே வீட்டினுள் பிரவேசம் செய்வதும் கட்டாய கிரியையாகக் கொள்ளப்படுகிறது. காமன் கூத்தின் வலியுறுத்தலுடனேயே இவ்வாறான பிரயோகம் இம்மக்களாலும் கைக்கொள்ளப்படுகின்றமையை அறியலாம்.
ரதியின் பல்வேறு வாதங்களை செவிமடுத்த நிலையில் அவ்வாதங்களுக்கு விடையளிக்கும் களமாக இக்களம் முக்கியத்துவம் பெறுகிறது. ரதியின் நிலையை மீளவும் எடுத்துரைக்கும் பாடல்கள் களத்தில் இசைக்கப்படும். அவ்வாறு இசைக்கப்படும் பாடல்கள் ரதி சார்பான குரலாகவும், ரதியின் குரலாகவும் அமைகின்றமையை அவதானிக்கலாம். காமன் கூத்தில் வருகின்ற பாடல்களில் ‘பந்தல்’ பற்றி சித்தரிக்கும் பல பாடல்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக இப்பாடலிலும் பந்தல் தொடர்பான சித்தரிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அந்த கைலாசம் முத்தியிலே ரதி கதரியே போகையலே
அய்யோ பந்தலது அந்த ஆனி பெஞ்சலது
ஆனி பென்னி பந்தலதில் மானிக்க பாய்விரித்து
அகில மானிக்க பாய் விரித்து அரசானி கால் நிருத்தி
அந்த அக்கினியே சாச்சி அவிழ்திட்ட மாங்கல்யம்
அளித்திட்ட மாங்கலியம் செல்லிருந்து வாழ.
என் தகப்பனே...
தையல் நதி மன்னவனை மெய்யாக எரித்தீர்களா
தாந்தர காமத்திலே வாழும் பிரையதிலே
தராதர வாழ்விழந்து கனவனை நானிழந்து
தரதனில் நானிருக்க உனக்கு சம்மதமோ
தந்தை தாயா பரனே மடிப்பிச்சை அருள்புரிவாய்
தயங்காமல் வாருமையா மதன் உருவை தாருமையா
என மன்றாடுகிறாள். காமன் பொட்டலில் உரலின் மேல் சிவன் அமர்ந்திருப்பதையும் அவதானிக்கலாம். அருகில் தற்சமயம் பார்வதியின் பிரசன்னம் இடம்பெற்றிருக்கும். தாயான பார்வதியை பார்த்த நிலையில் ரதியானவள்,
‘தாயென்று நானிருந்தேன் யென்தாயே ஈஸ்பரியே தயாநிதியடி
மாதாவென்றெண்னினேனே மாபாவிசண்டாளிமதிகேடி யாநீ
யென் பெற்றவளென்றிருந்தேன் பிழைவந்து நேர்ந்ததடி
உலகத்து பெண்களுக்னு உன்னைப்போலே தாயுமில்லை
பழிகாரி உன் முகத்தை பார்க்கெனக்கு நீதியுண்டோ
யென் புருசனைக்கொன்றவள் நீ என்னையும் எரித்துவிடு
இருவரையும் கொன்று விட்டு இருங்களடி நீ சுகமாய்’
என ஏசுகிறாள். ரதியின் வார்த்தைகளை கேட்ட நிலையில் ரதியின் அருகே வந்து ரதியானவளை ஆரத்தழுவி உனக்கொன்றும் குறை வராது குழந்தை நாயகியே! நீ ஆங்காரத்தில் அழுதால் உன் கணவர் வருவாரோ! கோபத்தினால் என் பெண் மயிலே கோவென்று அழுகாதே! புலம்புவதால் உன் புருசன் வரப்போவதுமில்லை. ஆதி சிவனிடத்தில் நீ அபயமிட்டு அழுவதால் மாத்திரமே தீர்வு உண்டாகும். ஆதி சிவனிடத்தில் அடக்கமாக போய் நின்றால், உன் குறையை அறிந்து அதற்கு ஏற்ற தீர்வை பெற்றுத்தருவார். உன் நிலையை நானும் எடுத்துரைப்பேன். கலங்காதே என் பெண்மணியே! என ஆறுதல்படுத்துவதையும் காணலாம்.
களத்திற்கு தேவர்கள் அனைவரும் வருகைத்தருவதாகவே கதையின் சித்தரிப்பு அமையப்பெறுகிறது. இக்களத்தில் தேவர் சபையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்திரனின் பிரசன்னம் அமையப்பெறும். தேவர்சபையின் சார்பில் ரதிக்கு ஆதரவான குரல் சிவனின் கவனத்தை ஈர்ப்பதாக அமையப்பெறும். மான் உரியை போர்த்திய மகாதேவனே உன்னை வணங்குகிறோம். காளையின் உதவியோடு வான் வீதியில் உலாவரும் கடவுளரே உன்னிடத்தில் நாம் தஞ்சமைய்யா. மாட்டின் மேல் ஏறிவரும் மகாதேவரே, உன்னை மனதார வணங்குகிறோம். எமனையே உதைத்த ஈஸ்பரனே உன்னில் தஞ்சம் புகுந்தோம். உம்மைவிட வலிமை பெறறவர்கள் உலகத்தில் யார் இருக்கிறார்கள். உன் மீது இவ்வளவு மரியாதையையும் அன்பையும் வைத்துள்ளோம். ஆகையினால் எமது கருத்தினையும் சற்று அவதானிக்க வேண்டுகிறோம், என காமனின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் முனைப்பையும் அறியலாம்.
காமனின் செயல் இடைநிறுத்தப்பட்டால் காணபதற்கே உலகம் இல்லாமல் போகும். மன்மதனின் அணுக்கிரகம் இல்லாமல் போனால் மனிதகுலம் விருத்தியடைய போவதில்லை. உலகில் உயிர்களின் உற்பத்தி பொறிமுறையை பெருக்கி வைக்கும் பேறு பெற்றவனின் இழப்பை இவ் உலகு தாங்கிக்கொள்ளாது. சின்னஞ்சிறு பெண் ரதியினால் நீங்கள் தூசிக்கப்படுவதை தேவர்குலம் விரும்பவில்லை. ‘எந்தன் புருசனை எரித்த ஈஸ்பரனே! கொஞ்சி வாழ வேண்டிய வயதில் என்னை கட்டியவரை எரித்த பாவியரே! பிள்ளைகள் ஏதும் பெற்றேனா, எனக்கு வயதா சென்று விட்டது. இளம் வயதில் விதவைக் கோலத்தோடு என்னை மாற்றினாயே! பிள்ளைபேறு பெற வேண்டிய நேரத்தில் கணவனை பறிகொடுத்தேன். பாலூட்ட வேண்டியவள் என் புருசனை பறிகொடுத்து நிற்கிறேன்.’ என ஊர்முழுதும் உங்கள் நாமத்தை சபித்துக்கொண்டிருக்கும் ரதியானவளின் பாதிப்பு நிலையை மாற்றி அவளுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என மன்றாடுகின்றோம். இவ்வாறு தேவர்சபையின் வேண்டுதலும் கவனத்தைப் பெறுகிறது.
உலக உண்மையை தன்னிலையில் அறிந்த நிலையிலும் பார்வதி, தேவர்கள், ரதியானவள் ஆகியோரின் கோரிக்கைகளை செவிமடுத்த நிலையில் சிவனின் தீர்க்கமான முடிவுக்கான களமாக இக்களம் அமைகிறது. கதையோட்டத்தின் படி தனது தரப்பு வாதத்தை நியாயப்படுத்தும் வகையிலேயே காரணங்கள் முன்மொழியப்படுகின்றன. இவ்வாதத்தை எடுத்துரைக்கும் வகையில் காமன் வாத்தியாரால் பின்வருமாறு பாடல் இசைக்கப்படும்.
‘ஆயன் குலத்தில் அழிந்தவர்கள் வந்ததுண்டோ
திருமால் குலத்தில் செத்தவர்கள் வந்ததுண்டோ
இப்போயெழுப்புகிறேன் யென் மகளே நீ கேளு
செத்தவர்கள் வந்தாலோ சிரிப்பார்கள் பாருலகமதில்
மாண்டவர்கள் வந்தாலே வையகமும் தாங்காதே
சாம்பலாய் போனவனும் தான் பிழைத்தானென்பார்கள்
யென்மேலே குற்றமில்லை யென்பெருமால் செய்த குற்றம்’
என சிவனின் குரல் அனைவரையும் தெளிவுறுத்துவதுண்டு.
என் தகப்பனே எது எவ்வாறாக இருப்பினும் என் துணைவனை எழுப்பித்தரல் வேண்டும். சீராளனை கொன்று திருப்பி உயிரளித்த கதையெல்லாம் மறந்து விட்டீரோ? பிள்ளையை கறியாக சமைத்த போது அதை உண்டு மகிழ்ந்து பின்னர் உயிர்ப்பித்தீரே? என்றவாரெல்லாம் எடுத்துரைக்கிறாள். இப்படித்தான் நடக்க வேண்டும் என்பதை திட்டமிட்டிருந்த சிவன் குண்டோதரனால் இணைக்கப்பட்ட சாம்பலில் தண்ணீர் தெளித்து தன் கையிலுள்ள பொற்பிரம்பினால் மூன்று முறை தட்டிய நிலையில் மதன் ரதியானவளுக்கு மட்டுமே காட்சித்தரும் வகையில் அரூபியாக உயிர் பெறுகிறான். இச் சம்பவத்தை அடையாளப்படுத்தும் வகையிலேயே காமன் பொட்டலில் மதனுக்கு உயிரெழுப்பும் காட்சி அடையாளப்படுத்தப்படுகிறது. கதையின் உண்மை நிலை இவ்வாறு இருந்த போதிலும் உரையாடல் அலகுகளை தவிர்த்த நிலையில் கிரியைகளுடன் மாத்திரம் மட்டுப்படுத்திக்கொண்டு நிகழ்வு இடம்பெறுகின்றது. உலகியல் வாழ்க்கையில் காமம் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அதனை மனித குலம் பண்பாடு சார்ந்து அணுக வேண்டும் என்ற உண்மையையும் போதிக்கும் வகையில் மன்மதன் கதை சிறப்பு பெறுகிறது. அதனாலேயே மன்மதன் கதை, உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதன் முக்கியத்துவத்தை மென்மேலும் உலகம் அறியும் பொருட்டே ஒவ்வொரு வருடமும் காமனை உண்டுபண்ணி பண்டிகையாக கொண்டாடும் மரபு தொன்று தொட்டு பின்பற்றப்படுகின்றது.
காமன் கூத்து பொட்டலில் மதன் வேடம் தரித்தவர் ஒப்பனையும் படுக்க வைக்கப்பட்டிருப்பார். சிவன் வேடம் தரித்தவர் உரலின் மேல் அமர்ந்த நிலையில் அவர்களை சூழ ஏனைய வேடதாரிகளும் நின்று கொண்டிருப்பார்கள். காமன் மாஸ்ட்டர், தப்பிசைக் கலைஞர்கள், ஊர்மக்கள் சூழவுள்ள களத்தில் ஆற்றில் இருந்து எடுத்து வந்த நீரை மதன் வேடமிட்டவர் மீது சிவன் வேடமிட்டவர் தெளிப்பார். அதன் பின்னர் தனது கரத்திலுள்ள பிரம்பாள் சிவன் வேடமிட்டவர் தட்டுகின்ற நிலையில் மதன் வேடமிட்டவர், தனது உடலை அசைந்து எழும்புவார். இக்காட்சியை பார்த்த நிலையில் ஊர் மக்கள் ஆரவாரத்துடன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். தப்பிசை ஓங்கி ஒலிக்க தொடங்கும். காமன் வாத்தியார் பாடலிசைக்க தொடங்குவார். ரதி, மதன் வேடமிட்டவர்கள் பாடல், தப்பிசைக்கு ஏற்றவாறு ஆடத் தொடங்குவார்கள்.
செந்தாமரை முகமே அடி
கந்தப் பரிமளமே
சேவின் விழியாளே
நீலமேகன் மருமகளே...
என பாடலிசைக்க அதற்கேற்றவாறு தப்பிசை முழங்க மதன் ரதி ஆகியோரின் ஆட்டமும் பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இது இவ் வருடத்தில் இக் களம் காணும் மதன் ரதியின் இறுதி ஆட்டமாக அமையப்பெறும். காமன் ஊண்டுதல் செயற்பாடு விநாயகரின் பாடலுடன் தொடங்கப்பெற்றதை அறிவோம். அவ்வாறே விநாயகருக்கு நன்றி தெரிவிக்கும் பாடலுடன் நிறைவெய்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் காமன்கூத்து களம், வேறு சில கற்பிதங்களை போதிக்கும் களமாக மாறுகின்றமையை அவதானிக்கலாம். ஊர்மக்கள் காமன் திடலை தரிசித்து காமன் மாஸ்ட்டர்களிடம் ஆசீர்வாதம் பெற்று திருநீறு பூசிக்கொளவதை அவதானிக்கலாம். அவ்வகையில் மூத்தவர்களை பக்தியோடும் மரியாதையுடனும் அணுகுகின்ற கற்பிதத்தையும் போதிக்கும் களமாகவும் அமைகிறது. மூத்த கலைஞர்களை மதிக்க வேண்டிய கற்பிதததை வலியுறுத்தும் களம் என்ற வகையில் குருபக்தி குறித்த அவதானம் போதிக்கப்படுகிறது. அவ்வாறே பிற தோட்டங்களில் இருந்து வருகைத்தந்து உதவி புரிந்த காமன் மாஸ்ட்டர்கள், இத் தோட்டத்து காமன் மாஸ்ட்டர், உதவி வாத்தியார்களுக்கு தட்சணை வழங்கும் செயற்பாடுகளும் இடம்பெறும். இது நன்றியுணர்வையும் துறைசார்ந்த பக்தியுணர்வையும் வலியுறுத்துவதாக அமையப்பெறும். தொடர்ந்து காமன் மாஸ்ட்டர்களுக்கு ஆடைகள் அணிவித்து, குறிப்பாக வேட்டி அணிவித்து கௌரவிக்கும் செயற்பாடுகளும் இடம்பெறும். இது ஏனைய தோட்ட பிரிவுகளுக்கிடையிலான நேச உறவுகளை வலிமைப்படுத்தும் கைங்கரியமாகவும் அமைகின்றமை அவதானத்திற்குரியதாகும்.
தொடர்ந்து தோட்டத்திலுள்ள முக்கியஸ்த்தர்களுக்கு காலாஞ்சி வழங்கள் செயன்முறையோடு கைசோறு வழங்கும் செயற்பாடு இடம்பெறும். ஏற்கனவே தயார் செய்யப்பட்டிருந்த உணவு பொட்டலம் காமன் திண்ணைக்கு அருகில் வைக்கப்படும். காமன் மாஸ்ட்டரினால் பொட்டலம் அவிழ்க்கப்பட்டு அவரின் கரங்களினாலேயே நிகழ்வில் கலந்துக்கொண்ட அத்தனை பேருக்கும் கைசோறு வழங்கப்படும். வரிசைக்கிரமத்தில் மிகுந்த ஆர்வத்துடன் கைப்பிடிச் சோறை வாங்கி உண்டு மகிழ்வார்கள். இவ்வாறனதொரு விருந்துபசாரம் எவ்வகையான சந்தோசத்திற்குரியது என்பதை அதில் பங்கெடுத்து உணர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். வீடுகளில் பொதுவாக தீபாவளி, ஆடி பதினெட்டு, சித்திரை வருடப்பிறப்பு, விரதங்கள், கருமாதி, திவசம் ஆகிய நிகழ்வுகளுக்கு படையலிட்டு சாம்பிராணி இடப்பட்டதன் பின்னர் வீட்டிலுள்ள மூத்தவரிக் கரங்களால் கைசோறு பெற்று மகிழ்வதுண்டு. அவ்வாறே தோட்டங்களிலுள்ள சிறுதெய்வ ஆலயங்களில் படையல் வழிபாட்டின் பின்னரும் இவ்வாறான வாய்ப்பு ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. தோட்டங்களில் அம்மன் திருவிழா நிறைவு பெறும் தருணம் கரகம் குடிவிடுதல் செயற்பாடு முக்கிய கவனத்தை பெறுகிறது. கரகம் குடிவிட்டதும் மாசிக்கருவாடு கலந்த சோறை கட்டுசோறாக எடுத்து சென்று பகிர்ந்தளிப்பார்கள். அவற்றை பெற்று சாப்பிட்டு முழுத் தோட்டமே மகிழ்ந்திருக்கும். இச்செயற்பாடுகள் குறித்த சமூகத்தில் வாழும் மக்களிடம் ஒன்றுமையை வலியுறுத்தி சமூகமய புரிதலை வலுப்படுத்துவதாகவே அமைகின்றன.
வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் வகையில் தயார் செய்யப்பட்ட பொட்டலங்கள் அவரவர்களுக்கு வழங்கப்படும். அப்பொட்டலம் மாமிசம் கலந்த உணவு பொதியாக காணப்படும். இவ் விருந்திற்காக ஆடு வெட்டி உணவு தயார் செய்யப்படுவதுமுண்டு. இல்லாவிட்டால் கோழிகள் வெட்டி தயார் செய்யப்படுவதுமுண்டு. அண்மைக் காலங்களில் புரொய்லர்ஸ் கோழிகளையே பயன்படுத்துகிறார்கள். காமன் ஊண்டியது தொடக்கம் முழுத்தோட்டமும் சைவ உணவுகளை மாத்திரம் உட்கொண்ட நிலையில் இன்றிலிருந்துதான் மீளவும் மச்ச உணவை உட்கொள்ள தொடங்குவார்கள்.
காமன் கூத்து ஏற்பாட்டுக்குழுவினர், அழைக்கப்பட்ட அயல் தோட்டத்து காமன் வாத்தியார்கள், தோட்டக் கமிட்டி தலைவர்கள், கோயில் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோர் உணவு பொட்டலங்களை வாங்குவது கிடையாது. ஏனெனில் அவர்களுக்கு தனியே உணவு வழங்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கும். இதுவொரு முக்கிய விருந்துபசாரமாக அமையப்பெறும். கூத்தோடு ஒன்றிணைந்து செயற்பட்ட மூத்தவர்களை சந்தோசப்படுத்துகின்ற நிகழ்வு என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்விருந்துபசாரத்ததில் மதுபானங்களும் பயன்படுத்தப்படும். இளைஞர்களும் பெரியவர்களுக்கு தெரியாமல் கொஞ்சம் மதுபாணங்களை பாவித்துக்கொள்வதும் உண்டு. நிகழ்வின் நிறைவுகளை பேசி மகிழ்கின்ற களமாகவும் விருந்துபசார களம் அமைவதுண்டு. இவ்விருந்துபசாரம் தோட்டத்து பொது மண்டபத்திலோ, அல்லது காமன் மாஸ்ட்டரின் வீட்டிலோ இடம்பெறுவதுண்டு. மிக அமைதியான சூழ்நிலையில் ஆரோக்கியமான கலந்துரையாடலுடன் நிறைவுபெறும். இக்களம் தோட்டங்களுக்கிடையேயும் கலைஞர்களுக்கிடையேயும் நேச உறவை வலுப்படுத்துவதாகவே அமையப்பெறுகின்றமை கவனத்திற்குரியதாகும்.
(தொடரும்...)
நன்றி
